ஆலகிராமம் யமதண்டீஸ்வரர் ஆலயம் - தமிழகத்தின் முதல் பிள்ளையார் சிற்பம்

பயணம்

2026 ஆம் ஆண்டு மார்ச் 14, 15 ஆம் தேதிகளில் ஆற்றுப்படை முன்னெடுப்பில்  திரு வே. பார்த்திபன், திரு கண. சரவணகுமார், திரு சி. பழனிசாமி ஆகியோர் வழிநடத்திய விழுப்புரம் மரபு நடையில் முதச் நாள் முதல் இடமாக நாங்கள் சென்றது ஆலகிராமம்.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள சிற்றூர் ஆலகிராமம். தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்திற்கும் விழுப்புரத்திற்கும் இடையில் உள்ள கூட்டேரிப்பட்டில் இருந்து மேற்கே 6 கிமீ தூரம். 

எமதண்டீஸ்வரர் கோயில்

கிராமத்தின் எல்லையிலேயே சாலையின் இடது பக்கம் எமதண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மார்க்கண்டேயரின் உயிரை எடுக்கச் செய்த முயற்சி வினையாகி சிவ தண்டனை பெற்ற எமன் இங்குள்ள சிவனை வழிபட்டு குறை நீங்கினானாம். 2015 ஆம் ஆண்டு கோயில் திருப்பணிகளின் போது அங்கு அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார், லகுலீசர், முருகன் மகா விஷ்ணு, ஐயனார் சிற்பங்கள் கிடைத்தன. இப்போது திருப்பணிகள் முடிந்து கோயில் புதுப் பொலிவுடன் உள்ளது. 

எமதண்டீஸ்வரர் ஆலயம், ஆலகிராமம்

மூத்த பிள்ளையார் புடைப்புச் சிற்பம்

2015 இல் கிடைத்த பிள்ளையார் பலகைச் சிற்பம்
முன்னர் விமானத்தின் தெற்குப் பக்கம் அதிட்டானத்தின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தது (6) 
இப்போது திருச்சுற்றின் தென்கிழக்கில் தனிச் சன்னதி கொண்டுள்ளார்.

பிள்ளையாரின் தாழ்புடைப்புச் சிற்பம்
75 செ.மீ. உயரம், 40 செ.மீ. அகலம். அரைத் தாமரை ஆசனம்.
இரு கைகள், வலது கையில் ? பாசம் ?தடி, இடது கையில் மோதகம்.
கரண்ட மகுடம், மார்பில் பூணூல், தோள் வளை, முன்கையில் காப்பு
இடையில் முழங்கால் வரையான ஆடை, காலில் தண்டை

இதன் பீடத்தில் உள்ள கல்வெட்டை 2015 இல் ஆய்வு செய்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் வீரராகவன், மங்கையற்கரசி தம்பதி அது 5 ஆம் நூற்றண்டைச் சேர்ந்தது என்றும் இது தமிழக்த்தின் காலத்தால் மூத்த பிள்ளையார் சிற்பம் என்றும் வெளி உலகுக்கு தெரியப்படுத்தினர். இதை மறைந்த திரு ஐராவதம் மகாதேவன் உறுதிப்படுத்தினார்.

பீடத்தில் மூன்று வரி வட்டெழுத்துக் கல்வெட்டு
கல்வெட்டின்  பாடம்:
'பிரமிறை பன்னூரு
சேவிக --------மகன் -------- கிழார்
கோன் ----------கொடுவித்து'
(1)
(படம் நன்றி: முத்துராமன் இரா, அகரம் இணைய இதழ் மூலம்(8)

இதன் எழுத்தமைதி, பொ.ஆ. 4-ஆம் நூ பூலாங்குறிச்சி கல்வெட்டின் எழுத்தமைதிக்கும் பொ.ஆ.. 6-ஆம் நூ பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரைக் கோயில் கல்வெட்டின் எழுத்தமைதிக்கும் இடைப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் அரசலாபுரம் கோழி நடுகல், செஞ்சி அருகே திருநாதர் குன்று மற்றும் அவலூர்பேட்டை அருகே உள்ள பறையன்பட்டு பாறை மீதுள்ள நிசீதிகை கல்வெட்டுகள், பெருமுக்கல் கீறல்வரைவுகள் அருகே உள்ள கல்வெட்டுகள் ஆகியவற்றின் எழுத்தமைதியும் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இவற்றின் எழுத்தமைதியை இந்தக் கல்வெட்டு கொண்டுள்ளது. (1) எனவே இதன் காலம் பொ.ஆ 5 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டது. (1)

ஆலகிராமம் பிள்ளையார் சிற்பத்தின் காலகட்டத்தைச் சேர்ந்த, எழுத்து பொறிக்கப்படாத நிலையில்,  இரண்டு பிள்ளையார் சிற்பங்கள் உத்திரமேரூரிலும், வேளச்சேரியிலும் வழிபாட்டில் இருப்பதாக மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். (8)

தமிழ் இலக்கியங்களில் பிள்ளையார் வழிபாட்டின் தொடக்கம்

சங்க இலக்கியங்களிலோ சங்கம் மருவிய கால இலக்கியங்களிலோ பிள்ளையார் குறிப்பிடப்படவில்லை. (2)

7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த அப்பர், சம்பந்தர் தேவாரத்தில்தான் பிள்ளையார் முதன்முதலாக அறிமுகமாகிறார், ஆயினும் பிள்ளையாரை விட முருகனைப் பற்றியே அதிக இடங்களில் குறிப்புகள் வருகின்றன.

வாதாபி கணபதி

முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றியபோது (பொ.ஆ. 642) அவரது படைத்தலைவராக இருந்தவர் பரஞ்சோதி. அவர் பின்னர் சிவனடியாராகி சிறுத்தொண்டர் என்று பெயர் பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவர். அவர் வாதாபியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கொண்டுவந்து தமிழக்த்தில் நிறுவினார், அதுதான் தமிழகத்தில் பிள்ளையார் வழிபாட்டின் தொடக்கம் என்பது செவி வழித் தொன்மம். இது மேற்கண்ட இலக்கியச் சான்றுகளுடனும் ஒத்துப் போகிறது. இது உண்மையானால் அந்த வாதாபி கணபதி எங்கே? வாதாபி கணபதி என்ற பெயரில் பலர் இருந்தாலும் இருவர் மட்டுமே சான்றுகள் கொண்டுள்ளனர். (3)
  • திருச்செங்காட்டங்குடி வாதாபி கணபதி
  • திருவாரூர் வாதாபி கணபதி
திருச்செங்காட்டங்குடி வாதாபி கணபதி

திருவாரூருக்கு வடகிழக்கில் 22 கிமீ தூரத்தில் உள்ள திருச்செங்காட்டங்குடி சிறுத்தொண்டர் வாழ்ந்த ஊர். இங்குள்ள கணபதீச்சரம் என்னும் உத்தராபதீஸ்வரர் சிவ ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிறுத்தொண்டர்  நிறுவிய  'வாதாபி கணபதி' ஆக  வழிபடப்பட்டு வருகிறார்.. ஆனால் இந்தப் பிள்ளையாரின் சிற்ப அமைதி பிற்காலத்ததாகவும் சோழர் காலக் கலை அமைதியுடனும் உள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.(4,5)

திருசெங்காட்டங்குடியாரும், திருவாரூராரும்
(படம் நன்றி: தமிழ் விக்கி, வாதாபி கணபதி பக்கம்)

திருவாரூர் வாதாபி கணபதி

திருவாரூர் திருக்கோயிலில் தியாகராஜர் சன்னிதியின் முதல் திருச்சுற்றில் உள்ள இவரது சிற்ப அமைதி தொன்மையானதாகவும் தமிழக சிற்ப அமைதியிலிருந்து மாறுபட்டும் சாளுக்கிய சிற்ப அமைதியுடனும் உள்ளது.  மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சதர் 'வாதாபி கணபதிம் பஜே ஹம்' என்ற தமது புகழ்பெற்ற பாடலை இவர் முன் தான் இயற்றினார். ஆகவே இவரை பரஞ்சோதி கொணர்ந்த வாதாபி கணபதியாக ஏற்கலாம் என்று ஆய்வாளர் டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன் கருதுகிறார்.(4)

போரில் வெற்றி பெற்ற நாடுகளில் இருந்து தெய்வச் சிலைகளை  வெற்றியின்  நினைவாக கொண்டுவரும் வழக்கம் சோழர் காலத்திலேயே தொடங்கியது என்றும் அந்த வழக்கம் பல்லவர் சாளுக்கியர் காலத்தில் இல்லை என்று கலை வரலாற்றாசிரியர் R H குல்கர்னி கருதுகிறார்.(5)

பிள்ளையார்பட்டி பிள்ளையார் 

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள சிவனுக்காக எடுக்கப்பட்ட முத்தரையர் காலக் குடைவரையின் முன் சுவரில் கோட்ட தெய்வமாகச் செதுக்கப்பட்ட பிள்ளையார் இன்று கற்பக விநாயகராக முதன்மைத் தெய்வமாக வழிபடப்படுகிறார் 

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
(படம் நன்றி: By Ms Sarah Welch, CC0, via wikimedia commons)

அந்தக் குடைவரையில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு அதன் காலத்தை ஆறாம் நூற்றாண்டாக திரு நாகசாமி திரு ஐராவதம் மகாதேவன் ஆகிய அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.

1992 இல் திரு ஐராவதம் மகாதேவன் எடுத்த படி
'எக் காட்டூரு
க் கோன் பெருந்தசன்'
 
(படம் நன்றி: வரலாறு இணைய இதழ்)(9)

மேற்கண்ட படியில் 'எ'கர எழுத்தின் உட்புறத்திலும் மற்ற ஆறு மெய் எழுத்துகளின் மேலும் உள்ள புள்ளிகள் தெளிவாகத் தெரிகின்றன.  இவை

        "மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்
        எகர ஒகரத் தியற்கையுமற்றே"
என்ற தொல்காப்பிய சூத்திரத்தை மெய்ப்பிக்கின்றன என்று திரு ஐராவதம் மகாதேவன்கூறியுள்ளார்.(9)

பாண்டிய பல்லவ நாடுகளில் பிள்ளையார் வழிபாட்டின் தொடக்கம்

பிள்ளையார்பட்டியைத் தவிர திருமலைபுரம், செவல்பட்டி, தேவர்மலை, அரிட்டாப்பட்டி, மலையக்கோயில், திருக்கோளக்குடி, திருப்பரங்குன்றம், மலையடிப்பட்டி, குன்றக்குடி, கோகர்ணம் முதலிய பல பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம் இடம்பெற்றுள்ளது. (2)

அதேசமயம் 8 ஆம் நூற்றாண்டு ராமனுஜர் குடைவரை மற்றும் தருமராஜர் ரதம் ஆகியவற்றின் பூத வரியில் இடம்பெறுவது வரை  பல்லவர் குடைவரை எதிலும் பிள்ளையார் இடம் பெறவில்லை.  பின்னரே திருச்சி கீழ்க் குடைவரை, திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் கைலாசநாதர் கோயில், செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் கந்தசேனரின் குடைவரை ஆகியவற்றில் பிள்ளையார் கோட்ட தெய்வமாக ஆனார். (2)

இவற்றைக் கொண்டு   6, 7 ஆம் நூற்றண்டுகளில் முதலில் பாண்டிய நாட்டில்  காலூன்றத் தொடங்கிய பிள்ளையார் வழிபாடு, எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் வட தமிழ்நாட்டில் நுழைந்தது என்று இரா கலைக்கோவன் 2007 இல் கருத்து தெரிவித்திருந்தார்.(2)

இந்நிலையில் ஆலகிராம பிள்ளையாரின் வருகை பிள்ளையார்பட்டிக்கும் இலக்கியச் சான்றுகளுக்கும் முன்பாகவே பொ.ஆ. 5 ஆம் நூற்றாண்டிலேயே பல்லவ நாட்டில் பிள்ளையார் வழிபாடு இருந்தமைக்கான சான்றாக உள்ளது.

பிள்ளையார் வழிபாட்டின் வளர்ச்சி

9 ஆம் நூற்றாண்டில் அபராஜித பல்லவர் காலக் கற்றளிகளில்தான் பிள்ளையார் அர்த்த மண்டபத்தின் தென் கோட்டத் தெய்வமாக நிலைபெற்றார். இது சோழர் காலத்தில் உறுதியானது. மேலும், சோழர் காலக் கற்றளிகளின் திருச்சுற்றில் பரிவார ஆலயங்கள் உருவானபோது பிள்ளையார் எண்பரிவாரத்துள் ஒருவராக திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் தனிச் சன்னிதி பெற்றார். இந்த வழக்கம் பிற்கால கற்றளிகளிலும் தொடர்ந்தது. இவ்வாறு கோட்டத் தெய்வமாகவோ, பரிவார தெய்வமாகவோ மட்டுமே இருந்த பிள்ளையாருக்குத் தனிக்கோயில் அமைக்கும் பழக்கம் மிகப் பிற்பட்ட காலத்திலேயே ஏற்பட்டது.(2)

கொசுறு

விழுப்புரம் பகுதியில் பல பல்லவர் கால பலகைச் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன.  அவற்றுள் இரண்டு பிள்ளையார் சிற்பங்கள். இவை ஒரு கையில் முள்ளங்கி வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது. 

திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் கோட்ட தெய்வமாக
இடக்குறி: 11.967475000000007, 79.4655972222222

கப்பூரில் ஒரு பாழடந்த கோயிலின் வெளியில்
இடக்குறி: 11.9135361111111, 79.41746386111109



(4). டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன்; திருவாரூர் திருக்கோயில்; இரண்டாம் பதிப்பு; 2017; பக்கம்207






கருத்துகள்

  1. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகில் அமைந்துள்ள திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில், அப்பர் முக்தி பெற்ற சிறப்புமிக்க தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்திருக்கோவிலில் வாதாபி கணபதி வழிபடப்பட்டு வருகிறார். இக்கோவில் திருச்செங்காட்டங்குடி கோவிலுக்கு அருகாமையில் உள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவ்வை (ஜேஷ்டா தேவி, சேட்டை, மூதேவி)

ஆதி திருவரங்கம் - தமிழகத்தின் மிகப் பெரிய பெருமாள்

நெடுங்குணம் 1: அறிமுகம்