எண்ணாயிரம்
அமைவிடம்
எண்ணாயிரம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம். விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள நேமூர் வழியாக செல்லலாம். விழுப்புரத்தில் இருந்து 20 கிமீ, செஞ்சியில் இருந்து 17 கிமீ தூரம். சென்னை - திருச்சி சாலையில் இருந்து கூட்டேரிப்பட்டு வழியாகவும் செல்லலாம். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 1068
பழம் கல்வெட்டுகளில் 'சிங்கபுரி' என்று அழைக்கப்படும் இன்றைய செஞ்சி, 'திண்டீசுரம்' என்ற திண்டிவனம், 'விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம், விழுப்பரையபுரம்' என்ற விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள முக்கோண நிலப்பகுதி பல்லவர் காலம் காலம் முதலே சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளது. இந்த சிறு நிலப்பரப்பில் அருகருகே பல பல்லவர், சோழர் காலத்தில் எழுப்பப் பட்ட கோயில்களும், பிற்கால விரிவாக்கங்களும், கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. அவற்றுள் எண்ணாயிரம், எசாலம், பிரம்மதேசம், தாதாபுரம் ஆகிய ஊர்களில் சோழர் கோயில்கள் அமைந்துள்ளன. முதல் மூன்று அருகருகே மூன்று கி மீ தொலைவுக்குள்ளும் தாதாபுரம் 14 கிமீ தொலைவிலும் உள்ளன. மிக அருகிலேயே மகேந்திர பல்லவனின் மண்டகப்பட்டு இலக்ஷிதாயதனம் குடைவரையும், தளவானூர் சத்ருமல்லேசுவரம் குடைவரையும் அமைந்துள்ளன.
ஊர்ப் பெயர்
எண்ணாயிரம் சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜ சோழன் காலம் (ஆட்சி காலம் பொ. ஆ. 985 - 1014) முதல் சிறப்பு பெற்ற ஊர். அப்போது 'ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்ற பெயர் கொண்டிருந்தது. அது
- ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில்
- பல்குன்றக் கோட்டத்தில்
- ராஜராஜ வளநாட்டில்
- பனையூர் நாட்டில் அமைந்த
- தனியூர் எனவும்
- பிரம்மதேயம் எனவும்
கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
- தனியூர் - பிடாகைகள் என்னும் பல குடியிருப்புகளை உள்ளடக்கிய சுயாட்சி அதிகாரம் கொண்ட பேரூர். எசாலம், பிரம்மதேசம், தாதாபுரம் முதலியன ராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் பிடாகைகள்.
- பிரமதேயம் - அரசன் அந்தணர்களுக்கு வழங்கிய வரியில்லாத நிலம்.
- சதுர்வேதி மங்கலம் - நான்மறை பயின்ற அந்தணர்களுக்கு அவ்வாறு வழங்கப்பட்ட கிராமம்.
எண்ணாயிரம் என்ற பெயர் கல்வெட்டுகளில் காணப்படவில்லை.
ஊர் சிறப்பு
- தனிச் சிறப்புகள் வாய்ந்த சோழர் கால அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில்
- அந்தக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள்
- சோழர் காலத்தில் இங்கிருந்த வேத பாடசாலை குறித்த கல்வெட்டுத் தகவல்கள்
பயணம்
23/10/21 அன்று திருவான்மியூர் தடாகம் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த எண்ணாயிரம், எசாலம், பிரம்மதேசம் சுற்றுப்பயணத்தில் கண்டது. முனைவர் கோ சசிகலா சிறப்பு வழிகாட்டி.
அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில்
இக்கோயிலில் உள்ள முதலாம் இராசேந்திரன் கல்வெட்டு இந்த ஆலயத்தை 'இராசராச விண்ணகர் ஆழ்வார் கோயில்' என்று அழைக்கிறது.
இது இந்திய தொல்லியல் கழகத்தின் பராமரிப்பில் இருக்கும் இடம். அத்துறையால் 2010-12 இல் மீளமைக்கப்பட்டுள்ளது.. அவர்களது பச்சை வேலியால் சூழப்பட்டது. உயரமான உபபீடத்தின் மீது அமைந்திருந்தும் சுற்றுப்புரம் உயர்ந்து விட்டதால் கோயில் தாழ்வாகத் தெரிகிறது. அருகிலுள்ள பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலோ அகழிக்குள்ளாகவே ஆகிவிட்டது.
![]() |
சாலையில் இருந்து |
கிழக்கு நோக்கிய கோயில். விமானம், அர்த்த மண்டபம், அந்தராளம், மகா மண்டபம், முக மண்டபம், திறந்த திருச்சுற்று, திருச்சுற்று மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
முன்புறம்
கோபுரம் இல்லை. வாயில் இருபக்க திண்ணைகளுடனான மண்டபமாக அமைந்துள்ளது.
கோயில் முன் கருடருக்கான சன்னிதியும், பலிபீடமும் உள்ளன. (கருடர் இல்லை). கொடிமரம் இல்லை.
உப பீடம், அதிஷ்டானம்
![]() |
தென் பக்கப் பர்ர்வை |
விமானம், அர்த்த மண்டபம், அந்தராளம், மகா மண்டபம் ஆகியவை பொதுவான கல்லால் ஆன உபபீடமும் தாங்குதளமும் கொண்டுள்ளன. சுமார் நான்கு அடி உயரம் உடைய அஷ்டாங்க உபபீடம். பத்ம பந்த தாங்குதளம் (கங்கை கொண்ட சோழபுரம், கூழமந்தல் போல - மானசார பத்மபந்தம் முதல் வகை).
![]() |
அஷ்டாங்க உபபீடமும், பத்மபந்த தாங்குதளமும் |
விமானம், அர்த்தமண்டத்தின் உள்ளே கல் தூண்கள் கொண்டு செங்கற்களால் கட்டப்படுள்ளன. அந்தராளமும், மகாமண்டபமும் முழுவதும் கல் கட்டுமானம்.
விமானம்
மூன்று நிலை எண்பட்டை திராவிட விமானம். விமானத்தின் உபபீடம், தாங்குதளம் மட்டுமே கல்லால் ஆனது. கீழ் தல பித்தியில் தூண்கள் உள்ளன. ஆனால், பத்தி பிரிப்புகளோ, தேவ கோட்டங்களோ இல்லை.
![]() |
விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் |
உபபீடத்தின் மேல் அதிஷ்டானம் விமானம், அர்த்த மண்டப பகுதிகளில் சுமார் 2-1/2 அடி தூரம் உள் தள்ளி அமைந்துள்ளது. கிழக்குப் பக்கத்தைத் தவிர்த்த மற்ற மூன்று பக்கங்களில் இந்த பீடத்தின் மீது ஏற பக்கவாட்டில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு பக்கப் படிகளைக் கொண்ட இவ்வமைப்பு பக்ஷ சீலா சோபானம் எனப்படும்.
![]() |
பக்ஷ சீலா சோபானம், வாயில் |
விமானம் இரு சுவர்களை உடைய சாந்தார வகை விமானம். உள் சுவருக்கும் (அந்தர பித்தி) வெளிச் சுவருக்கும் பாஹ்ய பித்தி) இடையில் உள்ள பகுதியான 'அலிந்தம்' தஞ்சாவூர் ராஜாராஜேசுவரம் கோயிலைப் போல கருவறையைச் சுற்றி வரும் வழியாக இலை. இங்கு மூன்று புறங்களிலும் அலிந்தம் பீடத்தின் படிகளுக்கு எதிரே வெளி வாயில்கள் பெற்று மூன்று தனித்தனி அறைகளைப் பெற்று விளங்குகிறது. மூன்று அறைகளும் இப்போது வெறுமையாக உள்ளன. இவ்வறைகள் ஒரு காலத்தில் தேவகோட்டத் திருமால் சிற்பங்களைக் கொண்டிருந்திருக்கலாம் என்று ஆய்வாளர் திரு எஸ். ஆர். பாலசுப்ரமணியன் கருதுகிறார்.
விமானம் மூன்று தலங்களைக் கொண்டது. தரைத்தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் மூன்றிலும் கருவறை அமைப்புகள் உள்ளன. இந்த முத்தல கருவறை அமைப்பு 'அஷ்டாங்க விமானம்' எனப்படும். காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி இராமசாமி கோயில் ஆகியவற்றின் முத்தலக் கருவறை அமைப்பினை இது ஒத்துள்ளது என்று ஆய்வாளர் திரு எஸ். ஆர். பாலசுப்ரமணியன் கருதுகிறார்.
இரண்டாம் தலத்தில் ஹாரம் இல்லை. நான்கு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஐந்து தேவ கோட்டங்கள் உள்ளன. மூன்றாம் தலம் பித்தியில் (ஹார்மியம்) இருந்து விலகி நிற்கும் ஹாரத்தைக் கொண்டுள்ளது. இது 'அனர்பித' அமைப்பு. ஹாரம் ஒவ்வொரு பக்கமும் இரு கர்ணக் கூடுகள், நடுவில் சாலைக்கூடு, சாலையின் இரு பக்கங்களிலும் இரு பஞ்சரங்கள் கொண்டுள்ளது. இவை நான்கு அங்கங்கள் உடையவை. ஹாரத்தின் கோட்டங்களில் சிலைகள் இல்லை.
இரண்டாம் தல தேவ கோட்டங்களில் கிழக்கில் உள்ள நான்கில் சிலைகள் இல்லை. மற்ற மூன்று பக்கங்களில் உள்ள (3 x 5) 15 தேவ கோட்டங்களில் திருமால் மற்றும் அவர் அவதாரங்களின் சிற்பங்கள் உள்ளன.
![]() |
இரண்டாம் தலம் - தெற்கு கிழக்கே, மச்சாவதாரம், அடுத்து கூர்மாவதாரம், நடுவில் சுகாசன திருமால், அடுத்து ?, மேற்கே நரசிம்மர்) |
![]() |
இரண்டாம் தலம் - மேற்கு (நடுவில் நரசிம்மர், வடக்கு காலிங்க நர்த்தனம், தெற்கு ராமர்) |
![]() |
இரண்டாம் தலம் - வடக்கு (கிழக்கே வாமனர், அடுத்து பரசுராமர், நடுவில் பரமபத நாதர், அடுத்து வராகர், மேற்கே ?) |
கிரீவமும், சிகரமும் எட்டு பட்டை கொண்டவை. திராவிட விமானம். கிரீவ கோட்டங்களில் மேற்கில் நரசிம்மர். மற்ற மூன்று பக்கங்கலிலும் திருமால் வடிவங்கள் உள்ளன. உலோகக் கலசம்.
தற்போது தரைத்தள மூலக் கருவறையில் மட்டுமே லட்சுமி நரசிம்மர் சிலை உள்ளது. மேல் இரு கருவறைகள் மூர்த்தி எதுவும் இன்றி உள்ளன. ஆய்வாளர் திரு எஸ் ஆர் பாலசுப்ரமணியன் 1975 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I (A.D. 985 — 1070)" என்ற தனது நூலிலும் இதே நிலைமையைக் கூறுகிறார்.
அர்த்த மண்டபம்
அர்த்த மண்டபத்தில் நான்கு ஸ்ரீருத்ர காந்தத் தூண்கள் உள்ளன. அங்கு லட்சுமி வராகர் சிலை உள்ளது.
மகா மண்டபம்
மகா மண்டபத்தின் தெற்குச் சுவரில் இரு ஜாலகங்கள் கோட்டங்களுக்குள் அமைந்துள்ளன. வடக்குச் சுவரில் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.
![]() |
மகாமண்டபம் தெற்குப் பார்வை |
![]() |
மகாமண்டபம் வடக்குப் பார்வை |
உள்ளே மகா மண்டபத்தை வரிசைக்கு நான்குத் தூண்களாக இரு வரிசையில் எட்டுத் தூண்கள் தாங்குகின்றன. இவையும் ஸ்ரீருத்ர காந்தத் தூண்கள்.
வடக்குப் புறம் மட்டும் ஒரு மேடை உள்ளது. அதன் மீது சதுர்புஜ வேணு கோபாலன் புல்லாங்குழல் இன்றி நான்கு கரங்களுடனும் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். ராமானுஜர் சிலையும் உள்ளது.
திருச்சுற்று
திருச்சுற்று மண்டபம் பிரஸ்தரம் இன்றி மேற்குப் பகுதியில் மட்டும் தூண்கள், உத்திரங்களோடு நிற்கிறது. கருவறையைப் போன்ற அதே உயர அஷ்டாங்க உபபீடம் கொண்டு விளங்குகிறது. வடக்கிலும், தெற்கிலும் பீடம் மட்டுமே உள்ளது.
![]() |
திருச்சுற்று - கிழக்கு |
![]() |
திருச்சுற்று - தெற்கு |
![]() |
திருச்சுற்று - வடக்கு |
திறந்தவெளித் திருச்சுற்று மையக் கட்டுமானத்தை நான்கு புறங்களிலும் சூழ்ந்து அதைச் சுற்றி நான்கு பக்கமும் திருச்சுற்று மண்டபம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பிற்காலத்தில் முக மண்டபம் எழுப்பப்பட்டு கிழக்கில் திறந்தவெளி திருச்சுற்று மூடப்பட்டுவிட்டது போலத் தெரிகிறது.
முக மண்டபம்
மகா மண்டபத்தின் முன் உள்ள முக மண்டபம் ஒவ்வொரு வரிசையிலும் 9 தூண்களாக 6 வரிசைகள்.
![]() |
முக மண்டபம் (தரையில் கம்பி தடுப்பினால் மூடப்பட்டுள்ள இடத்தில் திருச்சுற்று மண்டப பீடத்தின் தொடர்ச்சி உள்ளது) |
சோழர்கள் காலத்தில் பல இடங்களில் உயர் கல்விக் கூடங்கள் இருந்ததாக கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன.
- எண்ணாயிரம்,
- திருவொற்றியூர் (சென்னை)
- திருமுக்கூடல் (செங்கல்பட்டு அருகில்)
- திருப்புவனை (புதுச்சேரி)
- பாகூர் (புதுச்சேரி)
- திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் அருகில்)
- திருவாவடுதுறை (மயிலாடுதுறை அருகில்)
எண்ணாயிரம் வேதக்கல்லூரியைப் பற்றிய விரிவான தகவல்கள் அழகிய நரசிங்கப் பெருமாள் கோயிலில் உள்ள முதலாம் இராசேந்திரன் (ஆட்சிக் காலம் பொ. ஆ. 1012 - 1044) காலக் கல்வெட்டில் கிடைக்கின்றன. இது விமானத்தின் வடக்குப் பகுதியில் பீடத்தில் உள்ளது.
அங்கு பயிற்றுவிக்கப்பட்ட பாடங்கள் (11), மற்றும் மாணவர்கள் (340 பேர்), ஆசிரியர்கள் (13 பேர்) பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு:
- இளநிலைக் கல்வி பயின்றவர்கள் 'பிரம்மச்சாரி'கள் என்றும் (270 பேர்), முதுநிலைக் கல்வி பயின்றவர்கள் 'சாத்ர'கள் என்றும் (70 பேர்) அழைக்கப்பட்டனர்.
- இளநிலைக் கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்கள் 'உபாத்தியாயர்' என்றும், முதுநிலைக் கல்வி பயிற்றுவித்தவர்கள் 'வக்காணிப்பார்' என்றும் அழைக்கப்பட்டனர்.
- ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நாளொன்றுக்கு என நெல் வழங்கப்பட்டது.
- பாடங்கள் நிறைவடைந்தபோது ஆசிரியர்களுக்கும், முதுநிலை மாணவர்களுக்கும் பொன்னும் வழங்கப்பட்டது.
1 நாழி = 1 படி.
1.5 கழஞ்சு = 8 கிராம்.
- மாணவர்களுக்குத் தனியாக விடுதியொன்றும் இருந்துள்ளது.
- நிர்வாகச் செலவினங்களுக்காக 45 வேலி (247.5 ஏக்கர்) நிலத்தை முதலாம் ராசேந்திரசோழன் மானியமாக எழுதி வைத்திருக்கிறான்.
கவி காளமேகம் பிறந்த ஊர்
கவி காளமேகம் பிறந்த ஊர் எண்ணாயிரம் என்று சொல்லப்படுகிறது. காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுப் பாடல் ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
`மண்ணில் இருவர் மணவாளர் மண்ணளந்த
கண்ணனவன் இவன் பேர் காளமுகில் – கண்ணன்
அவனுக்கூர் எண்ணில் அணியரங்கம் ஒன்றே
இவனுக்கூர் எண்ணாயிரம்’
மற்றக் கல்வெட்டுச் செய்திகள்
விமானத்தின் மேற்கு, பகுதிகளில் உள்ள முதலாம் ராஜேந்திரனது 25 ஆம் ஆட்சியாண்டு (பொ ஆ 1036) கல்வெட்டு செய்தி:
மன்னன் ஆணைப்படி ஊர் பரிபாலிக்கின்ற நம்பி உடத்தூர் உடையார் தலைமையில் மும்முடி சோழ மண்பத்தில் ராஜராஜ சதுர்வேதி மங்கலத்து மகாசபை கூடி கீழ்கண்ட கோயில்களுக்கும் தெய்வங்களுக்கும் வெவ்வேறு சேவைகள் நடக்க வருவாயை பிரித்தளித்து ஏற்பாடு செய்தது.
- ஸ்ரீமூலஸ்தானம் உடையார்
- இராஜராஜ விண்ணகர் ஆழ்வார் கோயில் - எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில்
- குந்தவை விண்ணகர் ஆழ்வார் - தாதாபுரம் கரிவரத பெருமாள் கோயில்
- சுந்தர சோழ விண்ணகர் ஆழ்வார் கோயில்
முதலாம் ராஜேந்திரனது 30 ஆம் ஆட்சியாண்டு (பொ ஆ 1041) கல்வெட்டு செய்தி:
ராஜராஜ ஈசுவரம் உடையார் கோயில் திருமுற்றத்தில் ராஜராஜ சதுர்வேலி மங்கலத்துப் பெருங்குறி சபையாா் கூடி ஸ்ரீ ராஜராஜ விண்ணகர் ஆழ்வார் கோயிலில் ராஜராஜன் பிறந்த நட்சத்திரமான சித்திரை சதயம் 9 நாள் திருவிழா, 'ராகவ சக்கிரவர்த்தி' பிறந்த மாசி புனர்பூசம் திருவிழாக்களுக்காக நிலம் அளித்தனர். (ARE 341 of 1918).
முதலாம் ராஜேந்திரனது ஆட்சியாண்டு கிடைக்காத கல்வெட்டு செய்தி:
ஊர் பரிபாலிக்கின்ற காளிஏகாம்ரநார் இருக்க ராஜராஜ சதுர்வேலி மங்கலத்து மகாசபை கூடி கீழ்கண்ட செயல்களுக்காக கோயிலுக்கு உரிமையான நிலத்தில் இருந்து உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர் திருவாய்மொழிப்படி பரிசு செய்தனர்.
- வேதக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு 10520 கலம் நெல்லும், 61 கழஞ்சு பொன்னும் வழங்க 45 வேலி நிலம்.
- கீழ்கண்ட சேவைகளுக்காக ஐந்து மா நிலம்.
- திருவாய்மொழி விண்ணப்பம் செய்வார் நால்வர் ஊதியம்
- இரண்டு நநதா விளக்குகளுக்கு நெய் ,
- பருப்பு உள்ளிட்ட கறியமுது, தயிர் அமுது, உப்பமுது, அடைக்காயமுது ஆகியவற்றுக்காக நெய்யும், அரிசியும்
- கோயில் மடத்தில் 25 ஸ்ரீவையிண்ணவர் உண்ண ஐந்து மா நிலம்.
- ஆனி அனிழத் திருநாள் 7 நாள் திருவிழாவிற்காக அரையே இரண்டு மா நிலம்
- கொடியேற்ற நாள் செலவு பொன் 1 கழஞ்சு
- திருவிளக்கெண்ணை' - பொன் 2 கழஞ்சு
- 'சேவிக்கும் வையிஷ்ணவர், தாதர்கள் ஆயிரவர்' உண்ண 60 கலம் நெல்
- ஆழ்வார் 'கிராமபிரதக்ஷிணத்திற்கு திருத்தேர் எழுந்தருளு நாள் இயாசகர்க்கு தியாகத்துக்கும் பிரசாதிக்கும் பரிசட்டங்களுக்கும்' பொன் 5 கழஞ்சு
- 'சாத்தியருளு திருப்பரிச்சட்டம் இரண்டுக்கு' பொன் 1 கழஞ்சு
- 'உற்சவத்து ஐந்து பெருந்திருவமுதுக்கும் உத்தமபடிக்குத் திருமஞ்சனத்திற்கும்' பொன் 1/2 கழஞ்சு
- 'திருப்பள்ளித் தாமத்திற்கு' பொன் 1/2 கழஞ்சு
ராஜேந்திர சோழனின் 24 ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1036) கல்வெட்டுச் செய்தி:
இராஜேந்திர சோழனின் மனைவியாில் ஒருவரான “பராந்தகன் சுத்தமல்லியாா் ஆன முக்கோக் கிழானடிகள்” மன்னருடைய தோள் வலிமை, ஆரோக்கியம் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இத் தலத்தின் அருகிலுள்ள பிரம்மதேசம் பாடலீஸ்வரமுடையாா் கோயிலுக்குப் பூஜை வழிபாட்டுக்கு நிலங்கள் தானமாக வழங்கியுள்ளாா். இக்கொடையை அரசி வழங்கியபோது, மன்னா் எண்ணாயிரம் இராஜராஜ ஈஸ்வரமுடையாா் கோயிலில் முகாமிட்டுத் தங்கியிருந்தார்.
முதலாம் ராஜாதிராஜனின் 30 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுச் செய்தி:
ராஜராஜ சதுர்வேலி மங்கலத்துப் பெருங்குறி சபையாா் மும்முடிச் சோழ மண்டபத்தில் கூடி திருவயப்படி கோயில், ராஜராஜ விண்ணகர் ஆழ்வார் கோயில், தாதாபுரம் குந்தவை விண்ணகர் தேவர் கோயில் நிலங்களுக்கு குறைந்த வரி (கடைத்தரம்) வசூலிக்க ஆணை பிறப்பித்தனர்.
இவை தவிர முதலாம் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டுகள் ஏழும், இரண்டாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகளும் இக்கோயிலில் கிடைத்துள்ளன.
விஜயநகர மன்னர் சதாசிவ ராயர் (பொ ஆ 1545) கால இரு கல்வெட்டுக்களில் ஒன்று இக்கோயில் 24 திருமுற்றங்களுக்கு நடுவே அமைந்திருந்ததாக குறிப்பிடுகிறது.
இக்கோயில் இந்திய தொல்பொருள் துறையினரால் மீள்நிர்மாணம் செய்யப்பட்டபோது மண்டபத் தரையில் முதலாம் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி 53 ஆம் வரி முதல் 80 ஆம் வரி வரை கிடைத்தது.
உசாத்துணை
Sridhar TS; Select Inscriptions of Tamilnadu; Department of Archeology, Govt of Tamil Nadu; 2006 கீழே:
சரிபார்க்க:
காலை 7.00 - 10.00 மணி; மாலை 5.30 - 7.30 மணி திறந்திருக்கும்.
அா்ச்சகா் மாலோலன் 8940432746
வைகுண்டவாச பெருமாள் கிடந்த நிலையில் சேவை சாதிக்கிறார்.
ஒரு அழகிய நரசிம்மர் சிலை இரு கைகளும் உடைந்த நிலையில் முக மண்டபத்தின் வடமேற்கு மூலையில் உள்ளது. இது முந்தைய மூலவராக இருக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக