குரங்கணில்முட்டம் - கொய்யாமலர் ஈசுவரரும், கல்மண்டகத்து ஆழ்வாரும்

சிறப்பு 
  1. மகேந்திரர் பாணி குடைவரைக் கோயில் 
  2. தொண்டை நாட்டின் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று.
பயணம் 

இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள்  -26/08/2019) கணிகிலுப்பை, மாமண்டூர் ஆகிய இடங்களைப் பார்ததுவிட்டு குரங்கணில்முட்டத்திற்கு மதியம் வந்தேன். மூன்றும் அருகருகில் உள்ள இடங்கள். மாமண்டூரில் இருந்து சுமார் 3 கிமீ வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் காஞ்சிபுரத்தை நோக்கிச் சென்றால் வழிகாட்டிக் கல் குரங்கணில்முட்டத்திற்கு வலதுபுறம் திரும்பச் சொல்கிறது. அங்கிருந்து சுமார் 2 கிமி. முதலில் வலதுபுறத்தில் வாலீசுவரர் கோயில். சிறிது தூரத்தில் இடதுபுறம் குடைவரை வளாகம்.

கொய்யாமலர் ஈசுவரர்

குரங்கணில்முட்டம் = குரங்கு + அணில் + முட்டம் (காகம்).

தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களுள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பவை நான்கு. அவற்றுள் ஒன்று குரங்கணில்முட்டத்தில் உள்ளது.  இறைவன் இறையார் வளையம்மை உடனுறை கொய்யாமலைநாதர் (வாலீசுவரர்). கிருஷ்ணதேவராயர் காலக் கல்வெட்டு இவ்வூரை 'காலியூர்க் கோட்டத்து இருகாழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்து பல்லவபுரமான குரங்கணில்முட்டம்  என்றும்இறைவனை 'திருகுரங்கணில்முட்டமுடைய  நாயனார் , கொய்யாமலர்  ஈசுவர தேவர் என்றும் குறிப்பிடுகிறது. (#)

குரங்கரசன் வாலி, அணில் வடிவில் இந்திரன், காக்கை வடிவில் எமன் ஆகியோர் இவரை வழிபட்டதால் ஊர் இப்பெயர் பெற்றதாம். மேற்கு நோக்கிய கோயிலின் வாயிற்கதவுகளின் பக்கத் தூண்களில் இக்கதை சிற்பமாக உள்ளது.

வாலீசுவரம் தூண் 1

கீழே கோயிலுள் சிவலிங்கம். வெளியே மரத்தின் மீது காக்கையும் கீழே அணிலும் கொய்யாமலர்நாதரை வணங்குகின்றனர். நடுச் சிற்பத்தில் அடியவர் ஒருவர் சிவலிங்கத்தைத் திருமுழுக்காட்டும் காட்சி. மேல் சிற்பத்தில் சிவலிங்கம்.

வாலீசுவரம் தூண் 2

கீழ் சிற்பத்தில் வாலி சிவலிங்கத்தைத் திருமுழுக்காட்ட அடியவர் ஒருவர் கீழே விழுந்து வணக்கும் காட்சி. அதன் மேல் சிவனும் பார்வதியும் விடை ஏறிச் செல்லும் காட்சி. மேலே பிரம்மன் சிவலிங்கத்தைத்  திருமுழுக்காட்டும் காட்சி.

கோயில் மதிலுக்கு உள்ளே சில சிற்பங்கள் கிடக்கின்றன.

சிதைந்துள்ள அழகிய திருமால் சிற்பம்.

விநாயகர் 

கோயில் பூட்டி இருந்தது. எனது முக்கிய இலக்கு நோக்கி நகர்ந்தேன்.

குடைவரை 

இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது இந்த குடைவரை. சுற்றி பச்சை வேலி. சாலையோர நுழைவாயில். பூட்டி இருந்தது. ஒரு பக்க கதவில் ஒருவர் உள்நுழையும் அளவுக்கு திறப்பு. அதன் வழியாக உள்நுழைந்துவிட்டேன். சிறிது நேரத்தில் அதன் எதிரே உள்ள வீட்டில் வசிக்கும் அதன் காப்பாளர் பூட்டை திறந்துவிட்டார்.

குரங்கணில்முட்டம் குடைவரை 

குடைவரை பக்க கருங்கல் சுவர்களால் கரை கட்டப்பட்ட பள்ளத்தினுள் உள்ளது, பாறையின் மேற்பகுதி சுற்றுப்புறத் தரையைவிட சற்றுதான் உயர்ந்திருக்கிறது. குடைவரை கிழக்கு நோக்கியுள்ளது.

குடைவறைக்குச் செல்ல படிகளும் பாதையும் 


குரங்கணில்முட்டம் குடைவரை 

தூண்கள் 

குடைவரையில் இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் நான்கு தூண்கள்.

முகப்பில் நடுவில் இரு முழுத்தூண்கள் (தனித்து நிற்பவை). இருபக்கங்களிலும் ஒவ்வொரு அரைத்தூண் (சுவரோடு ஒட்டி வெளிநீட்டிக்கொண்டிருக்கும் பாதித் தூண்). நான்கு தூண்களுக்கு இடையே மூன்று திறப்புகள் (அங்கணங்கள்).

இரண்டாம் வரிசையிலும் நடுவே இரு முழுத்தூண்கள். இரு பக்கங்களிலும் உள்ள சுவரை ஒட்டி ஒவ்வொரு அரைத்தூண். 

முழுத்தூண்கள் நான்கும் 'சதுரம், எண்பட்டைக் கட்டு, சதுரம்' என்ற அமைப்பைக் கொண்டுள்ளன. அரைத் தூண்கள் மேலிருந்து கீழ்வரை முழுவதும் சதுரமாக 'கட்டு' இன்றி உள்ளன.

தூண்களில் தாமரைப் பதக்கங்களோ, சிற்பங்களோ, இலைக் கருக்குகளோ  இல்லை.

தூண்களின் மேல் கால் வட்ட வடிவிலான போதிகை. போதிகைகள் மேல் உத்திரம். அதன் மேல் பிதுக்கமாக வாஜனம். மேலே கூரை.

மண்டபங்கள் 

பின் வரிசைத் தூண்கள் மண்டபத்தை இரண்டாகப் பிரிக்கின்றன. முன்னே முக மண்டபம், பின்னே அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தின் தரை முக மண்டபத்தின் தரையைவிட சற்று உயர்ந்து இப்பிரிவை உறுதி செய்கிறது.

கருவறைகள்


குரங்கணில்முட்டம் தரைப்படம் 

குடைவரை படத்தில் கண்டபடி 7 கருவறைகள் கொண்டது
  • முகமண்டபத்தின் பக்கங்களில் - 2 (1,2)
  • அர்த்தமண்டபத்தின் பக்கங்களில் - 2 (3,4)
  • அர்த்தமண்டபத்தின்பின்புற சுவற்றில் - 3 (5,6,7)
பின்புற சுவற்றில் உள்ள 3 கருவறைகளின் இரு பக்கங்களிலும் கோட்டங்கள் அமைந்துள்ளன. அவற்றில் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்ளன.

கருவறை 5, 6 இல் பிற்கால சிற்பங்கள் இரண்டு வைக்கப்பட்டுள்ளன.

முகமண்டப கருவறைகள் (1, 2)
அர்த்த மண்டப பக்கச் சுவர் கருவறைகள் (3, 4)

கருவறை 5

கருவறை 6

கருவறை 7

அர்த்த மண்டபத்தின் 5 கருவறைகளுக்கும் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை கொண்ட பாதபந்த தாங்குதளம் உள்ளது.  இந்த தாங்குதள அமைப்பு அர்த்த மண்டபத்தின் மூன்று புறமும் ஐந்து கருவறைகளுக்குமாக தொடர்கிறது.

சுவற்றில் கருவறையின் இருபுறமும் கோட்டங்களும் அவற்றில் வாயிற்காவலர் சிலைகளும் உள்ளன. கோட்டங்களின் இருபுறமும் அரைத்தூண்கள், மேலே போதிகைகள். அவற்றின் மீது உத்திரம், அதன் மேல் வாஜனம், கபோதம், பூமிதேசம். உத்திரம் முதலான கூரை அமைப்பு மண்டபத்தின் மூன்று புறமும் ஏழு கருவறைகளுக்குமாகத் தொடர்கிறது.

அர்த்த மண்டபத்தின் இரு பக்க கருவறைகளை தவிர்த்து மற்ற 5 கருவறைகளில் படிகள் உள்ளன. சில கருவறைகளின் முன் கீழ்ப்படியாக அரை வட்ட நிலாப் படியும் காணப்படுகிறது.

கருவறை உள்ளே தரையில் குழி ஒன்று உள்ளது. இது இறைத் திருமேனியை வைக்க இருக்கலாம்.

கருவறை சிற்பங்கள் 

இவை பின்னாள் சிற்பங்கள். மூன்று சிற்பங்களும் சிதைந்துள்ளன.

கருவறை 5 இல் உள்ள சிற்பம் 

கருவறை 5 இல் உள்ள சிற்பத்தின் இறைவருக்கு 4 கரங்கள்: பின் வலது கை - அக்கமாலை, பின் இடது கை - கமண்டலம், முன் வலது கை - காப்பு (அபய) முத்திரை,  இடது முன் கை - இடுப்பின் மீது (கடி முத்திரை). இடது முன் கையின் கீழே ஒரு குத்தீட்டி. இச்சிற்பத்தை முருகராக அடையாளம் காண்கின்றனர் முனைவர்கள் மு நளினியும், இரா கலைக்கோவனும். (*)

கருவறை 6 இல் உள்ள சிற்பம் 

கருவறை 6 இல் அமர்ந்த நிலையில் உள்ள சிற்பத்தை சண்டிகேசுவரர் என அடையாளம் காண்கின்றனர் முனைவர்கள் மு நளினியும், இரா கலைக்கோவனும். (*)

தலை அற்ற நந்தி 
முன்னர் கருவறை 1 இல் இருந்த தலையற்ற நந்தி (*) இப்போது வெளியில் கிடக்கிறது.

வாயிற்காவலர் சிலைகள் 

பின்சுவற்றில் உள்ள மூன்று கருவறைகள்  ஒவ்வொன்றின் இருபுறமும் உள்ள கோட்டங்களில் வாயிற்காவலர்கள் உள்ளனர்.

நடுக்கருவறை வாயிற்காவலர்கள் நாகம் சுற்றிய கதை மீது ஒரு கையை வைத்து நின்றுள்ளனர்.  அவர்களுள் தென்புறத்தில் உள்ளவர் மகுடத்தின் மேல்பகுதி ஈட்டிமுனையாக நீண்டுள்ளது. மகுடத்தில் பக்கத்தில் கொம்பு போன்ற ஒரு அமைப்பு உள்ளது. சீயமங்கலம் அவனிபாஜ பல்லவேசுவரகிருக கருவறையின் காவலர் ஒருவரும் இவ்வாறே மகுட உச்சியில் ஈட்டி முனையும், இரு பக்கங்களிலும் கொம்புகளும் பெற்றுள்ளனர். இவரை நந்தி தேவர் என திரு கே ஆர் சீனிவாசனும், சூலதேவர் என முனைவர்கள் மு நளினியும், இரா கலைக்கோவனும்.கருதுகின்றனர். (*) இவர் முகமும் இடது காலும் கருவறை பக்கம் திரும்பியுள்ளது. வடபுறம் உள்ளவர் மகுட உச்சி ஈட்டிமுனையோ, கொம்புகளோ இல்லாமலும் நேர் நோக்கியவாறும் உள்ளார்.

மற்ற 4 வாயிற்காவலர்களும் கதையோ வேறெந்த ஆயுதமோ கொள்ளவில்லை.

கல்வெட்டுகள் 

கோயிலுக்கு அளிக்கப்பபட்ட கொடைகள் குறித்து பேசும் மூன்று கல்வெட்டுகள் இராட்டிரகூட அரசன் கன்னரதேவன் (மூன்றாம் கிருஷ்ணன்) காலத்தவை. (*) இவன் அரக்கோணம் அருகில் உள்ள தக்கோலத்தில் கிபி 949 இல் நடந்த போரில் சோழ அரசன் மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி  ஆன முதலாம் பராந்தகனின் படைகளை தோற்கடித்து தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினான். கச்சியும் தஞ்சையும் கொண்ட என்ற விருதுப் பெயர் கொண்டான். இப்போரில் பராந்தகன் மகன் இராசாதித்தன் இறந்தான்.($) 

மூன்றாம் கிருஷ்ணன் கல்வெட்டுகள் இவ்வூரை காலியூர்க் கோட்டம் ஏரிக் கீழ் நாட்டு பல்லவபுரம் என்றும் குடைவரையை கல்மண்டகம் என்றும், இறைவனை கல்மண்டகத்து ஆழ்வார் எனவும் அழைக்கின்றன.  (*)

மற்ற இரு கல்வெட்டுகள் மன்னர் பெயரற்றவை. (*)

சிறப்பு 

இக்குடைவரையின் தனிச்சிறப்பு என அர்த்த மண்டபத்தின் மூன்று பக்கங்களையும் சூழும் தங்குதளத்தையும், குடைவரையின் மூன்று பக்கங்களையும் சூழும் கூரை உறுப்புகளையும் கருதுகின்றனர் முனைவர்கள் மு நளினியும், இரா கலைக்கோவனும். (*)

நன்றிக்கடன் 

* மு நளினி, இரா கலைக்கோவன்; 'மகேந்திரர் குடைவரைகள்';அலமு பதிப்பகம்; முதல் பதிப்பு ; 2004

https://shaivam.org/hindu-hub/temples/place/159/thirukkuranganilmuttam-vaaleeswarar-temple

$ பன்மொழிப் புலவர் கா அப்பாதுரை ; 'தென்னாட்டுப் போர்க்களங்கள்'; பூம்புகார் பதிப்பகம்; மூன்றாம் படிப்பு; 2014













கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்