அரகண்டநல்லூர் - முற்றுப் பெறாத குடைவரை
சிறப்பு
முற்றுப் பெறாத மகேந்திரர் பாணி குடைவரை.
இடம்
திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. அரகண்டநல்லூர் எதிரே அதன் வட கரையில் அமைந்துள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து தெற்கே சுமார் 40 கிமீ தூரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது இவ்வூர்.
பயணம்
நாள்: விகாரி ஆண்டு ஆவணி மாதம் 25 ஆம் நாள் (11/09/2019) புதன்கிழமை.
திருவண்ணாமலையில் இருந்து சென்றேன். திருக்கோயிலூர் புகைவண்டி நிலையம் அரகண்டநல்லூரிலேயே சாலையின் பக்கம் உள்ளது. அதன் எதிரில் உள்ள தெருவில் திரும்பி அதுல்யநாதேசுவரர் எனும் ஓப்ப்பிலாமணிநாதர் கோயிலை அடையலாம். அந்தக் கோயில் அமைந்துள்ள பாறையில்தான் ராஜகோபுரத்தின் கீழே அதன் தென்புறத்தில் இந்த குடைவரை உள்ளது.
![]() |
அரகண்டநல்லூர் குடைவரை |
ராஜ கோபுரம் அமைந்துள்ள பாறைக்கும் அடுத்துள்ள பாறைக்கும் இடையில் உள்ள குறுகிய இடம்தான் குடைவரைக்குச் செல்லும் வழி. அது முழுவதுமாக மரம், செடி, முட்செடி, கொடி, புதர்களால் அடைபட்டுள்ளது. கோயிலுக்கு வரும் புதியவர்கள் பஞ்ச பாண்டவர்கள் தங்கிய இடம் என்று இதைப் பார்க்க வருகிறார்கள். ஆனால் பக்கத்துப் பாறையில் இருந்து குடைவரையின் மேல்விளிம்பின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பார்க்கமுடிகிறது.
குடைவரையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலால் செடி, புதர்களை விலக்கி ஒரு வழியாக குடைவரையை அடைந்தேன்.
குடைவரை அமைப்பு
குடைவரை தெற்கு நோக்கியது.
ஆறு தூண்கள் முன் வரிசையிலும் ஆறு தூண்கள் பின் வரிசையில் கொண்ட மண்டபமாக உள்ள குடைவரை. ஒவ்வொரு வரிசையிலும் நடுவில் நான்கு முழுத் தூண்கள். பக்கங்களில் சுவரை ஒட்டி அரைத் தூண்கள்.
![]() |
குடைவரை - முன்புறக் காட்சி |
எல்லாத் தூண்களும் முழுதும் சதுரமானவை. தூண்களின் மீது விரிகோணப் போதிகை. அதன் மீது உத்திரம். மேலே வெளி நீட்டிக் கொண்டிருக்கும் கபோதம். மொத்தக் குடைவரையில் கபோதத்தின் கீழ்ப் பகுதிதான் சமப்படுத்தப் பட்டுள்ளது.
![]() |
முன்புறத் தூண்கள் - உள்ளிருந்து |
குடைவரையின் உள்ளெ தரை மண்ணால் மூடப்பட்டிருப்பதால் கல்தரை தெரியவில்லை. கூரை சமப்படுத்தப்படாமல் மிகவும் மேடு பள்ளமாக உள்ளது.
![]() |
இருவரிசைத் தூண்கள் |
முன் வரிசைத் தூண்களை விட பின்வரிசைத் தூண்கள் அதிகம் செதுக்கப்படாமல் ஆரம்ப நிலையில் உள்ளன.
![]() |
பின் வரிசைத் தூண்கள் |
பின்வரிசைத் தூண்களுக்குப் பின்னால் பாறை சுவராக உள்ளது. இதற்கும் தூண்களுக்கும் இடைப்பட்ட பகுதியின் கூரை செப்பனிடப்படாமல் சமப்படுத்தப் படாமல் உள்ளது.
![]() |
பின் சுவர் |
ஆறு தூண்களுக்கு இடையில் ஐந்து அங்கணங்கள் (திறப்புகள்) உள்ளன. இவற்றில் மற்ற சில இந்த பாணி குடைவரைகளைப்போல 5 கருவறைகளை அமைக்கத் திட்டமிட்டிருக்கலாம். இதற்கான தடயங்கள் தெரிகின்றன. மாமண்டூர், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் காணப்படுவது போல பல்லவர்களது பாறைகளைக் குடையும் முறை அவற்றை சதுர, நான்கோண கட்டங்களாகப் பிரித்துக் கொண்டு பின் அவற்றை செதுக்குவது ஆகும். இரண்டாம் திறப்பு, நான்காம் திறப்புகளுக்கு பின் உள்ள சுவர்களில் இது போன்ற சதுர, நான்கோண கட்டங்கள் வெட்டப்பட்டுள்ளன.
![]() |
நான்காம் திறப்புக்கு எதிர் பின்சுவர் சதுர, நாற்கோண கட்டங்களாகப் பிரிப்பு |
![]() |
இரண்டாம் திறப்புக்கு எதிர் பின்சுவர் சதுர, நாற்கோண கட்டங்களாகப் பிரிப்பு |
மற்ற சுவர் பாகங்கள் இவ்வாறு பிரிக்கப்படவில்லை.
குடைவரையைக் கண்ட மனநிறைவுடன் மீண்டும் தாவரங்களைக் கடந்து வெளிவந்து பெருமூச்சு விட்டேன்.
திருக்கோயிலூர் செல்ல பால வழி பிரியும் இடத்தில் ஒரு சிறு உணவகத்தில் மூலிகை உணவு உண்டேன். அருமையான சுவை. வயிற்றுக்கு தொல்லை தராத உணவு. 30 ரூபாயில்.
![]() |
மூலிகை உணவகம் |
![]() |
மெனு |
வழியில் கண்டது
திருவண்ணாமலை - திருக்கோயிலூர் வழியில் திருவண்ணாமலையில் இருந்து 30 கிமீ தூரத்தில் காட்டுக்கோயில் என்ற இடம். அங்கிருந்த ஒரு நெடிய கொடிமரம் கவனத்தை ஈர்த்தது.
![]() |
புனித அந்தோனியார் திருத்தலம், காட்டுக்கோயில் |
புனித அந்தோணியார் திருத்தலம். கொடிமரம் அறுபது அடி உயரமாம்.
![]() |
அறிவிப்புப் பலகை |
மாதத்தின் முதல் செவ்வாய் முக்கியமான நாளாம். மக்கள் தங்கள் வேண்டுதல்களை எழுதி அங்குள்ள மண்டபங்களில் தொங்கவிட்டுள்ளனர். வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் அந்தோனியாருக்கு செய்த பொறுத்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
![]() |
புனித அந்தோனியாருக்கு பொறுத்தனை முடி காணிக்கை செலுத்தும் இடம். |
கத்தோலிக்க கிருத்துவ மதத்தில் புனிதர் என்பவர் தனது வாழ்நாளில் கடவுள் திருப்பணியில் தன்னை அர்ப்பணித்து, உன்னதமான அருள் வாழ்க்கை வாழ்ந்து, இறைவன் அருளைப் பெற்று, அதன் அடையாளமாக அற்புதங்கள் புரிந்தவர்கள். இறந்தபின் விண்ணுலகத்தில் இறைவனுக்கு அருகாமையில் இருப்பார்கள். மக்கள் தங்களிடம் வைக்கும் வேண்டுதல்களை இறைவனிடம் எடுத்துச் சென்று நிறைவேற்றித்தரும் வல்லமை வாய்ந்தவர்கள்.
அந்தோணி என்ற பெயரில் பல் புனிதர்கள் உள்ளனர். 35 ஆண்டுகளே வாழ்ந்த இவர் பதுவா அந்தோணி (கிபி 1195-1231) என அறியப்படுபவர். போர்ச்சுகல் நாட்டில் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தாலும் இளைமையிலேயே துறவறம் பூண்டு மதத் தொண்டாற்றியர். வேதாகமங்களில் ஆழ்ந்த புலமையும், மக்களை இருக்கும் போதக வல்லமையும் கொண்ட இவர் பல அற்புதங்களைப் புரிந்தவர். குறிப்பாக இழந்தவற்றையும், இழந்தவர்களையும் மீட்பவர்.
முதன்மை மாதாக் கோயில் பக்கத்தில் விருதுவிளங்கினான் என்ற ஊரில் உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக