கூழமந்தல்

சிறப்பு 
  • முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் அவன் கங்கை கொண்டதன் நினைவாக அவன் குரு எடுப்பித்தக் கோயில்.
  • முழுதும் கல்லால் ஆனது.
  • பிற்கால கோயில்  கட்டுமானங்களால் சூழப்படாமல் சோழர் கலைக்கு உதாரணமாக உள்ளது.
பயணம் 

கூழமந்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலையில் இருந்து சேத்துப்பட்டு - வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் போகும் சாலையில் வந்தவாசியிலிருந்து சுமார் 22 கிமீ தூரத்தில் உள்ளது. 

இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் முதல் நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 8 ஆம் நாள்  - 25/08/2019) நெடுங்குன்றம், மடம், தென்நாங்கூர் ஆகிய ஊர்களைக் கண்ட பிறகு மாலை கூழமந்தலுக்கு வந்தேன்.

பெயர் வரலாறு *

கல்வெட்டுகளின் படி இவ்வூர் 'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து காளியூர் கோட்டத்துப் பாகூர் நாட்டில்' அமைந்திருந்தது. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் 'கங்கை கொண்ட சோழபுரம்' எனவும் அவன் மகன் முதலாம் ராஜாதிராஜன் காலத்தில்  விக்கிரம சோழபுரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பேசும் பெருமாள் கோயில். நிலைக்கால்களில் உள்ள கல்வெட்டு தெலுங்கு சோழனான விஜயகண்ட கோபாலனுடையது. அது இக்கோயிலை 'காலி யூர்க்  கோட்டத்துக்  கூவழன் பந்தலான விக்கிரம சோழபுரத்துப்  பேசும் பெருமாள் கோயில்'  என்று குறிப்பிடுகிறது.

முதலாம் ராஜேந்திரனின் குருவான .'ஈசான பண்டிதர் எடுப்பித்த திருக்கற்றளி உடைய மகாதேவர்' என இறைவனைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இப்போதும் இக்கோயில் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்று அழைக்கப்படுகிறது.

கோயில் 

சுற்றியுள்ள நிலத்தை விட தாழ்ந்த தரை மட்டத்தில் கோயில் அமைந்துள்ளது.

கூழமந்தல் கோயில் தெற்குப் பக்கத் தோற்றம் 

கருவறை விமானம், அர்த்த மண்டபம், இடைநாழி, மகாமண்டபம் என்று கோயில் நான்கு பிரிவாக உள்ளது

வாயில்கள் 

தெற்கு வாயில்
முன்புறமுள்ள மகா மண்டபத்திற்கு மேற்கு தவிர்த்த மூன்று திசைகளில் வாயில்கள் உள்ளன. தென் திசை வாயில் முன்பு மேடையும், அதன் கிழக்கு மேற்குப் பக்கங்களில் படிகளும் உள்ளன. நுழைவாயிலின் இருபுறமும் வாயிற்காவலர்கள் சிலைகள் இருக்கின்றன.

தென்திசை நுழைவாயில், மேடை, வாயிற் காவலர் சிலைகள் 

கீழ் வாயிற்காவலர் நான்கு  கரம் கொண்டவர். வலது பின்கரம் தண்டனையைக் குறிக்கும் தாடன முத்திரையும், இடது பின்கரம் வியப்பைக் காட்டும் விஸ்மயா முத்திரையும் காட்டுகின்றன.  வலது முன் கை உடைந்துள்ளதால் அதன் முத்திரை தெரியவில்லை. பின்னோக்கிய ஆள்காட்டி விரலால் எச்சரிக்கை செய்யும் தர்ஜனி முத்திரை கொள்வது மரபு. . இடது முன்கரமும், இடது காலும் வாயிலின் பக்கம் உள்ள கதையின் மீது உள்ளன. வலது கால் தரையின் மீது படிந்துள்ளது. இரு கால்களும் வாயிலை நோக்கித்  திரும்பியுள்ளன. வாயிற்காவலர் மகுடம், பனையோலைக் குண்டலங்கள், கண்டிகை, சரப்பளி ஆகிய கழுத்தணிகள், முப்புரிநூல், கை வளை, கழல் முதலிய அணிகளை அணிந்துள்ளார்.

மேல் வாயிற்காவலரும் இதே போன்றே உள்ளார். இடது கரம் முழுவதுமாக உடைந்துள்ளது. வலது முன்கரம் தர்ஜனி முத்திரை காட்டுகிறது. வலது கால் கதை மேலும் இடது கால் நிலத்திலும் உள்ளன.

கிழக்கு வாயில்

கிழக்கு வாயில் 

கிழக்கு வாயிலின் முன்னும் ஒரு மேடை உள்ளது. அதன் பக்கங்களில் வாயிற்காவலர் கோட்டங்களோ, வாயிற்காவலர்களோ இல்லை. 2013 இல் இப்பகுதியின் தோற்றம் கீழே:

கிழக்கு வாயில் - 2013

2013 இல் இருந்த பிற்காலச் செங்கல் கட்டுமானங்களான வட பக்க விமானம், வாயில் மேல் இருந்த கோட்டம்,  வாயில் முன் இருந்த கான்கிரீட் மண்டபம் ஆகியவை அகற்றப்பட்டு பழைமை மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு வாயிலின் முன்பு கோயிலை நோக்கியவாறு நந்தி உள்ளது.

நந்தி 

நந்தியின் பின்புறம் கூரை இல்லாமல் ஓரு மண்டபத்தின் தூண்கள் மட்டும் நிற்கின்றன.

கூரையில்லாத்  தூண்கள் 

வடக்கு வாயில்

இடைநாழியின் வடக்கு வாயில் 
  • விமானம், அர்த்த மண்டபம் ஆகியவற்றின் தாங்குதளம் பிரதிவரி, பத்ம ஜகதியுடன் பத்மபந்த தாங்குதளமாக உள்ளது. 
  • மகாமண்டபம், அம்மன் கோயிலின் தாங்குதளம் ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை உறுப்புகளைப் பெற்று பாதபந்த தாங்குதளமாக உள்ளது.
  • சுவர்ப்  பகுதியும், பிரஸ்தரம் எனும் கூரைப் பகுதியும் ஒன்றாகவே உள்ளன.
விமானம்

கூழமந்தல் கங்கை கொண்ட சோழீச்சுரம் விமானம் மேற்குப் பார்வை

இது ஒரு இரு தள வேசர விமானம் ஆகும். கிரீவமும், சிகரமும் வேசரமாயும் (வட்டம்), கீழ்ப்பகுதி நாகரமாயும் (சதுரம்) அமைந்து கலப்பு விமானமாய் உள்ளது.

கீழ்த் தளத்தில் சாலைப் பத்தியிலும், இரு அகாரைகளிலும் ஆக 3 தேவ கோட்டங்கள் உள்ளன.

முதல் தளத்திலும், இரண்டாம் தளத்திலும் பத்ர, கர்ண பத்திகளில் ஒவ்வொன்றும், அகாரைகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆக 7 தேவகோட்டங்கள் உள்ளன.

இரண்டாம் தளத்தின் கூரை மீது கிரீவத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் ஒவ்வொரு தேவகோட்டம் உள்ளது. அவற்றின் இருபுறமும் நந்திகள். நான்கு  மூலைகளிலும் கர்ண கூடங்கள் உள்ளன.


விமானம்: வடக்குப் பக்கத் தோற்றம் 

விமானம்: கிழக்குப் பக்கத் தோற்றம் 
பிரதிவரியில் உள்ள யாளி வரி அழகியது. ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் இந்த யாளி வரிகளின் இறுதியில் மகர துண்டங்கள் உள்ளன. இவை மகரத்தின் திறந்த வாயில் இருந்து வீரர்கள், மனிதர்கள் வருவது போன்றசிறு சிற்பங்கள் கவினுறச் செதுக்கப்பட்டுள்ளன.

பிரதிவரியில் யாளி வரி, அதன் முடிவில் மகர துண்டம்

விமானத்தின் மூன்று பக்கங்களில் உள்ள மூன்று சாலைப் பத்திகளின் இருபுறங்களில் உள்ள ஆறு மகர துண்டங்களில் மட்டும் வீரர்கள் அல்லது மனிதர்கள் காட்டப்படவில்லை. பதிலாக யானை, யாழி முதலிய மிருகங்களே காட்டப்பட்டுள்ளன.

சாலைப் பத்தியின் பக்கத்தில் உள்ள மகர துண்டம்

கீழ்த் தள தேவகோட்டச் சிற்பங்கள்

விமானத்தின் அடித் தளத்தில் பக்கத்திற்கு மூன்றாக ஒன்பது தேவ கோட்டங்கள் உள்ளன. அர்த்த மண்டபச் சுவரில் பக்கத்திற்கு ஒன்றாக இரு தேவகோட்டங்கள். ஆக 11 தேவகோட்டங்கள்.

அர்த்த மண்டபத் தெற்குத் தேவகோட்டம் 

இதில் நின்ற நிலை விநாயகர் உள்ளார்.

விநாயகர்

விமானம் - தெற்குப் பகுதி  - கிழக்குத்  தேவகோட்டம் 

பிச்சாடனர்

விமானம் - தெற்குப் பகுதி  -நடு தேவகோட்டம் 


தட்சிணாமூர்த்தி

விமானம் - தெற்குப் பகுதி  -மேற்குத் தேவகோட்டம் 


விமானம் -மேற்குப் பகுதி  -தெற்குத்  தேவகோட்டம் 


விமானம் -மேற்குப்  பகுதி  -நடு தேவகோட்டம் 

லிங்கோத்பவர் 

விமானம் -மேற்குப் பகுதி  -வடக்குத் தேவகோட்டம் 

நான்முகன்

விமானம் -வடக்குப் பகுதி  - மேற்கு தேவகோட்டம்   

 

விமானம் -வடக்குப் பகுதி -நடு தேவகோட்டம் 

நான்முகன் 

விமானம் -வடக்குப் பகுதி - கிழக்கு தேவகோட்டம்   

இதில் இறையுரு எதுவும் இல்லாமல் வெறுமையாக உள்ளது.

அர்த்த மண்டப வடக்குத் தேவகோட்டம்

அவுணன் தலைமிசை நின்ற தையல் - துர்க்கை

மேற்தள, கிரீவ தேவகோட்டச் சிற்பங்கள்

மேல் இரு தளங்களில் ஒவ்வொரு தளத்திலும் பக்கத்துக்கு 7 தேவ கோட்டங்கள் உள்ளன.  சிலவற்றில் சிலை எதுவும் இல்லை. மற்றவற்றில் மாதொருபாகன் முதலிய சிலைகள் உள்ளன. பலவற்றை அடையாளம் காண இயலவில்லை.

கோயில் உள்ளே - மகாமண்டபம் 

மகா மண்டபம்

மகா மண்டபத்தின் கிழக்கு, தெற்குப் பக்கங்களில் வாசல்கள் உள்ளன. மேற்கில் அம்மன் சந்நிதி. மூடப்பட்டுள்ளது.

மகா மண்டபத்தில் திருவிழா காளை வாகனம் 
இடைநாழி

மகாமண்டபத்தின் கிழக்கே இடைநாழி. அதிலிருந்து அர்த்த மண்டபத்திற்குள் செல்லும் வாசலின் இருபுறமும் வாயிற்காவலர்கள் சிலைகள் உள்ளன. இடைநாழியின் வடக்கில் வாசலும், தெற்கில் சாளரமும் உள்ளன.

இடைநாழி

இடைநாழியில் வாயிற்காவலர்கள்:




 இடைநாழி வலபியில் உள்ள பூதவரி. அர்த்த மண்டபத்திலும் உள்ளது. இவற்றில் பூத  கணங்கள் ஆடல் பாடல் அழகாக காட்டப்பட்டுள்ளது .

பூத வரியில் பூத கணங்கள்.

அர்த்த மண்டபமும் கருவறையும் 

அர்த்த மண்டபமும் கருவறையும் 
அர்த்த மண்டபத்தில் கருவறை வாயிற்காவலர்கள்:


வெளியில் சில சிலைகள் 

தட்சிணாமூர்த்தி

துர்க்கை

பேசும் பெருமாள் கோயில் # $

பேசும் பெருமாள் கோயில் கோபுரம் 
கூழமந்தலில் நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில் உள்ளது பேசும் பெருமாள் கோயில். பெருமாள் சிலை மண்ணிலிருந்து கிடைத்தது. கோயில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. கூடவே கிடைத்த நிலைக்கால்களில் உள்ள கல்வெட்டு தெலுங்கு சோழனான விஜயகண்ட கோபாலனுடையது. அது இக்கோயிலை 'காலி யூர்க்  கோட்டத்துக்  கூவழன் பந்தலான விக்கிரம சோழபுரத்துப்  பேசும் பெருமாள் கோயில்' என்று குறிக்கிறது. பெருமாள் அந்த சோழ மன்னனுடன் பேசினாராம்.

நன்றிக்கடன் 

கோயிற்கலைச் செம்மல் மா சந்திரமூர்த்தி; கலைக்கோயில்கள்;  திருவண்ணாமலை மாவட்டச் சிறப்புகள்; திருக்கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு மலர்; 




கருத்துகள்

  1. பெயரில்லா27 மே, 2021 அன்று 8:04 PM

    https://youtu.be/uosrkKTqJLE

    பதிலளிநீக்கு
  2. மிக சிறப்பாக உள்ளது. நான் இந்த இடம் செல்ல தேடுகையில் உங்கள் கட்டுரையை பார்த்தேன் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு