சீயமங்கலம் - அவனிபாஜன பல்லவேசுவரம் - 2 - குடைவரை

முதல் பகுதியில் குடைவரையைத் தவிர்த்த கோயிலின் மற்ற பகுதிகளைப் பார்த்தோம். இப்பகுதியில் குடைவரையை விரிவாகப் பார்க்கலாம்.

சிறப்பு*
  1. பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் (ஆட்சி காலம் கிபி 590 - 630) எடுத்த குடைவரைக் கோயில்களுள் ஒன்று.
  2. தமிழகத்தில் குடைவரைத் தூண்களின் சதுரங்களில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்த முதல் இடம்.
  3. தமிழகத்தின் முதல் ஆடலரசன் சிற்பம் பெற்ற கோயில்.
  4. முதல் நந்தி உருவம்.
  5. 7 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்ட பல்வேறு அரசர்களால் தொடர்ந்து ஆதரிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது.
  6. மேற்கண்ட 10 நுற்றாண்டுகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை தரும் 35 கல்வெட்டுகளைக் கொண்டிருக்கிறது.
குடைவரை 

மகேந்திரரது ஏழு குடைவரைகளில் மேற்கு நோக்கிய ஒரே குடைவரை.

இரு வரிசைத் தூண்கள். ஒவ்வொரு வரிசையிலும் நான்கு தூண்கள். இரு வரிசைகளிலும் நடுவில் இரு முழுத்தூண்கள். (தனித்து நிற்பவை) இருபக்கங்களிலும் ஒவ்வொரு அரைத்தூண் (சுவரோடு ஒட்டி வெளிநீட்டிக்கொண்டிருப்பவை). நான்கு தூண்களுக்கு இடையே மூன்று திறப்புகள் (அங்கணங்கள்). அரைத்தூண்களுக்குப் வெளிப்புறத்தில் வெட்டப்பட்டுள்ள கோட்டங்கள். அவற்றில் போர்வீரர்கள்  சிற்பங்கள். 

முழுத்தூண்கள் நான்கும்,  முகப்பு வரிசையின் இரண்டு உள் அரைத் தூண்களும், 'சதுரம், கட்டு, சதுரம்' என்ற அமைப்பைக் கொண்டுள்ளன. தூண்களின் மேல் போதிகை, அதன் மேல் உத்திரம், வாஜனம்.

முகப்பு வரிசை நடுத் தூணும் பக்க அரைத் தூணும்
முகப்புத் தூண்களின் போதிகைகள் சிறு நீள் உருளைகளாக வெட்டி அணிசெய்யப்பட்டு தரங்க போதிகைகள் ஆக விளங்குகின்றன. நடுவில் பட்டை உள்ளது. பின் வரிசை தூண்களின் போதிகைகள் தரங்கம் இன்றி கால் வட்ட அமைப்பைக் கொண்டுள்ளன. 

பின் வரிசை பக்க அரைத் தூண்
தூண் சிற்பங்கள் 

பின் வரிசைத் தூண்கள் சிற்பங்கள் ஏதும்  இன்றி வெறுமையாக உள்ளன. முன்புறத் தூண்களின் சதுரங்கள் பின் பக்கம் தவிர மற்ற பக்கங்களில் சிற்பங்கள் அல்லது பதக்கங்கள் பெற்றுள்ளன. 

கீழ் சதுரங்கள் 
சதுர வடிவத்  தாமரைப் பதக்கங்கள்:

சதுரத் தாமரை பதக்கம் 

முழுத்தூண்களின் மேல் சதுரங்களின் பக்க முகங்களில் சதுர இலைக்கருக்கு உள்ளது.:

முழுத்தூண் மேல் சதுர பக்க முகம் 

தூண்  புடைப்புச் சிற்பங்கள் 

தமிழகத்தில் தூண்களின் சதுரங்களில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்த முதல் குடைவரை இதுதான்..

 1. இரு முழுத்தூண்களின் முன்பக்கத்தில் சிங்கச் சிற்பங்கள்:

வடக்குத் தூண் மேற்சதுர முன்முகம் தெற்குத் தூண்  மேற்சதுர முன்முகம் 

2. அரைத்தூண்களின் முன்முகப்பில்  பெண் உருவங்கள்:

இருவரும் முகம் முன்னோக்கியிருக்க உடலை உள்பக்கம் திருப்பி  ஒரு கையில் பூ ஏந்தி உள்ளார்கள். தெற்குப் பெண் மற்ற கையை இடையில் வைத்திருக்க வடக்குப் பெண் ஒரு பூக்கூடையை ஏந்தி  இருக்கிறார்.* இருவரும் பக்கத்தில் உள்ள இறை உருவங்களை வணங்குவதாகக் கொள்ளலாம். 

வடக்கு அரைத்தூணின் முன்முகம் தெற்கு அரைத்தூணின் முன்முகம் 

3. தெற்கு அரைத் தூணின் பக்க முகத்தில் ஆடலரசன் சிற்பம் 

இதுவே தமிழகத்தின் முதல் ஆடலரசன் சிற்பம். 

ஆடலரசன் 

ஜடா மகுடம். அதில் பிறைநிலா. விரிசடை. ஒயிலாக இடது புறம் சாய்ந்த தலை. நெற்றிக்கண். இரு காதுகளிலும் பனையோலைக்  குண்டலங்கள். கழுத்தில் சவடி* . மார்பில் முப்புரிநூல். இடையில் உதரபந்தம். தோளில் தொங்கும் சில முடி கற்றைகள்.  தோள்வளை. 4 கரங்களிலும் கைக்கு இரண்டு வளைகள்.

வலது மேல் கரம்  தீ  அகல் ஏந்த, இடது மேல் கரம் மழுவைப் பற்றியுள்ளது. வலது கீழ்க் கை அபயம் காட்ட, இடது கீழ்க் கரம் தளிர் கரமாய் (டோல ஹஸ்தமாய்) தொங்குகிறது. வலது கால் மடங்கி தரையில் பக்கவாட்டில் ஊன்றியிருக்க, இடது கால் இடது புறமாய் உயர்ந்து தூக்கியாய் திருவடியாய் உள்ளது.

கால் பக்கத்தில் ஒரு கணம் முக்காலி மீது அமர்ந்து மத்தளம் வாசிக்கிறது. இன்னொரு கணம் வலது புறம் தூக்கிய திருவடிக்கு மேல் கைகூப்பி அஞ்சலி செலுத்துகிறது.

ஒரு நாகம்  படம் விரித்துக்  கொத்த ஆயத்தமாக உள்ளது. அதன் வால் நுனி சட்டகத்துக்கு வெளியே சற்றே கீழ் நீண்டிருப்பது தனி அழகு. அதைத் தவிர சட்டகத்துக்கு வெளியே நீண்டிருப்பது சிவனின் மகுடம்தான்! இந்த நாகம் கார்க்கோடகன் என்றும், இந்த சிவ நடனம் புஜங்கத்ராசிதம் என்றும் சகளாதிகாரத்தின் அடிப்படையில் நிறுவுகின்றனர் முனைவர்கள் மு நளினியும், இரா கலைக்கோவனும்.* புஜங்கத்ராசிதம் என்றால் ஒரு நாகத்தை கால் அருகே கண்டால் ,  வெடுக்கென காலை தூக்குவது போன்ற அபிநயத்தை குறிக்கும். அதை குறிப்பதாகவே ஆடல்வல்லானின் காலருகே நாகம் சித்திரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுவர்

சிவனின் வலது கை தீயகல் தாங்குவதும், இடது கை  மழு கொண்டிருப்பதும், காலின் கீழ் முயலகன் இல்லாதிருப்பதும், கொத்தவரும் நாகமும், இடது கரம் நெகிழ்  கையாக  இருப்பதும்  கவனிக்கத்தக்கது.

4. வடக்கு அரைத் தூணின் பக்க முகத்தில் நந்தியுடன் சிவ உமை சிற்பம்

நந்தியோடு சிவன் உமை 

சிவன்
வலது புறம் சாய்ந்த தலை, இடது புறம் நந்தி பக்கம் சாய்ந்த உடல், வலக்கால் நேராய் பாதம் பக்கம் பார்க்க (பார்சுவம்), இடக்கால் வளைந்து பாதம் நேராய் (சமபாதம்) இருக்கிறார் சிவன்.

வலது முன் கரம்  தொடைமேல் இருத்தி, இடது முழங்கையை நந்தியின் நெற்றி மேல் வைத்து கை இடது தொடை அருகே தொங்குகிறது. பின் வலக் கரம் மானையும், பின் இடக்கரம் அக்க மாலையும் ஏந்தியுள்ளன. சிவனின் பின்னால் ஒரு முச்சூலம் தெரிகிறது.

இரு காதுகளிலும் பனையோலைக்  குண்டலங்கள். கழுத்தில் சரப்பளி. மார்பில் முப்புரிநூல். இடையில் உதரபந்தம். தோள்வளை. 4 கரங்களிலும் கைக்கு இரண்டு வளைகள். தொடையில் பாதி வரை நிற்கும் இடையாடை. தொடைகள் இடையே தொங்கும் இடைக்கச்சு முடிச்சு.

உமை
இடப்புறம் உமை மரநிழலில் சற்றே சிவன் பக்கம் திரும்பி நின்றிருக்கிறார். இடக் கை தொடைமேல் இருக்க,  வலக்கரம் மடங்கி கை கன்னம் அருகே உள்ளது.

கரண்ட மகுடம். சடைப்பின்னல் தலையின் இடது புறம் தொங்குகிறது. இடச்செவியில் பனையோலைக் குண்டலம். வலச்செவி வெறுமையாய் உள்ளது.* கழுத்தில் இரு ஆரங்கள்.* இரு கை வளைகள். மேல் தொடைவரை உள்ள இடையாடை. உமையின் இடது கையின் கீழே விரிந்த தலை கொண்ட தடி போன்ற அமைப்பு. இது மிக மெல்லிய இடையாடையின் கொசுவம் என்கின்றனர் முனைவர்கள் மு நளினியும், இரா கலைக்கோவனும்.*

இருவருக்கும் இடையில் தலை நீட்டி உமையின் பின்னால் நின்றிருக்கும் நந்தி.

வாயிற்காவலர்கள் 

முகப்பு வரிசைத் தூண்களின் வெளிப்புறம் இருபக்கமும் வெளித் தள்ளியவாறு பாறையில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரு வீரர்கள்.

வடக்கு வீரர் தெற்கு வீரர் 

கோட்டங்கள் 
கோட்டங்களின் இருபுறமும் அணைவுத் தூண்களும், மேலே மகர தோரணம் தாங்கிய உத்திரமும், கீழே தளமும் அமைந்துள்ளன.

நான்முக அணைவுத் தூண்கள் பாதம், கால், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை ஆகிய உறுப்புகளோடு திகழ்கின்றன. 

மகரத் தோரணம்
அணைவுத் தூண்களின் மேல் உத்திரத்தின் முன்புறம் செதுக்கப்பட்டுள்ள அழகிய மகர தோரணம் தளவானூர் சத்ருமல்லேஸ்வரத்தில் முகப்பு முழுத்  தூண்களுக்கு மேல் அமைந்துள்ள மகர தோரணத்தை நினைவுபடுத்துகிறது.

மகர தோரணம் 

அணைவுத்  தூண்களின் மேல் ஒன்றை ஒன்று நோக்கியவாறு அமர்ந்திருக்கும் இரு மகரங்கள். அவற்றின் மீது கணங்கள். மேலுயர்ந்து சுருண்ட துதிக்கைகள்,. பின்னால் கண். அகன்று திறந்த வாய். மேல் தாடையில் பற்கள். நீட்டிய நாக்கு. விரிந்தும் சுருண்டும் உள்ள தோகை. இருபுற மகரங்களின் வாய்களிலிருந்து வெளிவரும் கொடிக்கருக்கு கத்தைகள் நடுவில் சந்திக்கின்றன. 

மகர தோரணத்தில் ஸ்ரீவத்சம்
நடுவில் ஒரு தாமரை இருக்கை. தாமரை இருக்கையின் கீழ் அதைத் தாங்குவது போல அலங்கரிக்கப்பட்ட அரை உருளை வடிவம். அதன் இருபுறமும் அரைப் பதக்கங்கள். தாமரை இருக்கையின் மேல் திருமகளின் குறியீடான ஸ்ரீவத்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகர தோரணத்தில் தாமரை இருக்கை மீது ஸ்ரீவத்சம்

வீரர்கள் 
வீரர்கள் வலது கையில் வாளும் இடது கையில் கேடயமும் ஏந்தி போரிடும் கோலத்தில் உள்ளனர். இவர்கள் வலது கையில் இருப்பது வாள் அல்ல தடி என்றும், அவர்கள் அமலை ஆடுகின்றனர் என்றும் கருதுகின்றனர் முனைவர்கள் மு நளினியும், இரா கலைக்கோவனும்.* (களிற்றோடு பட்ட பகை வேந்தனைச்  சுற்றி அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலை - தொல்காப்பியர்#.)

கருவரைக்  காவலர்கள் 


கருவறைக் காவலர் கோட்டங்களுக்கு கீழ் உள்ள பகுதி பாதபந்த தாங்குதளமாக - உபானம், ஜகதி, குமுதம், கம்பு, பாதங்களுடன் கூடிய கண்டம், கம்பு, பட்டிகை, துணைக்கம்பு ஆகிய உறுப்புகளுடன் அமைந்துள்ளது. கோட்டங்களின்  இருபுறமும் உறுப்புகளற்ற நான்முக அரைத்தூண்கள் உள்ளன. அவற்றின் மேல் உத்திரம், வாஜனம், கபோதகம் உள்ளன, இவை கருவறை மேல் நீள்கின்றன.

வடக்குக்  கருவறைக் காவலர்
தெற்குக் கருவறைக் காவலர்

தெற்குக் கருவறைக் காவலர்
நேர் நோக்கு. கதை மீது மடித்த இடது கையை ஊன்றி அதன் பக்கத்தில் வலது கையை தொங்கவிட்டிருக்கிறார். இடது கால் நேராக இருக்க வலது காலை மடித்து வலப்புறமாக கருவறைப் பக்கம் சாய்ந்திருக்கிறார்.

முன் பதக்கமுடைய கிரீட மகுடம். தலை பக்கத்தில் விரியும் தலைமுடி. கழுத்தில் சரப்பளி. தோள் வளை, கை வளை, முப்புரி நூல், உதர பந்தம், இடைக்கச்சு அதன் முடிச்சுடன், முழங்கால் வரையான இடையாடை. இடையில் உறையிலிட்ட ஒரு குத்துவாள்.

வடக்குக் கருவறைக் காவலர்
நேர் நோக்கு. கதை மீது இட முழங்கையை ஊன்றி கடக முத்திரை காட்டுகிறார். வலது கை தொடைமீது உள்ளது. வலது கால் நேராக இருக்க இடது காலை மடித்து இடப்புறமாக சாய்ந்திருக்கிறார். தலைக்கு நேர் மேலே ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்றுமாக மூன்று முனைகள் தெரிகின்றன. இதை முச்சூலம் என்று கொண்டு இவ்வாயிற்காவலர் சூலதேவர் என்று கருதுகின்றனர் முனைவர்கள் மு நளினியும் இரா கலைக்கோவனும்.*

கருவறை

கருவறைக்கு ஒரு அரை வட்ட முதல் படியும் அதற்கு அடுத்து இரு படிகளும் உள்ளன. லிங்கம் பிற்காலத்தது. தற்போது தூணாண்டார் என் அழைக்கின்றனர்.

கல்வெட்டுகள்* 

இந்த கோயில் வளாகத்தில் 35 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை 7 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்ட பல்வேறு பேரசர்கள், சிற்றரசர்கள் இக்கோயிலைத் தொடர்ந்து ஆதரித்து விரிவாக்கியதை தெரிவிக்கிறது. அக்கால ஊர்ப்பெயர்கள், வருவாய்ப் பிரிவுகள், ஊரவை, வரிகள், உழவு, நீர்ப்பாசனம், அளவைகள், நாணயம், வழிபாடு, விளக்கறம் முதலியன பற்றிய செய்திகளையும் குறிக்கின்றன. குடைவரை மண்டபத்தில் உள்ள மூன்று கல்வெட்டுகள்:

தென் முழுத்தூணின் முன்பக்கம் உள்ள மகேந்திரர் கல்வெட்டு, அவனிபாஜன பல்லவேசுவரம் எனும் இக்கோயில் லலிதாங்குரனால் நற்செயல்கள் எனும் நகைகளை அடக்கிய நகைப்பெட்டியென எடுக்கப்பட்டது எனத்  தெரிவிக்கிறது.

மகேந்திரர் கல்வெட்டு 

நந்திவர்மர் கல்வெட்டு 

தந்திவர்மன் கல்வெட்டு 

தந்திவர்மர் கல்வெட்டு சீயமங்கலம் பேரேரி அவர் காலத்தே இருந்ததைக் கூறுகிறது.


நன்றிக்கடன் 

* மு நளினி, இரா கலைக்கோவன்; 'மகேந்திரர் குடைவரைகள்';அலமு பதிப்பகம்; முதல் பதிப்பு ; 2004

http://www.tamilvu.org/courses/degree/d021/d0214/html/d0214116.htm

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்