நெடுங்குணம்: யோக ராமர் கோயில் - 3: கடவுளர் சிற்பங்கள்
நெடுங்குணம் யோக ராமர் கோயிலில் தாயார் சந்நிதி முன் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கல்யாண மண்டபம், மூலவர் சந்நிதி மகா மண்டபம், உள் திருச்சுற்றின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மண்டபம் ஆகிய மண்டபங்களின் தூண்களில் அழகிய நுட்பமான புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இரு கோபுரங்களின் உட்புறச் சுவர்களிலும் சிற்பத் தொகுதிகள் இடம் பெற்று இருப்பது தனிச் சிறப்பு.
நரசிம்மர்
மேல் சதுரம்:
தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வெளிவருகிறார். நான்கு கரங்கள். முன் கரங்கள் தூணைப் பிளந்து கொண்டிருக்க, பின் கரங்களில் சக்கரமும், சங்கும். அவரது வலப்பக்கத்தில் கைகூப்பி வணங்கியவாறு பிரகலாதன். இடப்பக்கம் இரண்யன்.
நடுச் சதுரம்:
நான்கு கர நரசிம்மரும் இரண்யனும் போர் புரிகின்றனர்.
![]() |
ஊஞ்சல் மண்டபத் தூண் |
கீழ்ச் சதுரம்:
- வலது காலை மடித்து நிலத்தில் ஊன்றி, இடது காலை மடித்து தூக்கி உள்ளார் நரசிம்மர்.
- இரண்யன் அவர் மடி மீது செயலிழந்து கிடக்கிறான்.
- அவனது இரு கால்களையும் மகுடத்தையம் நரசிம்மரது இரு கைகள் அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
- இருகரங்கள் ஆழியும், சங்கும் தாங்குகின்றன.
- முன்னிரு கரங்கள் கூர் உகிர்களால் வயிற்றைக் கிழிக்கின்றன.
- பின் கரங்கள் இரண்டும் கிழிந்த வயிற்றிலிருந்து குடலை வெளியெடுத்து மாலை சூடப்போவது போன்று ஏந்தி உயர்ந்து நிற்கின்றன.
- கண்களில் கோபத்தோடு இரண்யனை பார்த்தவாறு உள்ளார்.
இதே போன்ற சிற்பங்களை மற்ற மண்டபத் தூண்களிலும் தனித்தனியாகக் காணலாம். ஒன்றே போல் இருந்தாலும் அவற்றுள் சிறு வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக கீழ்கண்ட முதல் சிற்பத்தில் நரசிம்மரது முன்கைகள் காக்கும், அருளும் கைகளாக உள்ளன. இரண்யனும் பிரகலாதனும் இல்லை. அடுத்துள்ள போர்க் காட்சியிலும் வேறுபாடு உள்ளது.
உள் கோபுர உட்சுவரில் உள்ள நரசிம்மர் சிற்பத் தொகுதி
![]() |
இரண்யவதை இரண்டாம் கோபுரம் |
மேற்பகுதியில் 'எங்கே ஹரி. இத் தூணில் இருக்கிறானா?' எனக் கேட்கும் இரண்யனுக்கு ஆம் எனத் தூணைப் பிரகலாதன் சுட்ட, தூணைப் பிளந்து வெளிவரும் நரசிம்மர். கீழ்ப் பகுதியில் இரண்யனுடன் சண்டையும், வதமும்.
இதே புராணத்தை காட்டும் இன்னொரு சிற்பத் தொகுதி ராஜ கோபுரத்தில்
![]() |
இரண்ய வதம் - ராஜ கோபுரம் |
ராமர்
புது நண்பனான சுக்ரீவனுக்கு தன் வலிமையை உணர்த்த 7 பனை மரங்களை ஒரே அம்பால் துளைத்தார் ராமர்.
![]() |
பனை மரங்களைத் துளைக்கும் ராமர்: ராஜ கோபுரம் |
கீழ்ப் பகுதியில் உள்ள சிற்பத்தில் ஆறு பனைகளே உள்ளன. ஒன்றில் ஏறிக்கொண்டிருக்கும் குரங்கு. பனைகளின் கீழ் படமெடுத்து நிற்கும் ஒரு நாகம். கோதண்டத்தின் நாணை இழுத்து பிறை வாளியைச் செலுத்தும் நிலையில் ராமர் (துளைக்கிறாரா, வெட்டுகிறாரா?). பின்னால் லட்சுமணன், அனுமன்.
மேல் பகுதியில் வாலி சுக்கிரீவனை அடித்து துவைத்துக் கொண்டிருக்கிறான். இருவருக்கிடையில் அடையாளம் காண முடியாமல் மரத்தின் பின்னால் வில் அம்போடு தவித்துக் கொண்டிருக்கிறார் ராமர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டத்தில் உள்ள அம்ருதேஷ்வரர் கோயிலில் உள்ள சிற்பத்தில் 7 பனைகள் உள்ளன. ராமர் அம்பை செலுத்திவிட்டார். மரங்களில் அம்பு துளைத்த குறி உள்ளது. லக்ஷ்மணர், சுக்ரீவன், அனுமன் காண்கின்றனர்.
![]() |
படம் நன்றி: https://karnatakatravel.blogspot.com/2014/09/amruteshwara-gudi-scenes-from-ramayana.html |
![]() |
வாலி சுக்ரீவன் சண்டை: உள் கோபுரம் |
![]() |
ராமரும், இலக்குவனனும்: ஊஞ்சல் மண்டபம் |
![]() |
ராம இலக்குவனர்களை கருடன், அனுமனும், இரு வானரர்களும் வணங்கும் காட்சி: ராஜ கோபுரம் |
![]() |
ராமர், இலக்குவனன், சீதையை அனுமனும் நான்கு அரச குடும்பத்தினரும் வணங்கும் காட்சி: ராஜ கோபுரம் |
அனுமன்
கண்ணன்
கோபியர் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு யமுனை நதியில் நீராடினர். குறும்புக்காரக் கண்ணன் அந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு கரையோர மரத்தின் மீது ஏறிக்கொண்டான். ஆடை வேண்டி கோபியர் கண்ணனை நோக்கி ஓலமிட்ட காட்சி தூண் புடைப்பு சிற்பங்களுக்கு ஒரு முக்கியக் கரு. கடவுளர் திருவுருவங்களைச் செதுக்கும்போது சிற்பியின் கற்பனைத் திறனுக்கு ஆகமங்கள் கடிவாளம் இடும். இக்காட்சிக்கு அத்தகைய தடைகள் இல்லாததால் இதன் ஒவ்வொரு படைப்பும் சிற்பியின் கற்பனைக்கு ஏற்ப வேறுபட்டிருக்கும்.
மரம், மரத்தின் மீது கண்ணன், அவன் கையில் ஆடைகள், ஆடைகளில்லா பெண்கள், அவர்கள் எண்ணிக்கை, கண்ணனிடம் ஆடை வேண்டி ஓலமிடும் வெவ்வேறு உடல் மொழி, நிலைகள் இவற்றை சிற்பிகள் தங்கள் கற்பனைக்கேற்ப ரசித்து வடித்த சிற்பங்கள்.
![]() |
கண்ணன்: உள் கோபுரம் |
மச்ச அவதாரம்
![]() |
மச்ச அவதாரம்: தாயார் திருமுன் மகா மண்டபம் |
கூர்ம அவதாரம்
![]() |
கூர்ம அவதாரம்: ராஜ கோபுரம் |
வராக அவதாரம்
![]() |
வராக அவதாரம்: ராஜ கோபுரம் |
கஜேந்திர மோட்சம்
பாகவத புராணத்தில் உள்ள கதை. முற்பிறவியில் தாங்கள் பெற்ற தீச்சொற்களால் இந்திரத்துய்மன் என்ற அரசன் கஜேந்திரன் எனும் யானை அரசனாகவும், கந்தர்வன் ஒருவன் முதலையாகவும் பிறந்தனர், ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்துகையில் முதலை அதன் காலைக் கவ்வியது. நெடுங்காலம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தன்னுணர்வு அழிந்து கஜேந்திரன் திருமாலிடம் சரணாகதி அடைந்து 'ஆதிமூலமே, அனாதரட்சகா' என்று கூவி அழைத்தது. திருமால் விரைந்து வந்து ஆழியால் முதலையைக் கொன்று இருவருக்கும் தீச்சொற்களிலிருந்து விடுதலை அளித்தார்.
![]() |
கஜேந்திர மோட்சம்: உள் கோபுரம் |
கஜேந்திரனின் பின் இடது காலை முதலை கவ்வியுள்ளது. திருமால் ஆழி, சங்கு, சார்ங்கம் எனும் வில்லுடன் அவனுக்கு காக்கும் குறிப்பு காட்டுகிறார். திருமாலைச் சுமந்து வந்த கருடன் பின்னால் வணங்கி நிற்கிறார்.
![]() |
கஜேந்திர மோட்சம்: ராஜ கோபுரம் |
மேல் வரிசையில் சிற்பங்களில் இடது பக்கம் கஜேந்திரனின் பின் இடது காலை முதலை கவ்வியுள்ளது. வலது பக்கம் அதன் அபாயக் குரல் கேட்டு திருமால் கருடன் மீது அமர்ந்து விரைந்து வருகிறார். நடுவில் உள்ள சிற்பத்தில் விடுவிக்கப்பட்ட கஜேந்திரன் திருமாலைத் தொழ அவர் அதன் நெற்றியை வருடுகிறார். பின்னால் கருடன்.
கீழ் வரிசை சிற்பங்களில் திருமாலைத் தொழும் கருடனும் கஜேந்திரனும்.
நடு வரிசையில் மானைப் புலி துரத்த, அதனைத் வாளுடன் துரத்தும் வீரன்.
![]() |
கஜேந்திரனுக்கு அபயம் அளித்த திருமால்: தாயார் திருமுன் மகா மண்டபம். |
கருடன்
திருமால்
வலது புறம் திருமகள், நிலமகளுடன் திருமால் நின்ற நிலையில் காட்சி தருகிறார். இடது புறத்தில் நான்கு அரச குடும்பத்தினர் அவர்களை வணங்குகிறார்கள். இடையில் அடியவர் ஒருவர்.
![]() |
திருமகள், நிலமகளுடன் திருமால்: உள் கோபுரம் |
![]() |
திருமகள், நிலமகளுடன் திருமால்:உள் கோபுரம் |
![]() |
பரமபதநாதன் மகராஜ லீலாசனத்தில் |
![]() |
கருட வாகனத் திருமால் |
![]() |
தாணுமாலயன் |
![]() |
விஸ்வகர்மா |
![]() |
வாயிற்காவலர்: கல்யாண மண்டபம் |
இறுதியாக ஒரு பார்வை: சிவன் கோயில்களில் விஜயநகர பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட மண்டபங்களில் சைவச் சிற்பங்களின் அளவுக்கே வைணவச் சிற்பங்களும் இடம் பெரும். ஆனால் இந்த ராமர் கோயிலில் ஒரு சைவ சிற்பத்தைக் கூட நான் பார்க்கவில்லை!
யோக ராமர் கோயிலில் உள்ள கடவுளர் அல்லாத சிற்பங்களை அடுத்த பகுதியில் காணலாம்.
நெடுங்குணத்தின் சிறப்புகளைப் பற்றிய மற்ற பதிவுகளின் சுட்டிகள் கீழே:
கருத்துகள்
கருத்துரையிடுக