சீயமங்கலம் - அவனிபாஜன பல்லவேசுவரம் - 1 குடைவரையைச் சுற்றி

பயணம் 

விகாரி ஆண்டு ஆடி  மாதம் 30 ஆம் நாள் (15/08/2019) திருவண்ணாமலையில் இருந்து சீயமங்கலத்திற்கு ஸ்கூட்டரில் பயணம் செய்தேன். 59 கிமீ தூரம். அவலூர்பேட்டை, வளத்தி வழியாக. வழியில் இருந்த தாயனூர், மேல் மலையனூர், வளத்தி ஆகிய ஊர்களில் ஜீனாலயங்களையும், மேல் மலையனூர் அங்காள பரமேசுவரி ஆலயத்தையும் பார்த்து வழிபட்டுச்  சென்றேன். ஜீனாலயங்களில் யாகம் வளர்த்து பூநூல் மாற்றிக் கொண்டிருந்தனர். அன்று ஆவணி அவிட்டம் எனத்  தெரிந்தது. மேல் மலையனூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சீயமங்கலம் தேசூரை அடுத்த ஒரு சிறு கிராமம். சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. ஊரைத்  தாண்டி குடைவரை வளாகம். வளாக  வாசலில் விநாயகர் வரவேற்றார்.

வாயிற் பிள்ளையார் 

பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் (ஆட்சி காலம் கிபி 590 - 630) இந்தக் கோயிலைக் குடைவரையாக எடுத்தபோது அவனிபாஜன பல்லவேசுவரம் என்றுதான் பெயரிட்டார். அப்போது முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்ட பல்வேறு அரசர்களால் இந்தக் கோயில் தொடர்ந்து ஆதரிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. பிற்கால சோழர் காலத்திலிருந்து இன்று வரை இது தூணாண்டார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் பகுதியில் குடைவரையைத் தவிர்த்த கோயிலின் மற்ற பகுதிகளை சுற்றி பார்க்கலாம்.

உள்ளே நுழைந்தால் வடக்கு நோக்கிய நான்கு நிலை கோபுரம். இடது புறம் இரு திருமுன்கள் தெரிகின்றன. பாறை மேல் கோயிலின் விமானம். வலது புறம் கோபுரத்தை ஒட்டியவாறு மதில் சுவரும் ஒரு மண்டபத்தின் பின் சுவரும் உள்ளன. கோபுர வாயிலினுடாகத் தெரிவது கோயிலின் முன் மண்டபம்.

சீயமங்கலம் குகைக்கோயில் வளாகம் முன்புறம் 

கோபுரத்தின் உள்ளே அதன் மேற்குப் பக்கமாக  அமைந்த ஒரு மண்டபம் உள்ளது. அதன் உயர்ந்த தள கிழக்குப் பக்கத்தில் துணைத்தளம், பாதபந்த தாங்குதளம், வேதிகை அமைப்புகளையும், அவற்றின் உறுப்புகளையும் கொண்டுள்ளது.

மண்டபம் 

மண்டபம் முன்புறம் 

மண்டபத்தின் அழகிய தூண்கள் விஜயநகர காலத்தைக் சுட்டும் மாங்கனிப் போதிகைகள் பெற்று விளங்குகின்றன. சதுரங்கள் சிற்பங்கள், பதக்கங்கள், இலைக்கருக்குகள் உள்ளன. போதிகைகளும் கட்டுகளின் இடைப்பட்டைகளும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மண்டபத் தூண் 
மண்டபத் தூண் சிற்பங்களுள் சில:



மறுபக்கத்தில் இரு சிறிய திருமுன்கள் (சந்நிதிகள்) உள்ளன.

திருமுன் 1

திருமுன் 2

இரண்டாம் திருமுன்னின் சுவற்றில் ஒரு விநாயகர் சிற்பம் உள்ளது. அதை சுற்றி உள்ள கற்களில் இரு பக்க அணைவுத் தூண்களும் கூரையும் கொண்ட கோட்டம். வலது பக்கம் சங்கு ஊதியபடி ஒருவர். இடது பக்கம் ஒரு ஊர்வலம். குழல் ஊதியபடி  ஒருவரும் அவர் பின்னால்  சிதைந்துள்ள சிலரும், பின்னால் ஒரு காளையும் அழகாகச்  செதுக்கப்பட்டுள்ளன.

பிள்ளையார் கோயில் சிற்பம் 

கோயில் முன் நந்தி மண்டபமும், பலித்தளமும், அவற்றுக்கிடையே கொடிமரத்தின் தளமும் உள்ளன. பலித்தளத்தின் கண்டப் (

நந்தி மண்டபம், கொடிமரத் தளம், பலித்தளம் 

நந்தி முழுமையாகச் செதுக்கப்படவில்லை.

நந்தி 

மேற்கு நோக்கிய கோயில் முன்மண்டபம். தெற்கில் படிகள். ஏறிச் சென்றால் நேர் எதிரே ஒரு விநாயகர் சந்நிதி. அவரை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் செல்லத் திரும்பினேன். கதவு பூட்டப்பட்டிருந்தது.

முன் மண்டபம் 

அங்கிருந்த காவலர் அர்ச்சகர் இன்னும் தினப் பூஜை செய்ய வரவில்லை என்றார். அருகில் இருந்த அவர் வீட்டுக்குச் சென்றேன். பாலாஜி என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆவணி அவிட்ட தினமானதால் வர நேரமாகும் என்றார். அவர் வந்து கதவைத்  திறந்து பூஜைகளை ஆரம்பித்தபோது உட்கோயிலைச் சுற்றிப் பார்த்தேன்.

திருச்சுற்று மண்டபம் 

குடைவரை வெட்டப்பட்டுள்ள பாறையிலிருந்து உட்கோயிலை சுற்றி இருபுறமும் முன்னாலுமாக திருச்சுற்று மண்டபம் உள்ளது. அதைக்  கட்டியவர் சிவாந்தரின் மகளான திருநிலை அழகி என்ற தேவரடியார் (கல்வெட்டுக் குறிப்பு).*

திருநிலை அழகி கட்டிய மண்டபம் 


திருநிலை அழகி மண்டபத்தில் வாமனர் 

முன்றில்  

முன்றில்  மேடை வடக்கிலும் தெற்கிலும் படிகள் கொண்டுள்ளது.

மூன்றில் மேடை தென்புறம் உள்ள விநாயகரும் சண்டீசுவரரும் 

முன்றில் மேடை வடபுறம் உள்ள பைரவர் 

அடவி மண்டபம்

முன்றிலை அடுத்து குடைவரைக்கு முன்பாக உள்ளது 'அடவி மண்டபம்'.

அடவி மண்டபம் 

அடவி மண்டபத்தை பல்லவ அரசன் நந்திவர்மனின் ஆட்சியின்போது திருப்பாலையூர் தலைவரான அடவி என்பவரால் அவர் அன்னை நங்காணி நங்கைக்காக கட்டப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.*

அடவி மண்டபத்தில் உள்ள மரகதவல்லி அம்மன்
பிற்கால சோழர் காலம்*
அடவி மண்டபத்தைக் கடந்தால் எதிரே குடைவரை. அதைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.


நன்றிக்கடன் 

* மு நளினி, இரா கலைக்கோவன்; 'மகேந்திரர் குடைவரைகள்';அலமு பதிப்பகம்; முதல் பதிப்பு ; 2004




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்