நரசமங்கலம்-மாமண்டூர் குடைவரைகள்

முதலாம் சிறப்பு 
  • நான்கு மகேந்திரர் பாணி குடைவரைக் கோயில்கள். 
  • தமிழகத்தில் ஒரே மலைத்தொடரில் நான்கு குடைவரைகள் அமைந்திருப்பது. 
  • மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் மிகப் பெரிய குடைவரைகளுள் ஒன்று. 
  • மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் மிக அதிகக் கருவறைகள் கொண்ட குடைவரை.
  • மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் இரு பக்க முகப்பு கொண்ட ஒரே குடைவரை.
பயணம் 

இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள் (26/08/2019) கணிகிலுப்பையைப் பார்ததுவிட்டு மதியம் மாமண்டூர் வந்தேன்..  திருவண்ணாமலையில் இருந்து சுமார் 105 கிமீ தூரம். வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்தவாசியில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 15 கிமீ தூரத்திலும் உள்ளது நரசமங்கலம் என்ற ஊர். அங்கிருந்து சாலையிலிருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் உள்ளன குடைவரைகள். சாலை பிரியும் இடத்தில் பச்சையம்மன் கோயில் வளைவு ஒன்று உள்ளது.


குடைவரைகள்   

இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது. வளாகத்தின் வாயிலில் இருந்து குடைவரைகளுக்குச் செல்லும் பாதை மண்பாதை . முன் நாள் மழையில் ஆங்காங்கே சேறாக இருந்தது.

நான்கு குடைவறைகளில் இரண்டு (3, 4) நரசமங்கலம் எல்லையிலும், மற்ற இரண்டு (1,2) மாமண்டூர் எல்லையிலும் உள்ளன. வளாக வாயிலில் இருந்து செல்லும் பாதையில் அவை 4, 3, 2, 1 என்ற வரிசையில் அமைந்துள்ளன.

மண்பாதையும் குடைவரை 4 உம் 

நான்கு குடைவரைகளும் வடக்கு தெற்காக உள்ள மலைத்தொடரின் கிழக்குப் பக்கம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. ஒவ்வொரு குடைவரையின் முன்பும் இந்திய தொல்லியல் அளவை நிறுவனம் தகவல் பலகை ஒன்றை வைத்துள்ளது.

தகவல் பலகை 

குடைவரை ஒன்று 

குடைவரை முன்னால் உள்ள படிகள் பிற்காலத்தவை.

தூண்கள்

குடைவரையில் முகப்பில் நான்கு தூண்கள். நடுவில் இரு முழுத்தூண்கள் (தனித்து நிற்பவை). இருபக்கங்களிலும் ஒவ்வொரு அரைத்தூண் (சுவரோடு ஒட்டி வெளிநீட்டிக்கொண்டிருக்கும் பாதித் தூண்). நான்கு தூண்களுக்கு இடையே மூன்று திறப்புகள் (அங்கணங்கள்).

முழுத்தூண்கள் நான்கும் 'சதுரம், எண்பட்டைக் கட்டு, சதுரம்' என்ற அமைப்பைக் கொண்டுள்ளன. அரைத் தூண்கள் மேலிருந்து கீழ்வரை முழுவதும் சதுரமாக 'கட்டு' இன்றி உள்ளன. கீழ்ச் சதுரம் மேல் சதுரத்தை விட ஏறக்குறைய இருமடங்கு உயரமாய் உள்ளது.

மாமண்டூர் முதல் குடைவரை 

தூண்களின் மேல் கால் வட்ட வடிவிலான போதிகை. போதிகைகள் மேல் உத்திரம். அதன் மேல் பிதுக்கமாக வாஜனம். மேலே கூரை. முன்னால் கூரை கபோதகமாக நீட்டிக் கொண்டிருக்கிறது.

முன் தூண்களில் பின் பக்கம் தவிர மற்ற பக்கங்களில் மேல், கீழ் சதுரங்களில் தாமரைப் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கீழ்ச் சதுரத் தாமரை 
கீழ்ச் சதுரத்  சதுர தாமரைப்  பதக்கம் சதுரமாக உள்ளது. நடுவில் வட்ட வடிவ தாமரை. அதற்கும் சதுர எல்லைக்கும் இடையே கொடிகருக்குகள்.

மேல் சதுர தாமரை பதக்கம் 

மேல் சதுர தாமரை பதக்கம் வட்டத் தாமரை மட்டுமே உள்ளது. சதுர வெளி எல்லை  இல்லை. மேலும் மேற் சதுரத்தின் உயரக் குறைவின் காரணமாக முக்கால் வட்டமாகவே உள்ளது.

அரைத்தூண்களின் முன்பக்கத்தில் இந்த சதுரங்கள் அரையாக அமைந்துள்ளன.

அரைத் தூண்களின் முன்பக்கத்தில் அரைத் தாமரை பதக்கங்கள் 

மண்டபம்  

முகப்புத் தூண்களுக்கும் பின் சுவரில் உள்ள கருவறைக்கும் இடையில் உள்ள இடத்தை முக மண்டபம் என்று மு நளினி, இரா கலைக்கோவன் அவர்களும், அர்த்த மண்டபம் என்று கே. ஆர். சீனிவாசனும் கருதுகின்றனர்.* இந்த மண்டபத்தின் கூரையை ஒட்டி நாற்புரமும் வாஜனம் அமைந்துள்ளது.

கருவறைகள்

ஒற்றைக் கருவறை பின்சுவற்றின் நடுவில் அமைந்துள்ளது. அதன் முன் சுவர் கருவறையின் பின் சுவற்றில் இருந்து முன் தள்ளி உள்ளது. உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை கொண்ட பாதபந்த தாங்குதளம் கொண்டுள்ளது.

கருவறை 

சுவற்றில் கருவறையின் இருபுறமும் கோட்டங்களோ, வாயிற்காவலர்களோ இல்லை.

கருவறை வாயிலின் இருபுறமும், கருவறை சுவற்றின் இறுதியிலும் ஆக நான்கு அரைத்தூண்கள் உள்ளன. தூண்களின் மீது உத்திரம், அதன் மேல் வாஜனம், வலபி, கபோதம், என்ற கூரை அமைப்பு.

கருவறை முன் இரு படிகள். கீழ்ப்படியாக அரை வட்ட நிலாப் படி காணப்படுகிறது.

கருவறையின் பின்சுவரை ஒட்டி ஒரு மேடையும் அதன் நடுவில் ஒரு குழியும் உள்ளன.  இது இறைத் திருமேனியை வைக்க இருக்கலாம்.

கருவறை மேடையும், குழியும் 

கல்வெட்டு 

மகேந்திரரின் கிரந்தக் கல்வெட்டு ஒன்று தென் சுவரில் உள்ளது.

கல்வெட்டு 

தரை, கூரை, சுவர்ப் பகுதிகள் பெரும்பாலும் குண்டும் குழியுமாக உள்ளன.


குடைவரை 2

குடைவரை 2

தூண்கள் 

குடைவரையில் இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் நான்கு தூண்கள்.

முகப்பில் நடுவில் இரு முழுத்தூண்கள், இருபக்கங்களிலும் ஒவ்வொரு அரைத்தூண். நான்கு தூண்களுக்கு இடையே மூன்று திறப்புகள் (அங்கணங்கள்).

இரண்டாம் வரிசையிலும் நடுவே இரு முழுத்தூண்கள். இரு பக்கங்களிலும் உள்ள சுவரை ஒட்டி ஒவ்வொரு அரைத்தூண். 

முழுத்தூண்கள் நான்கும் 'சதுரம், எண்பட்டைக் கட்டு, சதுரம்' என்ற அமைப்பைக் கொண்டுள்ளன. அரைத் தூண்கள் மேலிருந்து கீழ்வரை முழுவதும் சதுரமாக 'கட்டு' இன்றி உள்ளன.

தூண்களில் தாமரைப் பதக்கங்களோ, சிற்பங்களோ, இலைக் கருக்குகளோ  இல்லை.

தூண்களின் மேல் விரிகோண வடிவிலான போதிகை. போதிகைகள் மேல் உத்திரம். அதன் மேல் பிதுக்கமாக வாஜனம். மேலே கூரை. முகப்புத் தூண்களுக்கு மேல் கூரை முன்னோக்கி கபோதமாக நீண்டுள்ளது.

மண்டபங்கள் 

பின் வரிசைத் தூண்கள் மண்டபத்தை இரண்டாகப் பிரிக்கின்றன. முன்னே முக மண்டபம், பின்னே அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தின் தரை முக மண்டபத்தின் தரையைவிட சற்று உயர்ந்து இப்பிரிவை உறுதி செய்கிறது. முக மண்டப கூரையின் நான்கு புறமும் வாஜனம் உள்ளது.

இரண்டாம் வரிசைத் தூண்களும், இரு மண்டபங்களும் 

கருவறைகள்

பின்புற சுவற்றில் மூன்று கருவறைகள் உள்ளன.  அவை ஒவ்வொன்றின் இரு பக்கங்களிலும் கோட்டங்கள் அமைந்துள்ளன. அவற்றில் வாயிற்காவலர், அடியவர்  சிற்பங்கள் உள்ளன.

வட கருவறை 

நடுக் கருவறை 

தென் கருவறை 

மூன்று கருவறைகளுக்கும் ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை கொண்ட பாதபந்த தாங்குதளம் உள்ளது.

வாயிற்காவலர் கோட்டங்களின் இருபுறமும் அரைத்தூண்கள், மேலே போதிகைகள். அவற்றின் மீது உத்திரம், அதன் மேல் வாஜனம், கபோதம்.

மூன்று கருவறைகளிலும் படிகள் உள்ளன. பக்கக் கருவறைகள் இரண்டின் முன்னும் கீழ்ப்படியாக அரை வட்ட நிலாப் படி காணப்படுகிறது. படிகளின் பக்கங்களில் துதிக்கை போன்ற பக்கச் சுவர்கள் உள்ளன.

நடுக் கருவறையில் லிங்கம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மற்ற இரு கருவறைகளிலும் உள்ளே தரையில் குழி ஒன்று உள்ளது. இது இறைத் திருமேனியை வைக்க இருக்கலாம்.

மூன்று கருவறை வாயிற்காவலர்களும் வெவ்வேறு விதமாக உள்ளனர். நடுக் கருவறை வாயிற்காவலர்கள் மட்டும் கதை மேல் கை வைத்தவாறு உள்ளனர். இருவரது கால் நிலைகள் மாறுபட்டுள்ளன. வடக் கருவறை வாயிற்காவலர்கள் ஒரு கையில் போற்றி முத்திரை காட்டுகின்றனர். மற்ற கையை ஊரு ஹஸ்தமாக தொடையில் வைத்துள்ளனர். தென் கருவறை கோட்டங்களில் உள்ளவர்கள் முனிவர்கள் போன்ற தோற்றம் கொண்டுள்ளனர். கருவறை பக்கக் கைகளில் மலர் ஏந்தி மற்ற கையை  தொடையிலோ மார்பிலோ வைத்துள்ளனர்.

முன்புறத் தூண்களின் மேல் உத்திரப்பகுதிகளில் வர்ணப்பூச்சு தெரிகிறது.

உத்திரப் பகுதிகளில் வர்ணப்பூச்சு 

கல்வெட்டுகள் *

இந்த குடைவரையில் இரு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டும் விளக்குக் கொடைகளைப் பற்றியன. அர்த்த மண்டபத்தின் தென் சுவரில் பரகேசரிவர்மனின் (முதலாம் பராந்தக சோழன்) கல்வெட்டு உள்ளது, இது இக்குடைவரைக் கோயிலைச் 'சித்திரமேகத் தடாகத்தின் கீழ் அமைந்துள்ள நரசிங்கமங்கலத்து  வாலீசுவரம் ' என்று  அழைக்கிறது.

அர்த்த மண்டப தென் சுவரில் பரகேசரி வர்மன் கல்வெட்டு 

முக மண்டபத்தின் வட சுவரில் முதலாம் ராஜராஜன் காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு மூலம் ருத்ரவாலீசுவரம் எனும் இந்த குடைவரை காலியூர்க் கோட்டத்துச் சித்திரமேகத் தடாகத்தின் கீழ் திருஏகம்பத்துள் உத்தமச்சோழ ஈசுவரப்புறத்தின் நரசிங்கமங்கலத்தில் இருந்ததாகத் தெரிகிறது.

வட சுவரில் முதலாம் ராஜராஜன் காலக் கல்வெட்டு

மூன்றாம் குடைவரை

இந்தக் குடைவரை மலையின் மேற்புறத்தில் அமைத்துள்ளது. படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குடைவரை 3

குடைவரையின் முன் உள்ள தளத்தில் தரையைச் சமப்படுத்த சதுரங்களாகப் பிரித்து வெட்டியதன் மிச்சங்கள் உள்ளன. இது பல்லவர் காலப் பாறைகளைச் செதுக்கும் தொழில்நுட்பம்.

முன்தரை சீரமைப்பு பணியின் எச்சம்

குடைவரை இரு முகங்களைக் கொண்டுள்ளது. முதன்மையானது கிழக்கு முகம். இதுவே குடைவரையின் உள்செல்லும் வழி.

குடைவரை 3: கிழக்கு முகம் 

இரண்டாம் முகம் தெற்கு நோக்கியது. இதில் நான்கு தூண்கள் வெட்டப்பட்டிருந்தாலும் மேற்கொண்டு குடைவரையுடன் தொடர்பு இல்லாமல் பொய் முகமாகவே உள்ளது.

குடைவரை 3: தெற்கு முகம் 

தூண்கள் 

குடைவரையில் இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன.முகப்பு வரிசையில் ஏழு தூண்கள், பின் வரிசையில் ஆறு தூண்கள்.

முகப்பில் ஐந்து முழுத்தூண்கள்,   வட புறம் மட்டும் ஒரு அரைத்தூண். தென் கோடியில் உள்ள தூண் கிழக்கிலும், தெற்கிலும் மூலைத் தூணாக அமைந்து முக்கால் தூணாக விளங்குகிறது.

இரண்டாம் வரிசையில் நடுவே நான்கு முழுத்தூண்கள். இரு பக்கங்களிலும் சுவரை ஒட்டி ஒவ்வொரு அரைத்தூண். 

இரு வரிசைத் தூண்கள் 

தென்கோடித்  தூணைத் தவிர மற்ற முழுத்தூண்கள் 'சதுரம், எண்பட்டைக் கட்டு, சதுரம்' என்ற அமைப்பைக் கொண்டுள்ளன. முன் வரிசைத் தென்கோடி முழுத் தூணும், அரைத் தூண்களும்  மேலிருந்து கீழ்வரை முழுவதும் சதுரமாக 'கட்டு' இன்றி உள்ளன. தூண்களில் தாமரைப் பதக்கங்களோ, சிற்பங்களோ  இல்லை.

தூண்களின் மேல் வளைந்த போதிகைகள். அவற்றின் மேல் உத்திரம். அதன் மேல் பிதுக்கமாக வாஜனம். மேலே கூரை. முகப்புத் தூண்களுக்கு மேல் கூரை முன்னோக்கி கபோதமாக நீண்டுள்ளது. முகப்பு உத்திரத்தில் ஆங்காங்கே சதுரத் துளைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் பந்தலுக்காக கம்புகளை ஏந்த அமைக்கப்பட்டவையாக இருக்கலாம். தூண்களுக்கு மேல் வண்ணப்பூச்சு தெரிகிறது.

துளைகளும், வர்ணப்பூச்சும் 

மண்டபங்கள் 

பின் வரிசைத் தூண்கள் மண்டபத்தை இரண்டாகப் பிரிக்கின்றன. முன்னே முக மண்டபம், பின்னே அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தின் தரை முக மண்டபத்தின் தரையைவிட சற்று உயர்ந்து இப்பிரிவை உறுதி செய்கிறது. முக மண்டபக் கூரையின் நான்கு புறமும் வாஜனம் உள்ளது.

கருவறைகள் 

குடைவரை ஒன்பது கருவறைகள் கொண்டது
  • முகமண்டபத்தின் பக்கங்களில் - 2 
  • அர்த்தமண்டபத்தின் பக்கங்களில் - 2 
  • அர்த்தமண்டபத்தின்பின்புற சுவற்றில் - 5 
முக மண்டபத்தின்  பக்கங்களில்  உள்ள கருவறைகள்  

தெற்கு கருவறை கிழக்கு பக்கமும் திறந்துள்ளது.


வடக்கு 
தெற்கு 


அர்த்த மண்டபத்தின்  பக்கங்களில்  உள்ள கருவறைகள் 


வடக்கு 
தெற்கு 

அர்த்தமண்டபத்தின்பின்புற சுவற்றில் உள்ள கருவறைகள் (தெற்கிலிருந்து வடக்காக)


ஒன்று 
இரண்டு 
மூன்று 
நான்கு 
ஐந்து 

பின் சுவற்றில் உள்ள ஐந்து கருவறைகளுக்கும் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை, உபரிக் கம்பு கொண்ட பாதபந்த தாங்குதளம் உள்ளது. தூண்களோ, வாயிற்காவலர் கோட்டங்களோ இல்லை. மேலே உத்திரமும், அதன் மேல் கபோதமும் உள்ளன. பக்கக் கருவறைகள் நான்கும் தாங்குதளம் பெறவில்லை. ஆனால், மேலே கபோதம் கொண்டுள்ளன.

தாங்குதளம், கூரை, படிகள் 

அர்த்த மண்டப வட கருவறையைத் தவிர மற்ற எட்டு கருவறைகளிலும் படிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தின் இரு கருவறைகளைத் தவிர மற்றவற்றில் கீழ்ப்படியாக அரை வட்ட நிலாப் படியோ அல்லது அதன் எச்சமோ  காணப்படுகிறது. பின் சுவரின் ஐந்து கருவறைகளின் படிகளின் பக்கங்களில் துதிக்கை போன்ற பக்கச் சுவர்கள் உள்ளன.

கருவறைகளின் உள்ளே தரையில் குழி உள்ளது. இது இறைத் திருமேனியை வைக்க இருக்கலாம்.

கருவறைக் குழி 

கருவறை வாசலின் தரையிலும் மேலும் குழிகள் உள்ளன. இவை கதவுகளைப் பொருத்துவதற்காக இருக்கக்கூடும்.



 நான்காம் குடைவரை 

நான்காம் குடைவரை 

மலையில் உயரத்தில் உள்ள இதை அடைய படிகள் உள்ளன,

ஒரே வரிசையில் நான்கு தூண்கள். நடுவில் இரு முழுத்தூண்கள், இருபக்கங்களிலும் ஒவ்வொரு அரைத்தூண். நான்கு தூண்களுக்கு இடையே மூன்று திறப்புகள் (அங்கணங்கள்). தென் முழுத்தூண் மட்டும் 'சதுரம், எண்பட்டைக் கட்டு, சதுரம்' என்ற அமைப்பைக் கொண்டுள்ளன. வட முழுத் தூண் கட்டு செதுக்கப்படாமல் சதுரமாகவே உள்ளது.அரைத் தூண்கள் மேலிருந்து கீழ்வரை முழுவதும் சதுரமாக 'கட்டு' இன்றி உள்ளன.

தூண்களுக்குப் பின்னால் மண்டபம். அதன் பின் சுவர் குடைதல் முடிவடையாமல் உள்ளது.

பின் சுவர் 

பின் சுவற்றில் மேலும் குடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு நின்றுபோயிருப்பதன் தடயங்கள் தெரிகின்றன. கருவறைகள் எதுவும் இல்லை.

பின் சுவர் வெட்டும் முயற்சி தடயங்கள்.

குடைவரையின் முன்னே சில பிற்காலத் சதுரக் குழிகள் உள்ளன, பந்தல் கால்கள் ஊன்ற இருக்கலாம்.

சித்திரமேகத் தடாகம்

பிற்காலக் கோயில்களோடு குளங்கள் அமைந்தது போல மகேந்திரர் குடைவரிக் கோயில்களோடு ஏரிகள் வெட்டப்பட்டன. இந்த குடைவரியோடு உடனான ஏரி சித்திரமேகத் தடாகம் என்றழைக்கப்பட்டது. தற்போது மாமண்டூர் ஏரியாக மலையின் மறு புறத்தில் உள்ளது.

நன்றிக்கடன் 

* மு நளினி, இரா கலைக்கோவன்; 'மகேந்திரர் குடைவரைகள்';அலமு பதிப்பகம்; முதல் பதிப்பு ; 2004

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்