செங்கம் நடுகற்கள்: அறிமுகம்

சமூகத்துகாகவோ, குடும்பத்துக்காகவோ, நீதி பிழைத்ததாலோ உயிர் விட்டவர்கள் நினைவாக வழிபடும் நோக்குடன் நிறுவப்பட்ட இறந்தவர்களின் சிற்பத்தை உடைய கற்கள் நடுகற்கள் எனப்படுகின்றன. 

நடுகற்கள் இருவகை;
  • சிற்பம் மட்டுமே உடையது.
  • சிற்பமும் தொடர்புடைய கல்வெட்டும் உடையது.
பெரும்பாலும் இரண்டாம் வகை நடுகற்களே தொல்லியல் அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுள்ளன. இவ்வாறு ஆவணப்படுத்த நடுகற்கள் தமிழகத்தில் 320 ஆந்திர பிரதேசத்தில் 476 கர்நாடகத்தில் 7 உள்ளன*

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் 80% திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளன. இவை தென் பெண்ணையாறு, செய்யாறு. பாலாறு  நதிகளை ஒட்டிய பகுதிகள் ஆகும். இம்மாவட்டங்களை அடுத்த கர்நாடக மாநிலத்தின் கோலார், மைசூர் மாவட்டங்களிலும் ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர், சித்தூர், கடப்பை, ராயலசீமா மாவட்டங்களை உள்ளடக்கிய ராயலசீமா பகுதியிலும் நடுகற்கள் அதிகம் உள்ளன. 

நடுகற்களில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழ் வட்டெழுத்துகளின் வளர்ச்சி, மொழிநடை ஆகியவற்றை அறியவும், சிற்பங்கள் வெவ்வேறு காலங்களில் வீரர்களின் உருவம், உடை, ஆயுதங்கள் ஆகியவற்றை அறியவும் உதவுகின்றன.*

சங்க இலக்கியங்களில் நடுகற்களைப் பற்றி பல பாடல்களில் குறிப்பு வருகிறது. ஆனால், சங்க கால நடுகல் ஒன்றுகூட கிடைக்கவில்லை. சங்க காலத்தில் நடுகற்கள் சிற்பங்களாக செய்துக்கப்படாமல் ஒவியங்களாக வரையப்பட்டிருக்கலாம்.*

நீத்தோர் வழிபாடு காலத்தால் தொன்மையான வழிபாடு. தமிழகத்தில்  நடுகல் வழிபாடு தெய்வ உருவச்சிலை வழிபாடுக்கு முந்தையது என்பது ஆய்வாளர்கள் கருத்து.

வகைகள்*

யார், எதற்காக, எப்படி உயிர் விட்டார்கள் என்பதன் அடிப்படையில் நடுகற்களை வகைப்படுத்தலாம்.

விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்கள்

புலி, சிங்கம், யானை, குதிரை, பன்றி, பாம்பு கடித்து மாண்டவர்கள் (புலி குத்திப் பட்டான் கல், யானை குத்திப் பட்டான் கல்........ 

விலங்குகளுக்கானவை

நாய், குதிரை, கோழி, கிளி, எருமை, பசு, 

இறந்த காரணம் பற்றி
  • தொறுப்பூசல்கள் (தொறுப்பூசலில் பட்டான் தொறு மீட்டுப் பட்டான்)
  • பெண் மீட்டான், சிறை மீட்டான் கல்
  • எருது பொருதார்
  • நவ கண்டம்
  • வடக்கிருத்தல், நிசீதிகை (சமண முனிவர்களூக்காக)
  • சதிக்கல், தீப்பாய்ந்தாள் கல்
  • அறம் காக்க, செய்த சத்தியம் காக்க, கொடுங்கோல் அரசை எதிர்க்க
  • துயர் தாங்காமல்
  • ஊருக்காக - எல்லை காக்க, நீருக்காக (ஊர் காத்தான் கல்)
இறந்த இடம் பற்றி

கடல், சித்திர மாடம், பொன்மாடம், ஆனை மேல், 

மற்றவை
  • கழிப்பேராண்மை
  • சாவாரக்கல் - கொற்றவைக்கு 12 வயது சிறுவனைப் பலியிடுதல்
ஹோசூர் ஆருகே உள்ள நள கொண்ட பாளையத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வந்த 52 நடுகல் சிற்பங்கள் உள்ளன. தருமபுரி, வேலூர், திருவண்ணமலை அருங்காட்சியகங்களிலும் நடுகற்கள் உள்ளன.*

தமிழகத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் 248 எழுத்துகளுடையவை. அவற்றுள் 36 பொ.ஆ. 600 க்கு முறபட்டவை. 600 - 800: 92. 800 - 1000: 90. 1000 - 1600: 95. #

180 நடுகற்கள் மன்னர் பெயரைக் குறிப்பிடுகின்றன. பல்லவர் - 86; சோழர் - 41; கங்கர் - 26; நொளம்பர் - 11; பாண்டியர் - 4; விஜயநகர அரசர் - 4; பாணர் - 1; ராஷ்ற்றகூடர் - 1; போசளர் - 1.

பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை வட்டெழுத்தும் அதன் பின் தமிழும் நடுகல் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.*

செங்கம் நடுகற்கள்

செங்கம் பகுதியில் கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு காலத்திலிருந்து 17வது நூற்றாண்டு வரை நடுகற்கள் கிடைத்துள்ளன. சில இடங்களில் இந்த நடுகற்கள் வழிபாட்டில் உள்ளன. அவை அமைந்துள்ள இடங்கள் வேடியப்பன் கோயில் என்று அழைக்கப்படுகின்றன. மற்ற இடங்களில் வழிபாட்டில் இல்லாமலும், பராமரிக்கப்படாமலும், உடைந்த நிலையிலும் இருக்கின்றன. 

ஊர் மக்கள் உதவியோடு திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் எடத்தனூர், ராதாபுரம், தண்டராம்பட்டு, கீழ் ராவந்தவாடி, தேசூர், வீரணம், செ.கூடலூர் ஆகிய 7 ஊர்களில் உடைந்த நிலையில் இருந்த நடுகற்களை மீட்டுப் புனரமைத்துள்ளது.^

துணை

செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972

* பதிப்புச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி; நடுகற்கள்; மெய்யப்பன் பதிப்பகம்; 2 ஆம் பதிப்பு; ஏப்ரல், 2016


# K Rajan; South Indian Memorial Stones; 2000



கருத்துகள்

  1. அருமையான பதிவு.கல்வெட்டுகளின் வகைகள் எனும் பகுதியில் விலங்குகள் என குறிப்பிட்டுள்ள வகைக்கு சற்றே விளக்கங்கள் அளித்திருந்தால் நன்றாக இருக்கும்.ஐயப்பாடுகள் முழுமையாக விளங்கி இருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்