அரகண்டநல்லூர் - ஒப்பிலாமணீசுவரர் கோயில் - பாகம் 1

சிறப்பு
  • தேவார பாடல் பெற்ற 274 தலங்களுள் ஒன்று அரகண்டநல்லூர் ஒப்பிலாமணீசுவரர் ஆலயம். அவற்றுள் நடுநாட்டுத் தலங்கள் 22 இல் 12 ஆவது. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்றது.
  • ரமணர் திருவண்ணாமலை செல்லுமுன் வந்து அருள் பெற்ற தலம்.
  • இராமலிங்க வள்ளலார் இங்குள்ள முருகனைப் பாடியுள்ளார்.
இடம் 

அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றின் வடகிழக்கே அமைந்துள்ளது. திருக்கோயிலூர் எதிரே அதன் தென்மேற்கே அமைந்துள்ளது. தென்பெண்ணை சிறிது தூரம் திருக்கோயிலூரைச் சுற்றி வடக்கு தெற்காக பாய்கிறது. நடு நாடு பெண்ணை, வெள்ளாறு ஆகிய இரு நதிகளுக்கு இடையில் உள்ள நிலப்பகுதி. திருக்கோயிலூரில் பெண்ணையின் தென்கரையில் உள்ள வீரட்டானேசுவரர் கோயில் நடு நாட்டுத் தலங்களுள் ஒன்று. பெண்ணையின் வடக்கே தொண்டை நாடு. ஆனால் பெண்ணையின் வடக்கில் உள்ள அரகண்டநல்லூரும் திருவண்ணாமலையும் நடு நாட்டுத் தலங்களுள் சேர்க்கப்பட்டுள்ளன,

இவ்வூரின் பழைய பெயர் அறையணிநல்லூர். அ = பாறை, அணி = அழகு.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து தெற்கே. சுமார் 40  கிமீ  தூரம்.

பயணம் 

நாள்: விகாரி ஆண்டு ஆவணி மாதம்  25 ஆம் நாள் (11/09/2019) புதன்கிழமை.

திருக்கோயிலூர் புகைவண்டி நிலையம் அரகண்டநல்லூரிலேயே சாலையின் பக்கம் உள்ளது. அதன் எதிரில் உள்ள தெருவில் திரும்பி, அதிலிருந்து மீண்டும் வலப்புறம் திரும்பி கோயிலை அடையலாம். இந்த வழி கோயிலின் கிழக்கில் மதிலில் அமைந்துள்ள ஒரு வாயிலுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு கோபுரம் எதுவும் இல்லை. 

ஒரு தட்டையான பாறை மீதுள்ளது கோயில். 

ஒப்பிலாமணீசுவரர் கோயில் 

வெளித்  திருச்சுற்று 

கிழக்கு வாசலுக்குள் நுழைந்து வெளி திருச்சுற்றை அடைகிறோம். திருசுற்று பாறையாகவே உள்ளது.

அண்ணாமலையார் திருமுன் 

வெளி திருச்சுற்றின் தெற்குப் பகுதியில் முதலில் வருவது அண்ணாமலையார் திருமுன் (சந்நிதி). வடக்கில் உள்ள திருவண்ணாமலையை நோக்குகிறது. 

ராஜ கோபுரம் 

அண்ணாமலையார் கோயிலை அடுத்து ஏழு நிலை ராஜ கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. 160 அடி உயரம் என்கிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள 17 உயரமான கோபுரங்கள் பட்டியலில் (239.5 அடி முதல் 120 அடி வரை) இது இல்லை. 


ராஜ கோபுரம் 

விஜயநகர கால கோபுரம். இரண்டு கொடிப்பெண்கள் ஓவ்வொரு புறமும் அணி செய்கின்றனர். 

இந்த கோபுரத்திற்குச் செல்ல சாலையோ, வீதியோ கிடையாது. நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் தெருவில் நேரே சென்று அங்கு பாறை மேல் உள்ள பிள்ளையார் கோயில் அருகே பாறைகள் மேல் ஏறி  நடந்து சென்றுதான் அடைய வேண்டும். 

கோயிலுக்குக் கிழக்கு வாசல் வழியாக வரும் மக்கள் இந்த கோபுரம் வழியாக வெளியே வந்து போவது அதன் கிழக்கே பாறையின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள குடைவரையைக் காணத்தான். முற்றுப்பெறாத இந்த மகேந்திரர் பாணி குடைவரை முன் வரிசையில் ஆறு தூண்களும், பின் வரிசையில் ஆறு தூண்களும் இடையே ஐந்து அங்கணங்களும் கொண்டது. கருவறைகள் வெட்டப்பட்டு முழுமை அடையவில்லை. பாண்டவர்களும், திரௌபதியும் வனவாசத்தின் போது இங்கு தங்கியதாகவும், போரில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் இங்கு வந்து ஈசனை வழிபட்டதாகவும் கதை. அடுத்துள்ள பாறையில் ஒரு சிறிய பள்ளம் மழைநீர் நிரம்பி குளம் போல் உள்ளது. இது பீமன் கதையால் அடித்து உருவாக்கியது என்ற நம்பிக்கையில்  பீமன் குளம் என்று அழைக்கப்படுகிறது. 

கோயிலுக்கு வெளியே மேற்குப் பக்கத்தில் இருந்து  பார்த்தால் மேற்கே  அருகிலுள்ள தென்பெண்ணையும் அப்பாலுள்ள உலகலந்தப் பெருமாள் கோயில் கோபுரங்களும், வீரட்டேசுவரர் கோயில் கோபுரமும் தெரிகின்றன. உலகலந்தப் பெருமாள் கோயில் ராஜகோபுரம் 192 அடி உயரத்துடன் இந்தியாவின் 5 வது உயரமான கோபுரமாகத் திகழ்கிறது.

திருக்கோயிலூர் காட்சி 

அழகிய பொன்னம்மை திருமுன் 

வெளி திருச்சுற்றில் ராஜ கோபுரத்தை அடுத்து அம்மன் அழகிய பொன்னம்மையின் (சௌந்தர்ய கண்காம்பிகை) திருமுன். 

அழகிய பொன்னம்மை 

நான்கு தூண்கள் தாங்கும் முக மண்டபத்திற்கு கிழக்கிலும், மேற்கிலும் படிகள். அதில் மகா மண்டப வாசலின் பக்கத்தில் ஒரு அழகிய பிள்ளையார் புடைப்புச் சிற்பம்.

அம்மன் திருமுன் முகமண்டப பிள்ளையார்

பிள்ளையார் சிற்பத்தைச் சுற்றி உள்ள சிற்பங்களும், அருகில் உள்ள முச்சூலமும் வித்தியாசமானவை. விளக்கம் வேண்டுபவை. நான் இருக்கும் வரை அர்ச்சகர் வராததால்  தெரிந்துகொள்ள முடியவில்லை.

மகா மண்டபத்தில் உள்ள வாயிற்காவலர் சிலைகளும் வித்தியாசமானவை.  கிழக்கிலிருப்பவர் சிவச் சின்னங்களான மழுவும் பாசமும் ஏந்தி இருக்க, மேற்கிலிருப்பவர் திருமாலின் சின்னங்களான ஆழியும், சங்கும் ஏந்தி உள்ளார்.


அம்மன் அழகிய பொன்னம்மை 

அம்மன் திருமுன்னின் வடக்கே தெற்கு நோக்கி மூலவர் சந்நிதிக்குச் செல்வதற்கான வாயில் உள்ளது. 

நிருத்த மண்டபம் 

வெளித் திருச்சுற்றின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது நிருத்த மண்டபம். 

நிருத்த மண்டபம் - வெளித் தோற்றம்

நிருத்த மண்டபம் சோழர் காலத்தில் ஆட்சி செய்த மலையமான் பெரிய உடையான் காட்டியது. அப்பணி முழுதடைய வேண்டி வெண்மதி சூடினான் என்பவன் உயிர் துறந்தானாம் என்பது செவிவழிச் செய்தி..

நிருத்த மண்டபம் - உள் தோற்றம்

வெளித திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் திருஞானசம்பந்தர் பாதங்களும், பலிபீடமும், கொடி மரமும் உள்ளன.

பலி பீடம், சம்பந்தர் பாதம், கொடி மரம்

திருஞானசமபந்தர் பாதங்கள் திருவண்ணாமலையை நோக்கி உள்ளன. அவர் இவ்வூருக்கு வந்தபோது இந்தக் கோயில் சமணர்களால் மூடப்பட்டு பாறைகளால் அடைக்கப்பட்டிருந்ததாம்.   அவர்  இறைவனை வேண்ட பாறைகள் அகன்று கோயில் திறந்ததாம். ஒப்பிலாமணீசுவரரைப் பாடிய பின்னர் திருவண்ணாமலை செல்ல இயலாமல் சிவ உருவமான அவ்வூர் மலையை நோக்கிப் பாடிவிட்டு செய்யாறு சென்றாராம்.

கோயில் சுவற்றின் வடமேற்குப் பகுதியில் அடித்தளத்தில் மாற்றம் உள்ளது. இது உற்சவ மண்டபத்தின் அடித்தளமாகும். 


உற்சவ மண்டபம் பிரதிபந்த தங்குதளத்துடனும் தூண்கள் கூடிய சுவர், கூரை உறுப்புகளுடனும் அழகாக மற்ற சுவரில் இருந்து வேறுபட்டுத் தெரிகிறது.

மீண்டும் தெற்கே உள்ள மூலவர் திருமுன்னின் வாயிலை அடைந்து உள்ளே உள் திருச்சுற்றின் வாயில் மண்டபத்தை அடைகிறோம். 

உள்  சுற்றின் வாயில் மண்டபம்.

நேர் எதிரே உற்சவ மண்டபம்.

உற்சவ மண்டபம் 

உற்சவ மண்டபத்தில் 3 வரிசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசைத் தூணும் வெவ்வேறு விதமாக உள்ளது. பின் வரிசைத் தூண்கள் முழுதும் உருளையாயும், நடு வரிசைத் தூண்கள் மூன்று சதுரம் இரண்டு கட்டுகளுடன் சிற்பங்களின்றி எளிமையாயும், முன் வரிசைத் தூண்கள் மூன்று சதுரம், இரண்டு எண்பட்டைக் கட்டுகளோடு, இடைக்கட்டு, நாகபந்தம், பதக்கம், இலைக்கருக்கு சிற்பங்கள் ஆகியவற்றுடன் அழகாயும் அமைந்துள்ளன.

உற்சவ மண்டபம் - தூண்கள்

மேற்கே நந்தி மண்டபம். வலது புறம் திருப்பியுள்ளது. உள்ளே உள்ள நந்தி இடது புறம் திருப்பியுள்ளது  சம்பந்தர் வழிபட இவ்வாறு ஒதுங்கின என்பது கதை.

நந்தி 

இடதுபுறம் உள்  திருச்சுற்றின் வாயில். இருபுறமும் மேடைகள்.

உல் திருச்சுற்றின் வாயில் 

வடக்கு மேடையில் பிள்ளையார். தெற்கு மேடையில் முருகர்.

பிள்ளையார் 
முருகர் 

உள்  திருச்சுற்றைப் பற்றியும் மூலவர் திருமுன்னைப் பற்றியும் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

பாகம் 2 ஐப் பார்வையிட  இங்கே சொடுக்கவும்

நன்றிக்கடன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்