கீழ் மாவிலங்கை
பயணம்
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக . சார்வரி (2020 - 21) ஆண்டு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்குப் பயணங்கள் இல்லாமல் போனது. பிலவ ஆண்டின் முதல் பயணம் இது. திருவண்ணாமலையில் இருந்து சென்னை வரும் வழியில் ஆனி 32 ஆம் நாள் (16/07/2021) கீழ்மாவிலங்கை குடைவரையைக் கண்டேன்,
அமைவிடம்
கீழ் மாவிலங்கை விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம். சங்க காலம் முதல் உள்ள 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஊர். சங்க காலப் பெயரான மாவிலங்கை இன்றுவரை மாறாது வந்துள்ளது இவ்வூரின் சிறப்பு. அக்கால மாவிலங்கையை சாலை இரண்டாக பிரித்துவிட்டது போலும். சாலையின் மேற்கே உள்ளது மேல் மாவிலங்கை.
கீழ் மாவிலங்கை திண்டிவனம் வந்தவாசி சாலையில் சுமார் 13 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. சென்னை பைபாஸ் - மேற்கண்ட சாலை சந்திப்பில் இருந்து சுமார் 8 கிமீ தூரத்தில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து செல்லும்போது சாலையின் வலது புறம் சுமார் 1 கீமீ தொலைவில் உள்ளது. திண்டிவனம் வந்தவாசி சாலையிலேயே குடைவரைக்கு வழிகாட்டும் பலகை உள்ளது.
குடைவரை
ஊருக்குள் நுழைவதற்கு முன்பே சாலையின் வலது புறம் துருப்பிடித்த வழிகாட்டிப் பலகை ஒன்று எதிர்ப்பக்கம் சுட்டுகிறது.
![]() |
வழிகாட்டிப் பலகை |
அங்கே சாலையின் இடதுபுறம் வயல்களின் நடுவில் ஒரு பெரிய பாறையும் அதில் சாலையை நோக்கி அமைந்திருக்கும் குடைவரையும் தென்படுகின்றன. பாறையை ஒட்டி வளர்ந்த ஒரு வேப்ப மரம் பாறைக்குக் குடை பிடிக்கிறது.
![]() |
கீழ்மாவிலங்கைக் குடைவரை - சாலையில் இருந்து |
ஒற்றையடிப்பாதை வழியாக குடைவரைக்குச் சென்றேன். அதன் முகப்பில் இருந்த சிறு பாறைகளை கடக்கும்போது வழுக்கி விழுந்தேன். எனக்குச் சேதமில்லை. கைப்பேசிக்குத்தான் சிறிது காயம்.
![]() |
கீழ் மாவிலங்கைக் குடைவரை - முன்புறத் தோற்றம் |
![]() |
கீழ் மாவிலங்கைக் குடைவரை - வலப்பக்கத் தோற்றம் |
![]() |
கீழ் மாவிலங்கைக் குடைவரை - பின்புறத் தோற்றம் |
குடைவரையின் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு ஒரு இரும்புக் கதவு உள்ளது. சில ஆண்டுகள் முன்புவரை பூட்டப்படாமல் இருந்ததாகப் பதிவாகி இருக்கும் இக்கதவு இப்போது பூட்டப்பட்டுள்ளது. வாயிலும் அதன் பின் சிறு கருவறையும் மட்டுமே கொண்ட குடைவரை. தூண்கள் இல்லை.
வாயிற்காவலர்கள்
இரு பக்க வாயிற்கால்களின் முன்புறத்தில் வாயிற்காவலர்களின் புடைப்பு சிற்பங்கள் உள்ளன. அவை முழுமையாகச் செதுக்கப்படாமல் வெறும் நிழல் உருவங்களாகவே நின்று போய் உள்ளன. இரும்புக் கதவும் அவற்றை மறைக்கிறது. அருகில் போய்த் தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது.
![]() |
கீழ் மாவிலங்கை குடைவரை |
பெருமாள்
பின் சுவரில் பெருமாளின் புடைப்பு சிற்பம் உள்ளது. பூட்டிய இரும்புக்கதவின் பின் இருக்கும் பெருமாள் லாக்கப்பில் இருப்பது போல் தோன்றுகிறது. சிற்பம் பின்புறச் சுவரோடு ஒட்டிய வேலைப்பாடுகள் அற்ற பீடத்தின் மீது அமைந்துள்ளது.
நின்ற திருக்கோலம்; சமபாத ஸ்தானகம் (பாதங்களை சமமாக வைத்து தலையையும் உடலையும் நேராக நிமிர்த்தி, சமநிலையில் கைகளையும் கால்களையும் நெருங்க அமைத்து ஒருபாற் கோடாமல் நேர்நோக்குடையதாக அமைக்கப்படுவது)
![]() |
நின்ற திருக்கோலப் பெருமாள் (இரும்புக்கதவின் கம்பிகளுக்கிடையே எடுத்த 3 படங்களை இணைத்து உருவாக்கியது) |
கம்பீரமான உருவம். முகம் சிதைந்து மழுங்கி இருந்தாலும் வசீகரமான புன்னகை தவழ்வது போல மயக்குகிறது. நான்கு கரங்கள். பின் வலதுகையில் செலுத்தும்நிலை ஆழி (பிரயோகச் சக்கரம்); பின் இடது கையில் சங்கு. இடது முன் கை இடுப்பில் (கடி ஹஸ்தம்). வலது முன் கை அபய ஹஸ்தம்.
அணிகலன்களின் சுவடுகள் தெரிகின்றன (கீழுள்ள படம் காண்க).
- கிரீட மகுடம் (1),
- நெற்றிப்பட்டை (2);
- முகத்தின் இருபுறமும் விழும் முடிக்கற்றைகள் (3);
- இரு காதுகளில் இருந்தும் தொங்கும் காதணிகள் (4);
- பரந்த மார்பை அணி செய்யும் சரப்பளி (5);
- இடது தோளில் இருந்து வலது இடுப்பு நோக்கி பட்டையான முப்புரி நூல் (6);
- இடது மேற் கையில் பத்ர பூரிமத்தை முகப்பணியாகக் கொண்ட தோள் வளை (7);
- கைவளைகள் (8).
- கிரீடத்தின் கீழ்ப் பகுதியில் இருந்து நெற்றிவரை கீற்றாக ஒரு கரை.
- முழங்காலுக்கு கீழே தொங்கும் பட்டுக் கீழாடை (அந்தரீயம்) (9);
- காலின் இருபுறமும் தொங்கும் இடைக்கட்டுகள் (10);
- அவற்றின் முடிச்சுகள் இடையின் இருபுறமும் உள்ளன (11).
பல்லவ தொல்லியல் சின்னங்களைத் தேடி ஆவணப்படுத்திய கப்ரியேல் ஜாவோ யுப்ரேய் Gabriel Jouveau-Dubreuil (1885–1945) என்ற ஃபிரான்ஸ் நாட்டு தொல்லியலாளர் 1915 ஆம் ஆண்டு தற்செயலாக கீழ் மாவிலங்கைக் குடைவரையைக் கண்டு ஆவணப்படுத்தினார். அப்போது இக்குடைவரையை மக்கள் 'முகரப் பெருமாள் கோயில்' என்று அழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 2012 இல் அங்கு சென்ற முனைவர் மு. இளங்கோவன் உள்ளூர் மக்கள் பெருமாளை 'மூக்கறுத்தான் சாமி' என்று அழைப்பதாக பதிவு செய்துள்ளார்.
கல்வெட்டுகள்
இங்கு பழமையான கல்வெட்டுகள் எதுவும் இல்லை. ஆனால், விசித்திரமாக அரசாங்க எச்சரிக்கை வாயிலின் இடது புறம் கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டில் தேதி குறிப்பிடப் படவில்லை. ஆயினும் இந்தக் குடைவரையை 1915 இல் யுப்ரேய் கண்டார் என்பதால் அதற்குப் பிறகானது. எழுத்தமைதி, மொழியமைதி கொண்டு 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்று கணிக்கலாம். (ஆஹா! நானும் ஒரு கல்வெட்டைப் படித்து விட்டேன்.)
பழங்காலக் கல்வெட்டாக இருந்தால் 'சிக்ஷைக்கு உள்ளாவார்கள்' என்பதற்கு பதிலாக 'கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு உள்ளாவார்கள்', 'தந்தையையும் தாயையும் கொன்ற பாவத்திற்கு உள்ளாவார்கள் போன்ற சாபங்கள் கொண்டிருக்கும்.
காலம்
இது பல்லவர் கால குடைவரை என்று கருதப்படுகிறது. சரியான காலம் சுட்டும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. பெருமாள் சிற்பத்தின் அமைப்பைக் கொண்டு 8 ஆம் நூற்றாண்டு குடைவரையாக இருக்கலாம் என்று சு. இராசவேலுவும், எ. கி. சேஷாத்திரியும் கருதுகின்றனர்.
தொண்டைமண்டல ஓர் அறைக் குடைவரைகள் ஒப்பீடு
தொண்டை மண்டலத்தில் உள்ள மற்றொரு ஓர் அறைக் குடைவரை இதே விழுப்புரம் மாவட்டம் ஆவூர் என்ற ஊரில் உள்ளது. அது கீழ் மாவிலங்கைக் குடைவரையை விடச் சிறியது. அதுவும் பல்லவர் கால 8 ஆம் நூற்றாண்டு குடைவரை ஆகும். அங்குள்ள பெருமாள் சிற்பம் இங்குள்ள பெருமாள் சிற்பத்தோடு ஒப்பிடத் தக்கது. (காண்க: ஆவூர் குடைவரை)
மாவிலங்கை சங்க காலத்தில் ஓய்மா நாட்டின் பகுதியாக இருந்துள்ளது. ஓய்மா நாடு சோழநாட்டுக்கும், தொண்டைநாட்டுக்கும் இடையில் இருந்த நாடு ஆகும். அது இப்போதுள்ள திண்டிவனம் நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் கொண்டது.
சிறுபாணாற்றுப்படை சங்க காலப் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. ஓய்மா நாட்டு மன்னன் நல்லியக்கோடன்.என்பவனிடம் பரிசில் பெற்ற 'இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் எதிர்ப்படும் புலவருக்கு அவனது கொடைச்சிறப்பைக் எடுத்துரைத்து , அவன் இருப்பிடம் செல்வதற்கு வழி காட்டுவதாக அமைந்தது இந்த நூல். செங்கற்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டத்தில் இடைக்கழி நாடு, நல்லூர் ஆகிய சிற்றூர்கள் உள்ளன. இந்த நூலில் மாவிலங்கையை ஆண்ட மன்னர்களுள் சிறந்தவனாக நல்லியக்கோடன் புகழப்படுகிறான்.
தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும்
மறுவின்றி விளங்கிய ..........
............ நல்லியக்கோடன்”
தொன்மையான பெருமையுடைய இலங்கையின் பெயரைக் கொண்ட நல்ல மாவிலங்கையை ஆண்ட மன்னர்கள் உள்ளும் குற்றமற்று விளங்கிய நல்லியக்கோடன்)
புறத்திணை நன்னாகனார் என்னும் புலவர் “பெருமா விலங்கைத் தலைவன் ....... நல்லியக் கோடன்” சிறப்பை புறநானுறு 176 இல் விவரித்துள்ளார். அதே புலவர் புறநானூறு 379 இல் “நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லியாதன்” என்ற மற்றொரு ஓய்மா நாட்டு மன்னனைப் பற்றி பாடுகிறார்.
காணொளி
https://www.youtube.com/watch?v=TuRLZSJbxPQ
உசாத்துணை
- கீழ்மாவிலங்கைக் குடைவரை; https://ta.m.wikipedia.org/wiki/கீழ்மாவிலங்கைக்_குடைவரை (பார்த்தது 18/07/2021)
- https://muelangovan.wordpress.com/category/கீழ்மாவிலங்கை
- வை. கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; 3 ஆம் வெளியீடு; 2001
- சிற்பக் கலை - வரலாறும் ஆய்வும்; சோழ வரலாற்று ஆய்வு சங்கம்; 31 மே 2020
- பாட்டுடைத் தலைவன் நல்லியக்கோடன்; மா தியாகராஜன்; http://www.muthukamalam.com/essay/literature/p41.html
கருத்துகள்
கருத்துரையிடுக