திறக்கோயில்


சிறப்பு 
  1. பழமை - 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் 
  2. பாறையின் நாற்புறங்களிலும் தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பங்கள் 
  3. இரு பழைய அருகர் ஆலயங்கள் 
பயணம் 

இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள்  -26/08/2019) திருவண்ணாமலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல ஒரு இடைமறிப்பு. 'திறக்கோயில்' வழிகாட்டிக் கல். சிறிது நேரம் கையில் இருக்கவே பார்த்துச் செல்ல முடிவெடுத்தேன். வழக்கமான வளைந்து நெளியும் நல்ல ஒற்றைச் சாலை. வழியில் ஒரு நீரில்லா ஓடைக் கரையில் மரத்தடியில் உட்கார்ந்து கைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் வழிகேட்க தயங்கி நின்றேன். அவருக்கும் திறக்கோயில்தான் போகவேண்டும். கூடவந்து வழி காட்டினார்.

வெட்டவெளியில் ஒரு பாறை. அதன் நான்கு பக்கங்களிலும் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள்.

திறக்கோயில் சமண பாறைச் சிற்பங்கள் 

ரிஷபநாதர் 

ஆதிநாதர் எனும் ரிஷபதேவர் 

மூன்று சிங்கங்களால் தாங்கப்படும் சிம்மாசனத்தின் மீது அரைத் தாமரை இருக்கையில் (அர்த்த பத்மாசானம்) அமர்ந்திருக்கிறார் ரிஷபநாதர். சிம்மாசனத்தின் முதுகுப்புறம் மேல் சட்டத்தின் கீழ் ஒரு திண்டு உள்ளது. சிம்மாசனத்தின் கைகளின் முன்முனைகள்  மகர முகங்களாக துதிக்கைகளுடன் நீண்டுள்ளன. இருபுறமும் மகரங்களின் திறந்த வாய்களில் வீரர்கள் உள்ளனர், ஒருகாலை மகரத்தின் வாய்க்குள்ளும் மற்ற காலை அதன் கீழ்த் தாடையின் மீதும் ஊன்றியபடி. வலது பக்க வீரனின் ஒரு கையில் வாள், மற்ற கையில் கேடயம்.  இருபுறமும் சிம்மாசனத்தின் கைகளை உருளை வடிவ தூண் போன்ற சட்டங்கள் தாங்குகின்றன. அவற்றின் முன் நின்ற நிலையில் கொம்புகளுடன் அவரது லாஞ்சனமான ரிஷபங்கள் மகரத் தலைகளைத் தாங்குகின்றன.

அவரது தலையைச் சுற்றி சூரிய வட்டம். சுருள் முடி, நீண்ட காதுகள். பாதி மூடிய கண்கள். கூரிய மூக்கு. அமைதியும் நிமிர்வும் ததும்பும் முகம். இடது மார்பில் ஒரு சிறு பள்ளம். அதை ஸ்ரீவத்ஸம் எனலாமா? வலக்கையை இடக்கை மீது வைத்து இரு கைகளும் மேல் நோக்கியிருக்க மடி மீது வைத்துள்ளார். ஆடை அணிகளற்ற திகம்பரர்.

தலைக்கு இருபுறமும் சாமரம் வீசும் பணியார்கள் உள்ளனர்.ஆசனத்தின் பின்பக்கம் நிற்கும் அவர்களின் மேல் உடல் மட்டுமே தெரிகிறது.  தலைக்கு மேல் முக்குடை. முக்குடையின் கீழ் பாகத்தின் நடுவில் ஒரு மலர் மொட்டு. முக்குடையை கையில் தாங்கியவாறு பறக்கும் நிலையில் தலைகளை சுற்றிய ஒளி வட்டங்களுடன் சூரிய சந்திரர்கள். அவர்களும், சாமரம் வீசுபவர்களும், மகர வாய் வீரர்களும் உடைகளும், கிரீடம் அணிகளும் கொண்டுள்ளனர்.

சிற்பத்தின் ஒட்டுமொத்த இருபக்க சமநிலை கவனத்திற்குரியது.

சந்திரநாதர் 

பாறையின் முன்பக்கம் உள்ள சிற்பம்.

சந்திரநாதர் 

சந்திரநாதர் எட்டாம் தீர்த்தங்கரர். அவரது சிற்பம் ரிஷபநாதர் சிற்பத்தை ஒத்துள்ளது, கீழ்கண்டவற்றைத் தவிர.
  1. முக்குடையும் அதைத் தாங்குபவர்களும் இல்லை.
  2. சிம்மாசனத்தின் இருபக்கமும் கைகளின் முனைகளில் உள்ள மகரங்களின் வாய்களில் வீரர்கள் இல்லை.
  3. கைகளைத் தாங்கும் உருள் வடிவச் சட்டத்தின் மேற்பக்கத்தில் உறுப்புகள் இல்லாமல் சமமாக உள்ளது.
  4. அவற்றின் பக்கங்களில் எருதுகள் இல்லை.
  5. பீடத்தில் சிங்கங்களுக்கு இடையில் தூண்கள் இல்லை.

சிம்ம பீடத்தின் கீழ் ஒரு தாமரை பீடத்தின் மேல் அரை வட்ட வடிவ விளக்குப் புரை ஒன்று உள்ளது. இது பிறை நிலவாக சந்திரநாதரின் லாஞ்சனமாகத்  திகழ்கிறது.

பார்சுவநாதர் 

பார்சுவநாதர் 

பார்சுவநாதர் 23 வது தீர்த்தங்கரர். சமண சமயக் கொள்கைளை வரையறுத்து சமணத்தைப் பரப்புவதில் மகாவீரருக்கு முன்னோடியாக விளங்கியவர். அவர் தலைமேல் படம்விரிக்கும் நாகம் அவர் திருவுருவை எளிதில் அடையாளம் காண உதவுகிறது. ஐந்து தலை நாகம் அவர் பின்னால் வலம், இடம், வலம் ஆக வளைந்து தரையிலிருந்து மேலெழுகிறது.

பார்சுவர் திகம்பரராக 'கயோத்சர்க்கம்' என்ற நின்ற நிலையில் உள்ளார். முக அமைப்பு ரிஷபர் சிற்பத்தை ஒத்துள்ளது. கைகள் உடலை ஒட்டாமல் நேராக கீழே தொங்குகின்றன. வல மார்பில் ஒரு முக்கோணக் குறி - ஸ்ரீவத்சமாகக் கொள்ளலாம். கால்களும் பாதங்களும் ஒன்றை ஒன்று தொடாமல் நேர் நோக்கி இருக்கின்றன.

பார்சுவரின் வலது பக்கம் அவரது தலை மேலிருந்து தாக்கி அவரது  தவத்தை கலைக்க முயல்வது மேகமாலி என்பவன். முன் பிறவிகளில் இருந்து பார்சுவரின் எதிரி. இரு முன் கைகளால் பாறையைத் தலை மேல் தூக்கியவாறு வலது பின் கையில் கதையை ஓங்கிப் பிடித்து இடது பின் கையால் பார்சுவரை சுட்டிக்கொண்டு அவரைத் தாக்க பாய்ந்து பறந்து வருகிறான். கோரைப் பற்கள். தலையில் கிரீட மகுடம். இடது முன், வலது பின் கைகளில் வளைகள் தெரிகின்றன. மார்பில் ஆரம், முப்புரி நூல். இடையில் அரைப்பட்டிகை (உதரபந்தம்), இடைக்கச்சு.

தர்ணேந்திரன் எனும் அவரது இயக்கன் (யட்சன்) நாக உருவில் படமெடுத்துப் பார்சுவரை மேகமாலியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறான்.பார்சுவரின் இடது பக்கம் இருக்கும் அவரது இயக்கி (யட்சி) பத்மாவதி வஜ்ரக் குடையைப் பார்சுவரின் மேல் பிடித்து மேகமாலியின் தாக்குதலிலிருந்து அவரைக் காக்கிறாள். கரண்ட மகுடம், ஆரம், கைவளைகள், தோள் வளை, இடை அணிகள், முழங்கால்களுக்கு கீழிறங்கிய ஆடை, இவற்றுடன் இருக்கிறாள்.

தன் முயற்சியில் தோல்வியுற்ற மேகமாலி தர்ணேந்திரனின் அறிவுரைகளால் மனம் திருந்தி பார்சுவரின் வலது பக்கம் முழந்தாளிட்டு அவரை கைக்கூப்பி வணங்குகிறான். தாக்கும் மேகமாலி நான்கு கைகள் கொண்டிருக்க வணங்கும் மேகமாலி இரு கைகளுடன் இருப்பது கவனிக்கத்தக்கது. வணங்குபவரை தர்ணேந்திரன் எனக் கொள்வோரும் உண்டு. நாகமாய் நிற்பவனே தர்ணேந்திரன் என்பதும் மேகமலை இறுதியில் பார்சுவநாதரை அடிபணிந்தான் என்பதும் புராணம்.

இது பார்சுவநாதரின் தவத்தைக் குறித்த ஒரு இயங்குநிலை சிற்பம். நடுவில் மாறா மெய்யறிவைக் குறிக்கும் வகையில் அசையாது தவம் செய்யும் பார்சுவநாதர். அவரைச் சுற்றி  நல்வினையும் தீவினையும் நிகழ்கின்றன. ஆனால், அவரோ அவற்றைக் கடந்தவராக தவத்தில் நிலை கொண்டுள்ளார்.

மகாவீரர் 

மகாவீரர் 

24 ஆமாவதும் கடைசியுமான தீர்த்தங்கரர் மகாவீரர். அவரது சிற்பம் சந்திரநாதரின் சிற்பத்தை ஒத்துள்ளது. கூடுதலாக முக்குடை உள்ளது. கீழே விளக்குப் புரை செவ்வகமாக உள்ளது. அதற்கு பீடம் எதுவும் இல்லை.

கல்வெட்டுகள் (*)

பல்லவர்களின் இறுதி அரசனான அபராஜித வர்மனை வென்று பிற்சோழப் பேரரசை நிறுவியவர் ஆதித்த சோழர். அவர் மகன் முதலாம் பராந்தக சோழர் (ஆட்சி காலம் கி பி 907 - 955). மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரிவர்மன்  என்பது அவரது பட்டப் பெயர்.  அவரது இரு கல்வெட்டுகள் இப்பாறையில் உள்ளன. இவை ஆதிநாதர் சிற்பத்துக்கு அருகில் உள்ளன.

கல்வெட்டு 

இவை இவ்விடத்தை  'தண்டபுரம் ஜினப்பள்ளி' என்கின்றன. அணையா விளக்கு எரிய ஆடுகளை  அளித்ததையும், நெல் தானத்தையும் இவை தெரிவிக்கின்றன. கிபி 1007 ஆண்டு ராஜராஜன் கல்வெட்டு பார்சுவர் சிற்பத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள மலைக்கோயிலை 'இராசகேசரிபுரத்தில் உள்ள கங்கசூர பெரும்பள்ளி ' என்று அழைக்கிறது. மலைக்கோயில் கல்வெட்டு அதை '.......மை சித்தப் பள்ளி'  என்கிறது.

திருமலை அருகர் கோயிலும், மன்னார்குடி மல்லிநாதர் கோயிலும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட்ட மற்ற அருகர் ஆலயங்கள் ஆகும். ($)

மலை மேலும் அடிவாரத்திலுமாக இரு ஆதிநாதர் ஆலயங்கள் உள்ளன. நேரமின்மையால் காண இயலவில்லை.

நன்றிக்கடன்

Know your heritage blog

https://en.wikipedia.org/wiki/Jainism_in_Tamil_Nadu




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்