எசாலம் இராமநாதீசுவரர் கோயில்
அமைவிடம்
எசாலம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவில் உள்ள ஒரு சிற்றூர். விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள நேமூர் வழியாகச் செல்லலாம். விழுப்புரத்தில் இருந்து 20 கிமீ, செஞ்சியில் இருந்து 17 கிமீ தூரம். சென்னை - திருச்சி சாலையில் இருந்து கூட்டேரிப்பட்டு வழியாகவும் செல்லலாம்.
செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள முக்கோண நிலப்பகுதியில் உள்ளது எசாலம். இப்பகுதி பல்லவர் காலம் முதலே சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளது. எசாலத்தில் இருந்து மூன்று கி மீ தொலைவுக்குள் எண்ணாயிரம், பிரம்மதேசம், 14 கிமீ தொலைவில் தாதாபுரம் ஆகிய ஊர்களில் சோழர் கோயில்கள் அமைந்துள்ளன.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எசாலத்தின் மக்கள் தொகை 2697.
ஊர்ப் பெயர்
கல்வெட்டுகளில் எசாலம் 'எய்தார், எதார்' என குறிப்பிடப்பட்டுள்ளது. அது 'ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில், பல்குன்றக் கோட்டத்தில், ராஜராஜ வளநாட்டில், பனையூர் நாட்டில் இருந்த பிரம்மதேயமாகிய ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற தனியூரின்' ஒரு பிடாகையாக (பகுதி) இருந்தது.
பயணம்
பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் (23/10/2021) அன்று சென்னை திருவான்மியூர் 'தடாகம்' ஏற்பாடு செய்த ஒரு நாள் சுற்றுப் பயணத்தில் பங்கு கொண்டேன். நான்கு ஊர்கள் - தளவானூர், பிரம்மதேசம், எண்ணாயிரம், எசாலம். எசாலத்தில் பார்க்கவேண்டிய ஓரே இடம் இராமநாதீசுவரர் கோயில். மாலை 5.20 க்கு சென்றடைந்தோம். 6 மணி வரை சுற்றிப்பார்த்தோம்.
இராமநாதீசுவரர் திருக்கோயில்
கல்வெட்டுகளில் இறைவன் 'திருவிராமீசுவரமுடைய (திரு இராம ஈசுவரம் உடைய) மகாதேவர்' என்று அழைக்கப்படுகிறார். பின்னாளில் திருவாலீசுவரர் எனவும் இவ்வூர் திருவாலீசுவரம் எனவும் மருவியது. தற்போது இராமநாதீசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.
முதலாம் ராஜேந்திர சோழனின் ராஜகுருவாக இருந்த சர்வசிவ பண்டிதர் எழுப்பிய இந்தக் கற்றளி ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
நுழைவாயில்
மதில் சுவரும் ஒரு ஒரு திருச்சுற்றும் கொண்ட கோயில். கிழக்கு மதிலில் கோபுரம் இல்லாத நுழைவுவாயில் உள்ளது. அதன் மேல் கயிலையில் சிவ பார்வதி அமர்ந்திருக்கும் சுதைச்சிற்பம்.
வாயில் |
பலி பீடம்
.
திருச்சுற்றில் நுழைவாயிலுக்கு எதிராக பலிபீடம் உள்ளது. பத்ம வரியுடன் கூடிய உபானம், ஜகதி, உருள் குமுதம், கண்டம், கபோதம், யாளி வரியுடன் கூடிய பூமிதேசம் ஆகியவற்றுடன் விரிந்த தாமரையின் மேல் கலையழகுடன் பலிபீடம் அமைந்துள்ளது. இதன் கண்டப் பகுதியில் நான்கு திசைகளிலும் சங்கு ஊதும் பூதகணங்கள் காட்சி தருகின்றன.
பலிபீடம் |
நந்தி மண்டபம்
பலிபீடத்தின்பின்னால் பிற்கால செங்கல் கட்டுமானமான நந்தி மண்டபம். நந்தியும் பிற்காலத்தைச் சேர்ந்தது.
நந்தி மண்டபம் |
சாளரம்
சாளரம் |
நந்தியின் முன்பு மகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கற்சாளரம் உள்ளது. ஒரே கற்பலகையினால் ஆனது. சாளரத்தின் சட்டத்தில் நடனமாடும் கலைஞர்கள் இருவரும், மத்தளம் கொட்டும் இருவரும் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் தைமாதம் முதல்நாள் சூரியனின் ஒளிக்கதிர்கள் இந்த ஜன்னல் வழியே இறைவன்மீது விழுவதைக் காணலாம்.
சாளரத்தில் சிறு சிற்பங்கள் |
இந்த ஜன்னலின் மேல் மூன்று துவாரங்களுக்கு அருகில் இரு கரங்களையும் அஞ்சலி முத்திரையில் கூப்பி வணங்கும் நிலையில் சிற்பம் ஒன்று காணப்படுகின்றது. இந்த சிற்பம் சா்வசிவ பண்டிதராக இருக்கலாம்.
தலமரம்
கோயிலின் வடகிழக்கு மூலையில் தலமரமான பனைமரம் காணப்படுகிறது.
மூலக் கோயில்
மூலக் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், இடைநாழி, அம்மன் சந்நிதி, மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது.
இராமநாதீசுவரர் கோயில் |
விமானம்
ஒரு தள வேசர (வட்ட வடிவ கிரீவம், சிகரம் கொண்ட) விமானம். தாங்குதளம் முதல் கலசம் வரை முழுவதும் கல்லால் அமைந்தது. திராவிட கட்டடக் கலையின்படி தாங்குதளம், சுவர், கூரை, கழுத்து, சிகரம், கலசம் ஆகிய ஆறு உறுப்புகளைக் கொண்டுள்ளது.
தாங்குதளம்
பாதபந்த தாங்குதளம். உபானம் தரையில் முழுவதுமாகப் புதைந்துள்ளது. கீழிருந்து மேலாக ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புடன் கூடிய கண்டம், மகாபட்டிகை என்னும் பாதபந்த தாங்குதளக் கூறுகள் கொண்டுள்ளது.
சுவர் (பித்தி)
வேதிகைத் தொகுதியில் கம்புகளுடன் கூடிய வேதிகண்டம், பத்மவரி உள்ளன. பத்மவரியின் மேல் துணைக்கம்பு. அதன் மேல் தூண்.
தேவகோட்டங்கள்
கருவறை சுவரின் ஒவ்வொரு பக்கத்திலும் நடுவில் உருளை வடிவ அணைவுத் தூண்களின் இடையே ஒரு தேவகோட்டம் உள்ளது. தேவகோட்டங்களின் மேல் உள்ள மகரதோரணம் சிற்ப வேலைப்பாடின்றிக் காணப்படுகிறது.
சுவரில் தேவகோட்டங்களுக்கு அருகில் எண்பட்டை அரைத்தூண்கள் கூரையை தாங்குகின்றன. மூலைகளில் உள்ள தூண்கள் நாற்பக்கத் தூண்களாக உள்ளன.
தூண் உறுப்புகளான உடல், மாலைத்தொங்கல், கட்டு, மாலாஸ்தானம், கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, போதிகை, வீரகண்டம் அனைத்தும் முழுமையாக இடம்பெற்றுள்ளன. போதிகைகள் எளிமையான விரிகோணப் போதிகைகளாக அமைந்து உத்திரம் தாங்குகின்றன.
சுவர் தூண் உறுப்புகள் படம் நன்றி தமிழ் இணைய கல்விக் கழக வலைப்பக்கம் (வெட்டி உறுப்புகள் குறிக்கப்பட்டன) |
கருவறை தேவகோட்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும் உள்ளனர். அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் கணபதியும், வடபுறத்தில் துர்க்கையும் உள்ளனர்.
விநாயகர் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
தட்சிணாமூர்த்தி படம் நன்றி: ஆர் கே. லக்ஷ்மி, அதீதம் வலைத்தளம் |
திருமால் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
நான்முகன் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
துர்க்கை படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
கூரை (பிரஸ்தரம்)
கூரை கபோதம், வாஜனம், பூதகணங்களுடன் கூடிய வலபி, யாழிவரியுடன் கூடிய பூமிதேசம் ஆகிய உறுப்புகளைக் கொண்டுள்ளது..
கபோதத்தின் சாலைப் பத்தி முன்னிழுக்கப்பட்டு கர்ணப் பத்தியுடன் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. கபோதத்தின் கீழ்புறத்தில் சந்திர மண்டலம், மேல்பரப்பில் லதா மண்டலங்கள் அலங்கரிக்கின்றன. கபோதத்தின் இரு முனைகளிலும் கீர்த்தி முகங்களின்றி நேத்ர நாசிகைகள், அதன் கூடுகளில் மனிதத் தலைகள் காணப்பெறுகின்றன. கபோதத்தின் சாலைப் பத்தியில் அல்ப நாசிகைகள், அதன் உறுப்புகளும் காணக்கிடைக்கின்றன.
பூமிதேசத்தின் இருமுனைகளிலும், சாலைப்பகுதியின் இரு ஓரங்களிலும் யாளிகளின் அகலத்திறந்த வாய்களில் வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர். பூமிதேசத்தின் நான்கு மூலைகளிலும் நந்திகள் அமர்ந்துள்ளனர்.
கழுத்து (கிரீவம்)
வட்டவடிவ கிரீவத்தில் நாற்புறமும் தேவகோட்டங்கள்அமைந்துள்ளன. அவற்றில் தெற்கில் வீணாதர தட்சிணாமூர்த்தியும் மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும், கிழக்கில் இந்திரனும் அமர்ந்த நிலையில் உள்ளனர்.
தெற்கு கிரீவ கோட்டம் - வீணாதர தட்சிணாமூர்த்தி படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
மேற்கு கிரீவ கோட்டம் - திருமால் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
வடக்கு கிரீவ கோட்டம் - நான்முகன் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
இந்த கிரீவக் கோட்டங்களின் மேல் உள்ள மகா நாசிகைகளில் தெற்கில்ஆடலரசன், மேற்கில் யோகநரசிம்மர், வடக்கில் நான்முகன், கிழக்கில் உமையுடனாகியமூர்த்தி வடிவங்கள் உள்ளன. இவற்றுள் யோகநரசிம்மர் பிற்காலக் சேர்க்கையாகும். கிரீவத்தின் மேற்பகுதியைச் சுற்றிலும் அன்னவரிகள்.அழகு செய்கின்றன.
தெற்கு கிரீவ மகாநாசிகை - ஆடலரசன் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
மேற்கு கிரீவ மகா நாசிகையில் பிற்கால யோக நரசிம்மர் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
வடக்கு கிரீவ மகா நாசிகையில் நான்முகன் |
கிழக்கு கிரீவ மகா நாசிகை - உமையுடனாகிய சிவன் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
தலை (சிகரம்), கலசம்
வட்டவடிவ சிகரத்தின் மேற்பரப்பை மேல் நோக்கி விரிந்த தாமரை மலர்.அணி செய்கிறது. பெரிய மணிபோன்ற சிகரத்தின் கீழ்பகுதி சற்று விரிந்து அதன்மேல் சந்திரமண்டலம் அமைந்துள்ளது. சிகரத்தின் மேல் செம்பினால் ஆன கலசம்.
இக்கோயில் விமானத்தின் பெரியமணி போன்ற சிகரமும், கலசமும் மேல்பாடி அரிஞ்சிகை ஈஸ்வரம், மதகடிப்பட்டு குந்தன்குழி மகாதேவர் மற்றும் நார்த்தாமலை கடம்பவனேசுவரர் கோயில் விமானங்களை ஒத்திருக்கிறது என்று திருமதி ஆர் கே லக்ஷ்மி கருதுகிறார்.
அர்த்த மண்டபக் கூரையின் மேற்பகுதியில் விளிம்பில் இரு பூதகணங்கள் தவழ்ந்த நிலையில் அமைந்துள்ளன. மழைநீர் பூதகணங்களின் வாய்கள் வழியே வெளியேறும் வகையிலானச் சிற்ப வேலைப்பாடு. இவ்வைமைப்பு கருவறை வடக்கு பகுதியில் காணப்படும் கோமுகம் அல்லது பிரநாளம் என்று அழைக்கப்படும் நீர்வடிகாலை ஒத்துள்ளது எனவும் இதேபோன்ற அமைப்பு தாராசுரம் அம்மன் கோயிலிலும் காணப்படுகிறது என்று திருமதி ஆர் கே லக்ஷ்மி கூறுகிறார்.
பூத வாய் மழை நீர்க் குழாய் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
பூத வாய் மழை நீர்க் குழாய் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
மகாமண்டபம்
நுழை வாயில் மகாமண்டபத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மகா மண்டபத்தின் தெற்கில் நுழைவாயில் |
மகாமண்டபத்தில் 16 தூண்கள் உள்ளன. மகா மண்டபத்தின் வடதிசையில் தெற்குநோக்கி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள அர்த்த மண்டபத்தையும் மகா மண்டபத்தையும் ஒரு 4 தூண் கொண்ட இடைநாழி இணைக்கிறது. அதன் வடக்கு, தெற்கிலான இரு பக்க வாயில்கள் கற்சுவர் கொண்டு மூடப்பட்டுள்ளன.
கற்சுவரால் மூடப்பட்டுள்ள இடைநாழி தெற்கு வாயில் |
மகா மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் ஒரு திருமால் சிலை மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
மகா மண்டபத்தில் திருமால் |
அம்மன் சந்நிதி
இக்கோயிலின் மகாமண்டபத்தின் இறைவி திரிபுரசுந்தரி மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய-வரத முத்திரைகள் தாங்கியும் அருள் புரிகிறார். இவருக்கு கேதாரி அம்மன் என்ற பெயரும் உண்டு.
திரிபுரசுந்தரி படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
அர்த்த மண்டபம்
அர்த்த மண்டபம் உருளை வடிவ சோழர்காலத் தூண்களைக் கொண்டுள்ளன.
அர்த்தமண்டப நுழைவு வாயிலில் அழகிய சோழர்கால துவாரபாலகர்கள் காவல் காக்கின்றனர்.
மூலவர்
கருவறையில் இராமநாதீசுவரர் லிங்க வடிவில் அருள் புரிகிறார். லிங்கத்தின் நெற்றியில் பிரம்ம சூத்திரக் கோடுகள் காணப்படுகின்றன.
சிறிய கோயிலானாலும் அழகிய சிற்ப வேலைப்பாடு மிக்கதாக எசாலம் கோயில் விளங்குகிறது.
செப்புத திருமேனிகள்
11 -1-1987 அன்று கோயில் திருப்பணியின்போது மகாமண்டபத்தின் நுழைவாயில் அருகே ஓரிடத்தில் சிறு மணல் திட்டு காணப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டியபோது, நான்கு புறமும் சுவர்களைக் கொண்ட ஓர் அறை போன்ற அமைப்பு தென்பட்டது. அதில் 23 செப்புத் திருமேனிகள், செப்பேடுகள் மற்றும் எழுத்துப்பொறிப்புகளுடன் 4 மணிகள், ஒரு தூபக்கால், பூஜைப் பொருள்கள் ஆகிய 37 பொருள்கள் புதையுண்டிருந்தன. இவையாவும் செப்புத் திருமேனிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஆற்றுமணலைக் குழியில் கொட்டி அதன் நடுவே புதைக்கப்பட்டிருந்தன. இச்செய்தியை அங்குச் சுவரில் எழுதி வைத்துள்ளனர்.
புதைந்திருந்த செப்புத் திருமேனிகள் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
அகழ்ந்தெடுக்கப்பட்ட செப்புத் திருமேனிகள் இக்கோயிலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தவை. அவற்றுள் பைரவர், கணபதி, துர்க்கை, சிவன், பார்வதி, தூபக்கால் ஆகியன குறிப்பிடத்தக்கன.
பைரவர் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
சிவன் படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
சிவன் பார்வதி படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
துர்க்கை படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
கல்வெட்டுகள்
இக்கோயிலில் முதலாம் ராஜேந்திரசோழன், ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், முதலாம் கோப்பெருஞ்சிங்கன் காலத்துக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
எசாலம் செப்பேடு
முதலாம் ராஜேந்திர சோழனால் 25-வது ஆட்சியாண்டில் (பொ ஆ 1036) இல் வெளியிடப்பட்டது. இதை காஞ்சி அரண்மனையில் இருந்து இராஜேந்திர சோழன் வெளியிட்டுள்ளான். 'ஜெயங்கொண்ட சோழமண்டலத்து எயில்கோட்டத்து நகரம் காஞ்சிபுரத்து நம்வீட்டின் உள்ளால் நாம் குளிக்குமிடத்துத் தானம் செய்யாவிருந்து' என்று செப்பேடு கூறுகிறது.
எசாலம் செப்பேடு 15 இதழ்கள் (பக்கங்கள்) கொண்டது. அவை ஒரு செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழமன்னரின் அரசமுத்திரை காணப்படுகிறது. அதில் சோழர்களின் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளது. இலச்சினையில் புலி, இரட்டை மீன், வில், அம்பு முதலிய சோழ, பாண்டியர், மற்றும் சேரர்களின் சின்னங்களோடு சாளுக்கியர்களின் சின்னமான பன்றியும் பொறிக்கப்பட்டுள்ளது.
எசாலம் செப்பேடு - முதலாம் ராஜேந்திர சோழன் இலச்சினை படம் நன்றி: வரலாறு விருமிகள் சங்கம்முகநூல் பக்கம் |
அக்கால வரலாற்று, சமூகச் செய்திகள் இந்த செப்பேட்டில் கிடைக்கின்றன..
செப்பேட்டில், முதல் நான்கு இதழ்கள் வடமொழியிலும் மற்ற 11 ஏடுகள் தமிழிலும் உள்ளன.. வடமொழிப் பகுதிகளை நாராயணக்கவி என்பவர் எழுதியுள்ளார். இவரே திருவாலங்காடு, கரந்தைச் செப்பேடுகளில் காணப்படும் வடமொழிப் பகுதிகளையும் எழுதியவர். இச்செப்பேட்டில் செய்திகளைப் பொறித்தவர் உலகளந்த சோழ ஆச்சாரி என்பவர்.
வடமொழிப் பகுதியில் சோழ அரசர்களின் மரபுப் பட்டியல் காணப்படுகிறது. சங்ககாலச் சோழமன்னர்களில் கரிகாலச் சோழன், பிற்காலச் சோழர்களில் விஜயாலயன், ஆதித்தன், முதலாம் பராந்தகன், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன், ஆதித்தகரிகாலன், முதலாம் ராஜராஜன், மதுராந்தகன் என்னும் சிறப்புப் பெயர்பெற்ற முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ராஜேந்திரசோழன் பகீரதன் ஆகாயகங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததுபோல் கங்கைநீரைச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்து பேரேரியை (சோழகங்கம்) உருவாக்கியதுடன் கங்கைகொண்ட சோழபுரியையும் உருவாக்கினான், சிவபெருமானுக்குப் பெரிய கோயிலையும் கட்டினான் என இச்செப்பேடு குறிப்பிடுகிறது. இதனால் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை ராஜேந்திரசோழன் எடுப்பித்தான் என்பது உறுதியாகிறது.
இருவரியில் எழுதப்பட்ட வடமொழி சுலோகம் ஒன்று
'ராஜத்ராஜஸ்ய மகுடஸ்ரேணிரத்னேஷுஸாஸனம்
ஏதத் ராஜேந்திர சோளஸ்ய பரகேசரிவர்ம்மனஹ'
என்று கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. 'அரசர்களின் திருமுடிவரிசைகளின் ரத்தினங்களில் திகழ்வதான இது பரகேசரிவர்மனான இராஜேந்திரசோழனின் சாசனம்' என்பது பொருள்.
எசாலம் திருக்கோயிலை ராஜேந்திரசோழனின் குருவான சர்வசிவ பண்டிதர் என்பவர் எடுப்பித்தார். இக்கோயிலுக்கு ராஜேந்திரசோழன் நன்னாடு மற்றும் ஏர்ப்பாக்கம் எனும் இரு ஊர்களை ஒன்றாக்கி விக்கிரம சோழநல்லூர் எனப் பெயரிட்டு இறையிலியாக வழங்கியதை எசாலம் செப்பேடு ஆவணப்படுத்துகிறது. இதனை “பிடாகை எய்தாாில் நம் உடையாா் சா்வசிவ பண்டிதா் எடுப்பித்தருளின திருக்கற்றளி திருவிராமீஸ்வரமுடைய மாதேவா்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இருப்பதாக நமக்கு யாண்டு பதினைஞ்சாவது முதல் தேவதானமாக வரியிலிட்டுக் குடுக்கவென்று நாஞ்சொல்ல” என்று எசாலம் செப்பேட்டு வரிகள் தொிவிக்கின்றன.
சர்வசிவபண்டிதர்
? சர்வசிவ பண்டிதர் செப்புத் திருமேனி படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
இக்கோயிலில் கிடைத்த செப்புத் திருமேனிகளில் ஒன்று துறவிக்கோலத்தில் உள்ள ஓர் அடியவர் திருமேனி. இது மழித்த தலையில் உச்சிக்குடுமி, வலக்கரத்தில் சின்முத்திரை, இடக்கரத்தில் சிம்மகரண முத்திரை, முப்புரிநூல், அமைதியான முகப்பொலிவு, அருள் பொங்கும் கண்கள் கொண்டுள்ளது. இத்திருமேனி இராஜேந்திரசோழனுடைய குருவான சர்வசிவபண்டிதராக இருக்க வாய்ப்புள்ளது. சிற்பத்தின் கீழே கல்வெட்டுப் பொறிப்பு எதுவும் காணப்படவில்லையாதலால் இதனை உறுதி செய்ய இயலவில்லை.
கல்ராயன் சிலை
கல்ராயன் சிலை படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
கோயிலுக்கு தென்புறத்தில் சாலை ஓரத்தில் ஐயனாா் போல் உள்ள ஒரு சிலை காணப்படுகின்றது. கல்ராயன் சிலை என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இந்தச் சிலைக்கு நீராட்டி அந்த நீரை கால்நடைகள் அருந்த அவற்றின் நோய்கள் நீங்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.
கொற்றவை புடைப்புச் சிற்பம்
அதே சலையில் கல்ராயன் சிலைக்குப் பின்புறம் உள்ளது கீழே உள்ள கொற்றவையின் புடைப்புச் சிற்பம். அதன் கீழ்ப் பகுதியில் தலைவெட்டி காணிக்கை அளிக்கும் பக்தன் ஒருவன் உருவம் உள்ளது.
கொற்றவை படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
தலைப்பலி படம் நன்றி: தமிழ் இணையக் கல்விக்கழகம் வலைத்தளம் |
உசாத்துணை
கருத்துகள்
கருத்துரையிடுக