ஆவூர் - 1 - குடைவரை

சிறப்பு 
  1. ஆவூர் பல்லவர் காலம் முதல் உள்ள ஒரு ஊர்.
  2. இங்கு பல்லவர் கால குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது.
  3. சோழர் காலத்து கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்றும் இங்குள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட குடைவரைகள் உள்ள மற்ற இடங்கள்:
  1. சீயமங்கலம் தூணாண்டார் கோயில் 
  2. மாமண்டூர் குடைவரைகள் 
  3. குரங்கணில்முட்டம் குடைவரை 
பயணம் 

விகாரி ஆண்டு ஆவணி மாதம் 03ஆம் நாள் (20/08/2019) திருவண்ணாமலையில் இருந்து ஆவூருக்கு ஸ்கூட்டரில் பயணம் செய்தேன்.  திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை-விழுப்புரம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 20 கிமீ தூரத்தில் உள்ளது ஆவூர். வழியில் நிறைவான கோடை மழையால் சாலையின் இருபுறமும் பசுமை-பயிர்கள், புல், களைச் செடிகள், மரங்கள்  -

திருவண்ணாமலையிலிருந்து ஆவூர் - சாலையிலிருந்து ஒரு காட்சி 

ஆவூர் சாலையின் இருமருங்கும் அமைந்த ஊர். விவசாயத்தைத் தவிர கோரைப் பாய் முடையும் தொழிலுக்குப் பெயர் பெற்றது. 

கோயில் வளாகம் 

குடைவரைக் கோயில் சாலையின் தென்புறத் தெரு ஒன்றில் உள்ளது. உயரமான கருங்கல் மதில். அதன் மேல் செங்கல் வேலை. மதிலில் கிழக்கு நோக்கிய சிறு வாயில்.


குடைவரைக் கோயிலின்கிழக்கு வாயில் 

வாயிலினுள் நுழைந்தால் கோயில் வளாகத் தரை இடிபாடுகள், புதர், புல், களை மண்டி காணப்பட்டது.


இடப்புறம் ஒரு பாழடைந்த மண்டபம். 


பாழடைந்த மண்டபம் 

சில இடங்களில் மதில் செங்கல் கட்டுமானமாக சுதைப் பூச்சு பெயர்ந்துபோய் உள்ளது.


செங்கல் மதில் 

மேற்குப் பக்கம் கோயிலின் முன் வாயில் உள்ளது.

மேற்கு வாயில் - உள்ளே இருந்து 

இடிபாடுகளைக் கடந்து ஒற்றையடிப் பாதையில் நடந்து அவ்வாயில் வழியாக வெளியே ஒரு தெருவுக்கு வரலாம். அங்கிருந்து மேற்கு வாயிலின் முன்புறத்தோற்றம்:


மேற்கு வாயில் - வெளியே இருந்து 

மையக்கோயில் 

சூழலுக்குத்  தொடர்பில்லாமல் மையக்கோயிவ் புதுக்கருக்குடன் காட்சியளிக்கிறது. 

மையக்கோயில் வடக்கு பக்கம் 

குடைவரை உள்ள பாறையைச் சுற்றி கருங்கல் அடித்தளமும் மேலே செங்கல் கட்டுமானமாக விமானமும் எழுப்பப்பட்டுள்ளன, விமானத்தின் மீது கலசம் இல்லாதது இன்னும் குடமுழுக்கு நடைபெறாததைக் காட்டுகிறது, 

கோயில் மேற்கு நோக்கியுள்ளது. அடிப்பகுதியில் உள்ள பாறையில்தான் குடைவரை அமைந்துள்ளது.


மையக்கோயில் - மேற்கு நோக்கிய முன்பக்கம் 

குடைவரை 

ஒரு சிறு பாறையில் குடையப்பட்ட கருவறை மட்டுமே கொண்டது இக்குடைவரை. கருவறையின் பின் சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இறையுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வழிபாட்டில் உள்ளதால் இறையுருவங்களின் கீழ் உடல் உடையால் மறைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளும் நாமங்களால் ஆங்காங்கே சற்று மறைக்கப்பட்டுள்ளன.

கருவறையும் இறையுருவங்களும் 

நடுவில் திருமால்

திருமால் வரதராஜராக 

திருமால் நாற்கரத்தவராக நேர் நிலையில் நின்றுள்ளார். இடது முன்கையை தொடையில் வைத்துள்ளார். முழங்கையில் மடிந்து மார்பு வரை தூக்கிய வலது கை சிதைந்துள்ளது. அது காக்கும் முத்திரை (அபய ஹஸ்தம்) காட்டுவதாகக் கொள்ளலாம். இரு பின் கைகளும் கடக முத்திரை காட்டுகின்றன. இடது பின்கை சங்கைத் தாங்க, வலக்கை செல் ஆழி (பிரயோகச் சக்கரம்) கொண்டுள்ளது. கிரீட மகுடம் தரித்துள்ளார். தொங்கும் முடியை தலைக்குப் பின் தலை வட்டமாக (சிரச்சக்கரம்) அணிந்துள்ளார்.($) காதணிகள் தெரியவில்லை. கழுத்தில் இரு ஆரங்கள். தோள்வளை, ஒவ்வொரு கையிலும் மூன்று கை வளைகள்.  மார்பின் குறுக்கே முப்புரிநூல், மேலே பிரம்ம முடிச்சுடன். தாமரைப் பீடம் பாதங்களைத் தாங்குகிறது. 

திருமாலுக்கு வலது பக்கத்தில் கருடன்

கருடன் 

மார்புக்கு இருபுறமும் தெரியும் சிறகுகள் இவரை அடையாளம் காட்ட உதவுகின்றன. வலது காலை மடித்து முழங்காலை செவ்வகப் பீடம் மீது  இருத்தி, இடது காலை மடித்து பாதங்களை பீடம் மீது  ஊன்றியுள்ளார் - கருடாசன நிலை. திருமாலை நோக்கித் திரும்பியுள்ளார்.  இடது கையை தொடை மீது இருத்தி, வலது கையை மடித்து மார்பின் மீது வைத்துள்ளார். இக்கை சிதைந்துள்ளது.

முன் பதக்கம் கொண்ட மகுடம் தரித்துள்ளார். முடிக்கற்றைகள் முகத்தின் இருபுறமும் தொங்குகின்றன. இரு காதுகளிலும் மகர குண்டலங்கள். வாயின் வலது ஓரம் ஒரு கோரைப்பல். வலதுதோளின் மீது ஒரு சிறிய நாகம். மார்பில் முப்புரிநூல். கழுத்தில் மணி ஆரங்கள். தோள்வளை, கை வளைகள்.

திருமாலுக்கு இடது பக்கத்தில் யார்?


திருமாலின் இடது பக்கத்தில் ஒரு அடியார் அதே கருடாசன நிலையில் அமர்த்துள்ளார். இடது காலை மடித்து முழங்காலை பீடம் மீது  இருத்தி, வலது காலை மடித்து பாதங்களை பீடம் மீது ஊன்றியுள்ளார். திருமாலை நோக்கித் திரும்பியுள்ளார்.  வலது கையை தொடை மீது இருத்தி,இடது கையை மடித்து மார்பின் மீது கடக  முத்திரையாக வைத்துள்ளார்.

ஜடா மகுடம் தரித்துள்ளார். காதுகளில் குண்டலங்கள் இல்லை. மார்பில் முப்புரிநூல். கழுத்தில் மணி ஆரங்கள். தோள்வளை, கையில் பட்டையான அணி.

இவர் யார் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. முனைவர் தயாளன் இவர் மார்கண்டேயராக இருக்கக்கூடும் என்கிறார்($).

வரலாறு, கல்வெட்டு 

இக்குடைவரை கோயில் அமைந்துள்ள பாறையின் மீது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் இராஜராஜன் காலத்திய கல்வெட்டு உள்ளது. இதில் 'பெண்ணை வடகரை செங்குன்ற நாட்டு ஆவூர் கருமாணிக்கத்தாழ்வார் கோயிலுக்கு' எயிலுடையான் தேவன் எனபவர் 1000 குழி புஞ்சை நிலத்தை தானமாக கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.(*)

இறையுருவங்களின்  பல்லவர் கால கலையமைதியைக் கருத்தில் கொண்டு   இக்குடைவரையை 8 ஆம் நூற்றாண்டினதாக கொள்ளலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.($)

நன்றிக் கடன்:

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்