செங்கம் நடுகற்கள் - சின்னியம்பேட்டை - கம்பவர்மன் கால எருமைத் தொறு மீட்ட வீரர்கள்

 பயண நாள்: 11/07/2022

அமைவிடம்

சின்னியம்பேட்டை (Chinniyampettai) திருவண்ணாமலை - அரூர் - சேலம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 36 கிமீ தூரத்தில் உள்ள ஊர். 


ஊர் சாலையின் தெற்கே அமைந்திருக்க சாலையின் வடக்கே பிரிந்து செல்லும் வழியில் சுமார் 750 மீட்டர் தூரத்தில் உள்ளது 'சாவுமேட்டு வேடியப்பன் கோயில்'. வழியில் ஒரு தடுப்பணையைக் கடந்து, ஆற்றைக் கடந்தால் மறு கரையில் ஒரு சிறு குடியிருப்பு உள்ளது. 

தடுப்பணையும் வழியும்

அங்கிருந்து வயல்கள் வழியாக சிறிது தூரம் சென்றால் வாழைத் தோட்டம் ஒன்றில் மனங்கவரும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்தது ஆலயம்.
கூகிள் வரைபடத்தில் அமைவிடம்: தீர்க்க அட்ச ரேகைகள் - 12°05'56.7"N 78°48'25.3"E (12.099090, 78.807027). வரைபடத்தில் 'சின்னியம்பேட்டை நடுகற்கள்' என்று குறிக்கப்பட்டுள்ளது.



நடுகற்கள்

சாவு மேட்டு வேடியப்பன் கோயிலில் இரண்டு நடுகற்கள், அவற்றைச் சார்ந்த கல்வெட்டு துண்டுகள், மூன்றாவது நடுகல்லின் கல்வெட்டுப் பகுதியின் ஒருபாகம் ஆகியவை உள்ளன.  இவை மூன்றும் பல்லவ மன்னன் கம்ப வர்மனின் ஆட்சி காலத்தில் ஆநிரைகளை மீட்டு உயிர்துறந்த வீரர்களுக்காக  எழுப்பப்பட்ட நடுகற்கள் ஆகும். 

கம்பவர்மன் மூன்றாம் நந்திவர்மனுக்கும், பழுவேட்டரையரின் புதல்வி கந்தன் மாறம்பாவையருக்கும் பிறந்த புதல்வன். 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிருபதுங்கவர்மன் பல்லவப் பேரரசை ஆண்டபோது, இவன் அதன் வடபகுதியில் ஆண்டுவந்தான் என்று கருதப்படுகிறது. கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதியின் மகள் விஜயா இவன் மனைவி.

நடுகல் 1


சிற்பம்

கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்தவாறு இடது கையில் வில்லும் வலது கையில் வாளும் ஏந்திய நிலை. மார்பிலும் தொடையிலும் பல அம்புகள் பாய்ந்துள்ன. இடது காலுக்கு அருகில் மங்களச் சின்னமான கெண்டி உள்ளது.  

முதல் நடுகல் கல்வெட்டின் தொடர்ச்சி

கல்வெட்டு

கல்லின் மேற்பகுதியில் கல்வெட்டின் முதல் ஏழு வரிகள் பொறிக்கப் பட்டுள்ளன. அடுத்த ஆறு வரிகள் வேறொரு கல்லில் வெட்டப்பட்டுள்ளன.  மொழி - தமிழ்

நடுகல் மேற்பகுதியில் உள்ள ஏழு வரிகள்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப
பருமற்கு யாண்டு மூன்றாவது
வயிரமேகவாணகோவரையர் சேவகன்
மீகொன்றை ஞாட்டு மலையனூருடைய செம்பத்
தொண்டன் மகன் காரிப்பெருமான் பாசா 
ற்றெருமைத் தொறு எயினாட்டார் கொள்ளப்
பாசாற்றூர் பூசலிடப் பூசல் சென்று கோவூ

தனிக்கல்லில் உள்ள ஆறு வரிகள்

ர் நாட்டுச் சிற்றிடையாற்று முதுகொன்றை
மூக்கின் மீமலை அயங்கயக்கரையிற் செ
ன்று முட்டி மலையனூருடைய செம்பர் ம
கன்னான காரிப்பெருமான்ணன்
ரையிலம்புமாள எவ்விப் பத்திர முரு
வி எதிரே சென்று பட்டான்

(ஸ்வஸ்தி ஸ்ரீ - மங்கலத் தொடக்கம்; ஞாட்டு - நாட்டு; எருமைத் தொறு - எருமைக் கூட்டம்; பூசல் - சண்டை ; அயங்கயக்கரை - அயம் (நீர், குளம்)+கயம் (நீர், நீர்நிலை) +கரை = குளக்கரை; முட்டி - வழிமறித்துப் போரிட்டு; எவ்வி - செலுத்தி; பத்திரம் - குறுவாள்; பட்டான் - இறந்தான்)

பொருள் 

ஸ்வஸ்தி ஸ்ரீ 
பல்லவ மன்னன் கம்ப வர்மனது மூன்றாவது ஆட்சி ஆண்டில்
வயிரமேகவாணகோவரையர் சேவகனும்
மேல்கொன்றை நாட்டு மலையனூரில் வாழும் செம்பத்தொண்டன் மகனுமான காரிப்பெருமான்
பாசாற்றூரைச் சேர்ந்த எருமை நிரைகளை  எயில் நாட்டார் கவர்ந்தபோது
பாசாற்றூரார் எதிர்த்து சண்டையிட அந்த சண்டைக்குச் சென்று 
கோவூர் நாட்டிலுள்ள சிற்றிடையாற்று  முது கொன்றை மூக்கின் மீமலை குளக்கரையில் சென்று அவர்களை வழிமறித்து போரிட்டு (முட்டி)
மலையனூருடைய செம்பர் மகன் ஆன காரிப்பெருமான்
தன் உரையில் தீரும்வரை (மாள) அம்புகளைச் செலுத்தி (எவ்வி), பின் வாளை (பத்திரம்) உருவி எதிரே சென்று போரிட்டு வீரமரணமடைந்தான்.
 
நடுகல் 2


சிற்பம்

கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்தவாறு இடது கையில் வில்லும் வலது கையில் வாளும் ஏந்திய நிலை. இடது காலுக்கு அருகில் மங்கலச் சின்னமான கெண்டி தெரிகிறது. கல்லின் மேற்பகுதியில் கல்வெட்டின் தொடக்கம் உள்ளது. 

கல்வெட்டு

கல்வெட்டின் முதல் இரு வரிகள் நடுகல்லின் மேற்பகுதியிலும், அடுத்த நான்கு வரிகள் வேறோரு கல்லிலும், இறுதி ஐந்து வரிகள் மூன்றாவது கல்லிலும் பொறிக்கப் பட்டுள்ளன. மொழி - தமிழ்

இரண்டாவது கல்லில் நான்கு வரிகள்


மூன்றவது கல்லில் ஐந்து வரிகள்

நடுகல்லின் மேல் பகுதியில் உள்ள முதல் இரு வரிகள்

கோவிசைய  கம்பபர்மற்கு 
யாண்டு ஆறாவது  கொங்க

இரண்டாம் கல்லில் உள்ள் நான்கு வரிகள்

த் தெழுமாத்தூர் இருந்து
வாழுஞ் சாகாடச் சிற்றன்
மீகொன்றை நாட்டு
ப் புளியூர் எரு
 மை கொண்ர ஞா

மூன்றாம் கல்லில் உள்ள் ஐந்து வரிகள்

ன்று பூசல்லோடி
மேல்வேணாட்டு மணி
க்கலவடவூரில் முட்டி
ருமைத் தொறு மீட்டு மட்டா
ன் சாகாடச் சிற்றன்

(இருந்து - தங்கி: பூசல்லோடி - சண்டைக்குப் போய்; முட்டி - எதிர்த்துப் போரிட்டு; மட்டான் - பட்டான் என்பது தவறாக மட்டான் என உள்ளது)

பொருள் 

பல்லவ மன்னன் கம்ப வர்மனது ஆறாவது ஆட்சி ஆண்டில் 
கொங்க நாட்டின் எழுமாத்தூரில் தங்கி வாழ்ந்த சாகாடச் சிற்றன் என்பவன்
மேல் கொன்றை நாட்டில் அமைந்த புளியூர் என்னும் ஊரில் இருந்த
 
எருமை நிரைகளைப் பகைவர் கவர்ந்து சென்ற போது
ஏற்பட்ட பூசலில் அவர்களைப் பின் தொடர்ந்து மேல் வேணாட்டின் மணிக்கடவூரில் அவர்களை வழி மறித்து எதிர்த்துப் போர் செய்து
எருமை நிரைகளை மீட்டான். சாகாடச் சிற்றன் அப்போரில் வீர மரணமடைந்தான்.

சாகாடச்சிற்றன் எந்த அரசனுக்குக் கீழ் எந்த பொறுப்பில் இருந்தான் என்ற குறிப்பு ஏதும் கல்வெட்டில் இல்லை. 

நடுகல் 3

இந்த நடுகல்லின் கல்வெட்டு பொறித்த மேல் பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. சிற்பம் கொண்ட கீழ்ப் பகுதி கிடைக்கவில்லை. மேலும் இந்தக் கல் தலைகீழாகப் புதைக்கப்பட்டு உள்ளது. 1972 இல் பதிப்பிக்கப் பட்ட 'செங்கம் நடுகற்கள்' நூலுக்கான ஆய்வின்போது இந்தக் கல் கீழே விழுந்து கிடந்ததாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுச் செய்தியும் முழுமையாய் இல்லை. மொழி - தமிழ்



கல்வெட்டுச் செய்தி

கோவிசைய கம்போ தஅர்கி [யா]
ண்டு ஆறாவது மீய்கொன்றை நாட்டுப்
புளியூரிருந்து வாழுஞ் சாகாட
ச்சிற்றன் புளியூ எருமை கொண்ட
ஞான்[று] பூசல்லோடி மே
மணிக்கல.........................
...........................................

பொருள்

பல்லவ மன்னன் கம்ப வர்மனது ஆறாவது ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 875)
மேல் கொன்றை நாட்டில் அமைந்த புளியூர் என்னும் ஊரில் தங்கி வாழ்ந்த சாகாடச் சிற்றன் என்பவன்
புளியூர் எருமை நிரைகளைப் பகைவர் கவர்ந்து சென்ற போது
ஏற்பட்ட சண்டைக்குப் போய் மேல் மணிக்கல ...........................................


துணை

செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972

https://groups.google.com/g/tamilmanram/c/3U20Hvz6Lxk (முதல் நடுகல் கல்வெட்டின் பொருள்)

சேசாத்திரி; தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள்; பதிவுகள் வலைத்தளம்; 
https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=700:2012-03-27-20-37-59&catid=13:2011-03-03-17-27-10  (இரண்டாம் நடுகல் கல்வெட்டின் பொருள்)

தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி; சாந்தி சாதனா; 2002

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்