தளவானூர் - சத்ருமல்லேசுவரம் - முதன்மைகளின் களஞ்சியம்

குடைவரைகளில் ஒரு முதல் முயற்சியாக பாதபந்தம், மகரத் தோரண வாயில், முழுமையான கூடுகளுடன் கூடிய கபோதம், பூமிதேசம் ஆகியன கொண்டு முழுமையடைந்த முகப்புத் தோற்றம், கிழக்கு நோக்குக் கருதி பின்சுவரல்லாது பக்க சுவரில் அமைந்த கருவறை, அர்த்த மண்டப அரைவட்டப் படி என பல முதன்மைச் சிறப்புகளைக் கொண்டது 'சத்ருமல்லேசுவரம்' . முதலாம் மகேந்திரவர்ம பல்லவர் (ஆட்சி காலம் கிபி 590-630) எடுப்பித்த ஏழு குடைரைக் கோயில்களில் ஒன்று.  'சத்ருமல்லன்' என்பது அவனது பட்டப்பெயர்களில் ஒன்று.

இடம்:

தளவானூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். செஞ்சியிலிருந்து 15 கிமீ தூரத்திலும், விழுப்புரத்தில் இருந்து 35 கிமீ தூரத்திலும் உள்ள ஊர். முற்காலத்தில் இவ்வூர் தலைவாய்நல்லூர் என அழைக்கப்பட்டதென அவ்வூரிலுள்ள பாழடைந்த சிவன் கோயில் கல்வெட்டுச் செய்திகளால் தெரிகிறது.

பயணம்:

விகாரி ஆண்டு ஆடி மாதம் 21 ஆம் நாள் (05/08/2019) இத்தளத்திற்காக எனது முதல் பயணம். முதலில் மண்டகப்பட்டு லக்ஷிதாயதனத்தை தரிசித்துவிட்டு 3/4 கிமீ இல் விழுப்புரம் செஞ்சி நெடுஞ்சாலையை அடைந்தபோது மணி மதியம் ஒன்று. வயிறு தனக்கும் சிறிது கேட்டது. அங்கே ஆலமரத்தடியில் கிடைத்த கூழை அருமையான பிரண்டைத் துவையல், மாங்காய் ஊறுகாயோடு குடித்துவிட்டுதளவானூருக்கு வந்தேன். மண்டகப்பட்டில் இருந்து 14 கிமீ தூரம். ஒரு சமணர் சின்ன வழிகாட்டிக் கல் செஞ்சி-விழுப்புரம் நெடுஞ்சாலையிலிருந்து தளவானூர் சாலை பிரியும் இடத்தைக் காட்டியது. 



அங்கிருந்து தளவானூர் 5 1/2 கிமீ தூரம். வழியில் ஓரிடத்தில் சாலையை 12-15 மாடுகளை ஒரு பெண்மணி ஓட்டிக்கொண்டுச் சென்றார். மாடுகள் ஒவ்வொரு அடிக்கும் தலையை கீழேயும் மேலேயும் அசைத்துக்கொண்டுச் சென்ற காட்சி விசித்திரமாயிருந்தது. மூக்கணாங்கயிறை ஒரு காலோடு சேர்த்துக் கட்டிவிட்டிருந்ததால் வந்தது.


சாலையிலிருந்து குகைக் கோயிலுக்குப் பாதை இல்லை. தூரத்தில் தெரியும் குடைவரை வளாகத்தை நோக்கி வயல்கள் வழியாகப் பொடி நடை.


முகப்பு

தெற்கு நோக்கியது.



நடு அங்கணத்தில் முடியுமாறு இருபுறங்களில் இருந்தும் படிகள் வெட்டப்பட்டுள்ளன. அதன் முன் பிற்கால கட்டுப் படிகள். படிகளின் இருபுறமும் தாங்குதளம். நடுவே இரு முழுத்தூண்கள். மேற் சதுரம், நடுவில் எண்கோணக் கட்டு, கீழ் சதுரம் என்ற அமைப்பு. மேல், கீழ் சதுரங்களை வட்டத் தாமரை பதக்கங்கள் அணி செய்கின்றன. முழுத்தூண்களுக்கு வெளிப்புறத்தில் அரைத்தூண்கள்.  முழுத்தூண்களைப் போலன்றி அவை முழுவதும் சதுரமாகவே உள்ளன.  நான்கு தூண்களுக்கிடையில் மூன்று அங்கணங்கள். அவற்றை அடுத்து இருபுறமும் வாயிற்காவலர் வசிக்கும் கோட்டங்கள். கோட்டங்களை வெளிப்புறம் அணைத்து நிற்கும் மேலுமிரண்டு அரைத்தூண்கள். 

முழுத்தூண்களுக்கு மேல் சற்றே வெளிவாங்கி இருக்கும் மெல்லிய பலகை. அதன்மீது அமர்ந்திருக்கும் கால் வட்ட போதிகை. அவை தாங்கும் உத்திரங்கள். உத்திரங்களின் மேல் சற்று நீண்டிருக்கும் இரு அடுக்குகளாக வாஜனம், வலபி.

வாஜனம், வலபி
நடு அங்கணத்தின் மேல் அழகிய மகரத் தோரணம். வலபியின் மேல் வெளி நீட்டிக் கொண்டிருக்கும் கபோதகம். கபோதகத்தின் வெளிப்புறத்தில் 5 கூடுகள் அமைந்துள்ளன.  கபோதகத்தின் மேல் ஆலிங்கம், அந்தரி, வாஜனம் ஆகிய உறுப்புகளைக் கொண்ட பூமிதேசம் முயற்சிக்கப்பட்டுள்ளது. முழுமை அடையவில்லை.

தாமரை பதக்கங்கள்


நடுவில் மகரந்த வட்டம். சுற்றி மேலும் கீழுமாக இரு வரிசை மூடிய இதழ்கள். அதைச் சுற்றி மேலும் கீழுமாக இரு வரிசை திறந்த இதழ்கள். கடைசியாக இரு கோடுகளுக்கிடையிலான உருள்மணி வட்டம். தாமரைப் பதக்கங்கள் முகப்பு முழுத் தூண்களில் மட்டுமே உள்ளன.

பலகை



பலகை முழுத்துண்களில் மட்டுமே உள்ளது. அரைத் தூண்களில் இல்லை. கிழக்கு முழுத்தூண் பலகை முன்புறம் எழு தாமரை (ஊர்த்துவ பத்மம்) அணி பெற்றுள்ளது. மேற்கு முழுத்தூண் பலகை முன்புறம் அவ்வாறு அணி செய்யப்படவில்லை.

கூடுகள்

கபோதத்தில் உள்ள ஐந்து கூடுகளிலும் தலைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் தலை அலங்காரம், காதணிகள் வேறு படுகின்றன. அனைவருக்குமே முடிக்கற்றைகள் தலையின் இருபுறமும் தொங்குகின்றன. தலைகள் யாருடையவை? கந்தர்வர்கள்? பூஜாரி முனுசாமி அவர்கள் உள்ளூர் மக்கள் சிலர் இக்குடைவரையை பஞ்சபாண்டவர் கோயில் என்று அழைக்கின்றனர் என்றார். கோயில் புகழ் பெற்ற வழிபாட்டுத் தலமானால் பாண்டவர்கள் வனவாசத்தின் போது வழிபட்ட இடம் எனத் தல வரலாறு புனையப்பட வாய்ப்பு உள்ளது!

கூட்டின் மேல் பாகம் பின்னாள் கூடுகளில் உள்ள சிம்ம முகமோ அதன் வாயிலிருந்துவரும் தோரணமோ இல்லை. மேலே சாய்வகப் பதக்கம். அதிலிருந்து ஒரு வட்டப் பதக்கம் தலைக்கு மேல் தொங்குகிறது. தோரணங்கள் கூட்டிற்கு இருபுறமும் கீழ்நோக்கி வந்து கூட்டின் வெளிப்புறத்தை அலங்கரிக்கினறன.  அவை இலைக் கருக்கு என கூறப்பட்டாலும், எனக்கு மணி மாலைகளாகவும், பதக்கங்களாகவுமே தென்பட்டன.

கூடுகள் மேற்கிலிருந்து கிழக்காக: -
கூடு 1: பனையோலைக் குண்டலங்கள்

கூடு 2: பனையோலைக் குண்டலங்கள், கழுத்தில் சரப்பளி

கூடு 3 (நடுக் கூடு); காதணி இல்லாத நீண்ட காது

கூடு 4: நெற்றிப் பட்டம், பனையோலைக் குண்டலங்கள்,
சவடி என்னும் கழுத்தணி

கூடு 5: பனையோலைக் குண்டலங்கள்

மகர தோரணம்

நடு அங்கணத்தின் மேல் இரண்டு முழுத்தூண்களின் போதிகைகள், உத்திரம், வாஜனம், வலபி ஆகியவற்றைச் சேர்த்து அணி செய்கிறது அழகிய மகரத் தோரணம். மிக அழகாகவும் நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டுள்ளது. இரு பக்க பெரு மகரங்கள், அவற்றின் மீது கணங்கள். நடுவில் இரு சிறு மகரங்கள், பின்புறம் ஒட்டி தலைகள் எதிர் திசைகளில் பெரு மகரங்களை நோக்கியவாறு உள்ளன.  அவற்றின் மேல் ஒரு கணம், 

மகரத் தோரணம்

மேற்கு மகரம் கிழக்கு மகரத்தைவிடத் தெளிவாக உள்ளது. அமர்ந்த நிலையில் நீண்டிருக்கும் கால், கழுத்தில் மட்டும் செதில்கள், மேலுயர்ந்து சுருண்ட துதிக்கை, பின்னால் கண், அகன்று திறந்த வாய், மேல் தாடையில் வளைந்து நீண்ட முன் கோரைப் பல், அதன் பின் இரு பற்கள், நீட்டிய நாக்கு, விரிந்தும் சுருண்டும் இருக்கும் பின்புறத் தோகை. அதன் வாயிலிருந்து வெளிவரும் கொடிக்கருக்குகள் எதிரிலுள்ள சிறு மகரத்தின் முகத்தோடும் அதன் வாயிலிருந்து வெளிவரும் கொடிக்கருக்குகளுடனும் மோதி நிற்கிறது.

கிழக்கு மகரம் உடல் முழுதும் செதில்கள் கொண்டுள்ளது. முகம் தெளிவாக இல்லை. 

கிழக்குக் கணம் மேற்கு கணத்தை விட தெளிவாக உள்ளது. இடது கால் பக்கவாட்டில் மகரத்தின் மீது உள்ளது, கால் விரல்கள் தெரிகின்றன. மகரத்தின் தலையில் வலது கை ஊன்றியிருக்க, இடது கை உயர்ந்து போற்றி முத்திரை காட்டுகிறது. தோள், கை வளைகளும், கழுத்தில் சரப்பளியும், கணுக்கால்களில் கிண்கிணியும் உள்ளன. முகப்பணி கொண்ட தலைப்பாகை போன்ற ஒன்றை அணிந்திருக்கிறார்..

இடது கணம் இடது கையை துதிக்கை மீது ஊன்றியிருக்கிறார்,  

நடு அங்கணத்தின் உத்திரத்தின் கீழ் உள்ள தாமரைத் தளம் சிறு மகரங்களைத் தாங்குவது போலுள்ளது. சிறு மகரங்களின் மீது அவற்றின் தும்பிக்கைகளுக்கு இடையில் ஒரு கணம் முன்னோக்கி சம்மணமிட்டு அமர்ந்துள்ளது. இடது கை தொடை மீதும் வலது கை உயர்ந்தும் உள்ளன.

தாங்குதளம்

பாறையிலேயே வெட்டப்பட்டுள்ள படிகளின் இருபுறமும் தாங்குதள அமைப்பு செதுக்கப்பட்டுள்ளது. கீழிருந்து மேலாக ஜகதி, எண்முகக் குமுதம், கம்பு, கண்டம், கம்பு, பட்டிகை என்ற தாங்குதள உறுப்புகள் அமைந்துள்ளன. தூண் கண்டப் பகுதியில் பாதமாக கீழ் நீண்டுள்ளது. இதன் அடிப்படையில் இவ்வகை தாங்குதளம் பாதபந்த தாங்குதளம் என்று அழைக்கப்படுகிறது. ஜகதியின் கீழ் உறுப்பான உபானம் முறையாக வெட்டபடவில்லை. கிழக்கே ஜகதி முழுமை அடையவில்லை. மேற்கே பட்டிகை உடைந்துள்ளது.

மேற்குத் தாங்குதளம்

கிழக்குத் தாங்குதளம்

வாயிற்காவலர்கள்

மேற்குக் குடைவரைக் காவலர் திரிபங்க நிலையில் வல்து கையை இடையில் வைத்து, இடது கையை உயர்த்தி போற்றி முத்திரை காட்டுகிறார்.  இடது பாதம் நேராக நோக்க ( சம பாதம்), வலது பாதம் பக்கமாக (பார்சுவம்) நோக்குகிறது.  காலில் அணிகள் இல்லை.

மேற்குக் குடைவரைக் காவலர்

கிழக்குக் குடைவரைக் காவலர் கதையின் மீது வலது அக்குளை வைத்து அந்தக் கையை தொங்கப் போட்டுள்ளார். இடது கை தொடை மீது உள்ளது. வலது குதிகால் உயர்ந்துள்ளது.


உள்ளே


மகர தோரணத்தின் கீழாக நடு அங்கணத்தின் வழியாக உள் நுழைவோம். தூண்களற்ற மண்டபம். அதன் மேற்கு சுவற்றில் கிழக்கு நோக்கிய கருவறையின் வாயில். அதன் முன் ஒரு அர்த்த மண்டபம். கருவறை வாயிலின் இருபுறமும் வாயிற்காவலர் சிலைகள்.

அர்த்த மண்டபம்

இதை முன்றில், முக மண்டபம், முகப்பு, அந்தராள மண்டபம் என்றும் வெவ்வேறு ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள். இதன் தரை முக மண்டபத்தின் தரையை விட நன்கு உயர்ந்துள்ளது. தூண்களுக்கிடையில் உள்ள தரை மேலும் சிறிது உயர்ந்துள்ளது. முன்னே ஒரு அரைவட்டப் படி (சந்திரக்கல்).

அர்த்த மண்டபம்

முன்னே இரு முழுத்தூண்கள். அவற்றின் கீழ்ப்பகுதிகள் சதுரமாகவும் நீண்ட மேல்பகுதிகள் எண்முகமாகவும் உள்ளன, அவை நான்முக போதிகைகள் தாங்குகின்றன. பின்புறம் இரு தூண்களின் மேல் முழுவதும் சதுரமாக உள்ள இரு அரைத்தூண்கள். அவை மும்முக போதிகைகள் தாங்குகின்றன. அவற்றின் மேல் உத்திரமும், அதன் மேல் வாஜனமும், அதன் மேல் கபோதமும் உள்ளன. கபோதத்தில் கூடுகள், வளைவுகள் இல்லை. முக மண்டபத்தின் சுவர்களின் மேற்புறம் முன்றில் தவிர்த்து வாஜனம் அமைந்துள்ளது.

அர்த்த மண்டபம்

வாயிற்காவலர்

தெற்குக் காவலர்
வடக்குக் காவலர்

இருவருக்கும் ஆயுதம் எதுவும் இல்லை. இடையாடை காட்டப்படவில்லை. ஆபரணங்கள் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறை

கருவறையின் அளவுக்குப் பெரிய ஆவுடையார் உடன் லிங்க பாணம். தாய்ப் பாறையில் செதுக்கப்பட்டதல்ல.


திரு முனுசாமி அதிகாரப் பூர்வமற்ற முறையில் இங்கு பூசை செய்து வருகிறார். அவர் இருப்பால் கதவு திறந்து உள்ளது.

திரு முனுசாமி, பூசாரி

கல்வெட்டுகள்

மகேந்திரன் கல்வெட்டு:
மேற்கு அரைத் தூணின் மேல் பகுதியில் வாயிற்காவல்ர் கோட்டத்தை அடுத்து உள்ளது. "குன்றின் மீதுள்ள சத்ருமல்லேசுவராலயம் எனும் இக்குடைவரைக் கோயில் தம் படைவலியால் அரசர்களை எளியவர்களாக்கிய நரேந்திரனான சத்ருமல்லன் உருவாக்கியது."


தமிழாக்க கல்வெட்டு
அர்த்த மண்டபத்தின் தென்முழுத்தூணின் சதுரத்தில் கிழக்கு நோக்கிய கல்வெட்டு: "தொண்டையந்தார் வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டின் தென்பால் சரம் மிக்க வெஞ்சிலையான அரனுக்கு சத்ருமல்லேசுவராலயம் எனும் இடம் அமைத்தான்"


அதே தூணின் தென்புறக் கல்வெட்டு: "இவ்வூர் பிரம்ம மங்கலவன் செல்வன் சிவதாசன் சொல்லியது"


நந்திவர்மர் கால கல்வெட்டு:
கிழக்கு அரைத்தூணின் மேற்கு முகத்தில் உள்ள கல்வெட்டு,  இக்கோயிலுக்கு செய்யப்பட்ட அறச்செயல் ஒன்றைக் கூறுகிறது.


சமணர் படுகைகள்

வழி காட்டிய சமண சின்ன கல் ஞாபகம் வர, திரு முனுசாமியிடம் விசாரித்தேன். பின்புறம் படிகள் இருப்பதாகச் சொன்னார். மலைக்குக் கிழக்குப் புரத்திலும், வடக்குப் புரத்திலும் பாறைகளில் படிகள் (கால், கை விரல்கள் பற்றும் அளவிற்கு) வெட்டப்பட்டுள்ளன.



மேலே சென்று பார்த்தால் பாறை இடுக்குகளைத் தவிர ஒன்றும் காணவில்லை. வெட்டப்பட்ட கல் படுக்கைகளைக் பார்க்கமுடியவில்லை. காணக்கிடைத்தது கீழே:



நன்றிக்கடன்:

1. மு. நளினி, இரா. கலைக்கோவன்; மகேந்திரர் குடைவரைகள்; அலமு பதிப்பகம்; முதற் பதிப்பு; 2004




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்