நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

சிறப்புகள்
  • தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயில்.
  • ராமர் அமர்ந்த நிலையில் கோதண்டம் எனும் தனது வில்லோ, அம்போ, மற்ற எந்த ஆயுதமோ இன்றி வலக்கையை மார்பில் வைத்து சேவை சாதிக்கிறார்.
  • அனுமன் காலடியில் அமர்ந்து உபதேசம் கேட்கிறார்.
  • இந்த யோக ராமர் வடிவம் இன்னும் இரு இடங்களில் மட்டுமே உள்ளனவாம். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அமைந்தவை - படவேடு ராமர் கோயில், நெடுங்குன்றத்திலிருந்து 5 கிமி தொலைவிலுள்ள ரகுநாதபுரம் ராமர் கோயில்.
  • .ராமர் கோயில் மண்டபத் தூண்களிலும், கோபுரங்களின் உட்சுவர்களிலும் உள்ள அழகிய சிற்பங்கள்.
  • விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது.
  • பல கல்வெட்டுகள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்திகளைக் கூறும் பல கல்வெட்டுகள் உடையது.
பயணம்

இரண்டு நாள் திருவண்ணாமலை - சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் முதல் நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 8 ஆம் நாள் - 25/08/2019) முதல் இடமாக நெடுங்குன்றம் வந்தேன். சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது யோக ராமர் கோயில் எனப்படும் ராமச்சந்திரப் பெருமாள் கோயில்.

ராஜகோபுரம்

இரு மதில் சுவர்களும், அவற்றில் கிழக்கில் இரு கோபுரங்களும் கொண்டுள்ளது. கோயில் முன் உள்ள திடலில் முந்தைய நாள் கோகுலாஷ்டமியின் போது நடந்த உறியடி உற்சவத்தின் அமைப்புகள் இன்னும் பிரிக்கப்படாமல் இருந்தன. ஆறு நிலை ராஜ கோபுரம். 105 அடி உயரம், 62 அடி அகலம்.* வெளி மதில் அடி 21 அடி உயரம், 4 1/2 அடி அகலம்.*  அழகான வேலைப்பாடுகளும் சிற்பங்களும் கொண்டது.

ராஜகோபுரம்

ராஜகோபுரம்

வெளித் திருச்சுற்று

வெளி திருச்சுற்றில் பலிபீடம், கொடிமரம் தாண்டினால் இரண்டாம் மதிலும் ஐந்து நிலை கோபுரமும் உள்ளன. கிளி கோபுரம் எனப்படும் இந்த கோபுரம் 65 அடி உயரம், 40 அடி அகலம் உடையது.

பலிபீடம், கொடிமரம், இரண்டாம் கோபுரம்

ஊஞ்சல் மண்டபம்

வெளித் திருச்சுற்றில் தெற்கில் 16 கால் ஊஞ்சல் மண்டபமும். வடக்கே 100 கால் கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன.

தாயார் சந்நிதி

வெளி திருச்சுற்றின் வடமேற்கில் கிழக்கு நோக்கிய செங்கமலவல்லி தாயார் திருமுன் (சந்நிதி) உள்ளது.. அழகிய சிற்பங்களை உடைய துண்களைக் கொண்ட முக மண்டபம். அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் வாயிற்காப்போர் சிற்பங்கள். பட்டுடுத்தி அலங்காரமாக உள்ளனர்.

தாயார் சந்நிதி வாயிற்காவலர்

செங்கமலவல்லி தாயார்

தாயார் திருமுன் சிலம்பு குமுதம் கொண்ட கபோதபந்த தாங்குதளம், வேதிகைத் தொகுதி, தேவ கோட்டங்கள் தூண்கள் கொண்ட பாதசுவர்; உத்திரம் வாஜனம் வலபி கூடுகளுடன் கூடிய கபோதகம் பூமிதேசம் கொண்ட கூரை ஆகியவற்றைக் கொண்ட கல் கட்டுமானமாக விளங்குகிறது. விமானம் செங்கல் சுதையால் ஆனது. தேவ கோட்டங்களில் தெய்வத் திருவுருக்கள் இல்லை.
தாயார் திருமுன்

நடுத் திருச்சுற்று

நடு திருச்சுற்று மண்டபம் - தென்புறம், சக்கரத்தாழ்வார் சந்நிதி

நடு திருச்சுற்று மண்டபம் - தூண்

திருச்சுற்று மண்டபத்து தூண்கள் மூன்று சதுரம் அவற்றுக்கு இடையே எண் பட்டை இடைக்கட்டுடன் கூடிய 16 பட்டை கட்டுகள் இரண்டும் கொண்டுள்ளன. கீழ் சதுரம் மண்டப மேடையில் புதைந்துள்ளது. சதுரங்களில் வட்டத் தாமரை பதக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மாங்கனிப் போதிகை விஜயநகர காலம் குறிக்கிறது.

நடு திருச்சுற்று மேற்கு பாகம், விமானம், நெடுங்குன்றம்

நடு திருச்சுற்று வட பாகம், கோபுரங்கள்

கருவறையின் வெளிச் சுவர் மிக எளிமையாய் இருக்க மூடிய உள் திருச்சுற்றின் வெளிச் சுவர் மற்ற கோயில்கள் போல வெறுமையாக அமையாது கருவறைச் சுவர் போல துணைத்தளம், தாங்குதளம், தேவகோட்டம் கோட்டபஞ்சரம் கும்பபஞ்சரம் போன்ற சுவர் உறுப்புகள், கூரை உறுப்புகளுடன் அழகுற அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.

உள் திருச்சுற்றின் வெளிச்சுவர்

தேவ கோட்டங்களில் தெய்வத் திருவுருக்கள் இல்லை.

திருச்சுற்று மண்டபத்தில் வடக்குப் பகுதியில் வைகானசர் திருமுன் (சந்நிதி) உள்ளது.

வைகானசர்

வைகாநசர் பின் இரு கரங்களில் ஆழியும் சங்கும் கொண்டு, முன் வலக்கரம் சின் முத்திரையும், இடக்கரம் அருளும் முத்திரையும் கொண்டு அமர்ந்திருக்கிறார். அத்ரி, பிருகு, மரீசி, கஷ்யபர் , ஆகிய 4 மகரிஷிகள் (இடமிருந்து வலமாக) கீழமர்ந்து அருளுரை பெறுகின்றனர். வைணவத்தில் தட்சிணாமூர்த்திக்கு இணையான திருவுருவம். இவரும் தென்திசை நோக்கியே அமர்ந்துள்ளார்.

வைகானசர் (நன்றி: விக்கிமீடியா
https://commons.wikimedia.org/wiki/File:Sri_Vikhanasa_Maharishi.jpg)

வைகானசர் விஷ்ணுவின் மனதில் இருந்து தோன்றியவர் என்றும், விஷ்ணுவின் எண்ணப்படி வைகாசன ஆகமத்தை உருவாக்கி சீடர்களுக்கு போதித்தார் என்றும் நம்பப்படுகிறது.# இவர் பிரம்மாவே என்றும் கருத்தும் உண்டு.# ஆனால் இங்குள்ளவர் ஆழியும் சங்கும் கொண்டு திகழ்வதால் இவர் திருமாலின் மனத் தோன்றலே. திருமால் கோயில் முறைமைகளை வழிநடத்தும் ஆகமங்கள் முக்கியமாக இரண்டு - வைகானசம், பாஞ்சராத்திரம். இந்த திருக்கோயில் வைகானச ஆகமத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது.

உள் திருச்சுற்று

இரண்டாம் கோபுரம் வழியாக நடு திருச்சுற்றில் நுழைந்தால் உள்திருச்சுற்றின் முன் உள்ள மண்டபத்தை அடையலாம். வடக்கு, தெற்கில் படிகள். உள் திருச்சுற்றின் வாயிலின் இருபுறமும் உயரமான வாயிற்காவலர்கள் பட்டுடுத்தி கம்பீரமாக நிற்கின்றனர்.

வாயிற்காவலர்கள்

உள் திருச்சுற்றின் வடபுறம் உள்ள மேடை மீது முதல் மூன்று ஆழ்வார்கள் (பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார்), குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், ஆகியோர் அமர்ந்த நிலையிலும், திருமங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார் ஆகியோர் நின்ற நிலையிலும் கற்சிற்பங்களாக காட்சி தருகின்றனர்.*

கருவறையில் மூலவர் ராமர் நெஞ்சோடணைந்த வலது கையில் சின் முத்திரையுடன், கண்களை மூடி ஆயுதங்கள் இன்றி யோக நிலையில் அமர்ந்து சேவை சாதிக்கிறார். சீதை பிராட்டி வலது கையில் தாமரை ஏந்தி, இடது கையால் ராமரின் பாதங்களை சுட்டுகிறார். வலப்புறம் லட்சுமணன் ஆயுதங்களோடு காவலாக நிற்கிறார். இடப்புறம் அனுமன். கீழே அமர்ந்த நிலையில். உற்சவர் விஜயராகவப் பெருமாள்.

கருவறையைச் சுற்றி உள்ள சுற்றுப் பாதை குறுகியது. கருவறையின் முன் இருபக்கமும் உள்ள தாழ்வான வாயில்கள் வழியே இந்த சுற்றுப் பாதையில் நுழைந்து கருவறையைச் சுற்றி வரலாம்.

கருவறையைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை

கருவறை எந்த உறுப்பும் இல்லாத தாங்குதளமும், மிக எளிய தூண்களும் கோட்டங்களும் கொண்ட பித்தியும் கொண்டதாக உள்ளது.

வெளி திருச்சுற்றில் உள்ள தாயார் சந்நிதி முன் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கல்யாண மண்டபம் மூன்றிலும் சிறப்பான சிற்பங்கள் உள்ளன. மூலவர் முகமண்டபம், உள் திருச்சுற்றின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள மண்டபம் இவையும் சில குறிப்பிடத்தக்க சிற்பங்களைக் கொண்டுள்ளன. 

நெடுங்குணத்தின் சிறப்புகளைப் பற்றிய மற்ற பதிவுகளின் சுட்டிகள் கீழே:



நன்றிக்கடன்



$ கோயிற்கலைச் செம்மல் மா சந்திரமூர்த்தி; கலைக்கோயில்கள்; திருவண்ணாமலை மாவட்டச் சிறப்புகள்; திருக்கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு மலர்;


















கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

கூழமந்தல்