தவ்வை (ஜேஷ்டா தேவி, சேட்டை, மூதேவி)

இரண்டாம் பதிப்பு 26-03-2026
முதல் பதிப்பு: 7-10 2019
பெயர்ப் பொருள்
  • ஜேஷ்ட என்றால் வடமொழியில் மூத்த என்று பொருள். (ஜேஷ்ட புத்திரன் = மூத்த மகன்). ஜேஷ்டா = மூத்தவள். 
  • தமிழில் ஜேஷ்டா > (ஜேஷ்டை) > சேட்டை. 
  • ஜேஷ்டா தேவி >  மூத்த தேவி > மூதேவி.  மூ என்ற முன்னொட்டுக்கு மூத்த என்ற பொருள் உண்டு எ.கா மூதாதை.
  • தவ்வை - தமக்கை

வரையரை

ஜேஷ்டா தேவி என்ற பெயருடன் மூன்று வேறு தெய்வங்கள் உள்ளனர்.

1. சக்தி வடிவங்களுள் ஒன்று

சாக்த மரபில் நீர், காத்தல் ஆகியவற்றின் தெய்வம் ஜேஷ்டா. பார்வதியின் ஒரு வடிவமான வாமா எட்டு தத்துவங்களின் குறியீடாக எட்டு வடிவங்களை எடுத்தாள். அந்த எட்டு சக்திகளுக்குள் மூத்தவள் என்பதால் ஜேஷ்டா என்று பெயர். தாந்திரீக மரபுகளில் வழிபாடு உடையவள். ஆகமங்களில் தனித்த உருவ அமைதி கொண்டுள்ளவள்.

2. திருமகளின் தமக்கையும் அமங்கலங்களின் தெய்வமும் ஆன ஜேஷ்டா.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது திருமகளுக்கு முன்னால் மேலெழுந்து வந்தவள் ஜேஷ்டா என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் அப்பெயர் பெற்றாள், 

பாற்கடலைக் கடைதல்
கீழ் வரிசையில் பாற்கடலில் இருந்து கிடைத்தவை. வலது மூலையில் துடைப்பம் முறத்துடன் நிற்கும் ஜேஷ்டா தேவி (வட இந்திய உருவ அமைதி).
(படம் நன்றி: 245CMR, CC BY 3.0, via Wikimedia Commons)

வடமொழி புராணங்களும் நூல்களும் மங்களங்களின் தெய்வமும் செல்வங்களை வழங்குபவளுமான தங்கை திருமகளுக்கு எதிர்மறையாக வறுமை கேடுகளைத் தரும் அமங்கலங்களின் தெய்வமாக ஜேஷ்டாவைக் கட்டமைக்கின்றன. தமிழில் திருக்குறள் முதலான நூல்களும் இலக்கியங்களும் நிகண்டுகளும் கதைகளும் இதே தொன்மங்களை முன்வைக்கின்றன. பேச்சு வழக்கில் 'மூதேவி' வசைச் சொல்லாக உள்ளது.

வட இந்தியாவில் ஜேஷ்டாவிற்கு கோயில் வழிபாடு, சிற்பங்கள் இல்லை. இல்லங்களில் ஆண்டிற்கு ஒரு நாளோ குறிப்பிட்ட நாட்களிலோ, ஜேஷ்டா தங்களை பீடிக்கக்கூடாது என்று என்பதற்காக வழிபாடு நடத்துவது உண்டு. (1)

3. தமிழகத்தில் மட்டுமே காணப்படும் மங்கலங்களின் தெய்வம் ஜேஷ்டா.

தமிழகத்தில் சிவன் கோயில்களிலும் ஊர்ப்புறங்களிலும் காணப்படும்  தவ்வை, சேட்டை என்னும் ஜேஷ்டா செல்வம் வளங்கள் வழங்கும் வளமையின் தெய்வம். ஆகம சிற்ப நூல்கள் நெறிவந்த சிற்ப வடிவம் கொண்டவள். 

அவளது சிற்பங்கள் தமிழகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றை ஒத்த உருவ அமைதியில் வட இந்தியாவில் ஒரு சிற்பமும் கிடைக்கவில்லை. (1)

ஆறாம் நூற்றாண்டு முதல் தவ்வையின் சிற்பங்கள் தமிழகத்தில் கிடைக்கத் தொடங்குகின்றன. இந்தத் தொன்மையின் காரணமாக மூத்தவள் என்ற பொருளில் ஜேஷ்டா, சேட்டை, தவ்வை முதலிய பெயர்கள் அமைந்தன. சங்க கால ஐந்திணைக் கடவுள்களைப் போல தவ்வைக்கும் தமிழ் தனித் தொன்மங்கள் இல்லை. 

வளமை தரும் தெய்வமாக அவளது வழிபாடு பல்லவர் பாண்டியர் சோழர் காலத்தில் 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை சிவன் கோயில்களிலும் ஊர்ப்புறங்களிலும் நீடித்தது. அதன் பின் தமிழகத்தில் ஏற்பட்ட விஜயநகர, நாயக்கர் மாற்றார் ஆட்சி காலத்தில் அவளது வழிபாடு சிறப்பு இழந்தது.

இந்தக் கட்டுரை தவ்வை என்னும் தமிழக ஜேஷ்டாவைப் பற்றியது. அவளது உருவ அமைதி, சிற்பங்கள், வழிபாடு, கல்வெட்டுச் சான்றுகள் முதலியன குறித்தது. இந்தக் கட்டுரை சாக்த ஜேஷ்டாவைப் பற்றி பேசவில்லை. தமிழக ஜேஷ்டா  புராண ஜேஷ்டாவில் இருந்து வேறுபட்டவள் என்பதை தெளிவாக்கும் பொருட்டு புராண ஜேஷ்டா பற்றிய தொன்மங்கள், இலக்கியங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.


தவ்வையின் சிற்ப அமைதி

தவ்வை தனியாக இருக்கும் சிற்பங்கள் அரியவை. 

தனித்த தவ்வை, ஆலகிராமம் செல்லியம்மன் கோயில்    

தவ்வையின் சிற்பம் பொதுவாக சிற்பத் தொகுதியாக அமைகிறது. சிற்பத் தொகுதியில் கீழ்க்காணும் நான்கு சிற்பங்கள் பொதுவாக அனைத்துச் சிற்பத் தொகுதிகளிலும் இடம் பெறுகின்றன.
  • தவ்வை
  • மகன் மாந்தன்
  • மகள் மாந்தி
  • காக்கைக் கொடி
கூடுதலாக கீழ்க்காணும் சிற்பங்களில் ஒன்றோ பலவோ சில சிற்பத் தொகுதிகளில் இடம் பெறுகின்றன. 
  • திருவலகு (அலகு - துடைப்பம்)
  • கழுதை
  • பணிப்பெண்
  • இடுப்பில் குழந்தையுடன் பெண்
  • செல்வப்பேழை
  • மற்றவை - நாகங்கள், கலப்பை, சாமரம்
தவ்வை என்னும் ஜேஷ்டா தேவி
கூடையை செல்வப்பேழையாகக் கொள்வர்
சென்னை அரசு அருங்காட்சியகம்
கிடைத்த இடம் - மைலாப்பூர்; காலம் 13 ஆம் நூ

வெவ்வேறு ஆகமங்கள், சிற்ப நூல்களில் அளிக்கப்பட்டுள்ள தவ்வை சிற்பத் தொகுதியின் உருவ அமைதி மற்றும் சிற்பங்களில் காணப்படும் உருவ அமைதி ஆகியவற்றின் தொகுப்பு:

தவ்வை
  • பத்ராசனத்தின் மீது அமர்ந்து இரு கால்களையும் அகல விரித்து கீழே தொங்கவிட்டு தரையில் ஊன்றியிருப்பாள்.  சில சிற்பங்களில் காலைச் சேர்த்து வைத்து இருக்கிறாள். பத்ராசனம் - திண்ணை போன்ற இருக்கை. ஆசனம் - இருக்கை. புத்தரும் இரு கால்களையும் தொங்கவிட்டு அமர்ந்திருப்பது உண்டு. இவ்வகை அமர்வு 'பிரளம்ப பாதாசனம்' எனப்படும்.
  • அரிதாக ஒரு காலை பீடத்தின் மீது மடித்து வைத்து மற்ற காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் அமர்ந்திருப்பாள். சில தொடக்க கால சிற்பங்களில் நின்ற நிலையிலும் காணப்படுகிறாள்.
அரிதாக சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் தவ்வை
தவ்வை, மாந்தி இருவரது வலது கைகளும் அபயம் காட்டுகின்றன, மூவரது இடது கைகளும் தொடை மீது. தவ்வைக்கு வீரச்சங்கிலி,
சோமாண்டார்குடி
  • பருமனான உடல், பருத்த கன்னங்கள், தொப்புள் வரை தொங்கும் பெருத்த  முலைகள், தொப்பை, பருத்த தொடைகள், தூக்கிய மூக்கு, தொங்கிய கீழ் உதடு, நெற்றியில் பொட்டு. கூரமையான் நீண்ட மூக்கு (ஹஸ்திமுகா). 
  • நடைமுறையில் மேற்கண்ட சிற்பம் போல பல சிற்பங்களில் கொடி இடையும் அழகான உருவமும் கொண்டிருப்பது உண்டு. அரிதாக மார்க்கச்சு காணப்படுகிறது.
  • கண்மை போன்று கருத்த நிறம்.
  • தலைமுடி உச்சிக் கொண்டையிட்டிருக்கலாம் (வாசிகபந்தம்). ஒற்றைப் பின்னலாய் பின்னப்பட்டிருக்கலாம். (ஏகவேணி). தலையின் முன்புறம் கண்ணிமாலை அணிந்திருப்பாள். கரண்ட மகுடம் அணிந்திருக்கலாம்.
  • இரு கைகள். வலது கையில் கருங்குவளை (கருப்பு அல்லி) மலர் அல்லது அபய (காக்கும்) முத்திரை அல்லது ஆகூய வரத (அழைத்து வரம் தரும்) முத்திரை. சில சிற்பங்களில் வலது அல்லது இடது அல்லது இரு கைகளிலும் தாமரையுடன் காட்சி அளிக்கிறாள். இடது கையை தன் தொடைமீது அல்லது பீடத்தின் மேல் வைத்திருப்பாள். சில சிற்பங்களில் இரு கைகளையும் கீழே வைத்திருப்பதும் உண்டு.
  • கையில் செல்வக்குடம் அல்லது செல்வப்பேழையுடன் அல்லது அவற்றின் மீது கை வைத்து இருப்பதும் உண்டு.
வலது கையில் தாமரையுடன் தவ்வை. 
மாந்தி வலப்புறமும், மாந்தன் இடப்புறமும் இடம் மாறி நின்றுள்ளனர். மாந்தியின் வலக்கையிலும் தாமரை. மாந்தனின் கையில் தடி இல்லை. காக்கை வலப்பக்கமும் திருவலகு மாந்தனின் பக்கத்திலும் உள்ளன.
  • கணுக்கால் வரையான நீல மற்றும் சிவப்பு வண்ண கீழாடை. பெரும்பாலான சிற்பங்களில் இந்த ஆடை மடிப்புகளுடன் காணப்படுவதால் இதை சிற்ப இலக்கணப்படி பட்டாடையாகக் கொள்ள வேண்டும்.  மடிப்புகள் அற்றது பருத்தி ஆடை. 
  • பல அணிகலன்களோடு கழுத்தில் எடுப்பான ஆரம். 
  • மார்பில் பூணூல் அல்லது வீரச் சங்கிலி. இரண்டும் இல்லாமலும் இருக்கலாம்.
திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்குணம் தீர்க்காசலேஸ்வரர் கோயில்
ஒற்றைச் சடையும் (ஏகவேணி), வீரச் சங்கிலியும். 
தவ்வையின் வலப் பக்கம் காக்கைக் கொடி, இடப் பக்கம் திருவலகு ஆயுதம்

காக்கைக் கொடி
  • 'காகத் துவசம் உற்றாள்' என்பது தவ்வையின் பெயர்களுள் ஒன்று. 
  • காக்கைக் கொடி பொதுவாக தேவியின் வலப்புறம் அவளுக்கும் மாந்தனுக்கும் இடையில் இருக்கும். சில சிற்பங்களில் இடப்புறம் அமைவதுண்டு. 
  • எந்தப் பக்கத்தில் இருந்தாலும் காக்கையின் முகம் தவ்வையைப் பார்த்தே உள்ளது. 
  • காக்கை பொதுவாக கொடிக்கம்பத்தின் மீது அமர்ந்திருக்கும். சில சிற்பங்களில் கொடிக் கம்பம் இல்லாமல் தனியாகவும் இருக்கும். 
  • சில சிற்பங்களில் கொடியில் கட்டிய துணி ஒன்று பறந்து கொண்டிருப்பதைப் போல காட்டப்பட்டுள்ளது. 
  • காக்கைக்குப் பதிலாக தீப்பந்தத்தையும் கொடியாக நூல்கள் கூறுகின்றன. சில சிற்பங்களில் திருவலகின் இடத்தில் தீப்பந்தம் காணப்படுகிறது.

திருவலகு (துடைப்பம்) ஆயுதம்

சில சிற்பங்களில் தவ்வையின் இடப்பக்கம்  அவளது ஆயுதமான திருவலகு (அலகு - துடைப்பம்) காணப்படுகிறது. இடம் மாறி வலது பக்கம் இருப்பதுமுண்டு.

முறமும் அவள் ஆயுதம் என்று சில நிகண்டுகள் கூறுகின்றன. (1)

வேட்டை சமூகத்தில் இருந்து வேளாண் சமூகமான மனிதக் குழு ஓரிடத்தில் நிலையாய் தங்கத் தொடங்கிய பிறகு அவர்களின் ஒரு பெரிய சவால் கழிவுகளை அகற்றுவது. காக்கையும் துடைப்பமும் கழிவுகளை அகற்றுவதற்கான குறியீடுகள் எனக் கொள்ளலாம்.  (நன்றி: பாபு மனோ)
 
கழுதை ஊர்தி

சில சிற்பங்களில் தவ்வைவயின் ஊர்தியான கழுதை பீடத்தின் முன்புறம் வலப்பக்கம் காணப்படுவதுண்டு. 

வேலூர் அருங்காட்சியகம் (9 ஆம் நூ) சதுரப்பேரியில் கிடைத்தது.
வலது கால் பக்கத்தில் கழுதை. 
காக்கை இடம் மாறி இடது பக்கம் உள்ளது. வலது பக்கம் உடைந்துள்ளது. திருவலகாக இருக்க வேண்டும்.
(படம்: இணையத்தில் இருந்து)

மாந்தனும் மாந்தியும்
  • வலது புறம் காளை முகம் கொண்ட மகன் மாந்தனும், இடது புறம் அழகிய உருவம் கொண்ட பெண் மாந்தியும் தவ்வையுடன் அதே பீடத்தில் அமர்ந்திருப்பர்.
  • இருவரும் தேவியை அடுத்த காலை மடித்து பீடத்தின் மீது நெடுக்காக வைத்து மற்ற காலை கீழே தொங்கவிட்டு உத்குடிகாசனத்தில் அமர்ந்திருப்பார்கள். சில சிற்பங்களில் தேவியைப் போல இரு கால்களையும் கீழே தொங்கவிட்டவாறு அமர்ந்திருப்பர். சிலவற்றில் பீடத்தின் மீது நின்ற நிலையிலும் காணப்படுவதுண்டு.
கள்ளக்குறிச்சிக்கு அருகில் உள்ள சோமண்டார்குடி கிராமத்தில் சோமீசுரமுடையர் கோயில் வளாகத்தில் உள்ள தவ்வை 
பல்லவர் காலம் (8 ஆம் நூற்றாண்டு)
மாந்தனும் மாந்தியும் நின்ற நிலையில் உள்ளனர்.  திருவலகு வலப்புறமும் காக்கை இடப்புறமுமாக இடம் மாறியுள்ளனர்.
மாந்தியின் இடப்புறமும், தவ்வையின் இடது கையின் கீழும் இரு நாகங்கள். தவ்வையின் வலது காலுக்கு அருகே கழுதை ஊர்தி.
தவ்வையின் வலது கை அபயம், இடது கை பீடத்தின் மீது. மார்பில் பூணூல்.
  • மாந்தன் வலது கையில் தண்டமும் இடக் கையில் பாசமும் ஏந்தியிருப்பான். சில சமயம் இடது கை தொடை மீதோ பீடத்தின் மீதோ இருக்கும். கரண்டமகுடம் தரித்து பட்டாடை உடுத்தியிருப்பான். அவன் நிறம் வெள்ளை எனவும் குருதிச் சிகப்பு எனவும் வெவ்வேறு ஆகமங்கள் கூறுகின்றன.
  • மாந்தி வலது கையில் கருங்குவளை ஏந்தியிருப்பாள் அல்லது அபயம் காட்டுவாள். இளமையான உருவம், அழகிய முலைகள். கரண்ட மகுடம் சூடி செவ்வாடை உடுத்தியிருப்பாள். கருமை நிறம் உடையவள்.
  • சில இடங்களில் தவ்வை, மாந்தன் மாந்தி ஆகிய மூவரும் தனித்தனிச் சிற்பங்களாக வடிக்கப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். 
பெண்கள்
  • பணிப்பெண் - பீடத்தின் அடியில் தேவியின் இடது காலின் பக்கத்தில் அல்லது இரு கால்களின் பக்கங்களில்.பணிப்பெண்கள் நிற்கலாம், செல்வப்பேழை அல்லது செல்வக் குடத்தை தலையில் சுமந்தவாறு இருக்கலாம்.
  • இடுப்பில் குழந்தையுடன் பெண்
செல்வப்பேழை

தொண்டை நாட்டிலும் நடு நாட்டிலும் உள்ள தவ்வை சிற்பங்கள் செல்வக் குடம் அல்லது செல்வப் பேழையுடன் காணப்படுகின்றன. தவ்வை தனது ஒரு கையிலோ அல்லது இரு கைகளிலோ செல்வக்குடத்தை பிடித்த நிலையில் இருக்கிறாள். இடப்புறம், வலப்புறம் அல்லது இரு பக்கங்களிலும் காலருகில் செல்வ குடம் அல்லது செல்வப் பேழையை சுமந்து கொண்டு பணிப்பெண் நிற்க அதன் மீது தவ்வை தன் கையை வைத்து இருப்பதும் உண்டு.   இந்த மரபை சோழ, பாண்டிய, கொங்கு நாட்டுப் பகுதிகளில் நாடுகளில் காணப்படவில்லை.

திருமூலநாதர் கோயில் பேரங்கியூர், விழுப்புரம் மாவட்டம்
இரு பணிப்பெண்கள் தலை  மீது செல்வக்குடங்கள். தவ்வை தன் இரு கைகளை அவற்றின் மீது வைத்துள்ளாள்.

மற்றவை 

அரிதாக சில சிற்பங்களில் நாகங்கள், கலப்பை, சாமரம் ஆகியவை காணப்படுகின்றன.

மற்ற பகுதிகளில் இல்லாதவாறு தொண்டை மண்டலத்தில் மட்டும் தேவியின் சிறுகற்பலகைச் சிற்பங்கள் கிடைக்கின்றன. மற்ற தெய்வங்களோடு தவ்வை இருக்கும் எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்தச் சிற்பங்கள் மற்ற தெய்வங்களுக்கு இணையாக தவ்வைக்கு இடமிருந்ததைக் காட்டுகிறது'

தெய்வத் தொகுப்பில் தவ்வை
முருகன், சிவலிங்கம், உமை, திரு, பிள்ளையார் முதலிய தெய்வங்களுடன் தவ்வை.


தவ்வை சிற்பம் காணப்படும் இடங்கள்
  • பல்லவர், சோழர் கால சிவன் கோயில்களில் உள்ள தவ்வை. இவை இருவகை
    • சிவன் கோயில்களில் பரிவார ஆலயங்களில் அல்லது முதல் திருச்சுற்றில் வடமேற்குப் பகுதியில் வழிபாட்டில் உள்ள தவ்வை.
    • கோயில்களில் வழிபாட்டில் இருந்து அகற்றப்பட்ட சிற்பங்களோடு கோயிலின் உள் அல்லது கோயில் சார்ந்த இடங்களில் திறந்த வெளியில் இருக்கும் தவ்வை
  • வயல்வெளிகளில் கிராமப்புறங்களில் உள்ள தவ்வை. இரு வகை
    • வழிபாட்டில் உள்ளவை
    • வழிபாடு அற்றவை
  • அருங்காட்சியகங்களில் தவ்வை சிற்பங்கள்
சிவன் கோயில் திருச்சுற்றில் வழிபாட்டில் தவ்வை சிற்பம்

அரகண்டநல்லூர் (விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகில்) - மூடிய திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் வழிபாட்டில் உள்ளது.

திருக்கோயிலூரை அடுத்த அரகண்டநல்லூர் ஒப்பிலாமணீசுவரர் கோயில்
உள் திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் வழிபாட்டில் ஜேஷ்டா தேவி

கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூரில் தரைக்கடியில் இருந்து கிடைத்த இந்த தவ்வைச் சிற்பம்  சென்ற ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட கோயிலுக்கு வெளியே தகர கொட்டகையில் உடன் கிடைத்த மற்ற சிற்பங்களோடு வைக்கப்பட்டுள்ளது :

தச்சூர் தவ்வை

ஜேஷ்டா தேவிக்கு தனிக் கோயில்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தில் ஜேஷ்டா தேவிக்கு தனிக் கோவில் கட்டப்பட்டு 2014 ஆண்டில் குடமுழக்கு நடந்து வழிபாட்டில் உள்ளது. இதன் கருவறையில் உள்ள ஜேஷ்டா தேவி 9 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்பம்.

கிராமக் கோயில்களில் வழிபாட்டில் தவ்வை சிற்பங்கள்

கிராமங்களில், வயல்வெளிகளில் இருந்த தவ்வை சிற்பங்கள் சிறு கோயில்களிலோ அல்லது திறந்தவெளி அமைப்பிலோ நாட்டார் தெய்வங்களாக வழிபாட்டில் உள்ளன. அவை ஜேஷ்டா என்றோ மாற்றுப் பெண் தெய்வப் பெயர்களிலோ வழிபடப்படுகின்றன.

செங்கல்பட்டு அருகில் உள்ள வீராபுரம் கிராமத்தில் ஜேஷ்டா தேவி கோயில்
இரு படங்களும் தகவலும் நன்றி வேலுதரண் Veludharan Temples Visit)

கோயிலில் பழங்காலத்து தவ்வை.
காக்கை இடது பக்கம் உள்ளது
மாந்தன் ஆசனத்தின் பின்னால் நிற்க மாந்தி ஆசனத்தின் மேல் அமர்ந்துள்ளாள்

விழுப்புரம் அருகே தென் மங்கலம் கிராத்தில் கொற்றவை, ஐயனார் ((படத்தில் இல்லை) ஆகியோருடன் நாட்டுபுறக் கோயிலில் வழிபாட்டில் தவ்வை

வயல்வெளிகளில்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்னை வடகரையில் உள்ள ஜம்பையில் வயல்களுக்கு இடையில் ஒரு 10 ஆம் நூற்றாண்டு தவ்வை சிலையும் அதன் பக்கத்தில் ஒரு சிறு பாறையில் ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டும் உள்ளன. தவ்வை மரபுக்கு மாறாக கொடி இடையாளாக உள்ளாள்.

ஜம்பை தவ்வை

அருங்காட்சியகங்களில் தவ்வை சிற்பம் (1)

தமிழகத்துக்கு வெளியே புதுடில்லி தேசிய அருங்காட்சியகம் - 6, லண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகம் - 1, கொழும்பு தேசிய அருங்காட்சியகம் - 1 ஆகியவற்றில் தவ்வை சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து சென்றவையே. 

தமிழகத்தில் சென்னை, மாமல்லபுரம், வேலூர், ஆற்காடு, கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் தவ்வை சிற்பங்கள் உள்ளன.


தமிழக தவ்வை சிற்பங்களின் இருப்பிட, கால ஆய்வு

முனைவர்கள் திருநங்கை, வெ. வேதாசலம் 'வரலாற்றில் ஜேஷ்டா தேவி மூதேவி வழிபாடு' என்ற தம் ஆராய்ச்சி நூலில் 340 தவ்வை சிற்பங்களை அவற்றின் இருப்பிடம் காலம், உருவ அமைதி ஆகியவற்றோடு பட்டியலிட்டுள்ளனர், அந்த தரவுகளை ஆய்வு செய்யும்போது கீழ்க்கண்ட தகவல்கள் கிடைக்கின்றன.

இருப்பிட அடிப்படையில்

தவ்வைச் சிற்பங்கள் இருக்குமிடங்கள்


மேற்கண்ட படத்தின் மூலம் பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் கோயில்களிலேயே இருப்பதை அறியலாம். மேலும் ஊர் புறங்களில் இருக்கும் சிற்பங்களில் 63% விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே காணப்படுகின்றன. எனவே இந்த மூன்று மாவட்டங்களுக்கு வெளியே மிகப் பெரும்பான்மையான தவ்வைச் சிற்பங்கள் கோயில்களிலேயே கிடைக்கின்றன என்பது தெளிவு. 

தவ்வைச் சிற்பங்களின் காலம்

தவ்வைச் சிற்பங்களின் காலம்

மேற்கண்ட படத்தின் மூலம் தவ்வை சிற்பங்கள் 6 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. மேலும் பெரும்பாலான சிற்பங்கள் 8 - 10 ஆம் நூற்றாண்டை சார்ந்தவை எனவும் தெரிகிறது. இரண்டு 17 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவை. 

மாவட்டவாரியாக தவ்வைச் சிற்பங்கள்

மாவட்டவாரியாக தவ்வைச் சிற்பங்கள்

மேற்கண்ட படத்தின் மூலம் தமிழகத்தில் கிடைக்கும் தவ்வைச் சிற்பங்களில் பெரும் பகுதி (40%) விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே கிடைப்பது தெரிகிறது.

வரலாற்றில் தவ்வை வழிபாடு

6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை தனிச் சிற்பங்களாகவும் சிவன் கோயில்களில் பரிவார தெய்வமாகவும் தவ்வை வழிபாட்டுச் சிறப்பு பெற்றிருந்தாள். பின்னர் தவ்வை வழிபாடு வழக்கொழிந்தது.

பல்லவர், முற்கால பாண்டியர் காலம் 

தமிழகத்தில் பல்லவர் ஆட்சியின் தொடக்கமான 6 -7 ஆம் நூற்றாண்டு முதலே தனித்த தவ்வைச் சிற்பங்கள் கிடைக்கத் தொடங்குகின்றன. 

விழுப்புரம் மாவட்டம் வி சாத்தனூர்

தமிழகத்தில் பல்லவர், முற்கால பாண்டியர் காலத்தில் ஜேஷ்டா தேவி வழிபாடு சிறப்பு பெற்றிருந்தது. பல்லவர்களின் வல்லம் குடைவைரை, முற்கால பாண்டியர்களின் அலங்காரப்பேரி குடைவரைகளில் வெளிப்புற மாடங்களில் தவ்வைச் சிற்பங்கள் உள்ளன.

8 ஆம் நூற்றாண்டு ராஜசிம்மனின் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் மூன்று இடங்களில் தவ்வையின் சிலை உள்ளது.

ஜேஷ்டை, கைலாசநாதர் கோவில், காஞ்சிபுரம்
படம் நன்றி: வி.கே.ஶ்ரீனிவாசன், விஜய் பட் கிழக்கு டுடே மூலம்)

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வெட்டுவித்தவர் பற்றிய கல்வெட்டுச் சான்றோடு தவ்வைக்கு ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இந்தக் குடைவரை மூடிவைக்கப்பட்டுள்ளது. பொ.ஆ. 773ஆம் ஆண்டு சடையவர்மன் பராந்தகன் (பொ.ஆ. 765 - 790) ஆட்சிக் காலத்தில் பாண்டிய படையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் சாத்தன் கணபதி. இவர் அமிர்தலிங்க வரையன் என்ற பட்டத்தினைப் பெற்றவர். திருப்பரங்குன்றத்துக் கோயிலுக்கு அறப்பணி செய்து அங்குத் திருக்குளம் அமையவும் காரணமாக இருந்தவர். அவர் மனைவி நக்கன் கொற்றி இங்கு துர்க்கைக்கும் தவ்வைக்கும் குடைவரைக் கோயில்களை அமைத்தாள் என இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. (8)

ஜேஷ்டை, திருப்பரங்குன்றம் குடைவரை
(படம்: நன்றி விஜய் பட் கிழக்கு டுடே மூலம்)

எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் தொண்டரடிப்பொடி ஆழ்வார், தனது திருமாலையில்,தமிழகத் தவ்வை வழிபாட்டை குறிப்பிடுகிறார்.

"நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டீரே நம்பிமீர்காள் கெருட வாகனும் நிற்கச்
சேட்டை தன் மடி யகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே"

இந்தப் பாடல் எட்டாம் நூற்றாண்டில் சேட்டை செல்வம் தரும் தேவியாக வழிபடப்பட்டதைக் காட்டுகிறது.

சோழர் காலம்

சோழர் காலத்திலும் தவ்வை வழிபாடு சிறப்புற்று இருந்தது. 

9 - 10 ஆம் நூற்றண்டு சோழர் காலக் கற்றளிகளைச் சுற்றி பரிவார ஆலயங்கள் உருவானபோது தவ்வை எண்பரிவாரத்துள் ஒருவராக வடமேற்கில் தனிச் சன்னிதி பெற்றாள். (மற்ற எழுவர் - சூரியன், ஏழு கன்னியர், பிள்ளையார், முருகர், சந்திரன், சண்டிகேஸ்வரர், பைரவர்). 

முதலாம் ஆதித்த சோழன் கால திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில் எண் பரிவாரங்களுக்கான சிற்றாலயங்கள் உள்ளன. அவற்றில் தவ்வைக்கு வடமேற்கில் சன்னிதி உள்ளது. (1)

திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில் எண்பரிவார சிற்றாலயங்களில் ஒன்று
  • எறும்பூர் சிவன் கோயில் கல்வெட்டில் எண் பரிவார அமைப்பு விவரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.(9)
  • முதலாம் ராஜராஜன் காலம் வரை இது தொடர்ந்ததை அவரது திருப்புறம்பியம் கல்வெட்டின் மூலம் அறியலாம். (9)
  • பின்னர் சிற்றாலயங்கள் அமைக்கப்படாதபோது, எண் பரிவாரங்கள் திருச்சுற்று மண்டபத்தில் உரிய இடங்களைப் பெற்றன. அவர்களில் ஒருவராக தவ்வை தன் வடமேற்கு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டாள்.
  • அக்கால பாண்டியர் கோயில்களிலும் எண் பரிவாரங்களில் ஒருவராக தவ்வை இருந்தாள்.
திருவையாறு ஐயாரப்பன் கோயில் பொ.ஆ. 887 கல்வெட்டு ஒன்று அங்கிருந்த ஜேஸ்டா தேவிக்கு நாள்தோறும் நந்தா விளக்கு எரிக்க முதலாம் ஆதித்த சோழனின் மனைவி திருநாராயணதேவியார் தானம் தந்ததைத் தெரிவிக்கிறது.(1)

திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறை தாருகாவனேச்வரர் கோயிலில் உள்ளபொ.ஆ. 898 ஆம் ஆண்டு முதலாம் ஆதித்த சோழன் கல்வெட்டு 'திருக்கேட்டைக் கிழத்தி' க்கு திருவமுதுக்கு தானம் வழங்கிய தகவல்கள் உள்ளன (10) 

பார்த்திபேந்திர வர்மன் (10 ஆம் நூற்றாண்டு) எனும் சோழர்கால தொண்டை மண்டல சிற்றரசனின் மூன்றாம் ஆண்டு ஆட்சிக் கால உத்திரமேரூர்க் கல்வெட்டு "உத்திரமேரூரின் ஒரு பகுதியாகிய குமண்பாடி என்னுமிடத்தில் ஜேஷ்டை திருக்கோயில் இருந்தது. அவரது வழிபாட்டிற்காக 1148 குழிநிலம் தரப்பட்டது" என்று தெரிவிக்கிறது.  இதன் மூலம் ஜேஷ்டா தேவிக்கு தனிக்கோயிலும் வழிபாடும் இருந்தது தெரிகிறது. (6)

தஞ்சை பெரிய கோயிலில் நிறுவப்பட்ட பரிவார ஆலயங்களில் ஒன்று ஜேஷ்டா தேவிக்கானது.. மேலும், அந்தக் கோயில் கல்வெட்டுகள் காவிரி வடகரை பாச்சில் கூறறத்தில் இருந்த அன்பனூர், வெண்ணித்திறப்பான் ஆகிய ஊர்களில் "சேட்டையார் கோயிலுந் திருமுற்றமும்", "சேட்டை கோயிலும்" இருந்ததைக் குறிப்பிடுகின்றன. (1)

புதுக்கோட்டை மாவட்டம் நெய்வேலி என்ற ஊர்க் கோயில் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு 'கொடும்பாளூரைச் சேர்ந்த நிமகுச்சன் செட்டி என்ற வியாபாரி திருக்கேட்டைக் கிழத்தியார் சிற்பத்தை அந்தக் கோயிலில் செய்து வைத்ததை சொல்கிறது. இந்த கல்வெட்டு அந்தச் சிற்பத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. (1)

திருவண்ணாமலை மாவட்டம் அரிதாரிமங்கலத்தில் 13ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுடன் தவ்வையின் சிற்பம் கிடைத்துள்ளது. ஏரிக்கரையில் உள்ள இந்தச் சிற்பத்தோடு ஏரியின் தூம்பும் அமைக்கப்பட்டுள்ளது.

அரிதாரிமங்கலம் சிற்பம்
வலதுபுறம் கல்வெட்டு, இடதுபுறம் காக்கை. ஒல்லியான, அழகிய தவ்வை கிரீட மகுடம் அணிந்து சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறார். மாந்தனும் மாந்தியும் இடம் மாறி உள்ளனர்.

உலகியல் நிகழ்வுகளைப் போல தெய்வங்களின் வழிபாட்டிலும் கால மாற்றத்தால் ஏற்ற இறக்கங்கள் நிகழ்வதை உலகெங்கும் காணமுடிகிறது. திருமாலின் துணைவியாகிய தங்கை திருமகள் வைணவத்திற்கும் தமக்கை சேட்டை சைவத்திற்கும் உரிய தெய்வங்களாக விளங்கினர்.  தங்கையின் வழிபாடு நிலைத்துவிட, தவ்வையின் வழிபாடு 13 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மங்கியது. சோழர் பாண்டியர் ஆட்சி வீழ்ந்து வட இந்திய படையெடுப்புகள், அவற்றைத் தொடர்ந்த விஜயநகர, நாயக்கர் ஆட்சி ஆகிய அரசியல் மாற்றங்கள் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம். 
  • புதிதாக தவ்வைச் சிற்பங்கள் நிறுவப்படவில்லை. 
  • கோயில்கள் புனரமைக்கப்பட்டபோது சிதிலமடைந்த தவ்வைச் சிற்பங்கள் வழிபாட்டில் இருந்து நீக்கப்பட்டன. அவற்றிற்கு பதில் புதிய சிற்பங்கள் வைக்கப்படவில்லை.
  • சில கோயில்களில் தவ்வைக்குரிய வடமேற்கை கஜலட்சுமி பிடித்தாள். 
  • மற்ற கோயில்களில் தவ்வை தன் வடமேற்கு இடத்தைக் தக்க வைத்துள்ளாள்.
பாடல் பெற்றத் தலமான கொல்லிமலை அறப்பளீசுவரர் கோயிலில் திருச்சுற்றின் வடமேற்குப் பகுதியில் வழிபாட்டில் ஜேஷ்டா

வைகானச ஆகமத்தைப் பின்பற்றும் திருமால் கோயில்களில் திருவிழாக் காலத்தில் கொடியேற்றத்தின்போது பல தேவதைகளுடன் பஞ்சம், இயற்கை இடர்பாடுகள் ஆகியவை இல்லாமல் இருக்கவேண்டும் என்று ஜேஷ்டையும் வழிபடப்படுகிறாள். இவ்வழிபாடு உருவம் இல்லாது மந்திரமாகவே நிகழ்கிறது. (3)


நிகண்டு, புராணங்களில் பெயர்கள்

எட்டாம் நூற்றாண்டு முதல் 19 நூற்றாண்டு வரையான பல்வேறு நிகண்டுகள் ஜேஷ்டா தேவிக்கு பல பெயர்களைத் தருகின்றன. அவை புராண ஜேஷ்டாவின் பிறப்பு, உருவம், ஊர்தி, கொடி, இயல்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவை. (12)


பெயர்

பொருள்

ஒத்த மற்ற பெயர்கள்

1

சேட்டை 

மூத்தவள் (ஜேஷ்டாவின் தமிழாக்கம்)

சேட்டி, சேட்டையள்

2

தெளவை

தமக்கை


3

மூதேவி

மூ(த்த) தேவி


4

இந்திரைக்கு மூத்தாள்

இந்திரை - திருமகள்

கமலத் தவ்வை

திருவினுக்கு மூத்தாள்

5

கேட்டை

பிறந்த நட்சத்திரம்


6

முகடி

பெருவயிறு உடையவள்


7

ஏகவேணி

ஓற்றைச் சடையாள்


8

காக்கைக்கொடியாள்


கரடக் கொடி மங்கை

(கரடம் - காக்கை)

9

கழுதை வாகினி


கரவூர்தி 

வாலேபமூர் பெற்றியவள் (கரம், வாலேபம் - கழுதை)

10

சீர்கேடி


(சீர் - செல்வம், அழகு, நன்மை, பெருமை, தலைமை, மதிப்பு, புகழ், இயல்பு, நேர்மை)

கெடலணங்கு, கேடி, 


11

கலதி

கேடு இழைப்பவள்

துயர் வைத்திடும் கொண்டலணங்கு, வறுமையணங்கு, கவலை

12

சிறப்பில்லாதாள்


இலம்பாடி (19 நூ)

13

ஒரு நாள் கிழத்தி (19 நூ)

ஓரு நாள் மட்டுமே வழிபடப்படுபவள்



கூடுதலாக லிங்க புராணம், பத்ம புராணம் முதலிய புராணங்கள் கீழ்கண்ட பெயர்களைத் தருகின்றன. (1)
  • ஜேஷ்டா தேவி
  • அலக்ஷ்மி - லக்ஷ்மிக்கு எதிர்மறையானவள்
  • அகீர்த்தி - புகழற்றவள், 
  • அதுலா - சமநிலை அற்றவள்
  • கபில பத்தினி - கபிலர் மனைவி
  • கும்பி - பெருவயிறு உடையவள் 
  • ஹஸ்திமுகா- நீண்ட மூக்குடையவள்
  • விக்னபார்சதா - இடையூறு ஏற்படுத்துபவள்
  • நிர்த்தி - தீப்பயன் தருபவள்

 புராண ஜேஷ்டா தொன்மம்

நூல்கள் பொ.ஆ.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தே ஜேஷ்டாவை திருமகளின் தமக்கையாகவும் குணங்களில் திருமகளின் மறுபக்கமாகவும் கட்டமைக்கின்றன. 

வேதங்கள் ஜேஷ்டாவைப் பற்றிய நேரடியாகப் பேசவில்லை. அதர்வண வேத பாடல் ஒன்றில் பாபி லக்ஷ்மி என்னும் பெயர் மட்டுமே வருகிறது. 

ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ரிக் வேதத்தின் பின் இணைப்பான 'ஶ்ரீ சூக்தம்' ‘ஸ்ரீ, உன் இருப்பின்மூலம் பசி, தாகம், வறுமை, தீயூழ் போன்றவற்றைக் கொண்டுவரும் ஜேஷ்டை என்னும் அலக்ஷ்மியை என் வீட்டிலிருந்து வெளியேற்று’ என்று வேண்டுகிறது.

பொ.மு. 300-600 ஐ சார்ந்ததாகக் கருதப்படும் போதாயன கிருஹ சூத்திரத்தில் ஜேஷ்டா வழிபாட்டைப் பற்றி ஒரு அத்தியாயம் உள்ளது. இது கிருஷ்ண யஜூர் வேதத்தில் உள்ளது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து திருமகளுக்கு முன்னால் தோன்றியவள் ஜேஷ்டா என்று பத்ம புராணம், லிங்க புராணம் ஆகியவை கூறுகின்றன. ஸ்ரீசூக்தத்தில் கூறப்படும் லட்சுமி, அலட்சுமி என்னும் இருமையை புராணங்கள் வளர்த்தெடுக்கின்றன. அவை ஜேஷ்டா விரும்பும் அமங்கலமான இடங்களையும் அவள் விரும்பாத மங்கலமான இடங்களையும் பட்டியலிடுகின்றன. (பின் இணைப்பு1, 2). பாற்கடலில் இருந்து ஆலகாலத்திற்கு பிறகு ஜேஷ்டாவும், அமுதத்திற்கு முன் திருமகளும் தோன்றினர். இது அவர்கள் இயல்புகளைக் குறிப்பு உணர்த்துகிறது.

புராணங்கள் ஜேஷ்டா வேத மந்திரங்கள் கேட்கும் இடங்கள், சிவன் திருமாலை வணங்குபவர்கள் உள்ள இடங்கள், தெய்வச் சிற்பங்கள் உள்ள வீடுகள் ஆகிய இடங்களில் இருப்பதை வெறுப்பவள் என்றும் தெய்வ வழிபாட்டைக் கேட்டால் காதைப் பொத்திக் கொள்பவள் என்றும் கூறுகின்றன.  இந்தப் புராண ஜேஷ்டா சிவன் கோயிலில் வந்து குடியிருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

பாகவதம் X-6 இல் பூதனை முதலிய கெடு தேவதைகளுள் ஒருத்தி என்று குறிப்பிடுகிறது.

பாஞ்சராத்ரம் ஜேஷ்டாவை கெடு தெய்வமாகவே சித்திரிக்கிறது. ஆடைகள் இன்றி, கையில் விளக்குமாறு ஒன்றை வைத்திருக்கிறாள். கழுதைதான் ஊர்தி.  (பத்ரி சேஷாத்ரி; கிழக்கு டுடே)

கணவர்

ஜேஷ்டாவின் கணவர் பற்றி.பல தொன்மங்கள் உள்ளன:
  • கலி புருஷன் - சனி. ஜேஷ்டா தோன்றியபோது அவளுக்கு இருப்பிடம் காட்டிய தெய்வங்கள், அவள் தன் கணவனான கலி புருஷனுடன் அசுத்தமான மனிதர்களைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியதாக பத்ம புராணம் கூறுகிறது. சனியின் ஊர்தியான காக்கை தவ்வையின் கொடி.
  • உத்தாலகர் (பத்ம புராணம்)
  • துஷகர் என்ற துப்பிரதன் (லிங்க புராணம்)
  • கபிலர் - "வேறு ஒருவரும் இத்தேவியை மணக்க முன்வராதிருக்க கபிலர் இவரை மணந்தார்" (கலைக்களஞ்சியம்: மூதேவி)
  • கணவன் பாதாபுத்திரப்பவன். வருணன் தேவி. (அபிதான சிந்தாமணி; மூதேவி)
குழந்தைகள்
  • மாட்டுத் தலை உடைய ஒரு மகன், அழகான ஒரு மகள். கலியின் மூலம் பிறந்தவர்கள்.
  • மகன் பெயர்கள் - மாந்தன், வ்ரிஷபாங்கன் (வ்ரிஷபம் -காளை), குளிகன்,
  • மகள் பெயர்கள் - மாந்தி, சுகன்யா, அக்னி தேவி (அம்சுமத்பேதாகமம்)
  • கால் ஊனமுற்ற சனி மெதுவாகச் செல்பவன். சூரியனைச் சுற்ற 30 ஆண்டு காலமெடுத்துக் கொள்பவன். அவனுக்கு அதனால் மந்தன் என்று ஒரு பெயர் உண்டு. மந்தன் மக்கள் மாந்தன், மாந்தி.
ஆ சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி அண்ணாமலை சதகத்தை (18-19 ஆம் நூற்றாண்டு) மேற்கோள் காட்டி ஜேஷ்டாவின் வாழ்விடங்களாக அசுத்தமான இடங்களைப் பட்டியலிடுகிறது. (பின் இணைப்பு - 4)

அழுக்கு, நாற்றம், துன்பம், புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனத்துயரம் போன்றவை அவளது இருப்பை உணர்த்துவன.

ஸ்த்ரீ தர்மபத்ததி' என்ற நூல் மணமான பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது. சாஹாஜி, சரபோஜி ஆகிய இரு மராட்டிய அமைச்சராகப் பணியாற்றிய திரியம்பகயஜ்வன் (பொ.ஆ. 1665 -1750) என்பவரால் இயற்றப்பட்டது. அவர் அந்த நூலில் திருமணமான பெண்ணுக்கு கணவனே கடவுள், கணவன் உயிரோடு இருக்கும்போதும் இறந்த பிறகும் அவனையே வணங்க வேண்டும், வேறு கடவுள்களை நேரடியாக வணங்கக் கூடாது, என்று கூறுகிறார். அப்படி வேறு கடவுள்களை வணங்குவது அவள் நரகத்துக்குச் செல்லும் ஆறு வழிகளில் ஒன்று என்னும் அவர். விதிவிலக்காக திருமகளையும் ஜேஷ்டாவையும் மட்டும் வணங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். காலையில் வீட்டில் சாணி மெழுகுவதும் (பசுஞ்சாணியில் திருமகள் வாசம் செய்கிறாள்), வாசலின் முன் கோலமிடுவதும் திருமகளை வணங்குவது என்றும், தான் உண்ணுமுன் உணவைத் ஜேஷ்டாவிற்கு படைக்கவேண்டும் என்றும் கூறுகிறார். (11)

கதைகள்

இவள் அரச மரத்தடியில் கோயில் கொள்பவள். சனிக்கிழமை காலை தங்கையாகிய திருமகள் இவளை காணச் செல்வதால் அப்போது அரச மரத்தடிக்குச் சென்று வறுமை நீங்கி சுகம் பெற அவளை வணங்கலாம். மற்ற காலங்களில் அங்கு செல்லக்கூடாது என்று ஒரு கதை உண்டு. (கலைக்களஞ்சியம்)

"இவள் ஆன்மாக்களுக்குச் சோம்பல் முதலியவற்றை வருவிப்பவள். இலக்குமணர் வனசவாஞ் செய்கையில் கங்கைக் கரையில் இவள் வந்து உறக்கம் உண்டாக்க, இலக்குமணர் இவளை நோக்கி வனவாசத்திற்குப் பிறகு வருக என, அவர் கட்டளைப்படி 14 வருஷம் பொறுத்து வந்தவள்." (அபிதான சிந்தாமணி)

கல்வெட்டு அறிஞர் தி. நா. சுப்பிரமணியன் ஜேஷ்டா பற்றி நாட்டுப்புறக் கதைகள் இரண்டைக் கூறியுள்ளார். (1)

கதை ஒன்று 
ஒரு ஏழை தினமும் ஜேஷ்டா தேவியை வணங்கி வந்தான். ஜேஷ்டா அவனுக்கு உதவ எண்ணினாள். அவள் தனது படைகளை கோட்டான்களாக மாற்றி அந்தி நேரத்தில் அந்தத் தெருவில் அவன் வீட்டைத் தவிர மற்ற வீடுகள் எல்லாவற்றின் மீதும் அமரச் செய்தாள். அப்போது அங்கு வந்த திருமகள், கோட்டான்கள் இல்லாத ஒரே வீடான ஏழையின் வீட்டுக்குள் நுழைந்தாள். அவனுக்குச் செல்வத்தை அளித்தாள்.

கதை இரண்டு
திருமகளும் ஜேஷ்டா தேவியும் தங்களுள் யார் அழகி என்று போட்டியிட்டனர். ஒரு மனிதனை நடுவராக நியமித்தனர். யாருக்குச் சாதகமாக தீர்ப்பு சொன்னாலும் தனக்குக் கேடு வரும் என்று அறிந்த மனிதன் "மூத்தவள் போகும்போது அழகு, இளையவள் வரும்போது அழகு" என்று தீர்ப்புச்சொல்லி தப்பித்தான்.

திருமகள் ஜேஷ்டா தேவி தத்துவம்

திருமகள் மங்கலங்களின் தெய்வம். ஜேஷ்டா அமங்கலங்களின் தெய்வம். 
திருமகள் வெற்றி என்றால் ஜேஷ்டா தோல்வி. திருமகள் மழை என்றால் ஜேஷ்டா பஞ்சம். திருமகள் தானியம் என்றால் ஜேஷ்டா தவிடு. திருமகள் செல்வம் என்றால் ஜேஷ்டா ஏழ்மை. (3)

இருளும் ஒளியும், இரவும் பகலும், பிறப்பும் இறப்பும் போன்று அமைந்த எதிர்மறைகளின் தொகுப்பாக வாழ்வையும் பிரபஞ்சத்தையும் உருவகிக்கும் ஞானத்தில் தோன்றிய குறியீடுகள் ஜேஷ்டாவும் திருமகளும்.

பாலாழி கடைந்த கதைக்கு தியான மரபு சார்ந்தும் கூடுதல் பொருள் உள்ளது.  திருமால் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடல் மானுட மனமேதான். அதை தியானத்தில் கடையும்போது முதலில் எழுந்து வருவது நஞ்சும் அமங்கலமும் தான். பின்னரே மங்கலமும் அமுதும் வருகிறது.


இலக்கியத்தில் புராண ஜேஷ்டா

சங்க இலக்கியங்களில் ஜேஷ்டாவைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்காதை முதலிய காப்பியங்களில் தவ்வை என்ற சொல் புழங்கினாலும், அது தாய் அல்லது அக்கா என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. தெய்வத்தின் பெயராக அல்ல.

தமிழ் இலக்கியத்தில் முதலில் தவ்வையைப் பற்றிய குறிப்பு வருவது திருக்குறளிலேயே. திருவள்ளுவர் மூன்று குறள்களில் தவ்வையை திருமகளுக்கு எதிர்மறை தேவியாக சுட்டுகிறார். அவற்றில் ஒன்றில் 'தவ்வை' என்றும் இரண்டில் ' முகடி' என்றும் அவளை அழைக்கிறார்.

"அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்"        (குறள் 167)


'செய்யவள் தவ்வையை' என்ற தொடருக்கு 'திருமகள் தன் தவ்வையாகிய மூதேவிக்கு' என்று மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோரும், 'லக்ஷ்மி தனக்கு மூத்த சேஷ்டா தேவிக்கு (சேஷ்டா தேவி = மூதேவி)' என்று பரிதியும், 'தனக்கு மூத்த சேட்டா தேவிக்கு' என்று காலிங்கரும், 'திருமகள் தன் தவ்வைக்கு' என்று பரிமேலழகரும் உரை எழுதியுள்ளனர்.

"மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்"         
(குறள் 617)

மாமுகடி - 'மூதேவி' (மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர்), 'சேட்டை' (பரிதி), 'கரிய சேட்டை' (பரிமேலழகர்). மா - கரிய; முகடி - மூதேவி.

"அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப் பட்டார்".
(குறள்: 936)

எட்டாம் நூற்றாண்டு தொண்டரடிப்பொடி ஆழ்வார் மட்டும் தனது திருமாலையில், திருவரங்கத்து பெருமாள் இருக்க, "சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே" என்று தன் காலத்தில் சிறப்புற்று விளங்கிய தமிழக தவ்வை வழிபாட்டை குறிப்பிட்டிருக்கிறார். மற்றபடி இலக்கியக் குறிப்புகள் புராண ஜேஷ்டா தொன்மத்தையே முன் வைக்கின்றன.

9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரின் திருக்கோவைராரில் "என் மகளும் அவள் மன்னனும் இங்கே வருவார்கள் என்று கரைவாயேயானால் நீ உண்ணக் கறிச்சோறு தருவேன்" என்று காக்கையை நோக்கிக் கூறும் பாடல் உள்ளது. அவர் காக்கையை "குணங்கள் அஞ்சால் பொலியும் நல சேட்டைக் குலக்கொடியே" என்று அழைக்கிறார். இதை சேட்டையின் கொடியாகிய காகமே என்று சிலர் விளக்கியுள்ளனர். ஆனால், தேவாரத்தில் சேட்டை குறும்பு என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. கொடிக்கு காகம் என்றும் பொருள் உள்ளது, அதனால் குறும்புகள் செய்யும் காகமே என்று பொதுவாகப் பொருள் கொள்ளப் பட்டுள்ளது. 

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 825-850) மீது பாடப்பட்ட 9 ஆம் நூற்றாண்டு சிற்றிலக்கிய நந்திக்கலம்பகம் நந்திவரமன் பிறந்த நாளன்று

"செய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த
தையல் உறவு தவிர்ந்தோமே"


என்கிறது. (திருமகளுக்கு முன் பிறந்த பெண்ணான ஜேஷ்டாவின் வழிபாட்டை அன்று தவிர்த்தோம்).

12 ஆம் நூற்றாண்டு ஒளவையாரின் நல்வழியில் மூதேவி:

வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை
        (நல்வழி 23)

பாதாள மூலி - சப்பாத்திக் கள்ளி; சேடன் - பாம்பு; மன்று ஓரம் - நீதிமன்றத்தில் பொய்சாட்சி

கம்பராமாயணம் (12 ஆம் நூற்றாண்டு)

"....... கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை"


- (அயோத்தியா காண்டம்: 3 கைகேயி சூழ்ச்சிவினை படலம்; பாடல் 4)

.        .......... மணங்கமழும் செந்தாமரையில் வீற்றிருக்கும்
        தாயாகிய திருமகள், அயோத்தியை விட்டு நீங்கப் போகிறாள் என்று எண்ணி அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த அத்திருமடந்தையின்
        தமக்கையாகிய மூதேவி போல சோர்ந்து கிடந்தாள், கேகயன் மகள் கைகேயி. சீதை கானகத்திற்குப் போவதையும் குறிக்கும்.

வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் விசுவாமித்திரர் ராமருக்கும் இலக்குவனுக்கும் பாற்கடல் கடையப்பட்ட கதையைக் கூறுகிறார். அக்கதையில் பாற்கடலில் இருந்து தோன்றியவற்றின் பட்டியலில் தவ்வையும் திருமகளும் இல்லை. (அரசன் ராமாயணம்).

நாயக்கர் கால ஔவையார் கம்பரை நோக்கிப் பாடிய வெண்பா என்று கூறப்படும் தனிப்பாடல் இது.

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யது."

பெரியம்மை  பரி - மூதேவியின் ஊர்தியான கழுதை

இப்பாடலின் முழுப்பொருளையும் அதன் பின் உள்ள கதையையும் அறிய: 
வழிபாட்டில் உள்ள தவ்வையை கோயிலில் இருந்து வெளியேற்றுவதை கதைக்களனாகக் கொண்டு தவ்வையின் இடத்தை ஆய்கிறது ஜெயமோகனின் 'மூத்தோள்' என்னும் சிறுகதை. தவ்வை-திருமகள் என்ற இரட்டையின் உட்பொருளை விளக்கும் நவீனச் சிறுகதை. 


மேலும் அறிய 

(1 )வரலாற்றில் ஜேஸ்டா தேவி மூதேவி வழிபாடு; முனைவர் வே திருநங்கை, முனைவர் வெ வேதாசலம்; - தவ்வை வழிபாடு குறித்த தரவுகள், தவ்வை சிற்பம் காணப்படும் இடங்கள், அவற்றின் சிற்ப அமைதி ஆகியவற்றின் பட்டியல்கள் முதலியவற்றை உள்ளடக்கிய ஆய்வு நூல்.

(2) Elements od Hindu iconography; T.A. Gopinatha Rao; Vo I Part II; page 390 - 400

(3) கிழக்கு டுடே - கல்லும் கலையும் #9 – ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் - திருமகள், தவ்வை இருவரைப் பற்றியும் விளக்கும் கட்டுரை.

(4) தமிழகத்தின் பல ஊர்களில் காணப்படும் ஜேஷ்டா தேவியின் சிற்பங்களின் படங்கள், தகவல்களைக் காண:
தமிழிணையம் - தகவலாற்றுப்படை

(5) சேட்டையைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஜெயமோகனின் இந்த இடுகையைப் படிக்கலாம்: சேட்டை.

(6) திருக்கோயில் - திங்களிதழ், ஜூன், 1980; http://www.tamilvu.org/courses/degree/d051/d0511/html/d0511555.htm#q1)


(9) Early Chola Temples by S. R. Balasubrahmanyam | 1960 |


(11) Sri and Jyestha: Ambivalent Role Models for Women Julia Leslie

(12) தமிழ் நூல் தொடரடைவுகள், நிகண்டுகள்: http://tamilconcordance.in/TABLE-NIGANDU.html

(13) வை. கணபதி ஸ்தபதி; சிற்பச் செந்நூல்; அத்தியாயம் 13 - ஆடைகள்.


பின் இணைப்புகள்

பின் இணைப்பு 1: பத்ம புராணத்தில் ஜேஷ்டா

பத்ம புராணம் ஜேஷ்டாவின் தோற்றம் மற்றும் இருப்பிடம் குறித்து இரு வேறு அத்தியாயங்களில் இவ்வாறு கூறுகிறது;

6. உத்தர காண்டம் அத்தியாயம் 116

பாற்கடலைக் கடைந்த போது கிடைத்தவற்றில் தேவர்கள் விஷ்ணுவுக்கு லட்சுமியையும் கவுஸ்துப மாலையையும் கொடுத்தனர். அப்போது லட்சுமி, "எனக்கு மூத்தவளுக்கு மணமாகாமல் இருக்க என்னை எப்படி மணப்பீர்கள்? தொல் வழக்கப்படி அவளை முதலில் மணந்து பின்னர் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றாள். விஷ்ணு பெரிய முகமும் வெண்பற்களும் ஒளிரும் உடலும் சிவந்த கண்களும் முரடான பழுப்பு முடியும் கொண்ட உயரமான அலட்சுமியை உத்தாலகர் என்னும் முனிவருக்குக் கொடுத்து விட்டார்.

முனிவர் அவளைத் தம் தவக்குடிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு நிறைந்திருந்த வேத ஒலி ,வேள்விப் புகையின் மணம், புராணக் கதைகளின் ஓசைஆகியவற்றால் துன்பமுற்ற அவள், "இந்த வேத ஒலிகள் எனக்கு உகந்தவை அல்ல. நான் இங்கு வரமாட்டேன். தாமதம் இன்றி என்னை வேறு எங்காவது கொண்டு செல்க." என்றாள்.

உத்தாலகர் , "ஏன் வர மறுக்கிறாய்? இங்கு எது உனக்கு பிடிக்கவில்லை? உனக்கு உகந்த இடம் எது என்று சொல்" என்றார். ஜேஷ்டா "நான் வேதங்கள் கேட்கும் இடத்திலும் விருந்தினர்களுக்கு மரியாதை கிடைக்கும் இடத்திலும் இருக்க மாட்டேன். எங்கு மனிதர்கள் சூதாடுகிறார்களோ, மற்றவர்கள் செல்வத்தை கவர்ந்து செல்கிறார்களோ அந்த இடங்கள், மாற்றார் மனைத் துணையை விரும்புபவர்கள் வாழும் இடங்கள். பசுக் கொலை நிகழும் இடங்கள், மக்கள் குடியில் திளைக்கும் இடங்கள், பிராமணக் கொலை முதலிய பாவங்கள் நிகழும் இடங்கள் எனக்கு உகந்தவை." என்றாள்.

இதை கேட்டு மிகவும் சோர்ந்து போன உத்தாலகர் அலட்சுமியிடம். "இந்த அரச மரத்தடியில் சிறிது நேரம் இரு. நான் நமக்குரிய இடத்தை பார்த்து வருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். நெடுநேரம் ஆகியும் அவர் திரும்ப வராததால் அவர் தன்னைக் கைவிட்டு விட்டதை உணர்ந்து அவள் பரிதாபமாக அழத் தொடங்கினாள். வைகுண்டத்தில் அவள் அழுகையைக் கேட்ட லட்சுமி விஷ்ணுவிடம் "ஓ கருணாமூர்த்தியே,,என் அக்கா தன் கணவனால் கைவிடப்பட்டு அழுது கொண்டிருக்கிறாள். நான் உங்களுக்கு பிரியமானவள் என்றால் அவளுக்கு ஆறுதல் சொல்க" என்றாள். இருவரும் அந்த ஆலமரத்தடிக்கு வந்தனர். விஷ்ணு அலட்சுமிக்கு ஆறுதல் சொன்னார்.. என்னுடைய ஒரு கூறான இந்த அரச மரம் உனது இருப்பிடம் ஆகும். ஜேஷ்டையே, உன்னை தினமும் வழிபடுபவர்கள் வீடுகளில் உன் தங்கை நிலையாக இருப்பாள்" என்றார்.

(- The Padma Purana - Part IX - Translated and annotated by Dr. N.A. Deshpande; Motilal Banarasidass Publishers Pvt Ltd: First Edition; 1991; pages 2715-17)

6. உத்தர காண்டம் அத்தியாயம் 232

"தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து முதலில் காலகூட நஞ்சு வெளிவந்தது. தேவர்களும் அசுரர்களும் பயந்து ஓடினர். சிவன் அதை அருந்தி அவர்களைக் காத்தார். அவர்கள் சிவபெருமானை வணங்கி பாற்கடலை மீண்டும் கடைய ஆரம்பித்தனர். அப்போது மாலைகள், ரத்தினங்கள், ஆடைகள் அணிந்த ஜ்யேஷ்டா தேவி மேலெழுந்தாள் . 'நான் என்ன செய்ய வேண்டும்' என்று தேவி கேட்க, தேவர்கள் இவ்வாறு கூறினர்:
  • 'எந்த வீட்டில் சண்டை நிலவுகிறதோ அங்கு உனக்கு இடம் அளிக்கிறோம். அமங்கலவதியே, அங்கு சென்று வாழ்க.
  • பொய்யர்கள், எப்போதும் கடுஞ்சொல் பேசுபவர்கள், மனத் தூய்மையற்றவர்கள், மாலையில் உறங்குபவர்கள் ஆகியோருக்கு துன்பத்தையும் வறுமையையும் கொடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டில் வாழ்க.
  • ஓ அமங்கலவதியே, எந்த வீட்டில் எலும்பும் சாம்பலும் கழிந்த மயிரும் குப்பையும் கொட்டிக் கிடக்குமோ அங்கு எப்போதும் கலியுடன் இருப்பாய்.
  • ஓ மகா தேவியே, மூடர்கள், பாவங்கள் சூழ்ந்தவர்கள், காலைக் கழுவாமல் ஆசமனம் செய்கிறவர்கள் ஆகியோரோடு இரு.
  • மண் மணல் கறி ஓடு செங்கல் புல் முதலியவற்றைக் கொண்டு பல் துலக்குபவர்கள் இழிவானவர்கள்.
  • ஓ தேவியே, எள், நச்சு ஆய்தங்களால் கொல்லப்பட்ட விலங்குகளின் ஊன், கலிங்கம், கீரை (pot-herb), பூண்டு, காளான்கள், கழிவு தின்னும் பன்றி, வில்வம், பீர்க்கங்காய் (koshataki-fruit), சுரைக்காய் மற்றும் வெங்காயம் முதலியவற்றைப் புசிப்பவர்களின் வீடுகளில் அவர்களுக்கு வறுமையைக் கொடுத்துக் கொண்டு எப்போதும் இரு.'
(The Padma Purana - Part IX - Translated and annotated by Dr. N.A. Deshpande; Motilal Banarasidass Publishers Pvt Ltd: First Edition; 1991; page 3181)

பின் இணைப்பு 2: லிங்க புராணத்தில் ஜேஷ்டா

லிங்க புராணம் கூறுவது:

"பாற்கடலில் இருந்து தோன்றிய ஜேஷ்டாவை துஷகர் என்ற பிராமண முனிவர் மணந்து கொண்டார். அவர் வேத மந்திரங்களை ஓதும் போதும் சிவன் விஷ்ணு ஆகியோரை புகழ்ந்து பாடும் போதும் ஜேஷ்டா தன் இரு காதுகளையும் பொத்திக் கொள்வதைக் கவனித்தார் துஷகர் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றபோது ஜேஷ்டா உடன் வர மறுத்து வீட்டில் இருந்தாள்.

துஷகர் ஒரு நாள் பெரும் யோகியும் அறிஞருமான மார்க்கண்டேயரைக் கண்டார். அவரிடம் ஜேஷ்டாவின் நடத்தையைப் பற்றிக் கூறி, என் தவ வாழ்க்கைக்கு உடன்வர மறுக்கும் என் மனைவியை என்ன செய்வது? அவளோடு நான் எங்கு செல்லலாம், எங்கு செல்லக் கூடாது என்று வினவினார். மார்க்கண்டேயர் கூறினார்:

"இந்த அமங்கலவதி அகீர்த்தி, அலக்ஷ்மி, அதுலா, ஜ்யேஷ்டா என்று அழைக்கப்படுகிறாள். கீழ்கண்ட இடங்களுக்கு அவளோடு செல்ல வேண்டாம்
  • திருமாலிடம் பக்தி செலுத்தி வேத வழியை பின்பற்றுபவர்கள், உடலில் விபூதி பூசிய சிவனடியார்கள் இருக்கும் இடங்கள்
  • திருமாலின் திருநாமங்களை ஓதித் தொழும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் உள்ள பூங்காக்கள், பசுத்தொழுவங்கள், வீடுகள்
  • ஸ்வாஹாகாராம், வாசத்காரம் இருக்கும் இடங்கள்
  • சாமவேத பாடல்கள் வேத மந்திரங்கள் ஓதுவோர், தினசரி அனுஷ்டானங்களை அர்ப்பணிப்புடன் செய்பவர்கள், வாசுதேவனை வழிபடுபவர்கள் ஆகியோர் இருக்கும் இடங்கள்
  • அக்னிஹோத்திரம், லிங்க வழிபாடு நடக்கும் வீடுகள்
  • வாசுதேவர், சண்டிகை சிலைகள் இருக்கும் வீடுகள்
கீழ்கண்டோரை விட்டு விலகி வேறு இடம் செல்க:
  • பாவங்கள் எதுவும் சூழாதவர்கள்
  • மகா தேவராகிய சிவனை நித்திய நைமத்திக யாகங்களால் வணங்குபவர்கள்
  • சுருதிகள் நன்கறிந்த பிராமணர், பசுக்கள், விருந்தினர், சிவனடியார்கள் ஆகியோரால் வணங்கப்படுபவர்கள்
அப்போது துஷகர் "எந்த இடங்களில் நான் பயமின்றி நுழையலாம் என்று கூறுங்கள்" எனக் கேட்க, மார்கண்டேயர், துஷகர் தன் மனைவி ஜேஷ்டாவோடு பயமின்றி மகிழ்ச்சியோடு நுழையக்கூடிய இடங்களைக் பட்டியலிட்டார்:
  • தீய நடத்தை உடையவர்கள் வாழும் வீடுகள்
  • எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவி
  • ஒவ்வொரு இரவும் பூசலிட்டு கொள்ளும் குடும்பம்
  • பாவச் செயல்கள் புரிபவர்கள்
  • தவறான நம்பிக்கை உடையவர்கள், கருணையற்றவர், சோம்பேறிகள்
  • எப்போதும் ரகசியத்தை காக்காத, குடும்ப இணக்கத்தை அழிக்கும், போற்றுதலுக்குத் தகுதி இல்லாத மனைவி
  • வஞ்சகர்கள்
  • வம்புகள் பேசி சூதாடுபவர்கள்
  • பிராமணர்களது செல்வங்களை கவருபவர்கள்
  • தகுதி அற்றவர்களுக்காக யாகம் வளர்ப்பவர்கள்
  • நற்காரியங்கள் நடைபெறாத, வீடுகள் / இடங்கள்
  • நற்காரியங்கள் செய்யாதவர்கள் வாழும் வீடுகள்
  • வேத பிராமணரும் பசுக்களும் விருந்தினரும் இல்லாத வீடுகள்
  • வேத மந்திரங்கள் ஒலிக்காத இடங்கள்
  • திருமால் சிவன், உமை, நந்தி போன்ற தெய்வங்களை வழிபடாதவர்கள், அவர்களுக்கு உரிய சடங்குகள் செய்யாதவர்கள்
  • படுக்கும் போதும் அமரும் போதும் உணவருந்துதல் போன்ற தினசரி செயல்களின் போதும் திருமாலின் பெயரை உச்சரிக்காதவர்கள்
  • சுருதிகள் முன் வைக்கும் சடங்குகளை பின்பற்றாதவர்கள்
  • திருமாலிடம் பக்தி இல்லாதவர்கள், மகா தேவர் சிவனை மறுப்பவர்கள், நாத்திகர்கள்
  • பினாகபாணியான சிவனின் மேன்மையை உணராமல் நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோரை அவருக்கு இணை வைப்பவர்கள்
  • காளி, தாகினி, சேத்திரபாலரை வழிபடுவோர்
  • புத்த துறவி அல்லது புத்தர் சிலைகளைக் கொண்ட வீடுகள்
கீழ்கண்ட மரங்கள் செடி கொடிகள் வளரும் வீடுகள் / இடங்கள்
  • முள் மரங்கள், மொச்சை கொடி (Nispava vallari), புரசு (Brahmavrksa - butea frodosa - flame of the forest)
  • அகத்தி (agastya) எருக்கு (arka), இரு கொல்லி/ கரிப்பாலை (bandhujiva),
  • அரளி (karavira), நந்தியாவட்டை (nandiyavarta), மல்லிகை, (mallika), சங்குப்பூ கொடி (kanya - aparajitha),
  • ஒருவகை வேப்பமரம் (drohi), பனைமரம் (tala), புளிய மரம் (tintidikhanda),
  • ஆலமரம் (nyagrodha), அரச மரம் (asvattha), அத்தி மரம் (udumbara),
  • மாமரம் (cuta), பலா மரம் (panasa), வாழை மரம் (kadali,),
  • கடம்ப மரம் (kadamba), கருங்காலி மரம் (Khadira),
  • இலாமிச்சை / ஜடாமான்சி (jati), ?அவுரி (bahula), பிரிஞ்சி இலை மரம் (tamala), சேராங்கொட்டை marking nut (bhalata),
  • எலுமிச்சை மரம் வளரும் காக்கைகள் உள்ள வீடுகள் அல்லது பூங்காக்கள்
தூய்மை அற்றவர்கள் வாழும் வீடுகள்
  • நீராடல் முதலிய மங்கலச் சடங்குகளை செய்யாதவர்கள்
  • தூய்மைக் குறைபாடு உடைய, உடலை தூய்மை செய்யும் சடங்குகள் செய்யாத, எல்லா வகை உணவுகளையும் தொடர்ந்து உண்ணும் பெண்கள்
  • அழுக்கடைந்த முகம், அழுக்காடை, கறை படிந்த பல் ஆகியவற்றுடன் இருப்பவர்கள்
  • கால் கழுவாதவர்கள்
  • அந்தியில் படுத்துக் கிடப்பவர்கள்
தவறான உணவுமுறை கொண்டவர்கள் வசிக்கும் வீடுகள்
  • குழந்தைகளுக்குத் தராமல் தானே உணவை உண்ணும் பெற்றோர்கள்
  • பெருந்தீனியர்கள்
  • குடிக்கு அடிமையானவர்கள்
  • சூத்திரர்கள் பரிமாறிய சாதத்தை உண்பவர்கள்
  • ஊன் உணவு உண்பவர்கள்
  • தனித்து சாதம் உண்பவர்கள்
  • அந்தியில் உண்பவர்கள்
முறையற்ற உடலின்பம் காண்பவர்கள் வீடுகள்
  • பிறர் மனைவி மேல் இச்சை கொள்பவர்கள்
  • பகல், அந்தி, விழா நாட்கள் ஆகிய காலங்களில் உடலுறவு கொள்பவர்கள்
  • நாய், விலங்குகள் போல புட்டத்தில் உடலுறவு கொள்பவர்கள்
  • மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், சாண்டாளப் பெண்கள் கன்னிப் பெண்கள் ஆகியோரை உடலுறவுக்காக அணுகுபவர்கள்
  • மாட்டுத் தொழுவத்தில், நீரின் அடியில் உடலுறவு கொள்பவர்கள்
  • ஆண்குறியின் மீது பொடித்த கொம்புகளையும் மூலிகைகளையும் தடவிக் கொண்டு பெண்களைப் புணர்ந்த யோனியில் சூடு உருவாக்குபவர்கள்
மற்ற இடங்கள்
  • ஒரு தண்டினி அல்லது முண்டினி இருக்கும் இடங்கள்
  • ஒற்றைப் பணியாள் மூன்று பசுக்கள் ஐந்து காளைகள் ஆறு குதிரைகள் அல்லது ஏழு யானைகள் உள்ள வீடுகள்
துஷகர் தவ்வையோடு அத்தகைய இடங்களுக்கு, குறிப்பாக திருமாலை வெறுப்பவர்கள் வீடுகளுக்கு, செல்லலானார். ஒரு நாள் துஷகர் தவ்வையிடம் "நீ இந்த ஏரிக்கரைக் குடிலில் தங்கியிரு, பாதாள உலகம் சென்று நாம் வாழ தகுதியான இருப்பிடம் பார்த்து வருகிறேன். பெண்கள் உனக்கு காணிக்கை கொடுத்து வழிபடுவர். அவர்கள் வீடுகளுக்கு நீ செல்லக் கூடாது" என்று கூறினார். பின்னர் ஒரு பிளவின் வழியாக பாதாள உலகம் சென்ற அவர் மீண்டு வரவில்லை.

அவர் திரும்ப வராததால் இங்கும் அங்கும் அலைந்த தவ்வை திருமகளுடன் திருமாலைக் கண்டாள். ஆதரவில்லாமல் அலையும் தனக்கு வழிகாட்டச் சொன்னாள். திருமால் 'சிவனின் அருளால்தான் நானும் நான்முகனும் இருக்கிறோம். இதை அறியாது சிவனை இகழ்ந்து என்னை மட்டுமே வழிபடுபவர்கள் என் உண்மையான அடியார்கள் அல்லர். அவர்கள் செல்வம், வீடு, நிலம், வழிபாடு, நற்காரியங்கள் எல்லாம் உனக்கானவை' என்று அருளினார். பின்னர் தவ்வையின் பாதிப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள ருத்ர மந்திரத்தை ஓதியவாறு திருமகளோடு விலகிச் சென்றுவிட்டார்."

(The Linga Purana - Part II; Translated and annotated by J.L. Shastri; Motilal Banarasidass Publishers Pvt Ltd: First Edition; 1951; Reprint 1999; - Chapter 6 page 618 - 26)


பின் இணைப்பு 3: நிகண்டுகளில் மூதேவி

சூடமணி நிகண்டு; தேவப் பெயர் செய்யுள்- 44. முகடி (மூதேவி)

சேட்டை,இந் திரைக்கு மூத்தாள்
சீர்கேடி, சிறப்பில் லாதாள்,
நீட்டிய வேக வேணி,
நெடுங்காகத் துவச முற்றாள்,
கேட்டையே கெடல ணங்கு,
கழுதைவா கனி,கே டெல்லாம்
மூட்டிய கலதி, தெளவை,
முகடி,மூ தேவி, யாமே.

பொருள் விளக்கம்:
பெயர்ப் பொருள் விளக்கம்: மேலே 'பெயர்' என்ற தலைப்பின் கீழ் காண்க
நீட்டிய-தொங்கவிடப்பெற்ற
நெடும்-உயர்ந்த
கேடுஎல்லாம்மூட்டிய-கெடுதிகளையெல்லாம் உண்டாக்கிய

சூடாமணி நிகண்டு; சரசுவதி மகால் வெளியீட்டு எண் 398; முதல் பதிப்பு; 1999; http://www.tamilvu.org/library/nationalized/pdf/05-kovaiilancheran/soodamaninikhandu.pdf
 
சேந்தன் திவாகரம் (நிகண்டு):


சேந்தன் திவாகரம் (நிகண்டு); தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளீயீடு; முதற் பதிப்பு; 1958.


பின் இணைப்பு 4: கலைக்களஞ்சியங்களில் மூதேவி

கலைக்களஞ்சியம்:





அபிதான சிந்தாமணி:


அபிதான சிந்தாமணி; ஆ சிங்காரவேலு முதலியார்; 3 ஆம் பதிப்பு; 1934.


Vettam Mani's Puranic Encyclopedia


Puranic Encyclopedia: A comprehensive dictionary with special reference to the epic and puranic literature; Mani, Vettan; Motilal Banarasidas, Delhi; 1975





கருத்துகள்

  1. தவ்வை (ஜேஷ்டா தேவி) படித்தேன். சரியான தேர்வுதான். மூத்த தேவியைப் பற்றிய நிறைய புதிய விவரங்களைத் தெரிந்துக் கொண்டேன். குறளில் இடம் பெற்ற தங்வை பற்றிய தகவல்களை இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு. புகைப்பட தேர்வும் அருமை.

    இனி கோவில்களுக்கு சென்றால் தங்வையை தேடத் தூண்டும்.

    நண்பர்கள் ஐவருக்கு அனுப்பியுள்ளேன்.

    சிறப்பான முயற்சி. தொடரவும்.

    🙏

    பதிலளிநீக்கு
  2. எனக்கு தெரிந்தவரை ஜேஷ்டா என்பது சமஸ்குருத பெயர் . கேட்டை நட்சத்திற்கு சமஸ்குருத பெயர் ஜேஷ்டா. ஜேஷ்டா தேவியின் தமிழ் பெயர் துரதிஷ்ட தேவி என்பர். மஹாலஷ்மியின் மூத்த சகோதரி என்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூத்ததேவியே 64 செல்வங்களுக்கு அதிபதி ஆவார் ‌

      நீக்கு
  3. Thanks a lot sir. Image references and the data you shared here is new to me & i'm really surprised on reading this. Thanks again!

    பதிலளிநீக்கு
  4. மதுரை மாவட்டத்தில் எங்கு உள்ளது ஜ்யேஷ்ட தேவி கோவில் அல்லது சிற்பம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை திரும்ப படிக்கவும் தெளிவாக இருக்கிறது உங்கள் ஊருக்கு அருகிலேயே கோவில் உள்ளது

      நீக்கு
  5. ஜேஷ்டா தேவிக்கு தனி கோயில் உள்ள இடம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திராசு கிராமத்தில் அமைந்துள்ளது. தனிக்கோயிலைக் கொண்டுள்ளது தனி விமானம் உள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆதி திருவரங்கம் - தமிழகத்தின் மிகப் பெரிய பெருமாள்

நெடுங்குணம் 1: அறிமுகம்