அருகர் ஆலயங்கள் நான்கு - தாயனூர், மேல் மலையனூர், வளத்தி, எய்யில்

தமிழ் நாட்டில் உள்ள சமண மதத்தினர் இருவகை.
  1. தமிழ் நாட்டையே தாயகமாகக் கொண்ட தமிழ் சமணர்கள்.
  2. ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து வந்த சமணர்கள்.
தமிழ் சமணர்கள் பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.  பெரும்பாலும் நாயனார், உடையார் என்ற பட்டப்  பெயர் கொண்டவர்கள். பரம்பரையாக கிராம வாழ்க்கை. அருகர் கோயில்களை மையமாகக் கொண்ட சில தெருக்கள்.  விவசாயமே முக்கியத் தொழில். மற்ற கிராம சமுதாயங்களைப் போன்றே கல்வி, வேலை, வியாபாரம் என்று விரிந்தாலும் இன்னும் பழைய கிராம வாழ்க்கை முறையும் தொடரத்தான் செய்கிறது.  

விகாரி ஆண்டு ஆடி மாதம் ஆம் நாள் (15/092019) திருவண்ணாமலையில் இருந்து சீயமங்கலம் சென்றபோது வழியில் தாழனூர், மேல் மலையனூர், வளத்தி, எய்யில் என்ற நான்கு ஊர்களில் பார்த்த அருகர் கோயில்களைப் பார்த்தது பற்றியதுதான் இந்தப் பதிவு.

திருவண்ணாமலை → அவலூர்பேட்டை (25 கிமீ) → தாயனூர் (9 கிமீ) → மேல்மலையனூர் (3.5 கிமீ) → வளத்தி (6 கிமீ)  வரை நேர்ப் பயணம். பின் எய்யில் செல்ல ஒரு வழிமாற்றம். பின் மீண்டும் சீயமங்கலம் நோக்கிப் பயணம். 

தாயனூர் - பெருமாள் கோயில் விளக்குத் தூணும், அருகர் ஆலய மானஸ்தம்பமும்

என்னை இவ்வூரில் நிறுத்தியது சாலையோரப்  பெருமாள் கோயில்.

தாயனூர் பெருமாள் கோயில் 
உட்கோயிலின் கதவு மூடி இருந்தது. பட்டர் வெளியூரில் இருந்து வரவேண்டுமாம். என்னைக் கவர்ந்தது கோயிலின் முன் இருந்த ஒரு பழைய கல் தூண். தற்கால அடித்தளத்தின் மீது நின்றுகொண்டிருந்தது. அடியில் மட்டும் நாகபந்தங்களோடு சதுரமாகவும் நீண்ட இடைப்பகுதி முழுவதும் எண்பட்டையாகவும் மேல்  பகுதி வட்டமாகவும் இருந்தது. அதன் மேல் சதுரமான பீடம் போன்ற அமைப்பு. அருகிலிருந்த மரத்தடியில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தவர்கள் அது விளக்குத்  தூண் என்றனர். தூணின் பக்கங்களில் இருந்த சிறு படிகளில் மூலம் மேலே ஏறலாமாம்.

அதே தெருவில் திரும்பிச் சென்றால் சற்று தூரத்தில் அருகர் ஆலயம். அருகர் ஆலயம் ஜினாலயம் (ஜைன + ஆலயம்) எனப்படுகிறது. இவை திராவிட கட்டடக்கலையை பின்பற்றிக் கட்டப்பட்டவை. முதல் நோக்கில் இந்து கோயில் என்றே தோற்றம் அளிப்பவை. இந்து கடவுளருக்குப் பதிலாக சமண தீர்த்தங்கரர்களும் மற்ற வழிபடு திருவுருக்களும். தமிழகத்து அருகர் கோயில்களில் பெரும்பாலானவை திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலேயே உள்ளன. சிலவற்றைத் தவிர மற்றவை சில, பல  நூற்றாண்டுகள் பழமையானவை. பெரும்பாலும் சமீபத்தில் புதிப்பிக்கப்பட்டுள்ளன.

தாயனூர் ஆதிநாதர் கோயில் 

கோயிலின் முன்னே தமிழ் சமணர்கள் வசிக்கும் தெரு. கோயில் கிழக்கு நோக்கியது. உள்ளே பலிபீடமும் அதன் முன் கொடிமரம் (துவஜஸ்தம்பம்) இருக்கும் இடத்தில் ஒரு உயரமான கல் தூணும். இந்த கல் தூணை 'மானஸ்தம்பம்' என்று அழைக்கின்றனர்.

பலிபீடமும் மானஸ்தம்பமும் 

வளாகத்தின் வடகிழக்குப் பகுதியில் நவகிரகங்கள்!

நவகிரகங்கள் 

அதன் பக்கத்தில் தர்ம தேவி திருமுன் (சந்நிதி).


இந்தக் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தாழனூர் கோயில் கல்வெட்டு 

தாழனூர் கோயில் கல்வெட்டு 

முன் மண்டபம் பழங்காலத் தூண்களுடன் உள்ளது.

தாயனூர் கோயில் முன்மண்டபம் 

கருவறையில் ஆதிநாதர் அமர்ந்திருக்கிறார். ரிஷபநாதர் என்றும் அறியப்படும் ஆதிநாதர் 24 சமண தீர்த்தங்கரர்களுக்குள் முதல்வர்.

கருவறை 

கருவறை விமானமும் திராவிடக் கட்டடக்கலை கூறும் துணைத்தளத்துடன் கூடிய தாங்குதளம் (அதிஷ்டானம்), பாத சுவர் (பித்தி), கூரை (பிரஸ்தரம்), கிரீவம், சிகரம், கலசம் ஆகிய ஆறு உறுப்புகளையும் அவற்றின் உள் உறுப்புகளையும்  கொண்டுள்ளது. இந்த விமானம் மூன்று தளங்களைக் கொண்ட விமானமாக அமைந்துள்ளது.

தாயனூர் விமானம் 

நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் தீர்த்தங்கரர்கள் விமானத்தில் உள்ளார்கள். தரைத் தளத்தின் கோட்டத்திலும் நின்ற நிலையில் தீர்த்தங்கரர் சிலை உள்ளது.

மானஸ்தம்பம் 

கோயிலின் முன்னாள் உள்ள மானஸ்தம்பம் ஒரு துணைத்தளம், அதன்மீது அமைந்த தாங்குதளம், அதன் மீதான தாமரை பீடம் மீது நிறுவப்பட்டுள்ளது. அதன் அடிப் பகுதி சதுரமாக நாகபந்தங்களுடன் உள்ளது. சதுரத்தின் முகங்களில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மானஸ்தம்பத்தின் கீழ்ப் பகுதி 

மானஸ்தம்பத்தின் நீண்ட  இடைப்பகுதி  மூன்று எண்பட்டை இடைக்கட்டுகளால்  நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு பகுதிகள் 8 பட்டை, 16 பட்டை, 32 பட்டை, உருளை வடிவம் கொண்டுள்ளன.

மானஸ்தம்பத்தின் இடைப் பகுதி 

மானஸ்தம்பத்தின் மேற்பகுதி மாலைத்தொங்கல், மாலைஸ்தானம், தாமரைக்கட்டு, கலசம், தாடி , கும்பம், பாலி, பலகை ஆகிய உறுப்புகளால் அழகுறுகிறது. பலகையின் நான்கு முலைகளில் இருந்தும் மணிகள் தொங்குகின்றன. பலகை மேல் ஒரு சிறிய மண்டபமும் அதில் தீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. இந்த மானஸ்தம்பம் தற்காலப் படைப்பு.

மானஸ்தம்பத்தின் மேல் பகுதி 

மானஸ்தம்ப தீர்த்தங்கரர்கள் 

அமர்ந்த நிலையில் 24 தீர்த்தங்கரர்கள் வடிவமும் ஒன்று போலவே இருக்கும். பத்மாசனமாக அமர்ந்த நிலையில் வலது கையை இடது கைமீது வைத்திருப்பர். கண்களை மூடி தியானத்தில் இருப்பர். மார்பில் ஸ்ரீவத்சம் எனும் திருமருவும்,  தலைக்கு மேல் 'முக்குடை'யும் காணப்படும். அவர்கள் அமர்ந்துள்ள பீடத்தில் உள்ள அவர்களது 'லாஞ்சனம்' என்னும் குறியீட்டைக் கொண்டே அடையாளம் காண இயலும்.

கிழக்குத்  தீர்த்தங்கரர் 
கிழக்கில் உள்ள தீர்த்தங்கரர் பீடத்தில் எருது வடிவம் உள்ளது. இது முதல் தீர்த்தங்கரரும் இந்தக் கோயிலின் மூலவரும் ஆன ஆதிநாதர் எனும் ரிஷபநாதர் இன்  லாஞ்சனம் ஆகும்.

ஆதிநாதர் எனும் ரிஷபநாதர் 

அவர் இருபுறமும் இரு பணியாளர்கள் கவரி வீசி நிற்கினறனர்.  தீர்த்தங்கரர்கள் திகம்பரர்கள் - ஆடை அணிகளற்றவர்கள். பணியாளர்களோ ஆடை, அணிகலன்களோடு காணப்படுகின்றனர். மேலே யாளி தோரணம்.

தெற்குத்  தீர்த்தங்கரர் 
தெற்கில் உள்ள தீர்த்தங்கரர் பீடத்தில் பிறை நிலா வடிவம் உள்ளது. இது எட்டாம் தீர்த்தங்கரரான  சந்திரப்பிரபநாதர் இன்  லாஞ்சனம் ஆகும்.

சந்திரப்பிரபநாதர் 

மேற்குத் தீர்த்தங்கரர் 
மேற்கில் உள்ள தீர்த்தங்கரர் பீடத்தில் மான் வடிவம் உள்ளது. இது 16 ஆம் தீர்த்தங்கரரான சாந்திநாதர் இன்  லாஞ்சனம் ஆகும்.

சாந்திநாதர் 

வடக்குத்  தீர்த்தங்கரர் 
வடக்கில் உள்ள தீர்த்தங்கரர் பீடத்தில் சிங்க வடிவம் உள்ளது. இது கடைசி 24 ஆம் தீர்த்தங்கரரான  மகாவீரர் இன்   லாஞ்சனம் ஆகும்.

மகாவீரர் 

இவ்வாறு 1, 8, 16, 24 ஆம் தீர்த்தங்கரர்களை வலமாக வரிசையில் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேல்மலையனூர்

அங்கிருந்து புறப்பட்டு மேல் மலையனூரை அடைந்தேன். சாலையின் ஒரு புறம் ஒரு பழைய பெருமாள் கோயில்.

மேல் மலையனூர் பெருமாள் கோயில் 

பழமையைக் கண்டதும் ஸ்கூட்டர் தானாகவே அதன் பக்கம் திருப்பியது. கோயில் மூடி இருந்தது. சாலையின் மறுபக்கம் ஒரு சமண ஆலயம்.

மேல் மலையனூர்சமண ஆலயம் 

மேல் மலையனூர் சமண ஆலயம் - வாயில்  

மேல் மலையனூர் சமண ஆலயம் - மண்டபம் 

அன்று ஆவணி அவிட்டம்.  ஆடியிலேயே வந்து விட்டது! கோயிலில் யாகம் நடந்துகொண்டிருந்தது. உள்ளூர் சமணர்கள் பூணூல் மாற்றிக்கொண்டிருந்தனர். பயணத்தைத் தொடர்ந்தேன்.

வளத்தி

வளத்தியில் நுழைந்த உடன் வலது பக்கம் அருகர் ஆலயத்தைக் கண்டேன். 'ஸ்ரீ 1008 ஆதிபகவான் ஜினாலயம்'.

வளத்தி ஸ்ரீ 1008 ஆதிபகவான் ஜினாலயம் 

அங்கு ஆவணி அவிட்ட சடங்குகள் நடந்து முடிந்திருந்தன. வயதான அர்ச்சகர் வழிபாடு செய்வித்தார்.

வளத்தி அருகர் ஆலயம் மானஸ்தம்பம், பலி பீடம் 

மானஸ்தம்பம் தாயனூரைப் போல கீழிருந்து மேலாக 4, 8, 16, 32 பட்டைகளும் உருள்  வடிவமும் அதன் மேல் மாலைத்தொங்கல் முதல் பலகை வரையான உறுப்புகளும் பலகை மீது ஒரு மண்டபமும் பெற்றுள்ளது.

கீழுள்ள நான்கு முகங்களில் நான்கு தீர்த்தங்கரர்கள் புடைப்புச் சிற்பமாக உள்ளனர் - கிழக்கிருந்து வலமாக ரிஷபநாதர், அஜிதநாதர், சம்பவநாதர், அபிநந்தனநாதர் ஆகிய முதல் நான்கு தீர்த்தங்கரர்கள் அமர்ந்த நிலையில் உள்ளனர். அவர்களது தாமரைப் பீடங்களில் உள்ள அவர்களது லாஞ்சனங்களான எருது,  யானை, குதிரை, குரங்கு என்பன அவர்களை அடையாளம் காண உதவுகின்றன. 4, 8, 16 பட்டைகளின் அடிப்பாகங்களில் திசைக்கு ஒருவராக நான்கு நான்கு தீர்த்தங்கரர்கள். மேலே உள்ள மண்டபத்தில் நான்கு, அதன் சிகரத்தில் நான்கு தீர்த்தங்கரர்கள். இவ்வாறு 24 தீர்த்தங்கரர்களும் மானஸ்தம்பத்தில் உள்ளனர்.

சதுரம் ரிஷபரும் அபிநந்தனரும் 

எண்பட்டை 

16 

32 

பலகை மேல் சிறு கோயில் 

எய்யில்

சீயமங்கலம் போக வளத்தியில்  செஞ்சி-சேத்துப்பட்டு சாலையில் திரும்பி  பயணம் செய்தபோது குறுக்கிட்டது 'எய்யில்  6 கிமீ' என்ற அறிவிப்புக் கல். அந்த ஊர் என் அன்றைய பயண திட்டத்தில் இல்லை, ஆனால் பார்க்க வேண்டி குறித்திருந்த இடங்களுள் ஒன்று. மூன்று அருகர் ஆலயங்களைக் பார்த்ததன் தொடர்ச்சியாக இதையும் பார்த்து விடலாம் என ஸ்கூட்டரை திருப்பினேன். வளைந்து நெளிந்து சென்றது ஒற்றைச் சாலை.

எய்யில் அருகர் கோயில் 

மானஸ்தம்பம் தாயனூரைப் போல கீழிருந்து மேலாக 4, 8, 16, 32 பட்டைகளும் உருள்  வடிவமும் அதன் மேல் மாலைத்தொங்கல் முதல் பலகை வரையான உறுப்புகளும் பலகை மீது ஒரு மண்டபமும் பெற்றுள்ளது. கீழுள்ள நான்கு முகங்களில் கிழக்கிருந்து  வலமாக முதல் நான்கு தீர்த்தங்கரர்கள் அமர்ந்த நிலையில் உள்ளனர். வளத்தி போலன்றி தூணின் மற்ற பட்டைகளில் உருவங்கள் இல்லை. தூண் மேலுள்ள கோயில் சிற்பத்தில் நின்ற நிலையில் நான்கு தீர்த்தங்கரர்கள் உள்ளார்கள். சிகரத்தில் இல்லை.

கிழக்கு முகத்தில் ரிஷபரும் ரிஷப லாஞ்சனமும் 

வடக்கு முகத்தில் அபிநந்தனநாதரும் குரங்கு லாஞ்சனமும் 
தூண் மீதான கோயிலில் நின்ற நிலையில் தீர்த்தங்கரர்கள் 

உள் கோயில் பூட்டப்பட்டு இருந்தது. நான்  சீயமங்கலத்தை நோக்கிச் சென்றேன்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்