சின்னியம்பேட்டை சின்னையன் குளம்: முதல் பகுதி: அறிமுகம்

தமிழகத்தில் கலவிச் சிற்பங்கள் நிறைந்த குளங்கள் இரண்டு. அவை இரண்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளன. ஒன்று சின்னியம்பேட்டையில் உள்ள சின்னையன்குளம். மற்றொன்று கீழ் ராவந்தவாடியில் உள்ள அம்மா குளம்.

சென்ற நாட்கள்: 11,12 ஜூலை, 2022

அமைவிடம்

சின்னியம்பேட்டை திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடிக்கு அருகில் உள்ள சிற்றூர்.  திருவண்ணாமலையில் இருந்து அரூர் செல்லும் வழியில் 35 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் சின்னையன் குளம் தவிர பல்லவர் கால நடுகற்களும் உள்ளன.

சின்னையன் குளம்

இவ்வூரில் சாலையின் பக்கத்திலேயே உள்ளது சின்னையன் குளம். இக்குளம் ஏறத்தாழ 120 சதுர அடி பரப்பில் நாற்புறமும் படிக்கட்டுகள், நாற்புறமும் நுழை வாயில்கள், மதில் சுவர்களுடன் காணப்படுகிறது. 

கூகிள் வரைபடம்: https://goo.gl/maps/Y9FCuhdBXoFmVeBi6

சின்னியம்பேட்டை சின்னையன் குளம்

இது 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகை

குளத்தின் 4 மூலைகளிலும் மற்றும் நான்கு நுழைவாயில்களிலும் ரிஷபங்களின் சிற்பங்கள் உள்ளன.

மூலைகளில் ஈருடல் ஒரு முகம் கொண்ட ரிஷபம்

நுழைவாயில் ரிஷபம். தலை உடைந்துள்ளது.

இந்த குளம் செஞ்சி நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கிபி 16-17ஆம் நூற்றாண்டில் சின்மை நாயக்கர் என்பவரால் வெட்டப்பட்டது.  அவர் பெயரால் சின்மை நாயக்கன் குளம் என்று அழைக்கப்பட்ட இக்குளம் பெயர் மருவி இப்போது சின்னையன் குளம் என்று அழைக்கப்படுகிறது.. 

சிற்பங்கள்

இக்குளத்தின் மதில்சுவரின் உள் பக்கத்திலும், படிகளிலும் நூற்றுக் கணக்கான சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன.

கலவிச் சிற்பங்கள்

இந்த குளத்தின் சிற்பங்களில் பல கலவிக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன. இது போன்ற காட்சிகள் நாயக்கர் காலத்து தேர்ச் சிற்பங்களிலும் இடம் பெற்றுள்ளன. நாயக்கர் கலைப்பாணியின் ஒரு கூறு என்று கொள்ளலாம். 

கஜுராஹோவின் புகழ்பெற்ற கலவிச் சிற்பங்களை நினைவுபடுத்தும் இச்சிற்பங்களைத்  தன் மகளுக்காக சின்மை நாயக்கன் செதுக்குவித்தான் எனச் செவிவழிச் செய்தி தெரிவிக்கிறது.  திருமணம் ஆகியும் உடலுறவு பற்றி அறியாத தன் மகளின் உணர்வுகளைத் தூண்ட அவ்வாறு செய்தானாம். குளிக்க குளத்துக்குச் சென்ற மகள் அனைத்தையும் அறிந்து கணவனுடன் வாழச் சென்றாளாம். கஜுராஹோவைப் போன்றே இங்குள்ள பாலியல் சிற்பங்களும் அப்பட்டமானவையாகவும், அதீதமானவையாகவும் உள்ளன. அதனால், இந்த குளம் 'மன்மதக் குளம்' என்றும் பெயர் பெற்று விட்டது.

சமயச் சிற்பங்கள்:

இக்குளத்தில் இராமாயண, புராண சிற்பங்கள், இறைவர்கள், சித்தர்களின் சிற்பங்கள் ஆகியவையும் ஆங்காங்கே உள்ளன.

அக்கால வாழ்வியல் காட்சிகள்

பல சிற்பங்கள் 16 -17 அம் நூற்றாண்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிக்கின்றன.  பெண்டிர் விளையாட்டுக்கள், மற்போர், சிலம்பாட்டம். துப்பாக்கி ஏந்தி புலியுடன் போரிடும் வீரர்கள், பல்லக்கு ஊர்வலம், வேட்டை காட்சிகள் ஆகியவற்றை சித்தரிக்கும் சிற்பங்கள் உள்ளன. 

பல்வகை உயிரினங்கள்

பல்வகை உயிரினங்களின் சிற்பங்கள், குறிப்பாக படிகளில் காணப்படுகின்றன.

சிற்பங்களின் சிறப்புகள்
  • சுவர், படி சிற்பங்களாக இருப்பதால் தூண்களின் சதுரம் போன்று இடக்கட்டுப்ப்படு இல்லாமல் நீண்ட காட்சிகளையும், காட்சித் தொடர்களையும் கொண்டிருக்கிறது.
  • இறைவன், புராணச் சிற்பங்கள் ஆகம விதிகளின்படி செதுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சிற்பங்கள் சிற்பியின் கைவண்ணம்தான்.
  • திறந்தவெளியில் இருப்பதால் நல்ல வெளிச்சத்தில் பார்க்க வசதியாக உள்ளது.
  • சிற்பங்களின் மீது வெள்ளை (ரசாயனப் பாதுகாப்பு?) அடிக்கப்பட்டிருப்பதால் சற்று தெளிவின்மை உள்ளது.
  • படிகளில் உள்ள சிற்பங்கள் தேய்ந்து தெளிவின்றி உள்ளன.
  • இங்குள்ள அனைத்து சிற்பங்களையும் பார்க்கையில் அவை ஒரு கொண்டாட்ட நிலையைக் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது.
இக்குளத்தின் சிற்பங்களின் காட்சியைப் பார்க்க கீழே உள்ள சுட்டிகளைச் சொடுக்கவும்.


நடுகற்கள்

இதே ஊரில் உள்ள பல்லவர் கால நடுகற்களைப் பற்றிய பதிவு:

செங்கம் நடுகற்கள் - சின்னியம்பேட்டை - கம்பவர்மன் கால எருமைத் தொறு மீட்ட வீரர்கள்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்