விழுக்கம் ஸ்ரீ ஆதிநாத பகவான் ஜினாலயம் , கொற்றவை
பயணம்
விசுவாவசு ஆண்டு பங்குனி மாதம் ஆம் 16 ஆம் நாள் (30/032026) திருவண்ணாமலையில் இருந்து ஸ்கூடரில் பயணம். மேல் சித்தாமூர் பார்சுவநாதர் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டு விழுக்கம் வந்தேன்.
அமைவிடம்திண்டிவனத்திலிருந்து செஞ்சிக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலுள்ள தீவனூருக்குச் சற்றுத் தொலைவில் வடக்கு நோக்கிப்பிரிந்து செல்லும் சிறிய சாலை வழியாக 1.4 கி.மீ. தொலைவில் விழுக்கம் ஆதிநாதர் கோயில் உள்ளது. செஞ்சியிலிருந்தும் திண்டிவனத்திலிருந்தும் சுமார் 15 கிமீ. இவ்வூரைச் சுற்றி உள்ள மேல் சித்தாமூர், தொண்டுர், அகலூர், செஞ்சி, திருநாதர் குன்று, சிங்கவரம், நெகனூர்பட்டி, பெருமுகை, விழுக்கம் ஆகிய ஊர்களில் சமண தொல்லியல் சின்னங்கள், கோயில்கள் உள்ளன.
பெயர்
- தீர்த்த்ங்கரர் பெயர்களுக்கு முன்னால் வரும் ஸ்ரீ 1008, 1008 முறை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ....... யைக் குறிக்கிறது. உச்ச மரியாதை.
- ஆதிநாதர் - முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர்.
- பல வடநாட்டு ஜைனர்கள் வருகை புரிவதால் மும்மொழிப் பெயர்ப் பலகை.
காலம்
ஆதிநாத பகவான் ஜினாலயம் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1970 இல் புனரமைப்பு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு இறுதியில் மீண்டும் புதிக்கப்பட்டு பொலிவுடன் விளங்குகிறது.
கோயில் அமைப்பு
மற்ற தமிழ் சமண ஜினாலயங்களைப் போல இந்த ஜினாலயமும் திராவிடக் கட்டடக்கலை அமைப்பைக் கொண்டுள்ளது.
கோபுரம்
![]() |
| ஒற்றை மதிலில் ஐந்து நிலை கிழக்கு நோக்கிய கோபுரம். |
- பொதுவான வெளிர் வண்ணப் பூச்சுடன் தூண்கள், நாசிகள், சிற்பங்களின் அணிகலன்கள், கலசங்கள் முதலிய சில பகுதிகள் மட்டும் அடர் வண்ணங்களால் முன்னிலை படுத்தப்பட்டுள்ளது அழகாக உள்ளது. தள ஆரங்களில் உள்ள கலசங்கள் உலோகத்தால் ஆனவையோ என்ற மயக்கம் தருகின்றன.
- மேல் தளங்களின் நடுவில் உள்ள வாயில்களின் இருபுறமும் வெளிப் பக்கம் மட்டும் வாயிற்காவலர்கள். அவர்கள் கழுத்தில் மட்டும் உள் பக்கத்திலும் உள்ளனர்.
- அதை அடுத்து உள்ள ஆரச் சாலைகளின் முன்பு நின்ற நிலையில் தீர்த்தங்கரர்கள்.
- தளங்களின் நான்கு மூலைகளிலும் மனித சிற்பங்கள் உள்ளன கையில் மாலை ஏந்திய பெண்கள் மத்தளம் வீணை புல்லாங்குழல் முதலிய வாத்தியங்களை இசைக்கும் ஆண்கள். ஒருவர் ஃபிடில் கூட வாசிக்கிறார்.
- வெளிப்புறம் முதல் தளத்தில் சுமைதாங்கிகள்.
![]() |
| கோபுரத்தின் உட்புறத் தோற்றம் கோபுரத்தின் அதிட்டானத்தின் வடக்கில் க்ஷேத்ரபாலருக்கு சிறு சன்னதி. |
மானஸ்தம்பம்
![]() |
| பலிபீடம், மானஸ்தம்பம் |
மானஸ்தம்பம் சமணக் கோயில்களின் தனித்துவமான அமைப்பு. மானம் + ஸ்தம்பம். மானம் - பெருமை, ஸ்தம்பம் - தூண். மானஸ்தம்பம் தீர்த்தங்கரர்களின் விண்ணளாவிய பெருமையின் குறியீடு. அதன் முன் தன் அகங்காரத்தைத் தொலைத்து கோயிலின் உள் நுழைய வேண்டும் என்பது பொருள். சமணக் கோயில்களில் பொதுவாக கொடிமரம் இருப்பதில்லை. மேல் சித்தாமூர் ஜினாலயத்தில் மட்டும் கொடிமரம், மானஸ்தம்பம் இரண்டுமே உள்ளன. திருக்கோயிலூர் உலகளந்தப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலர், காஞ்சி வரதர் முதலிய வைணவ ஆலயங்களில் கோயிலுக்கு வெளியே கோபுரத்திற்கு முன்பு கருட ஸ்தம்பங்கள் உள்ளன.
![]() |
| மானஸ்தம்பத்தின் பாகங்கள் |
சதுரத்தின் 4 முகங்கள், 3 இடைக்கட்டுகள் மற்றும் வட்டப் பகுதியின் மேல் பக்கம் ஆகிய நான்கின் 4 பக்கங்கள், விமானத்தின் 4 பக்கங்கள் என் 24 தீர்த்தங்கரர் உருவங்கள் மானஸ்தம்பத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
![]() |
| கிழக்கில் முதல் தீர்த்தங்கரரான ரிஷப நாதர் என்னும் ஆதிநாதர் |
கண்களைத் தாழ்த்தி, அரைத்தாமரை அமர்வில் (சமண மரபில் அர்த்த பல்லியங்காசனம்), தியான அமைதியில் கைகளை மடி மேல் வைத்து, ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார். ஆடை அணிகலன்கள் எதுவும் அற்ற நிர்வாணம். திசைகளையே ஆடையாக உடுத்திய திகம்பரர். இரு பக்கமும் குறுக்குக் காலுடன் நின்று சாமரம் வீசுபவர்கள். தலையைச் சுற்றி ஒளி வட்டம். மேலே முக்குடை. சுற்றி திருவாசி.
நான்கு பக்கங்களில் உள்ள நான்கு தீர்த்தங்கரர்களும் இதே அமைப்பை கொண்டவர்கள். அவர்களை அவர்களது இருக்கையின் முன் புறத்தில் செதுக்கப்பட்டு இருக்கும் லாஞ்சனம் என்னும் குறியீட்டைக் கொண்டு அடையாளம் காணலாம் இங்கு உள்ளது அமர்ந்த நிலை காளை (ரிஷபம்). இது ரிஷபநாதரின் லாஞ்சனம்.
தமிழகத்தில் 14 நூற்றாண்டு முதல்தான் தீர்த்தங்கரர்களை அடையாளம் காட்டும் லாஞ்சனங்கள் சிற்பங்களில் இடம் பெறத் துவங்கின. (திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு; முதற் பதிப்பு; 2011; பக்கம் 144-145). ஆனால், வட இந்தியாவில் 7 - 9 ஆம் நூற்றாண்டில் அனைத்து தீர்த்தங்கரர்களுக்கும் லாஞ்சனங்கள் நூல்களில் முறைப்படுத்தப்பட்டு வழக்கில் வந்து விட்டன.
![]() |
| தெற்கில் 12-ம் தீர்த்தங்கரரான வசுபூஜ்ஜியர். லாஞ்சனம் நின்ற நிலை எருது. இவரது சாமரம் வீசிகள் மட்டும் சாமரத்தைத் தோளில் சாய்த்து வைத்துக் கொண்டு நேர் நின்ற நிலையில் ஓய்வெடுக்கின்றனர். |
![]() |
| மேற்கில் 13-ம் தீர்த்தங்கரரான விமலநாதர். லாஞ்சனம் பன்றி |
![]() |
| வடக்கில் 24 ஆம் தீர்த்தங்கரரான மகாவீரர். லாஞ்சனம் சிங்கம். |
முக மண்டபம்
![]() |
| கோயில் முக மண்டபம் |
முக மண்டபத்தில் உள்ள மகா மண்டபத்தின் கதவு இரும்புப் பெட்டகக் கதவாக இருந்தது கவனத்தை ஈர்த்தது. உள்ளே உள்ள விலை உயர்ந்த பொருட்களின் பாதுகாப்பிற்காக இந்த புதுமையான அமைப்பு என்று கூறினர். அர்த்த மண்டபத்தின் வடக்கு பக்கத்தில் 'கூஷ்மாண்டினி தேவி' சன்னதி இணைந்துள்ளது. அம்பிகா என்றும் அழைக்கப்படும் இவர் 22-வது தீர்த்தங்கரரான நேமிநாதரின் இயக்கி.
![]() |
| கூஷ்மாண்டினி |
கருவறை, அர்த்த மண்டபம்
கருவறைக்குள் ரிஷபநாதர் என்ற ஆதிநாதர் வீற்றிருக்கிறார்.
![]() |
| மூலவர் ரிஷபநாதர் என்னும் ஆதிநாதர் (படம் நன்றி: அகிம்சை யாத்திரை இணைய தளம்) |
மானஸ்தம்ப தீர்த்தங்கரர்களைப் போன்ற உருவம். இருக்கையின் முதுகுப் பகுதி திண்டுடன் தெளிவாகத் தெரிகிறது. மேலே சுருள்களாக இருப்பது பிண்டி மரம் எனப்படும் அசோக மரம். திருவாசியும் லாஞ்சனமும் இல்லை.
ரிஷபநாதரின் வாழ்வை சுருக்கமாக உரைக்கும் அவர் வணக்க மந்திரம்:
ஓம் ஹ்ரீம் அர்ஹம்
ஜம்புத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவிக்கும் உதித்த திருக்குமாரனும்
ஒப்பிலா மஹா புருடரும்,
பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும், பரம ஔதாரிக தேகத்தை உடையவரும்
84 லக்ஷம் பூர்வம் ஆயுள் உடையவரும்,
விருஷப லாஞ்சனத்தை உடையவரும்,
கோமுக யக்ஷன், சக்ரேஸ்வரி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும்
விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும்
14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாச கிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்த்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான
ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்கு
தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து நமோஸ்து
- அகிம்சை யாத்திரை இணைய தளம்
பெருமண்டபத்தில் படிமங்களும் சின்னங்களும்
![]() |
| பஞ்சலோகப் படிமங்கள் 1. சதுர்தசி (14) தீர்த்தங்கரர்கள். 2. சதுர் விம்சதி (24) தீர்த்தங்கரர்கள். 3. பத்மாவதி. மற்றும் திருவாசியுடனோ இல்லாமலோ தனி தீர்த்தங்கரர்கள் உருவங்கள் |
![]() |
| 1. நந்தீஸ்வர த்வீபம். 2. பஞ்ச பரமேஷ்டி. 3. சுருத ஸ்கந்தம் (மேல் இரு படங்கள் நன்றி: Anubhav Jain via google maps) |
![]() |
| சதுர்தசி (14) தீர்த்தங்கரர்கள். நடுவில் நின்ற நிலையில் ஒருவர். சுற்றி அமர்ந்த நிலையில் 13 பேர். (இந்த மற்றும் கீழ் உள்ள 6 படங்களும் நன்றி: திரு சிவசங்கர் பாபு via FB) |
![]() |
| சதுர் விம்சதி (24) தீர்த்தங்கரர்கள் |
![]() |
| பஞ்ச பரமேஷ்டி |
சமணத்தில் 1. அருகர், 2. சித்தர், 3. ஆசாரியர், 3. உபாத்தியாயர், 5. சாதுக்கள் ஆகிய 'பஞ்ச பரமேஷ்டி' களை வழிபடுவதும் முக்கியமாக உள்ளது. பஞ்ச பரமேஷ்டிகளுக்கான வணக்க மந்திரம் 'பஞ்ச நமோஸ்கார மந்திரம்' என்று அழைக்கப்படுகிறது.
![]() |
| சுருத ஸ்கந்தம் |
சுருதி என்பது பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த நூல்களைக் குறிக்கும். சுருதிகளை வணங்கும் நாள் சுருத பஞ்சமி. இந்தச் சின்னத்தில் சமணச் சுவடி நூல் தொகையை மரம் போல பாவித்து சுவடிகளை மரத்தின் பாகங்கள் மீது கிரந்த எழுத்துகளாகவும் எண்களாகவும் பொறித்திருக்கின்றனர்.
![]() |
| திருவாசியின் உள் பார்சுவநாதர். இரு பக்கங்களில் இயக்கன் தார்ணேந்திரன், இயக்கி பத்மாவதி |
![]() |
| மூன்று பார்சுவநாதர் சிற்பங்கள் நடுச் சிற்பத்தின் பீடத்தில் எழுத்துப் பொறிப்பு |
![]() |
| நந்தீஸ்வர த்வீபம் (படம் நன்றி: Anubhav Jain via google maps) |
த்வீபம் என்பது தீவு. இந்து தொன்மங்களின் படி அண்டத்தில் ஏழு த்வீபங்கள் உள்ளன. நாம் இருப்பது ஜம்பு த்வீபம். சமண தொன்மவியலில் எட்டு த்வீபங்கள். எட்டாவது த்வீபம் நந்தீஸ்வர த்வீபம். அங்கு 52 ஜினாலய்ங்கள் இருக்கும். அதைக் குறிக்கும் விதத்தில் 52 தீத்தங்கரர்கள் உருவங்களோடு அமைந்த வழிபாட்டுச் சின்னம் இது.
விமானம், அர்த்த மண்டபம், பெரு மண்டபம் - வெளிப் பார்வை
![]() |
| இருதள வேசர விமானம் |
- உறுப்புகள் அற்ற தட்டையான அதிட்டானம்.
- சுவரின் ஒவ்வொரு பக்கமும் ஆறு அரை தூண்களால் மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ன.
- நடுவில் தேவகோட்டம், அதில் தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் மானஸ்தம்பத்தில் உள்ள அதே தீர்த்தங்கரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். இந்த மேற்குப் பக்கத்தில் பன்றி லாஞ்சனத்துடன் விமலநாதர்.
- இரண்டாம் தளத்துக்கு மேல் கழுத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் நான்கு மூலைகளிலும் கர்ணக் கூடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆரச் சாலை மற்றும் கழுத்தில் தேவகோட்டங்களில் தீர்த்தங்கரர்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
- முதல் தளத்தில் இரு சுமைதாங்கிகள் விமானத்தை தாங்கிப் பிடித்துள்ளனர்
![]() |
| 1. கருவறையை உள்ளடக்கிய விமானம். 2. அர்த்த மண்டபம். 3. பெருமண்டபம். 4. முகமண்டபத்தின் வடக்கில் கூஷ்மாண்டினி தேவி சன்னதி. 5 நவகிரக தீர்த்தங்கரர் சன்னதி. 6. தீர்த்தங்கரர் பாதங்கள் |
கபோதத்தின் சிம்மத் தலை அற்ற நாசிகளில் கருக்கு ஆல்ங்காரங்கள் உள்ளன, சிலவற்றின் நடன இசைக் காட்சிகள்.
திருச்சுற்றில்
![]() |
| திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் சில பழைய சிற்பங்கள் |
![]() |
| 24 தீர்த்தங்கரர்களின் பாதங்கள் |
![]() |
| வடக்கில் தீர்த்தங்கரர்களால் ஆன நவகிரக சந்நிதி. (படம் நன்றி: Prerit Jain via Google maps) |
சமணர்கள் நவகிரக வழிபாட்டிற்காக பிற ஆலயங்களுக்கு செல்வதால் இங்கேயே இந்த சன்னிதியை அமைத்துள்ளனர். நவ தீர்த்தங்கரர்கள் அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ற நிறத்தில் உள்ளனர். எவர் எவருக்கு என்ன கிரகம், தானியம் போன்ற தகவல்கள் அங்குள்ள கல்வெட்டில் உள்ளன. பழைய மரபான நவகிரக சன்னிதியும் உள்ளது.
அதன் பக்கத்தில் தங்கத் தேர் அறை. இவ்வூர்க்காரரும் நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஜே அஜித்குமார் என்பவரின் முன்னெடுப்பில்
ஊர் மக்களும் மடங்களும் சேர்ந்து செய்த தங்கத்தேர் இதில் உள்ளது.
ஊர் மக்களும் மடங்களும் சேர்ந்து செய்த தங்கத்தேர் இதில் உள்ளது.
![]() |
| சமணர்களின் எட்டு மங்கலங்களும், சாமரதாரிகளும், வான் தேவர்களும் அமைந்த அழகிய தங்கத் தேர். (படம் நன்றி: google maps) |
வடகிழக்கில் உள்ள மண்டபத்தில் பார்சுவநாதரின் இயக்கியாகிய பத்மாவதி தேவிக்கு சன்னிதி உள்ளது.
![]() |
| பத்மாவதி |
சிறப்பு நாட்கள்
ஜினாலயத்தில் தின பூசை, நந்தீஸ்வர பூசைஆகியவை நடந்து வருகின்றன. யுகாதி, நவராத்திரி, அட்சய திருதயை, ஆடி வெள்ளி, காணும் பொங்கல் முதலிய தினங்களில் தீர்த்தங்கரர் வீதி உலா நடைபெறுகிறது. அருகர் ஆலயத்திற்கு இந்துக்கள் வருகின்றனர். இருசாராருடைய ஆலய ஊர்வலங்களில் மாற்று மரியாதைகள் செய்கின்றனர்.
குணசாகரர் நினைவு மண்டபம்ஆதிநாதர் கோயிலுக்குச் சற்று தொலைவில் உள்ள குளக்கரையில் ஒரு மண்டபத்தில் வட்ட பீடம் ஒன்றின் மேல் குணசாகரர் என்ற சமண ஆச்சாரியரது திருவடிகள் பீடம் ஒன்றின் மேல் செதுக்கப்பட்டுள்ளது. பீடத்தில் 'குணசாகரதேவர்' எனக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 17-18 -ம் நூற்றாண்டு வரிவடிவம். இவர் 'யாப்பருங்கல காரிகை' என்னும் தமிழ் இலக்கண நூலுக்கு உரை எழுதியவர்.
விழுக்கம் குப்புசாமி நயினார்
யசோதர காவியம் சமணசமய நூல். யசோதரன் என்னும் அவந்திநாட்டு மன்னன் வரலாறு கூறுவது. 10 ஆம் நூற்றாண்டில் வடமொழியில் இயற்றப்பட்டது. பின்பு 17 ஆம் நூற்றாண்டில் தமிழில் சிறுகாப்பியமாக இயற்றப்பட்டுள்ளது. இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இதை ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் அந்த நூலை உரை எழுதி 1944 பதிப்பித்தபோது அவர் ஒப்புநோக்கிய மூன்று படிகளுள் ஒன்று விழுக்கம் குப்புசாமி நயினார் அவர்களுடையது. (4)
கொற்றவை
ஜினாலயத்தின் பின்னால் உள்ள வயல்காட்டில் ஒரு பல்லவர் கால கொற்றவை சிற்பம் உள்ளது.
![]() |
| 8 கை கொற்றவை கரண்ட மகுடம். வலது கைகளில் ஆழி, வாள், கட்டாரி, மணி. இடது கைகளில் சங்கு, வில் கேடயம், இடுப்பில் வைத்த கை. கால்களின் இடது பக்கம் மான், வலது பக்கம் தற்பலி அடியார். |
பின் இணைப்பு - தீர்த்தங்கரர்கள் பெயர்களும் லாஞ்சனங்களும்


































கருத்துகள்
கருத்துரையிடுக