ஜம்பை - பகுதி 1 - ஜம்பை மலை

சிறப்புகள் 

  • தமிழி கல்வெட்டு 
  • சமணர் படுகைகள் 
  • வயல் வெளியில் ஜேஷ்டா தேவி சிலையும் அருகில் ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கல்வெட்டும் 

பயணம் 


விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (20-09-19) அன்று ஜம்பைக்குச் சென்றேன். ஜம்பை தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலையிலிருந்து தெற்கே மணலூர்பேட்டை  - சுமார் 26 கிமீ  தூரம்; திருக்கோவிலூரில் இருந்து சுமார்  15 கிமீ, விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிமீ தூரம். மணலூர்பேட்டையில் நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து மேற்கே மூங்கில்துறைப்பட்டுக்கு ஆற்றின் வடகரையை ஒட்டிச் செல்லும் சாலையில் சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ளது ஜம்பை. மணலூர்பேட்டையில் சாலை பிரியும் இடத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் வழிகாட்டிப் பலகை உள்ளது.

 மணலூர்பேட்டையில் ஜம்பை வழிகாட்டி 

ஜம்பை மலை 


ஜம்பை ஊருக்கு முன்பாகவே குன்றுக்கு வழி  பிரிகிறது. அங்கே இரு வழிகாட்டிப் பலகைகள்.



ஜேஷ்டா தேவி சிலையும் மூன்றாம் கிருஷ்ணன் கல்வெட்டும் 


அந்த வழியில் ஒரு ஏரியைச் சுற்றிக்கொண்டுச் சென்றால் தொல்பொருள் துறையின் நுழைவு வளைவு. அதனுள் புகுந்தால் மேற்கொண்டு எந்த வழிகாட்டுதலும் இல்லை. பக்கத்து வயலில் இருந்த ஒரு இளைஞன் வழி காட்டி உதவினான். நுழைவு வளைவிற்கு இடது புறத்தில் 10 ஆம்  நூற்றாண்டு ஜேஷ்டா தேவி சிலையும் அதன் பக்கத்தில் ராஷ்டிரகூட மன்னன் கன்னர தேவன் என்னும் மூன்றாம் கிருஷ்ணனின் (ஆட்சி காலம் 939-967) கல்வெட்டும் உள்ளன. 

ஜேஷ்டா தேவி

சிலையின் கீழ்ப்பகுதி மண்ணில் புதைந்துள்ளது. ஜேஷ்டா தேவியின் வலமாக காளை முக மாந்தனும், இடமாக மாந்தியும் உள்ளனர். பின்னால் காக்கைக் கொடி. ஜேஷ்டா தேவி மரபுக்கு மாறாக கொடி இடையாளாக உள்ளாள்.

ஜேஷ்டா தேவி பற்றி மேலும் அறிய சொடுக்கவும்: ஜேஷ்டா தேவி 

மூன்றாம் கிருஷ்ணன் கல்வெட்டு 

முதலாம் ஆதித்த சோழன் பிற்கால சோழர் தனி ஆட்சியை ஏற்படுத்தியவன். அவன் மகன் பராந்தக சோழன் (கிபி 907-955) தொண்டை மண்டலம் முதல் பாண்டி நாடு வரை விரிவாக்கி  மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி எனும் பட்டப் பெயர் கொண்டான். அவனது ஆட்சியின் பிற்காலத்தில் படையெடுத்து வந்த மூன்றாம் கிருஷ்ணன் கங்கர்கள் உதவியுடன் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் என்ற இடத்தில் கிபி 949 இல் நடந்த போரில்  சோழர் படையைத் தோற்கடித்தான். பராந்தகன் மகன் ராஜாதித்யன் கங்க மன்னன் அம்புபட்டு 'ஆனை மேல் துஞ்சிய தேவன்' ஆனான். மூன்றாம் கிருஷ்ணன் 'காஞ்சியும் தஞ்சையும் கொண்ட' எனும் பட்டப் பெயர் கொண்டான். இப்போருக்குப் பின் பல ஆண்டுகள் தொண்டை நாடு ராஷ்டிரகூடர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் கல்வெட்டுகள் காணப்படும் இடங்களில் ஒன்றுதான் ஜம்பை.

தமிழி கல்வெட்டு


பின்னர் வழிகாட்டியின் உதவியோடு தமிழி கல்வெட்டு உள்ள மலைப்பகுதிக்குச் சென்றேன். மேலே செல்ல படிகள் உள்ளன.

கல்வெட்டுக் குகைக்குச் செல்லும் வழி 

கல்வெட்டு உள்ள இயற்கைக் குகை கம்பி வேலியிட்டு தொல்பொருள் துறையால் மூடப்பட்டுள்ளது. எனவே அதன் அருகில் சென்று பார்க்க இயலவில்லை.

கம்பிகளின் ஊடாக தெரியும் கல்வெட்டு 

கல்வெட்டும் தற்காலத் தமிழ் வடிவும் 

இந்த கல்வெட்டு உள்ள இடம் தாசிமடம் என்று அழைக்கப்படுகிறது. 1981 இல் செல்வராஜ் என்னும் கல்வெட்டு ஆய்வு மாணவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எழுத்து வடிவம் 'தமிழி' என்று அழைக்கப்படுகிறது. தமிழி சங்க கால தமிழ் எழுத்து.

அதியன் நெடுமான் அஞ்சி ஒரு சங்க காலச் சிற்றரசன், தகட்டூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவன், கடை ஏழு வள்ளல்களில் ஒருவன். மலையமான் காரியுடன் போரிட்டு வெற்றி பெற்றவனாக சங்க இலக்கியங்களில் கூறப் படுபவன். அவன் தானமாக கொடுத்த 'பாளி' ஐப் (சமணர் படுக்கை) பற்றிய கல்வெட்டு இது.

'சதிய புதோ' எனும் தொடர் இம்மன்னனை இந்திய வரலாற்றில் பொருத்துகிறது. அசோகரது கல்வெட்டுகளில் சோழர், பாண்டியர், கேரளா புத்ரர், சத்ய புத்ரர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களுள் சத்யபுத்ரர் என்பவர் யார் எனும் கேள்விக்கு இந்த கல்வெட்டு பதில் அளிக்கிறது. இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்படும் வரை சத்ய புத்ரர்  வாய் மொழி கோசர், சாதவாகனர் என்ற ஊகங்கள் நிலவின. ஜம்பை கல்வெட்டு அதியமான்களே அசோகன் கல்வெட்டு குறிப்பிடும் சத்ய புத்ரர் என்று நிறுவுகிறது.

சமணர் படுகைகள்


அங்கிருந்து பாறைகளின் மீது தாவி ஏறிச் சென்றால் சில சமணர் படுகைகள் காணக் கிடைக்கின்றன.

சமணர் படுகை

ஏரியில் கல் உரல் 


குன்றுக்கு மேற்கே உள்ள ஏரியில் ஒரு பழைய கல் உரல் கிடக்கிறது.

நன்றி: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் முகநூல் பக்கம்

கல்வெட்டுகளை படியெடுக்கும் முனைப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது கல்வெட்டாய்வாளர் திரு இரா சிவானந்தம் இந்தக் கல் உரலைக் கண்டறிந்தார். 5 அடி உயரம், 3 அடி விட்டம், 1 அடி ஆழம் கொண்டது இந்தக் கல் உரல். உரலில் மேல் விளிம்பில் 10 செ. மீ. அகலம் உள்ள பகுதியில் கிபி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. "வ த ஸ்ரீ கள்ளையன் செய்த தருமம் கழத்துவப்பட்டியும் பனை பெரிக்கட்டின இவை என் முடி மெ லன" என்பது கல்வெட்டின் செய்தி. "களத்துமேடு மூலமாகவும், பனைமர குத்தகை மூலமாகவும் பெறப்படும் வருவாயிலிருந்து ஏரியை பாதுகாக்க வேண்டும், இந்தப் பொறுப்பை தொடர்ந்து நிலைநாட்டி வருபவர்களின் காலடியை என் தலைமேல் வைத்துக்கொள்வேன்" என்று கள்ளையன் கூறுவதாகப் பொருள் கொள்கின்றனர் கல்வெட்டாய்வாளர்கள். (தினமணிச் செய்தி)

எனக்கு வழிகாட்டி அழைத்துச் சென்ற இளைஞருக்கு நன்றி கூறினேன்.  அந்த இளைஞர் எங்கள் ஊர் வரலாற்றுச் சின்னங்களைக் காண வருபவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது எங்கள்  கடமை என்றார். நான் ஜம்பை ஊரை நோக்கி பயணத்தைக் தொடர்ந்தேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்