மடம் – தடாகபுரீசுவரர் ஆலயம்
சிறப்பு
- சோழர் காலத்தில் எழுப்பப்பட்டு 14 ஆம் நூற்றாண்டில் விரிவுபடுத்தப்பட்டு இப்போது புனரமைக்கப்பட்ட தடாகபுரீசுவரர் ஆலயம்.
- துர்க்கை பாறை சிலை, கல்வெட்டுகள்
- சறுக்கும் பாறை கல்வெட்டு
பயணம்
மடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலையில் இருந்து சுமார் 60 கிமீ தூரம். சேத்துப்பட்டிலிருந்து வந்தவாசி சாலையில் சுமார் 12 கிமீ சென்றால் மடம் செல்வதற்கான சாலை பிரிகிறது. பிரியும் இடத்தில் அறிவிப்புப் பலகை ஒன்று உள்ளது. அங்கிருந்து சுமார் 5 கிமீ தொலைவு மடம்.
மடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலையில் இருந்து சுமார் 60 கிமீ தூரம். சேத்துப்பட்டிலிருந்து வந்தவாசி சாலையில் சுமார் 12 கிமீ சென்றால் மடம் செல்வதற்கான சாலை பிரிகிறது. பிரியும் இடத்தில் அறிவிப்புப் பலகை ஒன்று உள்ளது. அங்கிருந்து சுமார் 5 கிமீ தொலைவு மடம்.
இரண்டு நாள் திருவண்ணாமலை - சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் முதல் நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 8 ஆம் நாள் - 25/08/2019) முதல் இடமாக நெடுங்குன்றத்தைக் கண்ட பிறகு மதியம் மடம் வந்தேன்.
பெயர் வரலாறு *
கோயில் கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் 'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்குன்றக்கோட்டத்து தென்னாற்றூர் நாட்டுக் குளத்தூர்' என குறிக்கப்பட்டுள்ளது. தற்போது இசா குளத்தூர் என்னும் ஊர் மடத்திற்கு தெற்கே 1/2 கிமீ தூரத்தில் உள்ளது.
கி.பி. 1363 இல் விஜயநகர இளவரசன் கம்பண உடையார் படைவீட்டைத் (தற்போது படவேடு) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சம்புவராயர் வம்ச மன்னன் இரண்டாம் ராஜநாராயண சம்புவரையனைக் கொன்று இப்பகுதியை விஜயநகர ஆட்சியின் கீழ் கொணர்ந்தார். அவர் காலக் கல்வெட்டில்தான் மடம் என்னும் பெயர் முதன் முதலாக இடம்பெறுகிறது.
கி.பி. 1363 இல் விஜயநகர இளவரசன் கம்பண உடையார் படைவீட்டைத் (தற்போது படவேடு) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சம்புவராயர் வம்ச மன்னன் இரண்டாம் ராஜநாராயண சம்புவரையனைக் கொன்று இப்பகுதியை விஜயநகர ஆட்சியின் கீழ் கொணர்ந்தார். அவர் காலக் கல்வெட்டில்தான் மடம் என்னும் பெயர் முதன் முதலாக இடம்பெறுகிறது.
மடம் கோயில் சிவன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1072) திரு அக்கினீஸ்வரமுடையார் என்றும், பின்னர் இரண்டாம் இராஜராஜன் காலம் முதல் (கி.பி. 1166) குளந்தை ஆண்டார் என்றும் தற்போது தடாகபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கோபுரம்
கோயிலின் வடக்குப் பக்கத்தில் ஐந்து நிலை கோபுரம் உள்ளது. கம்பண உடையாரின் படைத்தலைவன் சோமய்ய தண்டநாயக்கரின் மகன் கண்டர கூளி மாரய்ய நாயக்கர் என்பவர் படைவீட்டை வெற்றி கொண்டதின் நினைவாக இந்த இராஜகோபுரத்தை கட்டி அதற்கு கண்டர கூளி மாரய்ய நாய்க்கன் திருக்கோபுரம் என்று தன் பெயரை வைத்தார்.*
இக்கோபுர வாயிற் கதவை தூணாண்டார் ஆற்றுளார் என்பவர் செய்து கொடுத்துள்ளார்.* கி.பி. 1364 ல் இளங்காடு என்னும் ஊரைச்சேர்ந்த திருநல்லிக்கிழன் நல்ல கம்பன் தென்னவராயன் என்பவர் கோயிலைச்சுற்றி அழகிய திருச்சுற்று மதிலை கட்டினார்.*
கோயிலின் வடக்குப் பக்கத்தில் ஐந்து நிலை கோபுரம் உள்ளது. கம்பண உடையாரின் படைத்தலைவன் சோமய்ய தண்டநாயக்கரின் மகன் கண்டர கூளி மாரய்ய நாயக்கர் என்பவர் படைவீட்டை வெற்றி கொண்டதின் நினைவாக இந்த இராஜகோபுரத்தை கட்டி அதற்கு கண்டர கூளி மாரய்ய நாய்க்கன் திருக்கோபுரம் என்று தன் பெயரை வைத்தார்.*
இக்கோபுர வாயிற் கதவை தூணாண்டார் ஆற்றுளார் என்பவர் செய்து கொடுத்துள்ளார்.* கி.பி. 1364 ல் இளங்காடு என்னும் ஊரைச்சேர்ந்த திருநல்லிக்கிழன் நல்ல கம்பன் தென்னவராயன் என்பவர் கோயிலைச்சுற்றி அழகிய திருச்சுற்று மதிலை கட்டினார்.*
![]() |
கோபுரம் |
கோபுரக் கதவுகளும், வெளி கேட்டும் பூட்டப்பட்டிருந்தன. வடபுறத்தில் உள்ள சிறு வாயில்தான் பொதுவாகப் நுழைவாயிலாகப் பயன்படுகிறது என அறிந்தேன். அதன் பக்கத்திலேயே அர்ச்சகர் வீடு. அங்கு செல்லும் வழியில் ஒரு தாய் தெய்வச் சிற்பம் ஒன்று ஓரு சிறு கோயில் அருகில் கிடந்தது.
![]() |
கன்னிமார் |
அர்ச்சகர் தென்புற வாயிலைத் திறந்து உட் கதவுகளையும் திறந்தார்.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முன்னே நந்தி, பலிபீடம், கொடிமரம்.
![]() |
கொடிமரம், பலிபீடம் |
![]() |
நந்தி |
தடகபுரீசுவரரின் திருமுன்னைச் சுற்றி நான்கு புறமும் முதல் திருச்சுற்று மண்டபம் அமைந்துள்ளது.
![]() |
திருச்சுற்று மண்டபம் - தெற்கு |
தெற்குப் பகுதியில் தேவகோட்டங்களில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர்.
![]() |
விநாயகர் |
![]() |
தட்சிணாமூர்த்தி |
சுவரில் இரு தூண்களுக்கு இடையில் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. அவை பக்கங்களில் அணைவுத் தூண்களாலும் மேலே கூரை விமான அமைப்புகளும் பெற்று ஒரு சிறு கோயில் போன்று உள்ளன.
மண்டபத்தின் தென்புறச் சுவரில் ஏழு கன்னியர் (சப்த மாதர், சப்த கன்னிகள்) சிலைகள் உள்ளன.
![]() |
ஏழு கன்னிகள் |
எண்ணினால் 9 திருஉருவங்கள் உள்ளன அல்லவா? நடுவில் உள்ள எழுவர் கன்னியர். அவர்களது இருபுறமும் இரு ஆண் தெய்வங்கள் - வீரபத்திரரும், விநாயகரும். இடமிருந்து வலமாக வீரபத்திரர், 1.பிராம்மி, 2. மகேசுவரி, 3.கௌமாரி, 4. வைஷ்ணவி, 5.வராகி, 6. இந்திராணி, 7. சாமுண்டி, விநாயகர். இதில் விநாயகரையும், வராகியையும் (பன்றி முகம்) எளிதில் அடையாளம் காணலாம். மற்றவர்களை அவர்களது ஆயுதங்கள், வாகனங்கள், வரிசைநிலை இவற்றைக் கொண்டு அடையாளம் காணலாம்.
இந்த எழுவரும் அவர்தம் பெயர்கள் குறிக்கும் ஆண் கடவுளரின் கூறுகள் (அம்சங்கள்) ஆவர். பிராம்மி பிரம்மாவுடைய, மகேசுவரி சிவனுடைய, கௌமாரி முருகருடைய, வைஷ்ணவி திருமாலுடைய, வராகி வராகருடைய, இந்திராணி இந்திரனுடைய, சாமுண்டி ருத்ரனுடைய கூறுகள் ஆவர். கன்னியர். தத்தம் கடவுளரது ஆயுதங்களையே தரித்தவர்கள். அவர்களது வாகனங்களையே கொண்டவர்கள். ஏழு கன்னியர் தோன்றியது போர்த் தெய்வங்களாக. அந்தகாசுரனுடனான போரில் சிவனுக்கு உதவ எனவும், மகிஷாசுரனுடனான போரில் துர்க்கைக்கு உதவ எனவும் வெவ்வேறு புராணங்கள் கூறுகின்றன.
திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் கருவறையின் தேவ கோட்டத்தில் திருமால் உள்ளார்.
![]() |
திருமால் |
திருச்சுற்றில் வடமேற்கு பாகத்தில் சுயம்புலிங்கேசுவரர் திருமுன் உள்ளது.
![]() |
மேற்கு திருச்சுற்றும் சுயம்புலிங்கேசுவரர் சந்நிதியும் |
திருச்சுற்று தூண்கள் ஒருபுறம் உருளை வடிவமாயும், மறுபுறம் மூன்று சதுரம் இரண்டு எண்பட்டைக் கட்டுகளுடனும் உள்ளன. வெட்டுப் பொதிகைகளைத் தாங்குகின்றன.
![]() |
கருவறைச் சுவர் |
கருவறையின் தாங்குதளம் உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகளோடு கூடிய கண்டம், பட்டிகை ஆகிய உறுப்புகளைக் கொண்டு பாதபந்த தங்குதளமாகத் திகழ்கிறது. ஜகதியில் கல்வெட்டுகள் தெரிகின்றன. மேலே வேதிகைத் தொகுதி, தூண்கள், பஞ்சரம் கொண்ட பாதசுவர். திருமுன் கட்டடத்திற்கும் திருச்சுற்று மண்டபத்திற்கும் இடையே இடைவெளி உள்ளது.
வடக்கில் உள்ள தேவ கோட்டங்களில் நான்முகனும், துர்க்கையும் உள்ளனர்.
![]() |
வடக்குத் திருச்சுற்று |
![]() |
நான்முகன் |
![]() |
துர்க்கை |
திருச்சுற்று மண்டபத்தில் மற்ற சில சிற்பங்களும் உள்ளன.
தலைக்குப் பின்னால் உள்ள தீ முடி (ஜ்வாலா மகுடம்), பின்னால் உள்ள நாய், முன் கைகளில் முச்சூலம், மண்டையோடு கொண்ட பைரவர்
![]() |
பைரவர் |
தலைக்குப் பின்னால் ஒளி வட்டம், இரு கைகளிலும் தாமரை மலர்கள் கொண்ட சூரியன்.
![]() |
சூரியன் |
வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர்.
![]() |
வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர் |
கருவறை
அர்த்தமண்டபம் உருள் தூண்களையும், வெட்டுப் போதிகைகளையும் கொண்டுள்ளது.
![]() |
நந்தி |
பெரியநாயகி (பிரஹன்நாயகி) அம்மன் கோயில்
அம்மன் கோயில் இரண்டாம் திருச்சுற்றில் வடமேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கித் தனியாக உள்ளது. இது விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது.* அம்மன் திருப்பெயர் பெரியநாயகி (பிரஹன்நாயகி). இன்னும் குடமுழுக்கு நடைபெறாததால் வழிபாட்டில் இல்லை.
![]() |
அம்மன் சந்நிதி |
கல்யாண மண்டபம்
இந்த அழகிய மண்டபம் இரண்டாம் திருச்சுற்றில் வடகிழக்குப் பகுதியில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது . மண்டபத்தின் வட பகுதியில் மேடை உள்ளது.
இந்த மண்டபம் கம்பண உடையாரிடம் இருந்து சிற்றரசனாக ஆட்சிப் பொறுப்பைப் பெற்ற மூன்றாம் ராஜநாராயணன் (போரில் இறந்த இரண்டாம் ராஜநாராயணன் மகன்) காலத்தில் கிபி 1368 இல் கட்டப்பட்டது.* இதைக் காட்டியவர் 'சம்பர்மகள் மராபதி களத்தார் மகள் காதலியார்' எனும் தேவரடியார் என இம்மண்டப மேடை சுவரில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.*
![]() |
கல்யாண மண்டபம் |
இந்த மண்டபத்து தூண்களில் புடைப்புச் சிற்பங்களும், தாமரை பதக்கங்களும், கொடிகருக்கு வேலைகளும் காணப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் பிற்கால விஜயநகர காலா சிற்பங்களிலிருந்து இருவிதங்களில் வேறுபடுகின்றன. முதலாவதாக, இவை ஆழமற்றவையாக உள்ளன. இரண்டாவதாக, சில சிற்பங்கள் ஒரே பரப்பில் பிரிக்கப்பட்டுச் சிற்பத் தொகுதியாக உள்ளன. அவற்றில் ஒன்று முன்வரிசை மேற்குத் தூணில் உள்ள இந்த அழகிய பிச்சாடனர் சிற்பம்.
![]() |
பிச்சாடனர் |
பிச்சாடனர் அழகிய விரிசடையுடன், தலையணி, பனையோலைக் குண்டலங்கள் , கழுத்தணிகள், தோள்வளை, கைவளை, உதரபந்தம், அரைஞாண் ஆகியன அணிந்துள்ளார். ஆனால், ஆடை எதுவும் அணியவில்லை. பின் இடது கையில் முச்சூலத்தை கழுத்தின் குறுக்காக பிடித்துக் கொண்டுள்ளார். வலது பின் கையின் நிலை தெளிவாக இல்லை. வழக்கமாக உடுக்கை ஏந்தும். வழக்கமாக மான் வலது புறமும், பூதகணம் இடது புறமும் அமையும். இங்கு இடம் மாறியுள்ளன. அதே போன்று முன்கைகளின் நிலையும் வழக்கத்திலிருந்து மாறி வலது கையில் மண்டையோடு கொண்டு, இடது கையில் மானுக்கு புல் ஊட்டுகிறார். ஒரு பெண் அவருக்குப் பிச்சை இடுகிறாள். வலதுபுறம் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். முழங்காலுக்குக் கீழ்வரையான அவன் ஆடை நன்றாக சித்தரிக்கப் பட்டுள்ளது. பின்புறத்தில் பக்கத்துக்கு ஒன்றாக இரு மாடி வீடுகள் உள்ளன. அவற்றின் தூண்களும் கூரைகளும் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன..அவற்றில் பிச்சாடனர் அழகில் மயங்கி நிலைகுலையும் பெண்கள். ஒரு சிறு பரப்பில் நுட்பமாக கற்பனையோடு செதுக்கப்பட்ட சிற்பம்.
கிழே உள்ள சிற்பம் தெளிவாக இல்லாவிட்டாலும் ரிஷபத்தின் மீது சிவன் ரிஷபாரூடராக உமையடன் அமர்ந்திருக்கிறார். கீழே மூன்று அடியவர்கள்? நிற்கிறார்கள். ஒருவர் கீழே விழுந்து வணங்குகிறார்.
![]() |
ரிஷபாரூடர் |
சிற்பியின் கற்பனைத் திறனுக்கு விருந்து அளிக்கும் தூண் சிற்பங்களில் முக்கியமானது கோபியர் ஆடை திருடும் கண்ணன் சிற்பம்.
![]() |
கோபியர் ஆடை திருடும் கண்ணன் |
![]() |
மயில்மீதமர்ந்த முருகன் |
![]() |
என்ன பார்க்கின்றனர் இப்பெண்டிர்? |
கல்யாண மண்டபத்தில் உள்ள மற்ற சில சிற்பங்கள்.
கல்வெட்டுகள் *
இவ்வூரில் மொத்தம் 56 கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுக்கள் கம்பவர்மன், முதலாம் குலோத்துங்கன், விக்ரமசோழன், இரண்டாம் இராசராசன், ராஜாதிராஜன், மூன்றாம குலோத்துங்கன், சுந்தரபாண்டியன், கம்பண உடையார், தேவராயர், கிருஷணதேவராயர், மற்றும பிற்கால கல்வெட்டுகள் இவ்வூரில் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுகள் யாவும் தற்போது தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள மடம் புத்தகத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளன.
அவை தெரிவிக்கும் செய்திகள் சில:
- கோயிலுக்கு விளக்கெரிக்க தானங்கள் கொடுத்தது
- வேட்டையாடும்போது மானை குறிவைத்து எய்த அம்பு தவறி அடுத்தவன் மீது பாய்ந்து அவன் இறந்த வழக்கில் அம்பு எய்தவனுக்கு தண்டனையான இவ்வூர் இறைவனுக்கு விளக்கெரிக்க 48 ஆடுகளை தானமாக கொடுக்க ஆணை (இராஜாக்கல் பாறை கி.பி. 1113 )
- சம்புவராய மன்னர் இருவருக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் (மூன்றாம் குலோத்துங்கன் காலம்)
- விஜய நகர மன்னர்களின் பரம்பரை
- இக்கோயிலில் நடைபெற்ற பூசைக்ள், விழாக்கள்
- இறைவனின் பூசை அலங்காரங்களுக்காக பூந்தோட்டம் அமைத்தது, கோயிலுக்கு வேண்டிய குளம் வெட்டியது
- அக்காலத்தில் வழக்கிலிருந்த வரிகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் பழுதடைந்து இருந்த இக்கோயில் தமிழக தொல்லியல் துறையின் சீரிய முயற்சியினால் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.* குடமுழுக்காகக் காத்திருக்கிறது.
தெற்கே அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சறுக்கும் பாறை என்ற பாறையில் ஒரு கல்வெட்டு உள்ளது.* இதைப் பார்க்கும் வாய்ப்பு இந்த பயணத்தில் எனக்கு அமையவில்லை.
தெற்கே அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சறுக்கும் பாறை என்ற பாறையில் ஒரு கல்வெட்டு உள்ளது.* இதைப் பார்க்கும் வாய்ப்பு இந்த பயணத்தில் எனக்கு அமையவில்லை.
ராஜாக்கல்
தடாகபுரீஸ்வரர் கோயிலுக்கு தென் பகுதியில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் வளாகத்தை ஒட்டி ராஜாக்கல் எனும் பாறை காணப்படுகிறது. இதில் குலோத்துங்க சோழனின் எட்டு கல்வெட்டுகள் உள்ளன. ராஜாக்கல்லின் கிழக்குப் பகுதியில் உள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக துர்க்கை சிற்பம் ஒன்று உள்ளது. நான்கு கரங்கள். முன்னிரண்டுஅபய ஊரு ஹஸ்தங்கள், பின்னிரு கரங்களில் சக்கரம் சங்கு , தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பத்ர குண்டலம், மார்புக்கச்சை, இடைக்கச்சை.
தடாகபுரீஸ்வரர் கோயிலுக்கு தென் பகுதியில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியின் வளாகத்தை ஒட்டி ராஜாக்கல் எனும் பாறை காணப்படுகிறது. இதில் குலோத்துங்க சோழனின் எட்டு கல்வெட்டுகள் உள்ளன. ராஜாக்கல்லின் கிழக்குப் பகுதியில் உள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக துர்க்கை சிற்பம் ஒன்று உள்ளது. நான்கு கரங்கள். முன்னிரண்டுஅபய ஊரு ஹஸ்தங்கள், பின்னிரு கரங்களில் சக்கரம் சங்கு , தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பத்ர குண்டலம், மார்புக்கச்சை, இடைக்கச்சை.
![]() |
படம் நன்றி: சுரேஷ் பிரியன்) |
ஊரைவிட்டுக் கிளம்பியபோது ஊரைத் தாண்டியதும் ஒரு குளம் - கோடையிலும் நீர் நிறைந்திருந்தது, வழக்கமில்லாத கோடை மழையால்.
கருத்துகள்
கருத்துரையிடுக