மேலச்சேரி சிகாரி பல்லவேசுவரம்

பயணம்

விகாரி ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் நாள் (10/09/2019) அன்று சிங்கவரம், மேலச்சேரி, திருநாதர்குன்று ஆகிய இடங்களைக் காண திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டேன்.  செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் சாலையில் சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ளது சிங்கவரம். எங்கே சிங்கவரம் முடிகிறதோ அங்கிருந்து மேலச்சேரி தொடங்குகிறது. இடதுபுறம் உள்ள ஒரு மேல் நிலைத் தண்ணீர் தொட்டிக்கு அடுத்து இடப்புறம் பிரியும் ஒரு மண் சாலையில் ஒரு ஏரியைச் சுற்றிக் கொண்டு சுமார் 1/2 கிமீ சென்றால் ஒரு சிறு பாறையின் மீது தெரியும் முருகர் கோயில். அங்கே பிரியும் காங்கிரீட் சாலையில் மலையைச் சுற்றிக்கொண்டு பின்னால் போனால் 'சிகாரி பல்லவேசுவரம்'. அது கண்ணில் பட்டவுடன் பெருவியப்பு அடைந்தேன். நான் படித்தவற்றில், படங்களில் இருந்து எதிர்பார்த்தது ஒரு பாழடைந்தக் கோயிலை.

2016 இல் திரு சு. சுந்தரேசன் கண்டது. 
அவர் கண்ட கோயில் படத்தொகுப்பைக் காண இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்: 
வரலாறு,காம் -ஸ்ரீ சிகாரி பல்லவேசுவரம். 

நான் கண்டது:

விகாரி ஆடியில் ஸ்ரீ சிகாரிபல்லவேசுவரம் 1
விகாரி ஆடியில் ஸ்ரீ சிகாரிபல்லவேசுவரம் 2

பாறையின் மீது கருவறைக்கு மேலாக சிங்கவரத்தில் கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு முறையான விமானம் கட்டப்பட்டுள்ளது நிறைவைத் தந்தது.

பாழடைந்த மண்டபத்தைப் பிரித்து அதைக்கொண்டு கோயில் முன் மண்டபத்தில் அழகாக சேர்த்துள்ளார்கள். விலகி இருந்த இரு திருமுன்களையும் கோயில் முன் நந்திக்குப் பின் நிறுவி இருக்கிறார்கள். இன்னும்  புனர்நிர்மாண வேலை முடியவில்லை.

குடைவரை அமைப்பு 

குடைவரை மேற்கு நோக்கியது. நான்கு தூண்கள் கொண்ட ஓரே ஒரு வரிசைத் தூண்களும் பின் சுவர் கருவறையும் கொண்ட எளிய குடைவரை. நடுவில் இரு முழுத் தூண்கள்.  பக்கத்தில் சுவரை ஒட்டி அரைத் தூண்கள். எல்லாத்  தூண்களும் முழுதும் சதுரமானவை. தூண்களின் மீது விரிகோண போதிகை. அதன் மீது உத்திரம். மேலே சற்றே வெளிநீட்டி இருக்கும் மெல்லிய போதிகை. அதன் மீது கபோதம். இந்த உறுப்புகள் அனைத்தும் எந்த சிற்ப செதுக்கலும் அற்றவை.

தூண்கள் 

சுவருக்கும் தூண் வரிசைக்கும்  இடையே உள்ள இடத்தை அர்த்த மண்டபமாக கொள்ளலாம். இதன் வடக்கு சுவரில் பாறையைக் குடைந்து பிரிஹந்நாயகி அம்மன் சிலை பிற்காலத்தில் வெட்டப்பட்டுள்ளது.

பிருஹந்நாயகி

வலது கையில் தாமரை ஏந்தி இடது கையை நெகிழ்  கரமாக (டோல  ஹஸ்தம்) தொங்கவிட்டுள்ளாள். கிரீட மகுடம் தரித்து கழுத்தணிகள், தோள்  மாலை, தோள் வளை, கை வளை, குரங்கு செறி, சிலம்பு, கால் வளை ஆகியன அணிந்து, கணுக்கால் வரையான ஆடை உடுத்துள்ள அழகிய உருவம் (14 ஆம் நூற்றாண்டு).

பிருஹந்நாயகி
நன்றி; வரலாறு.காம் 

கருவறைக்கு இருபுறமும் மேடைகள். தென்புற மேடையில் வள்ளி, தெய்வானை உடனான முருகர் கற் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.

வள்ளி, முருகர், தெய்வானை,

வடபுற மேடையின் கீழ் திருப்பணி முடிய சிறிய கடவுளர் திருமேனிகள் காத்திருக்கின்றன.


கருவறை  

பின்சுவரில் கருவறை வெட்டப்பட்டுள்ளது. இறைவன் மத்திலீசுவரர்  என  அழைக்கப்படுகிறார். 

மத்திலீசுவரர் 

ஆவுடையார் ஜகதி, உருள் குமுதம், கம்பு, பாதங்களுடன் ஆன கண்டம், கம்பு, பட்டிகை என பாதபந்த தாங்குதள அமைப்புடன்  திகழ்கிறது. லிங்க பாணம் அதன் மீது அமைந்துள்ளது. கூரையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு தாமரை சிதைந்துள்ளது. லிங்கம் தாய்ப் பாறையிலிருந்தே வெட்டப்பட்டுள்ளது. தாய்ப் பாறை லிங்கமும் கூரைத் தாமரையும் தமிழகத்தில் சித்தன்னவாசல் குடைவரை தவிர வேறு எங்கும் இல்லாதது, என்கின்றனர் முனைவர்கள் மு நளினியும் இரா கலைக்கோவனும். சித்தன்னவாசலில் தாய்ப்பாறை லிங்கம் தரைமட்டமாக்கப்பட்டு சுவடுகளே எஞ்சியுள்ளன என்று மேலும் கூறுகின்றனர்.

தாய்ப்  பாறை லிங்கமும் கூரைத் தாமரையும்
நன்றி: வரலாறு.காம்  
விநாயகர் 

விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ள கற் பலகை ஒன்று குடைவரை முகப்பிற்கு முன்பு தெற்கு சுவரில் சாய்த்துவைக்கப்பட்டுள்ளது (14-15 ஆம் நூற்றாண்டு). முன்னர் இது தற்சமயம் அகற்றப்பட்டுவிட்ட செங்கல் சுவரில் பதிக்கப்பட்டு இருந்தது.

விநாயகர் கற்பலகை 

புதிய மண்டபம் 

அழிவிலிருந்த பழைய மண்டபங்களின் தூண்  முதலான உறுப்புகளைக்  கொண்டு தற்போது புதிய மண்டபம் ஒன்று குடைவரையோடு இணைந்தபடி அதன் முன்னால் கட்டப்பட்டுள்ளது. ஆறு வரிசை தூண்கள். 

மண்டபம் முன்னிருந்து மூன்றாம் வரிசைத் தூண்களால் இரு பாகங்களாகப்  பிரிக்கப்பட்டிருக்கிறது. நுழைவாசல் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் கைப்பிடி சுவராலும் பின்பக்கம் முழு உயர சுவர்களாலும் மூடப்பட்டுள்ளன.

குடைவரைக்கு முன்  இணைக்கப்பட்டுள்ள மண்டபம் 

குடைவரையின் முகப்பில் இருந்து சரிந்து முன்வரும் பாறைச் சுவரோடு இணைந்துள்ளன பக்கச் சுவர்கள் . 

பாறையும்  சுவரும் இணைப்பு 
நந்தி 

இடிந்துவிட்ட நந்தி மண்டபம் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. சோழர் கால நந்தியின் கழுத்தில் கயிற்று மாலை, இரு சதங்கை மாலைகள்  உள்ளன.,  கீழ் சதங்கை  மாலையிலிருந்து ஒரு வளைந்த தந்தம் தொங்குகிறது. நந்திக்கு முன் ஒரு லிங்கம்  செதுக்கப்பட்டிருப்பது மிகவும் தனித்தன்மை உடையது. பின்புறம் நந்தியின் வால் சற்று சிதைந்துள்ளது.

சோழகால நந்தி லிங்கத்துடன்

திருமுன்கள் 

பாழடைந்திருந்த இரு திருமுன்கள் நந்தியின் பின்னால் குடைவரையை நோக்கியவாறு மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.  கூரை வரை கல் கட்டுமானம். அதன்மேல் செங்கல் பணி.

தெற்குத் திருமுன் 

வடக்குத் திருமுன் 

நீராழி மண்டபம்

குடைவரைக்கு எதிரிலுள்ள எரிக் கரையில் ஒரு நாற்கால் நீராழி மண்டபம் உள்ளது. எளிய தாங்குதளம். 3 சதுரம் 2 கட்டு தூண்கள். வெட்டுப் போதிகை, உத்திரம், வாஜனம், வலபி, வளைந்திறங்கும் கபோதம், கூரை வரை கல் கட்டுமானம். அதன்மேல் செங்கல் சுதைக் கட்டுமானம் - மாடங்களால்அமைந்த வேதிகை, வேசர (வட்ட வடிவ) கிரீவம், சிகரம். 

நீராழி மண்டபம்

கல்வெட்டு 

வட நடுத்தூணின் மேற்கு முகத்தின் மேல் பகுதியில் உள்ளது குடைவரையைப் பற்றிய வடமொழி பல்லவ கிரந்த கல்வெட்டு.
கல்வெட்டு 

"சர்வநாதனான அரசர் சந்திராதித்யர்  சிம்ஹபுரத்தில் ஸ்ரீ சிகாரி  பல்லவேசுவரம் எனும் இறையகத்தை எழுப்பினார்." யார் இந்த சந்திராதித்யர் என்று தெரியவில்லை.

தூண் சிற்பங்கள் 

சில தூண்களில் மட்டுமே சிற்பங்கள்உள்ளன. அவை பெரும்பாலும் வைணவ சிற்பங்கள். சிவன் கோயில்களில் திருமால், அவரது அவதாரங்களின் தூண் சிற்பங்கள் உள்ளதுதான் . ஆனால் நாமமும் ஆழியும் கண்டு வியப்படைந்தேன்.

ஆழி 

நாமம் 

யோக நரசிம்மர் 

நிறைவாக, குன்றின் உச்சியில் உள்ள முருகர் கோயிலில் இருந்து மேலச்சேரி ஸ்ரீ  சிகாரி பல்லவேசுவரக் காட்சி:

மேலச்சேரி  ஸ்ரீ சிகாரி பல்லவேசுவரம் 
இரண்டாம் முறை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் மரபு நடை 8 இல் பங்கேற்று 19/01/20 அன்று சென்றபோது குடமுழுக்கு முடிந்து கோயில் புதுப் பொலிவுடன் முழு வழிபாட்டில் இருந்தது.

2020 ஜனவரி 

விளக்குத் தூண் 

நன்றிக்  கடன் 

1. மு நளினி, இரா கலைக்கோவன்; 'மகேந்திரர் குடைவரைகள்'; முதல் பதிப்பு; 2004 
இந்த குடைவைரையை நுணுக்கமாக கண்டறிய பெருந்துணை புரிந்து, ஆய்வுத் தகவல்களை  பதிவில் அளிக்க உதவிய நூல்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்