கல்வராயன் மலை அருணா காட்டுப்பன்றிக் குத்திபட்டான் சதிக்கல்
![]() |
| பன்றிக்குத்திபட்டான் சதிக்கல் |
அமைவிடம்
கல்வராயன் மலையில் சேலம் மாவட்டம் கருமந்துறைக்கு அருகில் உள்ள அருணா கிராமத்தில் சாலை ஓரம்.
பயணம்
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் வழினடத்திய கல்வராயன் மலை இரு நாள் பயணத்தின் இரண்டாம் நாள் 01-03-2026 அன்று இந்தச் சதிக்கல்லைப் பார்த்தோம்.
![]() |
| தெளிவான படம் நன்றி: kamal archives via instagram |
திருவண்ணாமலை பக்கத்து கிராமங்களில் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அழிப்பத்தையும் அவற்றைத் தடுக்க விவசயிகள் மின்வேலி அமைத்துள்ளதையும் பார்த்திருக்கிறேன். அவ்வாறு விவசாய பயிர்களை காப்பாற்ற காட்டுப்பன்றிகள் கூட்டத்தைக் கொன்று பன்றி தாக்கி தானும் இறந்த வீரன் (பன்றிக் குத்திப் பட்டான்). பன்றிகளுடன் போராடி இறந்த அவன் மூன்று வேட்டை நாய்கள், அவனுடன் உடன் கட்டை ஏறி இறந்த அவன் மனைவி ஆகியவர்களுக்காக வைக்கப்பட்ட சதிக்கல் இது.
காலம்
- வீரன் வலது கையில் இடது கையில் உள்ள நீண்ட வில்லில் வலது கையில் உள்ள அம்பை நாணேற்றி எய்யும் நிலையில் உள்ளான்.
- அவனது இடது பக்கம் அந்த அம்பு உடலில் தைத்துள்ள ஒரு பன்றி. பன்றியின் மேல் ஒன்றும் கீழ் இரண்டும் ஆக மூன்று வேட்டை நாய்கள் பன்றியைச் சூழ்ந்து போரிடும் நிலையில் உள்ளன.
- வீரனின் வலது பக்கம் ஒரு பெண் வலது கையை தொங்க விட்டு இடது கையில் மதுக்குடுவை ஏந்தி நிற்கிறாள்.
- இருவருக்கும் முழங்கால் வரையான ஆடை, வலது பக்கம் சரிந்த கொண்டை, கைவளைகள்
- வீரனின் இடுப்பிலிருந்து வலது பக்கம் அரை கட்சியிலிருந்து ஒரு குத்துவாள் தொங்குகிறது. கழுத்தில் மணிமாலை. கொண்டையில் இறகு.
- எழுத்துப் பொறிப்புகள் எதுவும் காணப்படவில்லை
வேட்டை நாய்கள் வேட்டையின் போது மோப்பம் பிடித்து விலங்குகளின் இருப்பிடத்தை அடையாளம் காட்டவும், விலங்குகளை சுற்றி வளைக்கவும், அவை திருப்பித் தாக்கும்போது அவற்றின் கவனத்தை திசை திருப்பவும், அவற்றோடு போரிடவும் செய்கின்றன. இந்த நடுகல்லில் வீரனுக்கும், அவன் மனைவிக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை, இறந்த வேட்டை நாய்களுக்கும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சமூகத்திற்கான போரில் மாண்ட நாய்களுக்கு நடுதல் எடுக்கும் மரபும் இருந்துள்ளது திருவண்ணாமலை மாவட்டம் எடுத்தனூரில்
ஒரு பக்க கொண்டை விஜயநகர மற்றும் நாயக்கர் கால நடுகல் சிற்பக்கலை மரபை காட்டுகிறது.
கொண்டையில் உள்ள சிறகு வெற்றி பெற்ற வீரனுக்கு பாராட்டு சின்னமாகவும் குலத் தலைவனின் அடையாளமாகவும் முற்காலத்தில் இருந்துள்ளது.
நன்றி
ஆறகளூர் பொன்.வெங்கடேசன், தலைவர்: சேலம் வரலாற்று ஆய்வு மையம் https://www.facebook.com/share/1BkXrp35R5/
தமிழகத்தில் உள்ள மற்ற காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கற்கள் சில
1. ஆதியூர் காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல்
திருப்பத்தூர் அருகில் உள்ள பழைமையான ஊர் ஆதியூர். இவ்வூர் பழைய திருப்பத்தூர் என்றும், இங்கிருந்தே திருப்பத்தூர் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவ்வூரில் உள்ள கூத்தராயன் வட்டம் என்ற இடத்தில் திறந்த வெளியில் 2 கல் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல், மற்றது சதிக்கல்.
பன்றிக்குத்திப்பட்டான் கல்
இரு வீரர்கள் ஒரு காட்டுப்பன்றியை தங்களது வேல்களைக் கொண்டு குத்திக் கொல்கின்றனர். இருவருக்கும் பக்கவாட்டில் கொண்டை, காதுகள் மற்றும் கழுத்தில் ஆபரணங்கள், இடையில் குறுவாள்.
இருவரும் சகோதரர்களாக இருக்கக்கூடும். இவ்வூரில் பெரும்பான்மையாக வாழும் ஆதிதிராவிடர் மக்கள் இருவரையும் "கூத்தரப்பன்' என வழிபட்டு வருகின்றனர். இவர்களில் பலரின் பெயர் "கூத்தன்', இங்குள்ள சதிக்கல்லிலும், பன்றிக் குத்திப்பட்டான் கல்லிலும் காணப்படும் வீரர்கள் இவர்களது முன்னோர்களாய் இருக்கக்கூடும். மேலும் சங்க இலக்கியங்களில் "கூத்தர்' என்ற இனக்குழு பற்றிய குறிப்புகள் உள்ளன.
சதிக்கல்:

சதிக்கல்லில் குதிரை மீது ஒரு வீரனும், யானை மீது ஒரு வீரனும் அமர்ந்துள்ளனர். குதிரை வீரனின் வலது கையில் குதிரையின் கடிவாளம், இடது கையில் வாள். யானை வீரனின் வலது கையில் அங்குசம், இடது கையில் வாள். இருவரது கழுத்து மற்றும் காதுகளில் ஆபரணங்கள். யானையும், குதிரையும் விரைந்து பாய்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது போரைக் குறிப்பதாக உள்ளது.
வீரமரணம் அடைந்த இந்த இரு வீரர்களுடன் உடன் கட்டை ஏறி மடிந்த அவர்கள் மனைவிகளும் கல்லில் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கைகளில் மதுக்குடுவை. . 2 அடி உயரம், 1 அடி அகலம் மட்டுமே கொண்ட இக்கல்லில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உருவமும் மிகச் சிறியதாகவும், மிக நேர்த்தியாகவும் செதுக்கப்பட்டுள்ளது.
யானையை கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் அங்குசத்தையும், பழைமையான போர் வாளையும் இப்பகுதி மக்கள் இன்று வரை பாதுகாத்து வருகின்றனர். இவ்விரு பொருள்களும் இங்குள்ள சிற்பங்களின் வரலாற்று உண்மைத் தன்மையை விவரிப்பதாக உள்ளன.
சிற்ப அமைதியைக் கொண்டு இச்சிற்பங்களின் காலத்தை 15 ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.
2. மரிமாணிக்குப்பம் ‘காட்டுப்பன்றி குத்திப்பட்டான் சதிக்கல்’
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையின் பின்பக்கத்தில் அமைந்துள்ள மிட்டூர் அடுத்த மரிமாணிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் உள்ளது இந்த ‘காட்டுப்பன்றி குத்திப்பட்டான் சதிக்கல்’. 4 அடி உயரம், 2-1/2அடி அகலம்
இந்தக் கல்லில் ஒரு வீரன் இடது கையில் உள்ள கட்டாரியால் ஒரு காட்டுப்பன்றியின் தலையில் குத்த அது தலையின் மறுபுறம் வெளி வந்த நிலையில் இருக்கிறது. வீரன் தன் வலது கையில் உள்ள வாளினாலும் பன்றியைத் தாக்க முற்படுகிறான். வீரனுக்கு மேல் நோக்கிய கொண்டை, நீண்ட காதுகளில் குண்டலம், கால்களில் வீரக்கழல் கையில் காப்பு இடுப்பில் சிறிய கத்தி.
வீரனுக்கு அருகில் ஒரு பெண் தன் கையில் மதுக்குடுவையுடன் நின்றிருக்கிறாள்.
பயிர்களைப் பாதுகாக்கும் சமூக நலனுக்காக காட்டுப் பன்றிகளை வேட்டையாடி இறந்த வீரனுக்கும், உடன்கட்டை ஏறிய அவன் மனைவிக்கும் இந்த சதிக்கல் எழுப்பப்பட்டு உள்ளது.
இப்பகுதி மக்கள் இந்தக் கல்லினை முனீஸ்வரன் என வழிபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு இங்கு முடி காணிக்கை செலுத்தி ‘முப்பூசை’ படைப்பது (ஆடு, கோழி, பன்றி ஆகிய 3 விலங்குகளை வெட்டிப்பலி கொடுப்பது) வழக்கமாக உள்ளது.
காலம் சிற்ப அமைதியைக் கொண்டு கி.பி.15-ம் நூற்றாண்டு.
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வட்டம் பாகலஹள்ளி சென்றாய பெருமாள் கோயில் அருகில் திறந்த வெளியில் சில நடுகற்கள் காணப்படுகின்றன. இவை விசயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை (16-17 ஆம் நூற்றண்டு). அதில் ஓன்றான இந்த சதிக்கல் கொடிய காட்டுப்பன்றியை குத்திக் கொன்று தானும் இறந்த வீரனுக்கும் அவனோடு உடன் கட்டை ஏறிய அவன் மனைவிக்கும் எடுக்கப்பட்டது.
வீரன் மையமாக பெரிய உருவில் காட்டப்பட்டுள்ளான். பாய்ந்து வரும் பன்றியை வேலால் குத்துகிறான். இடையில் குறுவாள்,. அரையாடை, கைகளில் வளை, கால்களில் வீரக்கழல்கள், நீள்செவிகளில் குண்டலங்கள். வீரனின் வலப்புறம் அவனோடு உடன்கட்டை ஏறிய அவன் மனைவி நிற்கிறாள். அவள் முழங்கால் வரையிலான ஆடை அணிந்து வலது கையை இடுப்பில் வைத்து இடது கையில் தன் கணவனுக்கான மதுக்குடுவையைப் பிடித்துள்ளாள்.
4. சேலம் மாவட்ட பன்றிக் குத்திப்பட்டான் சதிக்கல்
சேலம் மாவட்டம் மல்லூர் இல் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் மலையின் அடிவாரம் இந்த நடுகல் காணப்படுகிறது.
நன்றி படம் தகவல்: Galaxy Trip Maker, via FB post)
5. அலங்காநல்லூர் பன்றிக் குத்திப்பட்டான் சதிக்கல்
இந்த சதிக்கல் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வெள்ளையன்பட்டிக்கும் முடுவார்பட்டிக்கும் இடையான வழியில் தனியார் விவசாய பகுதியில் உள்ளது. 3 அடி உயரம் 1 ½ அடி அகலம். ஊருக்கு சேதம் விளைவித்த காட்டுப் பன்றியயைக் கொன்று தானும் மாண்ட வீரன் மற்றும் வேட்டை நாயின் வீரத்தை பறைசாற்றும் விதமாக இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வீரர் தன் இரு கைகளாலும் பற்றிய வேலால் ஒரு பன்றியைக் குத்துகிறார். பன்றியின் பின்னால் அதைத் தாக்கும் வேட்டை நாய். வீரனின் தலை மீது கொண்டை, காதில் குண்டலங்கள், முழங்கால் வரையான கீழாடை, காதுகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள், தோள் வளைகள், இடையில் குறுவாள்.
சிற்பத்தின் அமைதியைக் கொண்டு இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டு எனலாம். இவ்வூர் மக்கள் இந்த வீரனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.








கருத்துகள்
கருத்துரையிடுக