செங்கம் நடுகற்கள்: மேல் பள்ளிப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில் உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர., ) & (செங். நடு. 71/1978)


ஸ்ரீ கோவிசைய பர (மேச்) சுவர பருமற்கு
யாண்டு ஒன்பதாவது (வ-) மிறையார் வே
ணாடிளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந்
து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கை மாம்மு
டைய பார
தாயர் மக
ன் தொறு மீ
ட்டுப் ........... 
ன் முகன்

கோயில் - அரண்மனை; 
பட்டன்(ர்) - உண்மையாளன்; 
நான்று - அப்போது எனக் குறிக்கும் ஞான்று; 
பாரம் - கவசம் (பிங்.); 
தா - வலிமை, தா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்; 
மகன் - படைஆள், வீரன்; 
மட்டான் - பட்டான், வீர சாவடைந்தான்.

முதலாம் பரமேச்சுர வர்மன் )பொ. யு. 668 - 669) இரண்டாம் மகேந்திர வர்மன் மகன், இரண்டாம் நரசிம்ம வர்மன் என்ற ராஜசிம்மன் தந்தை. அவனது ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செங்கை எனும் இடத்தில் நிலை பெற்றிருந்த பெரும்படைக்குக் கவசப் படைத் தலைவராக விளங்குபவரின் படைஆள் முகன் என்பவன் அந்த ஆநிரைகளை மீட்டு வீர சாவடைந்தான்.

பகைவர் எளிதில் அணுகிவிடாதவாறு படைக்குக் கவசமாக ஒரு படைஅணி செயற் பட்டதை இக்கல்வெட்டு தெளிவாக உணர்த்துகின்றது. மேற்செங்கை மாப்படை வேணாட்டின் படை ஆகும். கோவூர் அரண்மனைப் படை இறுதியில் தோற்றதாலேயே முகன் வீர சாவடைந்த பின்னும் அவனுடன்வந்த பாரமதாயரின் படைஆள்களால் ஆநிரையை மீட்க முடிந்தது. கோயில் என்பது கோஇல் என பிரித்துக் காட்டப்பட்டு உள்ளது. தொடக்க காலத்தில் கோயில் என்ற சொல் அரசனின் வீடு என்ற பொருளிலேயே வழங்கியது. இக்கல்வெட்டு குறிக்கும் இச் சொல்லின் உட்பொருள் அரசன் அல்லது அரச குடும்பம் என்பதாகும். கோயில் பட்டர் என்றால் அரச குடும்பத்திற்கு விசுவாசமான படைத்தலைவர் (person loyal to palace) என்று பொருள். செங்கையே இன்றைய செங்கம் எனலாம்.

முசிறி பட்டணம் ஆராய்ச்சி மையம் கேரளா வில் நடுகல் சிறப்பை அனைவருக்கும் உணர்த்த திருவண்ணாமலை மேல் பள்ளிப்பட்டு நடு கல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



துணை

1. செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு,

2. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. பக்கம். 147

3. https://tamildigitallibrary.in/Articles/கல்வெட்டு-1732-மேல்பள்ளிப்பட்டு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவ்வை (ஜேஷ்டா தேவி, சேட்டை, மூதேவி)

ஆதி திருவரங்கம் - தமிழகத்தின் மிகப் பெரிய பெருமாள்

நெடுங்குணம் 1: அறிமுகம்