நெடுங்குணம் - 6: கல்வெட்டுகள், சதிக்கற்கள்
கல்வெட்டுகள்
தீர்க்காசலேசுவரர் கோயிலிலும் ராமச்சந்திர பெருமாள் கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன, இவை 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த விஜயநகர பேரரசு, தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் காலத்திய கல்வெட்டுகள் ஆகும்.
ஊர்ப்பெயர்
16 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் 'ஜயங்கொண்ட சோழமண்டலத்து பல்குன்றக் கோட்டத்து மேல்குன்ற நாட்டு நெடுங்குன்றம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சிவன் கோயில் பூசைக்கு ஏரி, நன்செய் நிலம் தானம்
பொ.ஆ. 1527 தீர்க்காசலேசுவரர் கோயில் கல்வெட்டு "நெடுங்குன்றம் நயினார் ஈசாண்ட நயினாருக்குச் சகல பூசையும் நடக்க ஸ்ரீமது இம்மடி திருமலை நாயக்கர் காரியத்துக்குக் கடவ நமச்சிவாய நாயக்கர் தர்மமாக அல்லாள பிள்ளை" என்பவர் நெடுஙகுன்றம் எரிக்குத் தென்கிழக்கில் உள்ள தாங்கலும், புறவடை நாலும் தானமாகக் கொடுத்ததாய் குறிப்பிடுகிறது. தாங்கல் என்றால் ஏரி, குளம். புறவடை என்றால் நன்செய் நிலம்.
பெருமாள் கோயில் திருவிழா, பராமரிப்புக்கு கிராமம் தானம்
பொ.ஆ. 1544 ராமசந்திர பெருமாள் கோயில் ஸ்ரீ அச்சுத வீர மகா தேவராயர் காலக் கல்வெட்டு "ஸ்ரீ ராமச்சந்திர பெருமாளுக்கு வேப்பற்பட்டு மல்லப்ப நாயக்கர் உள்ளிட்டார் திருவிளையாட்டமாக விட்ட தென்னாறம்பட்டு என்ற ராமச்சந்திறபுரத்தை" கோயிலைப் பராமரிக்கவும் திருவிழா செய்துகொள்ளவும் ஸ்ரீ வைஷ்ணவ மக்களிடமும் திருமலை அய்யங்காரிடமும் உதகம் பண்ணி (நீர் விட்டு) கொடுத்ததாய் பதிவு செய்கிறது. திருவிளையாட்டம்’ என்பது பெருமாள் கோயிலுக்குத் தானமாக கொடுக்கப்பட்ட கிராமம் மற்றும் நிலத்தைக் குறிக்கும். வேப்பம்பட்டு என்ற கிராமம் இப்போதும் அதே பெயரில் நெற்குணத்திற்கு தெற்கே உள்ளது. தென்னாரம்பட்டு இப்போது தெள்ளாரம்பட்டு என்று அழைக்கப்படுகிறது.
சிவன் கோயில் பூசைக்கு பொன் தானம்
பொ.ஆ. 1597 தீர்க்காசலேசுவரர் கோயில் கல்வெட்டு "ஸ்ரீமகாமண்டலேசுரன் ஸ்ரீவீரப்பிறதாப ஸ்ரீ வீரவெங்கடபதி மகாராயர் ராச்சியம் பண்ணி அருளாநின்ற (அரசாண்ட) சகாத்தம் துன்முகி சம்வத்ஸர (துன்முகி ஆண்டு) மகர நாயற் (மகர மாதம் - தை) பூர்வ பக்ஷத்து சத்தமியும் (சப்தமி) சுக்கிற வாரமும் (வெள்ளிக்கிழமை) பெற்ற இற்றை நாள் நெடுங்குன்றம் ஈசான நயினார் தம்பிரானாற்கு தினப்பூசைக்கு தினமொன்றுக்கு பணம் அரையாக அச்சுதப்ப நாயக்கர் அய்யன் தீட்சிதர் அய்யனுக்குப் புண்ணியமாகக் கட்டளைக்குத் தொழுவூர் தினகரப் பிள்ளை பொன் பதிநஞ்சு உபையமாகக் கட்டளை" இட்டதைப் பதிவு செய்கிறது.. தொழுவூர் என்ற கிராமம் தற்போதுள்ள தொழுப்பேடு என்ற கிராமமாக இருக்கலாம்.
தேவரடியார்களுக்கு பெயரும் பட்டமும் பேர் மானியமும்
பொ.ஆ. 1611 ராமசந்திர பெருமாள் கோயில் ராஜகோபுரத்தில் உள்ள இரு கல்வெட்டுகளில் ஒன்று "ராமசந்திர பெருமாள் ஸ்ரீ காரியத்துக்கு கற்த்தரான திருமலையங்காரும் ஸ்ரீ பண்டாரத்தாரும் அரியப்ப அய்யன் காரியத்துக்கு கற்தரான சோணாத்ரி அய்யனும் ராமச்சத்திர மாணிக்கத்துக்கு பேர் கொடுக்கையில் பேர் மானியத்துக்கு தம் அத்தி பிறவடை காணி மூன்று" கொடுத்ததைத் தெரிவிக்கிறது.
பொ.ஆ. 1614 கல்வெட்டு "ஸ்ரீமது ராமசந்திர பெருமாள் ஸ்ரீ காரியத்துக்கு கற்தரான திருமலை அய்யங்காரும் ஸ்ரீ பண்டாரத்தாரும் ரகுநாத நாயக்கர் அய்யன் (தஞ்சை மன்னர்) காரியத்துக்கு கற்த்தரான சோணாத்ரி அய்யன் அவர்களும் வடுகவகை தேவடியாரில் அத்தகிரி மகள் முத்துவுக்கு சுவாமி ராமச்சந்திர பெருமாள் திருவைய்யாசி திருணாளில் பெரியண்ணன் மண்டபத்தில் சுவாமி விசையராகவ மாணிக்கம் என்று பேர் குடுக்கையில் பேர்மானியத்துக்கு திருவிளையாட்ட கிறாமமான தொற்றம்பட்டு ஏரி கீழ் பிறைவடை காணி மூன்று" வரியில்லாத மானியமாகவும், கோயில் பிரசாதத்தையும் கட்டளை இட்டதைக ஆவணப்படுத்துகிறது.
நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற தேவரடியார்களுக்கு கோயிலில் அரங்கேற்றம் நடத்தி, அந்த சமயத்தில் சுவாமியின் பெயரை இணைத்து 'மாணிக்கம்' என்னும் பட்டம் வழங்குவதும் அத்துடன் நிலம் மானியமாக வழங்குவதும் மரபு. இரு தேவரடியார்களுக்கு ராமச்சந்திர மாணிக்கம், விஜயராகவ மாணிக்கம் என்று மூலவர் மற்றும் உற்சவர் பெயர்கள் வழங்கப்பட்டு, நிலம் பேர் மானியமாக அளிக்கப்பட்டச் செய்தியை இந்த கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ பண்டாரம் என்பது கோயில் கருவூலம். ஸ்ரீ பண்டாரத்தார் என்பது அந்த கருவூலத்தின் அதிகாரிகள். மேலும் இந்த கல்வெட்டுகளில் ஒன்றில் இறைவரி, எச்சோறு, நீர்கூலி முதலிய அக்கால வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நெடுங்குன்றத்தில் வைத்தியர் ஏற்பாட்டுக்கு பூதானம்
பொ.ஆ. 1618 ராமசந்திர பெருமாள் கோயில் ராஜகோபுரத்தில் உள்ள மற்ற கல்வெட்டு "ராமசந்திர பெருமாள் ஸ்ரீ காரியத்துக்கு கற்த்தரான திருமலை அய்யங்காரும் ஸ்ரீ பண்டாரத்தாரும் ரகுநாத நாயக்கரய்யன் காரியத்துக்கு கற்த்தரான சோணாத்ரி அய்யன் அவர்களும் நெடுங்குன்றத்துக்கு வயித்தியர் வேணுமென்று மாற்கசகாய பண்டிதருக்கு மாதம் ஒன்றுக்கு பணம் ஆறும் திருமலையன் மனையும் கிணறும் அரசம்பட்டில் பூதானமாக கட்டளை" இட்டதை பதிவு செய்கிறது.
அரசம்பட்டு என்ற கிராமம் இன்றும் அதே பெயரில் நெடுங்குன்றம் மலைக்குப் பின்புறம் உள்ளது.
சிவன் கோயில் பூசைக்கு கிராமங்கள் தானம்
பொ.ஆ. 1642 தீர்க்காசலேசுவரர் கோயில் கல்வெட்டு "ஸ்ரீமது அச்சுத விசைய நாயக்கரைய்யனவர்கள் காரியத்துக்கு கற்த்தரான சிங்கம நாயக்கர் ஈசுபரர் கோயில் பூசை படித்தரத்துக்கு கிழவன்பூண்டி மொசுபாடி கிராமம் இரண்டும் முன் கோயிலுக்கு நடந்தபடியே கட்டளையிட்டு, கோயில் பூசை தாழ்வர நடத்திவரச் சொல்லி செட்டிமார் வசம்" ஒப்படைத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. கிழவன்பூண்டி, மொசுபாடி என்ற கிராமங்கள் தற்போதுள்ள கிழங்கம்பூண்டி, மோட்சவாடி ஆகிய கிராமங்களாக இருக்கலாம்.
தர்மங்களுக்கு தீங்கு செய்பவர்களுக்கு எச்சரிக்கை
செய்யப்பட்ட தான தர்மங்கள் பிற்காலத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற விருப்பத்தில் "இந்த தர்மம் சந்திராதித்தவரையும் (சந்திரன் சூரியன் உள்ள வரையும்) செல்லக் கடவதாக" என்று பல கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. தான தர்மங்களுக்கு தீங்கு செய்பவர்களுக்குக் கடும் எச்சரிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது: "இந்த தர்மத்துக்கு அகிதம் பண்ணினவர்/ இதுக்கு அகிதம் நினைச்ச பேர்/ இந்த தம்மத்துக்கு யாதாமொருவர் விடம்பம் சொல்லி இதுக்கு நினைச்ச பேர் - கெங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்திலே/ தோஷத்திலே - போவான்/ போவார்கள்/ போகக்கடவர்கள்." ஒரு கல்வெட்டு கூடுதலாக "கெங்கைக் கரையிலே தன்னிட தாய் தகப்பனையும் கொன்ற தோஷமும் வந்து சேரும்" என்கிறது.
செவ்வப்ப நாயக்கர் பிறப்பிடம்
தஞ்சாவூர் நாயக்கர்களின் முதல் மன்னரான செவ்வப்ப நாயக்கர் பிறந்த இடம் நெடுங்குணம் ஆகும். இவரது தந்தை திம்ம பூபன் எனும் திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரிடம் ‘வாசல்’ என்னும் முக்கிய அதிகாரியாகவும் நெடுங்குணம் பகுதியின் அரசப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். அவரது நான்கு மகன்களில் ஒருவரான செவ்வப்ப நாயக்கர் விஜயநகர அரச குடும்பத்தில் மண உறவு கொண்டு தன் அரசியல், போர்த் திறமைகளால் தஞ்சாவூரின் அரசப் பிரதிநிதியானார். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இவர் தஞ்சாவூரில் தனி ஆட்சியை நிறுவினார். இவரே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரத்தைக் கட்டி முடித்தவர். இச்செய்திகளை வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கல்வெட்டு மற்றும் இலக்கிய தரவுகளின் அடிப்படையில் தனது ‘தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு’ (திருத்திய முதல் செம்பதிப்பு, 2016) என்னும் நூலில் நிறுவியுள்ளார்.
![]() |
சதிக்கற்கள் |
இந்த கற்களுக்கு அருகே சாலையின் இடப்புறத்தில் மற்றொரு சதிக்கல் உள்ளது. ஒரு ஆண் இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி நிற்பது போலவும், அவனது இடப்புறம் ஒரு பெண் வல்து கையால் அவனைச் சுட்டியது போலவும் உள்ளனர். ஆண் உருவத்திற்கு அருகே வரிசையாக துளைகள் உள்ளன.
![]() |
சதிக்கல் |
நாங்காவது சதிக்கல்லை நான் காண இயலவில்லை. ஒரு கல்லில் மூன்று பெண்கள் கைகூப்பி வணக்கம் செலுத்துவது போன்றும் இடதுபுறக் கொண்டையுடன் உள்ளனர். இவர்களை இறந்த வீரனையும் உடன் தீப்பாய்ந்த அவனது மனைவியையும் வானுலகம் அழைத்துச் செல்லும் அப்சரப் பெண்கள் என தொல்லியல் துறையினர் கூறுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக