வழுதலங்குணம் தீர்த்தங்கரர் சிற்பம், கல்வெட்டு, படுக்கைகள்
பயண நாள்
14/07/2022 சுபகிருது ஆண்டு, ஆனி மாதம், 30 ஆம் நாள் வியாழக் கிழமை
அமைவிடம்
வழுதலங்குணம் திருவண்ணாமலைக்கு வடகிழக்கில் உள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் உள்ள சோமாசிபாடி வழியாக 18 கிமீ தூரம். கீழ் பெண்ணாத்தூர் பை பாஸ் வழியாக 23 கிமீ தூரம். அவ்வூருக்கு வடக்கே 2 கிமீ தூரத்தில் உள்ளது 'மட்டமலை'. ஏரிக்கரை வழியாக கரடுமுரடான ஜல்லி சாலை, மண் சாலை, ஒற்றையடிப் பாதை, வயல்கள் வழியாக செல்ல வேண்டி உள்ளது. கீழ் பெண்ணாத்தூர் - அவலூர்பேட்டை சாலையில் உள்ள மேக்களூரில் இருந்தும் வழி உள்ளது.
![]() |
வழிகாட்டிப் பலகை |
![]() |
வழுதலங்குணத்தில் நீர் நிறைந்த பெரிய குளம் |
மட்ட மலையின் வடக்குப் பக்கத்தில் வயல்களில் இருந்து மேலே செல்ல படிகள் தெரிகின்றன.
![]() |
மேலே செல்ல படிகள் |
சுமார் 70 படிகள் ஏறினால் கல்படுக்கைகளும் தீர்த்தங்கரர் சிற்பமும் அமைந்துள்ள இடத்தை அடையலாம்.
சமணப் படுக்கைகள்
ஒரு பெரிய நீண்ட வளைந்த பாறை மற்றொரு பாறை மீது குடை போல கவிந்திருக்க அதன் அடியில் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன.
![]() |
சமணப் படுக்கைகள் |
![]() |
சமணப் படுக்கைகள் |
தீர்த்தங்கரர் சிற்பம்
இங்கு அமர்ந்த நிலையில் ஒரு தீர்த்தங்கரர் உள்ளார்.
![]() |
வழுதலங்குணம் தீர்த்தங்கரர் சிற்பம் |
தீர்த்தங்கரர் உருவம்
திருமால் நின்ற, இருந்த (அமர்ந்த), கிடந்த என்ற மூன்று நிலைகளில் காட்சி தருவார். புத்தரும் அவ்வாறே. சமண தீர்த்தங்கரர்கள் நின்ற மற்றும் அமர்ந்த என்ற இரு நிலைகளிலேயே சித்தரிக்கப்பட்டுள்ளனர். தீர்த்தங்கரர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் திருவடிவங்கள் ஒன்றே போல் இருக்கும்.
- அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பர்.
- மடிமீது வலது கையை இடது கைமீது வைத்திருப்பர் (தியான முத்திரை).
- நின்ற நிலையில் இரு கைகளும் உடலைத் தொடாமல் தொங்கிக் கொண்டிருக்கும். (காயோத்சர்க்கம்)
- இரு நிலைகளிலும் கண்களை மூடி தியானத்தில் இருப்பர்.
- ஆடைகளோ அணிகளோ இல்லாமல் இருப்பர்.
- மார்பில் ஸ்ரீவத்சம் எனும் திருமரு காணப்படும் (இந்த சிற்பத்தில் இல்லை)
1. ஒளி மண்டலம், பிரபாவளி
தீர்த்தங்கரர் தலையைச் சுற்றி ஒளிமண்டலம் உள்ளது. அவர் தலை மீது அமைந்துள்ள அரை வட்டப்பிரபை (பிரபாவளி) இதைக் காட்டுகிறது.
2. முக்குடை
தீர்த்தங்கரர் தலைக்கு மேல் 'முக்குடை' உள்ளது. தீர்த்தங்கரர்கள் தங்கள் முழு ஞானத்தால் மூவுலகையும் வென்றவர்கள் ஆதலால் மூன்று வெண்கொற்றக் குடைகள் அவர்கள் தலைக்குமேல் திகழ்கின்றன. முக்குடைகள் முறையே சந்திராதித்தம், நித்திய விநோதம், சகலபாசனம் என்று அழைக்கப்படும்.
3. பிண்டி மரம் (அசோக மரம்)
முக்குடைக்கு மேல் பிண்டி மரம் என்னும் அசோக மரம் மூன்று சுருள்களாக காட்டப்பட்டுள்ளது. 24 தீர்த்தங்கரர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் அசோக மரத்தடியில் ஞானம் பெற்றவர்கள். இருவர் மட்டும் அரச மரத்தடியில் ஞானம் பெற்றவர்கள். ஆனால், சிற்பங்களில் அனைவருக்கும் பொதுவாக பிண்டி என்னும் அசோக மரமே காட்டப்படும்.
4. சிம்மாசனம்
அவர் அமர்ந்துள்ள ஆசனத்தின் முன்பக்கம் முன்நோக்கிய மூன்று சிங்கங்கள் உள்ளன. அவை ஆசனத்தைத் தாங்கிப்பிடிப்பவை போன்று அமைக்கப் பட்டுள்ளவை. இவ்வகை ஆசனமே சிம்மாசனம் அல்லது அரியாசனம் எனப்படுகிறது. பின்புறம் ஆசனத்தின் முதுகுப்பகுதி காட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு திண்டு உள்ளது. அதன் முன்பக்கங்கள் நாகத் தலைகள் போன்ற கைகளாக நீண்டுள்ளன. அவற்றை நின்ற நிலை சிம்மங்கள் தாங்கியுள்ளன.
5. சாமரம் வீசும் யட்சன், யட்சி
ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் காவலாகவும், பணிவிடை செய்யவும் ஒரு யட்சனும் ஒரு யட்சியும் உண்டு. பொதுவாக தீர்த்தங்கரருக்கு வலது பக்கம் யட்சனும் இடது பக்கம் யட்சியும் இருப்பார்கள். அவர்கள் இங்கு சாமரம் வீசுகின்றனர்.
இவ்வடையாளங்கள் அனைத்து தீர்த்தங்கரர்களுக்கும் பொதுவானவை என்பதால் இவற்றைக் கொண்டு தீர்த்தங்கரரின் பெயரைக் கண்டடைய முடியாது.
கல்வெட்டு
தீர்தங்கரர் சிற்பத்திற்கு கீழ் சிதைந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
“மெந்தாரையூரில் யிருக்கு(ம்) பாள்ளி
கண்ட மருது பிரசுறை தெவர்ரை கல்
யிட்டு கா(க்)க காரையிட்டு புதுகிதெந்”
இதன் பொருள்: 'மெந்தாரையூரிலுள்ள பாழியில் குடிகொண்டிருக்கும் மருது பிரசுறை தேவராகிய தீர்த்தங்கரர் சிற்பத்தினைக் காக்கும் பொருட்டு காரை பூசி புதுப்பித்தேன்'.
'மருது பிரசுறை தேவர்' எந்த தீர்தங்கரரைக் குறிக்கிறது என்று தெரியவில்லை.
காலம்
தீர்த்தங்கரர் சிற்பம் 8-9 ஆம் நூற்றண்டைச் சார்ந்தது எனவும் கல்வெட்டு பிற்காலத்தது (13 ஆம் நூற்றாண்டு) எனவும் சிற்ப மற்றும் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு கருதப்படுகிறது.
அமர்ந்த நிலை தீர்த்தங்கரர் சிற்பத்தின் விளக்கம்
தீர்த்தங்கரர்
தீர்த்தங்கரர் என்பவர் சமண சமயத்தில் ஞானத்தை அடைந்து மக்களுக்கு ஞான வழிகாட்டியாக அமைந்தவர். சமண சமயத்தில் ரிஷபநாதர் முதல் மகாவீரர் வரை 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர். தமிழில் அருகர் எனப்படுவர்.
ஐந்து மங்கல நிகழ்வுகள்
ஒவ்வொரு தீர்தங்கரர் வாழ்விலும் 'பஞ்ச கல்யாணங்கள்' என்னும் ஐந்து மங்கல நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன. அவை
- கருப்புகுதல் (கர்ப கல்யாணம்) - ஆன்மா அன்னையின் கருவில் புகுதல்
- பிறப்பு (ஜன்ம கல்யாணம்) - பிறப்பு
- துறவு (தீக்ஷா கல்யாணம்) - ஞானத்தைத் தேடி துறவு பூணுதல்
- கேவலஞானம் - முழு ஞானத்தை அடைதல்
- நிர்வாணம் - முக்தி அடைதல்
சமவசரணம்
ஒரு முற்றுமுணர்ந்த நிலையை (கேவல ஞானம்) அடைந்த தீர்த்தங்கரர் எல்லா உயிர்களுக்கும் அற வாழ்க்கையைப் பற்றி போதிக்கும் மண்டபம் சமவசரணம் எனப்படும். இந்திரன் இதை அமைப்பான். இதில் அவரவருக்கு உரிய இடங்களில் அமர்ந்து சீடர்கள், துறவிகள், தேவர்கள், தேவியர்கள், அரசர்கள், மக்கள், விலங்குகள், மற்ற உயிரினங்கள் அனைவரும் தீர்த்தங்கரர் உரையைக் கேட்பர். சமவசரணத்தின் நடுவில் தீர்த்தங்கரர் அமர்ந்திருப்பார்.
எண்வகை சிறப்புகள்
சமவசரணத்தில் தீர்த்தங்கரர் எழுந்தருளும்போது எண்வகை சிறப்புகள் அவரைச் சுற்றித் தோன்றும்.
- அசோக மரம் (பிண்டி மரம்)
- தேவர் மலர்ப் பொழிவு (புஷ்பவிருஷ்டி)
- திவ்ய தொனி
- சாமரம் வீசுவோர்
- அரியாசனம் (சிம்மாசனம்)
- தேவ துந்துபி ஒலி
- ஒளி மண்டலம்
- முக்குடை
வழுதலங்குணம் தீர்த்தங்கரர் சிற்பத்தில் எண்வகை சிறப்புகள்
சமவசரணத்தில் நடுநாயகமாக அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரரையே வழுதலங்குணம் தீர்த்தங்கரர் சிற்பம் குறிக்கிறது. மேலே விவரித்தபடி சிற்பத்தில் ஒளி மண்டலம், முக்குடை, பிண்டி மரம், சாமரம் வீசும் யட்சன்-யட்சி, சிம்மாசனம் ஆகிய ஐந்து சிறப்புகள் காட்டப்பட்டுள்ளன. தேவர் மலர்ப் பொழிவு (புஷ்பவிருஷ்டி), திவ்ய தொனி, தேவ துந்துபி ஒலி ஆகிய மூன்று சிறப்புகள் காட்டப்படவில்லை.
தேவர் மலர் பொழிவு (புஷ்ப விருஷ்டி)
தீர்த்தங்கரர் தலையின் இருபக்கமும் தேவர்கள் பூ சொறிவது போலக் காட்டப்படும். இந்த சிற்பத்தில் இது காட்டப்படவில்லை.
திவ்ய தொனி
தீர்த்தங்கரர் சமவசரணத்தில் உரை நிகழ்த்தும்போது அவர் உதடுகள் அசைந்து ஒலி எழும்புவதில்லை. ஆனால், அங்குள்ள உயிர்கள் அனைத்தும் அவரவர் மொழியில் அந்த உரையைக் கேட்பார்கள். இது திவ்ய தொனி எனப்படும்.
தேவ துந்துபி ஒலி
சமவசரணத்தில் தீர்த்தங்கரர் எழுந்தருளும்போது தேவர்கள் எழுப்பும் துந்துபி ஒலி.
திவ்ய தொனி, தேவ துந்துபி ஒலி இரண்டையும் தீர்த்தங்கரர் சிற்பங்களில் காட்டுவதில்லை.
லாஞ்சனம்
பிற்காலத்தில் தீர்த்தங்கரர்கள் அமர்ந்துள்ள பீடத்தில் 'லாஞ்சனம்' என்னும் அவர்களது குறியீடு பொறிக்கப்பட்டது. லாஞ்சனங்களில் பெரும்பான்மையானவை காளை, சிங்கம் முதலிய விலங்குகள். ஆனால், இந்து கடவுளர்களைப் போல் இவை வாகனங்கள் அல்ல, குறியீடுகள் மட்டுமே. சங்கு, கலசம் போன்ற சில பொருட்களும் லாஞ்சனமாக உள்ளன.
சிங்கம் மகாவீரரின் லாஞ்சனம்.
சிம்மாசனத்தைத் தாங்கும் முன்நோக்கிய சிங்கங்கள் சிம்மாசனத்தின் பகுதியாக அனைத்து தீர்த்தங்கரர்களுக்கும் பொதுவானவை. மேற்கண்டவாறு ஒற்றைச் சிங்கம் பக்கவாட்டில் பீடத்தின் முன் பகுதியில் பொறிக்கப் பட்டிருந்தால் மட்டுமே அதை லாஞ்சனமாகக் கொள்ளமுடியும்.
ரிஷபம் ரிஷபநாதரின் லாஞ்சனம்.
![]() |
ரிஷபநாதர் - ரிஷபம் (எருது) (எய்யில்) |
![]() |
சாந்திநாதர் - லாஞ்சனம் மான் (தாயனூர்) |
ஒன்றே போல் உள்ள தீர்த்தங்கரர்களை லாஞ்சனங்களைக் கொண்டு அடையாளம் காண இயலும்.
திரு ஆர் விஜயன் , ஆசனத்தில் சிங்கங்களை சிம்மாசனமாக பொறிப்பது 10 ஆம் நூற்றாண்டில் துவங்கியது என்றும் 14 நூற்றாண்டு முதல்தான் தீர்த்தங்கரர்களை அடையாளம் காட்டும் லாஞ்சனங்கள் சிற்பங்களில் இடம் பெறத் துவங்கின என்றும் கூறுகிறார். (திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு; முதற் பதிப்பு; 2011; பக்கம் 144-145.
துணை
கருத்துகள்
கருத்துரையிடுக