(இ)டாகினி என்னும் பெண் பேய் - சிற்பம், இலக்கியம், தொன்மம், தெய்வம்
- மனிதர்கள் அல்லது அவர்களின் பிணங்களைத் தின்னும் பேய்கள். அவர்கள் காளியின் ஏவல் பெண்களாக சிறு தெய்வங்களாகவும் உள்ளனர்.
- இந்து புராணங்கள், சாக்த மற்றும் திபெத்திய பௌத்த தாந்திரீக மரபுகள் ஆகியவற்றில் புழங்கும் தெய்வங்கள்.
![]() |
| இடாகினி - ஒருகோடி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்தில் இருந்து மேற்கே 7 கிமீ தூரத்தில் உள்ள ஒருகோடி கிராமத்தில், கூட ஒரு தவ்வை சிற்பத்துடன் இடக்குறி: 11.923069444444437, 79.43939444444442 |
உருவ அமைதி
![]() |
| இடாகினி - மாரங்கியூர் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கண்ட ஒருகோடியில் இருந்து மேற்கே 10 கிமீ தொலைவில் தென்பெண்ணை சூழ்ந்த ஒரு ஆற்றிடைத் தீவில் உள்ளது. இடக்குறி: 11.91618608333333, 79.36853055555554 |
செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;
பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்
படு பிணம் தா’ என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,
சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்கு
இடு பிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,
லங்காவதார சூத்திரம் என்னும் பௌத்த நூலில் கௌதம புத்தர் (பொ.ஆ.மு 563 - 483) மனித ஊனை உண்ணும் கொடும் டாகன், டாகின்களை குறிப்பிடுகிறார். ஒரு அரசன் பெண் சிங்கத்தைப் புணர்ந்து பெற்ற 'கல்மசபாதன்' மனிதர்களை உண்ணும் அரசன் ஆகிறான். அவன் வழித்தோன்றல்கள்தான் டாகன், டாகினிகள் என்கிறார்.
ஈ சிங் (Yi-xing) என்னும் சீன அறிஞர் (பொ.ஆ. 683-727) மகா வைரோசன தந்திரம் என்ற பௌத்த நூலிற்கு தான் எழுதிய உரையில், மனிதர்களைத் தின்னும் பேய்களாக இருந்த டாகினிகள் பிணங்களை மட்டும் தின்னும் பேய்களாக அடக்கப்பட்டதின் கதையைச் சொல்கிறார்.
இதே போன்ற தொன்மம் ஜப்பானிய புத்த மரபிலும் உள்ளதாம்.
![]() |
| பிணம் தின்னும் டாகினிகள் (படம் நன்றி: 大正新脩大蔵経 図像部 (SAT Taishōzō Image Database), Public domain, via Wikimedia Commons) |
இடாகினி தெய்வ நிலை எய்துதல்
"வஞ்சனி மாயவள் வலவை இடாகினி" - 1.தெய்வப்பெயர்:1 24/1
- வஞ்சனி - வஞ்சகி, மாயை, காளிக்கு ஏவல் செய்யும் பெண்
- மாயவள் - கரிய நிறமுடையவள்
- வலவை - வல்லவள்
என்று குலோத்துங்கனுக்கும் பாண்டியனுக்கும் நடந்த போரைப் பார்வையிட்டு அமர்ந்திருந்த காளியின் இரு பக்கங்களிலும் இடாகினிகள் ஈ விரட்டும் பணியைச் செய்ததைக் குறிப்பிடுகிறது.
துணை:
https://en.wikipedia.org/wiki/Dakini
https://tamil.wiki/இடாகினி பேய்
http://tamilconcordance.in/TABLE-NIGANDU.html - நிகண்டுகளின் தொடரடைவுகள்
பின் இணைப்பு - 9 கனாத்திறம் உரைத்த காதை
அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்
கோலங் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள்
அகன்ற இருப்பிடங்கள் தோறும் அரும்பு அவிழ்ந்து மலர்ந்த முல்லையின் ஒளிரும் மலரை நெல்லுடன் தூவி பகலவன் மறைந்த மாலைப் பொழுதில் அழகிய விளக்கை ஏற்றி இராப் பொழுதிற்கு ஏற்ற ஒரு கோலத்தை கொடி இடை மகளிர் கொண்டு நிற்க, முன்னொரு நாளிலே
மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப்
பால்விக்கிப் பாலகன் றான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையா ளென்மேற் படாதனவிட்
டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண்
டமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்குந்
தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர்
மாலதி தனது மாற்றாளின் மகவுக்குப் பாலூட்ட, பால் விக்கி அக் குழந்தை மரிக்க, மாலதி, 'பார்ப்பானும் அவன் மனைவியும் என்மேல் அடாத பழி கூறுவர், அன்றி
ஏற்கத் தக்கன கூறார்,' என என்ன செய்வதென்று அறியாமல் மனம் கலங்கி அம் மகவை எடுத்துக்கொண்டு, தேவர்கள் தருவாகிய கற்பகம் நிற்கும் கோயில்,
வெள்ளை யானை ஐராவதம் நிற்கும் கோயில், அழகிய வெள்ளை நாகர் ஆகிய பலதேவர் கோயில், உச்சிக் கிழான் என்னும் சூரியன் கோயில், இறைவன் ஊராகிய கைலாயம் நிற்கும் கோயில்(அல்லது ஊராட்சி நடக்கும் அம்மன் கோயில்), வேற்படை நிற்கும் கோயில், வச்சிரப் படை நிற்கும் கோயில், ஊர் எல்லைத் தெய்வக் கோயில், அருகன் கோயில், நிலவுக்கோயில் ஆகிய கோயில்களில் எங்கும் புகுந்து, தெய்வங்களே எனக்கு வந்த துன்பத்தைத் தீர்த்துவையுங்கள் என்று கூறிக்கொண்டு சென்று, ஒரு
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்
கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய்
செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார்
பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற்
படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு
பாசண்டச் சாத்தன் கோயிலை அடைந்து அவன் பால் வரம் வேண்டிக் கிடந்தவளுக்கு முன், பிறரைப் பழிக்கும் இளங்கொடி போன்ற ஒரு பெண் தோன்றி, “குற்றமற்றவளே,
முன் செய்த தவப்பயன் இல்லாதவர்களுக்குத் தெய்வங்கள் வரந்தரமாட்டார்கள். இது பொய்யுரை இல்லை, மெய்யுரையே” எனச் சொல்லி, கையிலுள்ள குழந்தையின் பிணத்தைத் தா என்று அவள் கையிலிருந்து பறித்து எடுத்துக் கொண்டு,
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங்
கிடுபிணந் தின்னு மிடாகினிப்பேய் வாங்கி
மடியகத் திட்டாள் மகவை இடியுண்ட
மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன்
அஞ்ஞைநீ யேங்கி ழயலென்று முன்னை
சுடுகாட்டிலுள்ள சக்கரவாளக் கோட்டத்தில் செறிந்த இருளில் சென்று ஆங்கே குழியில் இடும் பிணங்களைத் தின்னும் அந்த இடாகினிப் பேயானவள் அக் குழவியின் பிணத்தை விழுங்கிவிட்டாள்.
அப்போது, இடிக்குரல் கேட்ட மயில் போல் ஏங்கி அழுகின்றவளை நோக்கி, அச் சாத்தன் என்னும் தெய்வம் 'அன்னையே நீ ஏங்கி அழாதே' என்று கூறி, 'நீ செல்லும் வழியில்
உயிர்க்குழவி காணாயென் றக்குழவி யாயோர்
குயிற்பொதும்பர் நீழற் குறுக அயிர்ப்பின்றி
மாயக் குழவி யெடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாளத் தையலாள் தூய
மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித்
உயிருடன் உன் குழவியாய்க் காண்பாய் 'என்று தானே அந்தக் குழவியாய் குயில்கள் நிறைந்த ஒரு மரச் சோலை நிழலில் கிடக்க, ஐயமேதுமின்றி அந்த மாயக் குழவியைத் தன் குழவி என்று எடுத்து வயிற்றில் அணைத்துக்கொண்டு போய்க் குழவியின் தாயின் கையில் கொடுத்தாள்.
தூய மறையோனிடம் பிரம்மச்சாரியாய் சிறந்த கல்வியிலும்
துறைபோ யவர்முடிந்த பின்னர் இறையோனும்
தாயத்தா ரோடும் வழக்குரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தேவந்தி யென்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன்
கேள்வியிலும் துறைபோய் தந்தையும் இரு தாய்களும் இறந்த பின்பு, தன் கூட்டுக் குடும்பத்தாருடன் வழக்குரைத்து தந்தைக்கும் தாயார்க்கும் செய்ய வேண்டிய நீர்க்கடன் முதலியவற்றைச் செய்து முடித்து வாழ்ந்த பின் ஒருநாள்,
தேவந்தி எனும் தன் மனைவியின் பூப் போன்ற மையுண்ட கண்கள் இதனைப் பொறுக்கட்டு மென்று அருள் செய்து
மூவா இளநலங் காட்டியெங் கோட்டத்து
நீவா வெனவுரைத்து நீங்குதலுந் தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும்
தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப் போ்த்திங்ஙன்
மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக்
பின்பு அவளைப் பொருந்தி, தனது என்றும் முதுமை அடையாத இளைய அழகினை வெளிப்படுத்தி நீ எமது கோட்டத்துக்கு வாவெனச் சொல்லி நீங்கினான்.
எனது நெஞ்சினைப் பிணித்த கணவன், தீர்த்தத் துறைகள் எல்லாம் சென்று தீர்த்தமாடுவேன் என்று என்னை விட்டுப் போனான். அவனை மீண்டும் இங்கு அழைத்துத் தருவாயாக என்ற பெயரில்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க்
கண்ணகி நல்லாளுக் குற்ற குறையுண்டென்
றெண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோ டென்றாள் பெறுகேன்
கோயிலுக்குச் சென்று நாள்தோறும் வழிபட்டுக் கொண்டிருப்பவளாகிய, தூய மொழியினை உடைய தேவந்தி, குறைதற்கரிய சிறப்பை உடைய கண்ணகியாகிய நல்லவளுக்கு கணவன் பிரிந்ததால் உற்றதொரு துன்பம் உண்டென்று நினைத்து வருத்தமுற்ற நெஞ்சத்துடன் கோயிலை அடைந்து அறுகு சிறுபூளை முதலியவற்றை நெல்லுடன் தூவி வழிபட்டு கண்ணகியிடம் சென்று, கணவனை மீண்டும் பெறுவாயாக என்று வாழ்த்தினாள். நீ இங்ஙனம் கூறுவதனால் நான் பெறுவேன்
கடுக்குமென் நெஞ்சங் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுட் பட்டேம்
பட்ட பதியிற் படாத தொருவார்த்தை
இட்டன ரூரா ரிடுதேளிட் டென்றன்மேற்
கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
ஆயினும் நான் கண்ட ஒரு கனவினால் என் நெஞ்சம் ஐயுறுகிறது. என் கணவன் என்னைக் கைப்பற்றி அழைத்துச் செல்ல, நாங்கள் ஒரு பெரிய நகரத்தினுள் புகுந்தோம். அந்த நகரில் எங்களுக்கு ஏற்காத ஒரு பழியை அவ் வூரார் இடுதேளிடுவது போல் என் மீது சுமத்தினர். அப் பழிமொழியால், கோவலனுக்கு ஒரு துன்பம் உண்டாயிற்று என்று பிறர் சொல்ல அதனைக் கேட்டு
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோ
டூர்க்குற்ற தீங்குமொன் றுண்டா லுரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடிஇ தீக்குற்றம்
உற்றேனொ டுற்ற உறுவனோ டியானுற்ற
நற்றிறங் கேட்கின் நகையாகும் பொற்றெடீஇ
அவ்வூர் அரசன் முன்னர் யான் சென்று வழக்குரைத்தேன். அதனால் அவ் வரசனோடு அவ் வூர்க்கும் உண்டாகிய தீங்கு ஒன்று உண்டு. அதை உனக்கு உரைக்கமாட்டேன். செறிந்த தொடியினை உடையவளே கடியதொரு குற்றம் நிகழ்வதாயிற்று. அத் தீய குற்றத்துக்கு ஆளான என்னோடு பொருந்திய என் கணவனுடன் நான் அடைந்த நற்பேற்றினை நீ கேட்டால் உனக்கு அது சிரிப்பை மூட்டும் என்று கண்ணகி சொல்ல,


.png)
கருத்துகள்
கருத்துரையிடுக