சீயமங்கலம் - சமண பாறைச் சிற்பம்

வரலாறும் சிறப்பும் 
  • அமர்ந்த நிலை தீர்த்தங்கரர் ஒருவர், பார்சுவநாதர்  மற்றும் பாகுபலி ஆகியோரது பாறைச் சிற்பத் தொகுதி இங்கு உள்ளது.
  • சமண முனிவர்கள் தங்கியதாகக் கூறப்படும் குகைகள் உள்ளன.
  • இங்குள்ள பாறையில் உள்ள கல்வெட்டு மேற்குக் கங்க மன்னன் இரண்டாம் ராஜமல்லன் வித்யாத்ரி மலையில் ஜீனராஜாவுக்காக சக  ஆண்டு 815 (கிபி 892-93) இல் இரு ஆலயங்களை நிர்மாணித்ததாக தெரிவிக்கிறது. 

பயணம் 

விகாரி  ஆண்டு ஆடி  மாதம் 30 ஆம் நாள் (15/08/2019) சீயமங்கலத்திற்கு பயணம் செய்தேன். அவனிபாஜன பல்லவேசுவராலய குடைவரையை கண்டபின் எதிரிலிருந்த சமணர் குன்றுக்குச் சென்றேன். 

வழிகாட்டிக் கல் 

குடைவரை வளாகத்தின் எதிரில் உள்ள சாலையில் அருகிலேயே சாலையின்  இடதுபுறம் உள்ளது இக்குன்று. ஏற படிகள் (54) உள்ளன.

படிகள் 

படிகள் முடியும் இடத்தில் நேர் எதிரே உள்ள பாறையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 2012 இல் இருந்த பாதை:

பழைய பாதை (2012)
நன்றி: விக்கிமீடியா


பாறைச் சிற்பம் 

நன்றி: https://commons.wikimedia.org/wiki/File:Seeyamangalam_Jain_image.JPG

இந்த சிற்பம் மூன்று பகுதிகளாக மூன்று திருவுருவங்களைக் காட்டுகிறது.
  1. இருந்த நிலை தீர்த்தங்கரர் ஒருவர் 
  2. பார்சுவநாதர் 
  3. பாகுபலி 
நிலை 

திருமால் நின்ற, இருந்த (அமர்ந்த), கிடந்த என்ற மூன்று நிலைகளில் காட்சி தருவார். புத்தரும் அவ்வாறே. சமண தீர்த்தங்கரர்கள், முனிவர்கள் நின்ற மற்றும் அமர்ந்த என்ற இரு நிலைகளிலேயே சித்தரிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒருவர் அமர்ந்த நிலையிலும் மற்ற இருவர் நின்ற நிலையிலும் காட்சி  தருகின்றனர்.

தீர்த்தங்கரர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் திருவடிவங்கள்  ஒன்றே போல் இருக்கும். 
  • பத்மாசனமாக அமர்ந்த நிலையில் வலது கையை இடது கைமீது வைத்திருப்பர்.
  • நின்ற நிலையில் இரு கைகளும் உடலைத்  தொடாமல் தொங்கிக் கொண்டிருக்கும். (காயோத்சர்க்கம்)
  • இரு நிலைகளிலும் கண்களை மூடி தியானத்தில் இருப்பர். 
  • மார்பில் ஸ்ரீவத்சம் எனும் திருமரு காணப்படும்.
  • தலைக்கு மேல் 'முக்குடை' இருக்கும்.

லாஞ்சனம் 

ஒன்றே போல் உள்ள தீர்த்தங்கரர்களை அவர்கள் அமர்ந்துள்ள பீடத்தில் உள்ள அவர்களது 'லாஞ்சனம்' என்னும் குறியீட்டைக் கொண்டே அடையாளம் காண இயலும். லாஞ்சனங்களில் பெரும்பான்மையானவை காளை, சிங்கம் முதலிய விலங்குகள். ஆனால், இந்து கடவுளர்களைப் போல் இவை வாகனங்கள் அல்ல, குறியீடுகள் மட்டுமே. சங்கு, கலசம் போன்ற சில பொருட்களும் லாஞ்சனமாக உள்ளன.

யட்சன், யட்சி 

ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் காவலாக ஒரு யட்சனும் ஒரு யட்சியும் உண்டு. பொதுவாக தீர்த்தங்கரருக்கு வலது பக்கம் யட்சனும் இடது பக்கம் யட்சியும் இருப்பார்கள்.

இந்த பொதுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மூவர் சிற்பங்களையும் காண்போம்.

அமர்ந்த நிலை தீர்த்தங்கரர் 

மகாவீரர்
நன்றி: https://commons.wikimedia.org/wiki/File:Seeyamangalam_Jain_image.JPG 

இடது பக்கம் அமர்ந்த நிலையில் ஒரு தீர்த்தங்கரர். அவர் அமர்ந்துள்ள ஆசனத்தின் முன்பக்கம் முன்நோக்கிய மூன்று சிங்கங்கள் உள்ளன. சிங்கம் மகாவீரரது லாஞ்சனம். ஆனால், ஒற்றைச் சிங்கம் பக்கவாட்டில் இருந்தால் மட்டுமே அதை லாஞ்சனமாகக் கொள்ளமுடியும். முன்நோக்கிய சிங்கம் அல்லது சிங்கங்கள் ஆசனத்தோடு தொடர்புடைவை. ஆசனத்தைத் தாங்கிப்பிடிப்பவை போன்று அமைக்கப்பட்டுள்ளவை. இவ்வகை ஆசனமே சிம்மாசனம் எனப்படுகிறது. பின்புறம் ஆசனத்தின் முதுகுப்பகுதி காட்டப்பட்டுள்ளது.அதன் முன்பக்கங்கள் நாகத் தலைகள் போன்ற கைகளாக நீண்டுள்ளன. அவற்றை நின்ற நிலை சிம்மங்கள்  தாங்கியுள்ளன. எல்லா தீர்த்தங்கரர்களுமே சிம்மாசனம் மீது அமர்ந்திருக்கலாம். (ஒப்பிடுக: திறக்கோயில் பாறை சிற்பங்கள்:

அவர் தலை மீது அரை வட்ட பிரபை . அதன் மேல் முக்குடை. இருபுறமும் சாமரம் ஏந்திய அவரது யட்சர்கள்.

இவ்வடையாளங்களைக் கொண்டு தீர்த்தங்கரரின் பெயரைக் கண்டடைவது முடியாது. பல இணைய தளங்கள் இவரை மகாவீரர் என அடையாளப்படுத்துவதன் அடிப்படை தெரியவில்லை.

திரு ஆர் விஜயன் அவர்கள் இந்த தீர்த்தங்கரரை நேமிநாதர் என அடையாளம் காண்கிறார். தமிழகத்தில் பார்சுவர் சிலை உள்ள இடங்களில் எல்லாம் நேமிநாதரின் சிலையும் உண்டு என்று கூறி திருமலை, சித்தாமூர், வள்ளிமலை, பேச்சிப்பள்ளம் ஆகிய இடங்களை உதாரணமாகச் சுட்டுகிறார். மேலும், ஆசனத்தில் சிங்கம் அல்லது சிங்கங்களை சிம்மாசனமாக பொறிப்பது 10 ஆம் நூற்றாண்டில் துவங்கியது என்றும் 14 நூற்றாண்டு முதல்தான் தீர்த்தங்கரர்களை அடையாளம் காட்டும்  லாஞ்சனங்கள் சிற்பங்களில் இடம் பெறத் துவங்கின என்றும் கூறுகிறார். (திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு;   முதற் பதிப்பு; 2011; பக்கம் 144-145. 

பார்சுவநாதர் 

பார் சுவநாதரின் தவம்
நன்றி: 
https://commons.wikimedia.org/wiki/File:Seeyamangalam_Jain_image.JPG

24 தீர்த்தங்கரர்களுக்குள் எளிதில் அடையாளம் காணமுடிபவர் 23 வது தீர்த்தங்கரரான பார்சுவநாதர். அவர் தலைக்குப் பின்னால்  ஐந்து அல்லது ஏழு தலை நாகம் படம் விரித்து நிற்பதே காரணம். இங்கே ஐந்து தலை.நாகத்தின் உடல் வலக்கர பக்கம் சுருண்டு இடக்கர பக்கம் வந்து கீழ்ச்செல்கிறது. இது அவரது யட்சனான தார்னேந்திரன். அவரது இடப்பக்கம் யட்சிணி பத்மாவதி. தனி வழிபாட்டுச் சிறப்பு பெற்ற சில யட்சிணிகளுள் ஒருவர்.

இது ஒரு இயங்குநிலை சிற்பம். அது சொல்லும் கதையை புரிந்துகொள்ள பார்சுவநாதரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய அறிதல் தேவைப்படுகிறது. 24 ஆம் தீர்த்தங்கரரான மகாவீரர் (கிமு 599 - 527) புத்தரின் சமகாலத்தவர்.  பார்சுவநாதர் அவருக்கு 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் (கி மு 872 - 772). வாராணசி அரச குடும்பத்தில் அரசர் அஷ்வசேனருக்கும் அரசி வாமதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். இளம் வயது முதலே ஆன்மிக ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் இளவரசனாக இருந்தபோது காமதன் என்ற முனிவர் பஞ்சாக்கினி தவம் செய்துகொண்டிருந்தார். மக்கள் அவரை தரிசிக்கக் கூடியிருந்தனர். அங்கு சென்ற இளவரசர் பார்சுவர் தீயில் உயிர்கள் மாய்ந்து கொண்டிருக்கின்றன, எனவே யாகத்தை நிறுத்தவேண்டும் என்று கூறினார். காமதன் அதை மறுத்தார். பார்சுவர் எரிந்து கொண்டிருந்த ஒரு மரக்கட்டையை எடுத்து அதை பிளக்க உள்ளே ஒரு ஆண் நாகமும் ஒரு பெண் நாகமும் கருகிய நிலையில் குற்றுயிராக வெளிவந்தன. அவற்றைக் காப்பாற்ற இயலவில்லை என்றாலும் பார்சுவர் மந்திர உச்சாடனம் மூலம் அவை அமைதியாய் உயிர் துறக்க வழி செய்தார். காமதன் தவம் குலைந்தது. அவர் மக்கள் முன் அவமானம் அடைந்தார்.

காட்சிகள் மாறுகின்றன. இறந்த ஆண் நாகம் மறுபிறவியில் தர்ணேந்திரன் என்ற பெயருடன் இந்திரனாகிறான். பெண் நாகம் பத்மாவதி என்ற பெயருடன் அவன் மனைவியாகிறாள். இடையில் இறந்த காமதன் மறுபிறவியில் மேகமாலி என்ற தேவனாகிறான். அவனிடம் ஒரு பறக்கும் தெய்வீக விமானம் இருந்தது.

பார்சுவர் தனது 30 ஆம் வயதில் அனைத்தையும் துறந்து மெய்யறிவு வேண்டி நின்ற நிலையில் தவம் செய்யத் தொடங்கினார். அப்போது மேகமாலி தன் தெய்வீக விமானத்தில் அவ்வழியாக பறந்து வந்தான். பார்சுவரின் கடுந்தவத்தின் விளைவாக அவ்விடத்தை கடக்க இயலாமல் அவன் விமானம் தடுமாறியது. பார்சுவரின் தவத்தைப் பார்த்த மேகமாலி தன் முற்பிறவியில் அவர் தன் தவத்தை கலைத்ததை நினைவுற்றான். கடுங்கோபத்துடன் பார்சுவரது தவத்தைக் கலைக்க முயன்றான். கற்களை வீசினான்; பெரு மழையை பெய்வித்தான். பார்சுவர் தவம் கலையவில்லை.  ஆனால் தர்ணேந்திரன் சிம்மாசனம் ஆடியது. நிகழ்வதை அறிந்த அவன் பத்மாவதியுடன் விரைந்து வந்தான். பல தலை நாகமாய் பார்சுவர் தலை மீது தன் படத்தால் குடை பிடித்து மேகமாலியின் தாக்குதலில் இருந்து காத்தான். பத்மாவதியும் நாகப் படத்தின் மீது வஜ்ரக்குடை பிடித்து  பாதுகாத்தாள். அவர் காலடியில் தாமரை மலர் கொண்டு தாங்கி நீரில் மூழ்காமல் மேலெழச் செய்தனர். தர்ணேந்திரன் மேகமாலியின் செயலைக் கண்டித்து அவன் தவற்றையும் பார்சுவரின் மேன்மையையும் உணரச் செய்தான். மன மாற்றம் அடைந்த மேகமாலி பார்சுவரை வணங்கி விலகினான்.

மேற்கண்ட கதையின் அடிப்படையில் இந்த இயங்கு சிற்பத் தொகுதியை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

பார்சுவநாதரின் தவம்

  1. நடுவில் காயோத்சர்க்கம் எனப்படும் நின்ற நிலையில் பார்சுவநாதர் தவம் செய்துகொண்டிருக்கிறார். 
  2. அவரது வலப்பக்கம் மேகமாலி தனது விமானத்தில் விரைந்து வருகிறான். அது ஒரு பறவையின் வடிவத்தில் இரு சக்கரங்களுடன் காணப்படுகிறது. அவன் பார்சுவநாதரை நோக்கி கையை நீட்டியபடி உள்ளான். அவனது வேகம் உடல்மொழியில் தெரிகிறது.
  3. மேகமாலி பார்சுவரைத் தாக்குகிறான்.
  4. தர்ணேந்திரன் விரைந்து வருகிறான். அவன் தலையை சுற்றியுள்ளது  நாகப்படம்.
  5. அவனுடன் பத்மாவதியும் வருகிறாள்.
  6. இருவரும் அவரது காலடியில் தாமரை மலர் அமைத்து வெள்ளத்தில் இருந்து மேலே எழுப்புகின்றனர்.
  7. தர்ணேந்திரன் பார்சுவநாதர் தலை மீது நாகப்படம் விரித்து அவரை மேகமாலியின் தாக்குதலில் இருந்து காக்கிறான்.
  8. பத்மாவதி வஜ்ரக் குடை பிடித்து காக்கிறாள்.
  9. தனது தவறு உணர்ந்த மேகமாலி பார்சுவநாதர் அடி பணிகிறான்.
இந்த நிகழ்ச்சிகள் பார்சுவநாதரின் தவத்தை பாதிக்கவில்லை. அவர் அவற்றை அறியக்கூட இல்லை. 84 நாட்கள் தவத்திற்குப் பிறகு அவர் 'கேவல ஞானம்' என்னும் உயர் மெய்யறிவை அடைந்தார். தீர்த்தங்கரர் ஆனார். 

இந்தச் சிற்பத் தொகுதி தன் நடுவில் மாறா மெய்யறிவைக் குறிக்கும் வகையில் அசையாது தவம் செய்யும் பார்சுவநாதரைக் கொண்டுள்ளது. அவரைச் சுற்றி உலக இயல்புகள் உழன்று கொண்டிருக்கின்றன. ஒருபுறம் நல்வினையும் மறுபுறம் தீவினையும் நிகழ்கின்றன. ஆனால், அவரோ அவற்றைக் கடந்தவராக நடுவில் நிலை கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் திறக்கோயிலில் உள்ள 10 நூற்றாண்டு சோழர் கால பார்சுவநாதர் சிற்பமும் இதை ஒத்துள்ளது.  (காண்க:  https://aroundarunai.blogspot.com/2019/08/blog-post_30.html)

சில வலைத்தளங்களும் நூல்களும் மண்டியிட்டு வணங்குபவரே தர்ணேந்திரன் என அடையாளம் காண்கின்றன. இது சரியல்ல என்பது தொடர்புடைய சிற்பங்களை ஆராய்
வதால் தெளிவாகும்.

கர்நாடகாவில் உள்ள பாதாமியின் அருகே இருக்கும் ஐஹொளேயில், மேலை சாளுக்கியர் காலத்தில் குடையப்பட்ட, பழமையான  மேலை சாளுக்கியர் காலக் குடைவறையான மேகுடி ஜைனக் குடைவறை உள்ளது. இதே போன்ற பார்சுவநாதர் சிற்பம் அங்கு உள்ளது.


பார்சுவநாதர்:ஐஹோளே
மேற்கண்ட ஐஹோளே சிற்பத்தில் பார்சுவரின் வலப்பக்கம் தர்ணேந்திரன், பத்மாவதி இருவருமே காட்டப்பட்டுள்ளனர். இருவருமே நாகப்பட மணிமுடியுடன் உள்ளனர். எனவே பார்சுவரின் இடப்பக்கம் மண்டியிட்டு வணங்குபவர் தர்ணேந்திரனாக இருக்கமுடியாது என்பது தெளிவு. மேலும் இடப்பக்கம் மேலே பாறையைத் தூக்கிப் பார்சுவரைத் தாக்கும் மேகமாலியின் மணிமுடி முதலிய அணிகள்  மண்டியிட்டு வணங்குபவரின் அணிகளை ஒத்துள்ளது. எனவே மண்டியிட்டு வணங்குவது மேகமாலியே என்பது தெளிவாகிறது.

பார்சுவநாதர்:பாதாமி 
மேற்கண்ட பாதாமி சிற்பம் ஐஹோளே சிற்பத்தை ஒத்துள்ளது. த்தில் பார்சுவரின் வலப்பக்கம் தர்ணேந்திரன் காட்டப்படவில்லை. பத்மாவதி மட்டும்  நாகப்பட மணிமுடியுடன் உள்ளார். பார்சுவரின் இடப்பக்கம் மண்டியிட்டு வணங்குபவர் நாகப்பட மணிமுடி அணியவில்லை. தர்ணேந்திரனாக இருக்கமுடியாது என்பது தெளிவு. மேலும் மண்டியிட்டு வணங்குபவர், இடப்பக்கம் மேலே பாறையைத் தூக்கிப் பார்சுவரைத் தாக்கும் மேகமாலியை  ஒத்துள்ளார். எனவே மண்டியிட்டு வணங்குவது மேகமாலியே என்பது தெளிவாகிறது.

பார்சுவநாதர் தவம்: கழுகுமலை
நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/8/82/P%C4%81r%C5%9Bvan%C4%81tha-Kalugumalai.JPG

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள மேற்கண்ட சிற்பம் இந்தக் காட்சியை மேலும் தெளிவாக்குகிறது. பார்சுவரின் தலையைக் காக்கும் நாகத்தின் படத்தில் மனிதத் தலை உள்ளது இது தர்ணேந்திரன் என காட்டுகிறது. அவரது இடப்பக்கம் நாகப்பட முடியுடன் பத்மாவதி. வலப்பக்கம் மேலே பார்சுவரைத் தாக்கும் மேகமாலி, கீழே மனந்திருந்தி மண்டியிட்டு வணங்கும் மேகமாலி.

பாகுபலி 

பாகுபலி
நன்றி: https://commons.wikimedia.org/wiki/File:Seeyamangalam_Jain_image.JPG

பாகுபலி ஒரு தீர்த்தங்கரர் அல்ல. ஆனால் சமண மதத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்த ஒருவர். சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதர் எனும் ஆதிநாதரின் இளைய மகன். ரிஷபநாதர் துறவு பூணுவதற்கு முன்பு அயோத்தியின் அரசராக இருந்தார். இவர் அண்ணன் இந்தியாவின் முதல் பேரரசரும் இந்நாட்டிற்கு பாரதம் எனப்  பெயர் வரக்  காரணமானவருமான பரதன்.
ரிஷபதேவர் குடும்பம் 

ரிஷப தேவர் துறவறம் பூண்டபோது தன நாட்டைத் தன்  மகன்களுக்கிடையே பகிர்ந்தளித்தார். பரதன் அயோத்தியையும், பாகுபலி தென்னிந்தியாவின் ஒரு பகுதியையும் பெற்றனர். பரதன் திக்விஜயம் செய்து மற்ற அரசர்களை வென்று அயோத்தி திரும்பினார். ஆனால் தன்  சகோதர்களை வெல்லாததால் திக்விஜயம் நிறைவு பெறவில்லை. பகுபலியைத் தவிர மற்ற சகோதரர்கள் அனைவரும் தங்கள் நாடுகளை பரதனுக்கு அளித்து துறவு பூண்டனர். பாகுபலி பரதனுக்கு அடிபணியாததால் இருவருக்கும் தனிப்போர் மூண்டது. கண்போர், நீர்ப்போர், மற்போர் மூன்றிலும் பாகுபலி பரதனை வென்றார். ஆனால் உலகியலில் பற்று நீங்கி நாட்டை பரதனிடம் அளித்து துறவறம் பூண்டார். நின்ற நிலையில் 12 ஆண்டுகள் கடும் தவம் இயற்றிமெய்ஞானம் அடைந்தார்.

இவரையும் அவரது கால்களையும் உடலையும் சுற்றியுள்ள கொடிகளால் எளிதாக அடையாளம் காணலாம். இந்த சிற்பத்தில் கொடிகள் தொடைகளுக்கு இடையில் இருந்து வெளிப்பட்டு தொடையையும் கைகளையும் சுற்றி இருப்பதைப் பார்க்கலாம்.

பாகுபலி

பாகுபலியின் வலது பக்கம் மேலே பறந்து கொண்டிருப்பவர்கள் வித்யாதரர்கள் என்னும் வானவர் ஆவர். வித்யாதரர்கள் என்பதன் பொருள் பெரும் அறிவுடையவர்கள் என்பதாகும். பாகுபலியின் இருபக்கமும் உள்ள பெண்கள் வித்யாதரிகள் ஆவர். வித்யாதரர்களும், வித்யாதரிகளும் பாகுபலி தவம் செய்து கொண்டிருந்த இடத்தின் மீது பறந்து செல்கையில் அவர் தவத்தின் விளைவால் அவர்கள் பயணம் தடைப்படும். அவர்கள் அவரை வணங்கிச் செல்வார்கள். வித்யாதரிகள் அவரைச் சுற்றியுள்ள மாதவிக் கொடிகளை மெல்ல அகற்றிச் செல்வார்கள். அவரது வாழ்க்கையைப் பற்றிய புராணத் தகவல்களின் அடிப்படையிலான இந்த நிகழ்வே இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலை சாளுக்கியர் காலத்தில் குடையப்பட்ட கர்நாடகாவில் உள்ள பாதாமியின் அருகே இருக்கும் ஐஹொளேயில் பழமையான  மேலை சாளுக்கியர் காலக் குடைவறையான மேகுடி ஜைனக் குடைவறை உள்ளது. இதே போன்ற பாகுபலியின் சிற்பம் அங்கு உள்ளது.

பாகுபலி: ஐஹொளே மேகுடி ஜைனக்  குகை 

இந்த சிற்பத்தில் பெண்கள் இருவரும் கொடிகளைக் கையில் பற்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சிற்பத்தில் பாகுபலியின் காலருகே புற்றுகள் வளர்வதும் அவற்றில் இருந்து பாம்புகள் படம் எடுப்பதும் காட்டப்பட்டுள்ளது. மேற்பக்கத்தில் பாகுபலியின் வலப்புறம் ஒரு யானையின் தலையும், இடப்புறம் இரு வானவர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

பாதாமி குடைவரை 4 இல் உள்ள பாகுபலியின் சிற்பம் இந்தியாவின் மிகப் பழமையான பாகுபலி சிற்பம் என்று கருதப்படுகிறது.

பாகுபலி: பாதாமி குகை 4
இந்த சிற்பத்தில் இரு வித்யாதரர்கள் முழந்தாளிட்டு பாகுபலியை வணங்க, அவர்களது உடனுறை வித்யாதரிகள் கொடிகள் நீக்கும் பணிசெய்து நின்றுள்ளனர்.

மேற்கண்ட இரு மேலை சாளுக்கிய காலச் சிற்பங்களைப் பற்றிய கர்நாடக மாநில தொல்பொருள் துறை (Department of Archeology, Museums and Heritage) வெளியிட்டுள்ள பாதாமி, ஐஹோளே பற்றிய கையேடுகள் மேற்கண்ட விளக்கத்தையே அளிக்கின்றன.

அவரது இரு பக்கங்களிலும் உள்ள இரு பெண்கள் அவர் சகோதரிகள் சுந்தரியும், பிராமியும் என பல இணைய தளங்களில் அடையாளம் காணப்படுகின்றனர். 'சமணத் தடயம்' என்ற நூலில் இதே போன்ற மேல் சித்தாமூர் பாகுபலி சிற்பத்தைக்  குறித்து திரு. சீ. ஸ்ரீதர் 'இவர்கள் பாகுபலியின் சகோதரிகள் என்று கருதப்படுகிறது' என்று குறிப்பிடுகிறார் . இதற்கான ஆதாரங்கள் தெரியவில்லை.'

மேலே அவரது இடது பக்கம் யானை மேல் இந்திரன்.

இறுதியாக

இரு வேறு எதிரி அரசர்களின் இரு வேறு மதக் கோயில்கள் ஓரே இடத்தில் அருகருகே அமைந்துள்ளது சிறப்பு.

நன்றிக்கடன் 



https://en.wikipedia.org/wiki/Bahubali

சமணத் தடயம்; பதிப்பாசிரியர்கள்: நடன. காசிநாதன், மா. சந்திரமூர்த்தி; மெய்யப்பன் பதிப்பகம்; முதல் பதிப்பு; 2005; பக்கம் 236.

http://www.agamdhara.com/prathamanuyog/lord-bahubali/

Department of Archeology, Museums and Heritage; Heritage Series - Aihole (First edition; 2015) page 17-19; Badami (First edition; 2012) page 36-38;


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்