திருநாதர்குன்று - முதல் 'ஐ' எழுத்து

சிறப்பு 
  1. தமிழகத்தில் உள்ள இரு 24 தீர்த்தங்கரர் பாறைச்  சிற்ப தொகுதிகளுள் ஒன்று.
  2. உண்ணாநோன்பு இருந்து உயிர் துறந்த இரு சமண முனிவர் பற்றிய கல்வெட்டுகள் 
  3. 'ஐ' எழுத்து முன் முதலாக காணப்படும் கல்வெட்டு.
  4. ஆதிநாதர் சிற்பம். 
பயணம்

விகாரி ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் நாள் (10/09/2019) அன்று சிங்கவரம், மேலச்சேரி, திருநாதர்குன்று ஆகிய இடங்களைக் காண திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டேன்.  செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் சாலையில் சுமார் 4 கிமீ தொலைவில் சிங்கவரத்திற்கு முன்பாக உள்ளது திருநாதர்குன்று. அது அமைந்துள்ள இடம் சிறுகடம்பூர், செஞ்சியின் ஒரு பகுதி. சாலையிலிருந்து ஒரு மண் சாலை வழியாக குன்றின் அடிவாரத்தை அடையலாம். மலைமீது ஏற 44 படிகள். 

திருநாதர்குன்று 

ஆதிநாதர் சிற்பம் 

மலையேறும் வழியில் இடது பக்கம் இரண்டாக உடைந்த ஒரு பாறையில் இரு துண்டுகளாகி  இருக்கும் சிற்பம் ஒன்று உள்ளது. மண்டபம் ஒன்றில் அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் ஒருவர் சிற்பம். யார் எனக் கூற ஆதாரம் இல்லை. அவர் தலை மேல் முக்குடை. மண்டபம் தாங்குதளம், இருபக்க தூண்கள், கூரை ஆகியவற்றைக்  கொண்டு  அவற்றின் உறுப்புகளோடு அழகாக காட்டப்பட்டுள்ளது.

தீர்தங்கரர் சிற்பம் 

24 தீர்த்தங்கரர் சிற்பத்  தொகுதி

மலை உச்சியில் பாதை கருங்கல் பாவிய தளம் ஒன்றில் முடிகிறது. அதன் மீது நின்று எதிரில் உள்ள பாறையின் மேல் பாகத்தைப்  பார்த்தால் 24 தீர்த்தங்கரர்களுடைய சிற்பத் தொகுதி.

24 தீர்த்தங்கரர்கள் சிற்பம் 

24 (சதுர் விம்சதி) தீர்த்தங்கரர்கள் சிற்பம் 
  1. தீர்த்தங்கரர்கள் இரு வரிசையில் வரிசைக்கு 12 பேராக அமைக்கப்பட்டுள்ளனர் .
  2. வலது காலை இடது கால்  மீதும் வலது கையை  இடது கை மீதும் வைத்து தியான நிலையில் சிம்மாசனம் மேல் அமர்ந்திருக்கின்றனர்.
  3. அவர்களது உருவம் ஒன்றுபோல் உள்ளன. 
  4. ஒவ்வொருவர் தலைமேலும் முக்குடை . 
  5. ஒவ்வொருவருக்கும் இடையிலும் இரு சாமரங்கள், ஒன்றின் குறுக்காக ஒன்று.
இது போன்ற சிற்பத் தொகுதி தமிழ்நாட்டில் இரு இடங்களில்தான் இருக்கிறதாம். மற்றொரு இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை.

கல்வெட்டுகள் - அனசனம் - முதல் 'ஐ'

இந்த மலையில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் இரண்டு இரு சமண முனிவர்கள் 'அனசனம்' நோற்று (உண்ணாநோன்பிருந்து) இறந்துள்ள செய்தியைச்  சொல்லுகின்றன. (அசனம் = உண்ணுதல்; அனசனம் = உண்ணாதிருத்தல்)

1. 6 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு சந்திரநந்தி என்ற சமண ஆசிரியர் 57 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தச்  செய்தியைச் சொல்கிறது.

சந்திரநந்தி குறித்த முதல் கல்வெட்டில்தான் 'ஐ' எழுத்து முதன்முதலாக அறிமுகமாகிறது என்கின்றனர் கல்வெட்டு அறிஞர்கள். அதன் வடிவம் திரிசூலம் போன்றது.  கீழே உள்ள கல்வெட்டின் முதல் எழுத்து:

திருநாதர்குன்று: சந்திரநந்தி கல்வெட்டு - முதல் ஐ 

2. 8 ஆம்  நூற்றாண்டு கல்வெட்டு இளைய பட்டாரகர் என்ற சமண முனிவர் 30 நாள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தச் செய்தியைச் சொல்கிறது.

திருநாதர்குன்று கல்வெட்டு 

3. கோயில் விளக்கேற்ற 400 ஆடுகள் தானம் கொடுக்கப்பட்டச் செய்தியை மூன்றாம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இது உடைந்த தீர்த்தங்கரர் பாறையின் மேல் பகுதியில் உள்ளது.

சமணர் வசித்த குகைகள்



பார்சுவநாதர் சிற்பம்

24 தீர்த்தங்கரர் சர்பத் தொகுதி உள்ள பாறையின் இடது புறம் மேலே பார்சுவநாதரின் சிறு புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது.



நிறைவாக, திருநாதர்க்குன்றில் இருந்து செஞ்சிக் கோட்டையின் இரு மலைகள்:

திருநாதர்குன்றிலிருந்து செஞ்சிக்கோட்டை மலைகள் 

விரிவிளக்கம்

ஆதிநாதர் மண்டபம்
அடித்தளம் பட்டிகை), மேல் கீழ் கம்புகளோடு கூடிய கண்டம்,  ஜகதி ஆகிய உறுப்புகளுடனும், இருபக்கத் தூண்கள் மேலிருந்து போதிகை, வீரகண்டம், பலகை, பாலி, கும்பம், தாடி , கலசம், மாலை ஸ்தானம், மாலைக் கட்டு ஆகிய உறுப்புகளோடும், கூரை உத்திரம், கபோதம், பூமி தேசம் ஆகிய உறுப்புகளோடும் காட்டப்பட்டுள்ளன.

சந்திரநந்தி கல்வெட்டு
"ஐம்பத்தேழன
சனந்நோற்ற
சந்திரநந்தி ஆ
சிரிகரு நிசீதிகை"

சொல் பிரித்து: "ஐம்பத்து ஏழு அனசனம் நோற்ற சந்திரநந்தி ஆசிரிகரு நிசீதிகை"

அனசனம் என்ற சொல் பழந்தமிழ் சமண நூல்களில் காணப்படுவதாக ஐராவதம் மகாதேவன்  விளக்குகிறார். (வரலாறு. காம் இதழ் 33). நிசீதிகை என்ற சொல்லின் மரு முதல் நூற்றாண்டில் கலிங்க காரவேலர்  கல்வெட்டிலும் பிந்தைய கன்னட கல்வெட்டுகளிலும் சமணத் துறவிகளின் இருக்கைகளை குறிப்பிடுவதாகவும் கூறுகிறார்.

நன்றிக்கடன்:

யூ ட்யூப் காணொளி: திருநாதர்குன்று - ஒரு அறிமுகம்

https://tamilnadu-favtourism.blogspot.com/2015/12/theerthangarargul-thirunathar-kundru.html

கோவை கல்வெட்டாய்வாளர் துரை. சுந்தரம் (மின் தமிழ் மேடை) - சந்திரநந்தி  கல்வெட்டு படம், தகவல்

கு. கதிரவன்; வலைத்தமிழ் மின்னிதழ் :
http://www.valaitamil.com/tamil-brahmi-kalvettugal_17716.html


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்