நெடுங்குணம் 1: அறிமுகம்

சிறப்புகள்

  • ராமர் யோக நிலையில் அமர்ந்துள்ள தமிழகத்தின் மிகப் பெரிய ராமர் கோயில்.
  • ஊரின் பெயர் காரணமாகத் திகழும் மலை.
  • தீர்காசலேசுவரர் கோயில்
  • இரு கோயில்களையும், மலையையும் இணைக்கும் சுகப் பிரம்மத்தின் புராணம்.
  • ராமர் கோயில் மண்டபத் தூண்களிலும், கோபுரங்களின் உட்சுவர்களிலும் உள்ள அழகிய சிற்பங்கள்.
  • 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மலை மாதா கோயில்,
  • வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செய்திகளைக் கூறும் பல கல்வெட்டுகள்.
  • மூன்று சதிக்கற்கள்.
  • ஆங்கிலேயர் கால பயணியர் விடுதியும், பீரங்கிகளும்

தீர்க்காசலம் என்ற நெடுங்குன்றம் - மேற்கிலிருந்து

அமைவிடம்


நெடுங்குணம் ஊராட்சி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அருகிலுள்ள நகரம் சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ள சேத்துப்பட்டு. மாநில நெடுஞ்சாலை எண் 115 (செய்யூர்-வந்தவாசி-போளூர்) நெடுங்குணத்தின் வழியே செல்கிறது. திருவண்ணாமலையில் இருந்து 47 கிமீ, வந்தவாசியில் இருந்து 25 கிமீ மற்றும் ஆரணியில் இருந்து 30 கிமீ தூரத்தில் உள்ளது நெடுங்குணம்.

ஊர்ப் பெயர்

நெடுங்குணம் என்பது 'நெடுங்குன்றம்' என்பதன் மருவிய பெயர் ஆகும். இப்பெயருக்குக் காரணம் இந்த ஊரில் அமைந்துள்ள நெடிய குன்று.  வடமொழியில் தீர்க்காசலம். தீர்க்கம் = நெடும்;  அசலம்  = குன்றம். இந்த குன்று சிவனின் வடிவாகக் கருதப்படுகிறது. இங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலின் இறைவன் 'தீர்க்காசலேசுவரர்' என்று வடமொழியில் அழைக்கப்படுகிறார்.

"தமிழ் இலக்கிய மரபில் மலை என்ற சொல் ஓங்கி உயர்ந்த பர்வதத்தைக் குறிக்கும். மலையிற் குறைந்தது குன்று என்றும் குன்றிலும் குறைந்தது பாறை என்றும், அறை என்றும், கல் என்றும் பெயர் பெறும். பாண்டி நாட்டு திருப்பரங்குன்றமும், தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும் பாடல் பெற்ற மலைப் பதிகளாகும். ஆர்காட்டு நாட்டில் குன்றம் என்பது குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்னும் பெயர்கள் முறையே நெற்குணம், நெடுங்குணம், பூங்குணம் என மருவி உள்ளன" என்று ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் தன் 'தமிழகம் ஊரும் பேரும்' என்ற நூலில் குறித்துள்ளார்.


தீர்க்காசலம் என்ற நெடுங்குன்றம் - தெற்கிலிருந்து

புராணம்

இவ்வூரின் பெயர், தீர்க்காசலேசுவரர் கோயில், ராமச்சந்திர பெருமாள் கோயில் ஆகியவற்றோடு இணைந்திருப்பது சுகப் பிரம்ம ரிஷியின் புராணம்.

காட்சி 1

மகாபாரதத்தை எழுதிய வியாசரின் மகன் சுகர் என்னும் சுக பிரம்மம். கிளித் தலையும் மனித உடலும் கொண்டவர். கிருஷ்ணனின் புராணமான பாகவதத்தை இயற்றியவர்.. அவர் நாரதரின் அறிவுரைப்படி சிவனின் வடிவமாக நெடுங்குன்றமாக உள்ள இம்மலையில் தவமிருந்து சிவக் காட்சி பெற்றார். சுகரின்   வேண்டுகோளுக்கு இணங்க சிவன் இவ்வூரில் தீர்க்காசலேசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டார். உலக மக்களை நல்வழிப்படுத்த ஒரு வேதச்சுவடியை சுகரிடம் கொடுத்தார். 

காட்சி 2

இலங்கைப் போர் முடிந்து அயோத்தி திரும்பும் வழியில் இங்கு வந்த ராமரை  சுகர் வணங்கினார். சுகரின்  வேண்டுகோளுக்கு இணங்கி ராமர் யோக ராமராக உடன் வந்த சீதை, லட்சுமணன், அனுமனுடன் அமர்ந்தார்.   சுகர் தந்த வேதச்சுவடியை அனுமன் வாசிக்க  அதன் பொருளை உபதேசித்தார். அனுமன் வாசிப்பில் மகிழ்ந்த ராமர்  முக்தோபநிஷத் என்னும் உபநிஷதத்தை அவருக்கு  உபதேசித்தார். மேலும் சுகரின் வேண்டுகோளை ஏற்ற ராமச்சந்திர மூர்த்தி நெடுங்குணத்தில் யோக ராமராகக் கோயில் கொண்டருளினார்.


மூன்றாவது யுகமான திரேதா யுகத்தில் வாழ்ந்த சுகர் அதற்கு முந்தைய யுகமான துவாபர யுகத்தில் வாழ்ந்த ராமரை சந்தித்தது எப்படி? சுகர்  சிவன்  அளித்த சுவடியின் பொருள் புரியாது திருமாலை வணங்க அவர் சுகருக்கு ஞானப்பார்வை அளித்து மேற்கண்ட நிகழ்வை நிகழ்த்தினார் என்று விளக்கம் கூறப்படுகிறது.


இவ்வூரின் சிறப்புகளைப் பற்றி விவரமான பதிவுகளின் சுட்டிகள் கீழே:

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு





கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

கூழமந்தல்