கணிகிலுப்பை

சிறப்பு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தர் சிலை 

பயணம் 

இரண்டு நாள் திருவண்ணாமலை -  சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள்  -26/08/2019) செய்யாறிலிருந்து பயணத்தைத் தொடங்கினேன். சென்ற முதல் இடம் கனிகிலுப்பை. செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில்  செய்யாறை அடுத்து சில கிமீ மோசமாக இருந்தது. தார் சாலையே இல்லாமல் ஜல்லி சாலையாக இருந்தது. வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை அடைந்து சிறிது தூரத்தில் நரசமங்கலம் அருகில் வலது புறம் பிரியும் ஒற்றைச் சாலையில் பயணம் செய்து புத்தர் வீற்றிருக்கும் பிள்ளையார் கோயிலை அடைந்தேன்.

கணிகிலுப்பை விநாயகர் கோயில் 

புத்தர் சிலை 

ஆலயத்தின் முன் இறக்கப்பட்டுள்ள தாழ்வாரத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

கணிகிலுப்பை புத்தர் 

மூன்று சிங்கங்களால் தாங்கப்படும் ஆசனத்தின் மீது அரைத் தாமரை இருக்கையில் (அர்த்த பத்மாசானம்) அமர்ந்திருக்கிறார் புத்தர். ஆசனத்தின் முதுகுப்புறம் இரு பக்கங்களிலும் மேலுமாக மூன்று சட்டங்களால் அணைக்கப்பட்டு நீள திண்டு ஒன்றை கொண்டுள்ளது. ஆசனத்தின் உயரம் அவரது நெஞ்சு வரை உள்ளது. 

அவரது தலையைச் சுற்றி பிரபை. சுருள் முடி, நீண்ட காதுகள்.  அமைதியும் நிமிர்வும் ததும்பும் முகம்.  வலக்கையை இடக்கை மீது வைத்து இரு கைகளும் மேல் நோக்கியிருக்க மடி மீது வைத்துள்ளார். 

சமண மதத்தின் ரிஷபநாதர் முதல் மகாவீரர் வரையான 24 தீர்தங்கர்களின் அமர்ந்த நிலைச் சிற்பங்களும் மேற்கண்டவாறே அமையும், சிம்மாசனம் உள்பட.  பின் எவ்வாறு இதை புத்தர் சிலை என்பது? 
  1. இச்சிலையை உற்று நோக்கினால் இடது தோளில் இருந்து மார்பை மூடி வலதுபுறம் செல்லும் மெல்லிய மேலாடை தென்படுகிறது. ஒரு துண்டு இடது தோளில் இருந்து தொப்புள் வரை உள்ளது. காலில் கணுக்கால் வரை ஆடை காட்டப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களோ ஆடை அணிகள் எதுவும் அற்ற திகம்பர்கள். 
  2. சிலையின் தலையில் உள்ள உஷ்னிஷா காணப்படும் கொண்டை புத்தருக்கே உரியது.
பின்புலம் (*)

கிபி ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பக்தி இயக்கத்தால் சைவமும் வைணவமும் வளரும் வரை காஞ்சியில் பௌத்தம் சிறப்பான நிலையில் இருந்துள்ளது. கிபி 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சி வந்த சுவான் சாங் (யுவான் சுவாங்) இதைப் பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து 17 கிமீ தூரத்தில் உள்ள கணிகிலுப்பையில் உள்ள புத்தர் சிலை இவ்வரலாற்றின் எச்சமாக திகழ்கிறது.

முன்னர் ஏரிக்கரையில் இருந்த இச்சிலை திருடப்பட்டு காவல்துறையால் மீட்கப்பட்டு இந்த விநாயகர் கோயிலில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது(*)(#). ஊர் மக்கள் இந்த கோயிலை பள்ளிச்சந்தம் என்று அழைக்கின்றனர்.

இன்னொரு சிலை 

புத்தர் சிலையின் இடதுபுறம் இன்னொரு சிலை உள்ளது. அண்மையில் விளைநிலத்தில் கிடைத்தது.* 

கணிகிலுப்பை  2 ஆம் சிலை 

இந்தச் சிலை சேதமடைந்து மழுங்கி உள்ளது அல்லது முழுமையாக வடிக்கப்படவில்லை. உருவம், நிலை ஆகியவை புத்தர் சிலையை ஒத்துள்ளது. அதைப் போலவே தலையில் மேல் கொண்டையும் பிரபையும் தெரிகின்றன. ஆனால் இடது பக்கத்தில் ஒரு உருவம் வலது கையையும் மடித்த இடது காலையும் உத்தமரை நோக்கி நீட்டியபடி உள்ளது போல தெரிகிறது. பிரபைக்கு மேல் பந்து போன்ற புடைப்பு ஒன்று உள்ளது. இது புத்தரா, தீர்த்தங்கரரே, தீர்த்தங்கரர் என்றால் யார் என்பது தெளிவில்லை. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இது மகாவீரர் என்கிறது.(*)

தர்மசக்கரக் கல் 

கோயில் உள்ள தெருவின் முடிவில் ஒரு கற்பலகை உள்ளது. அதில் தர்மச்சக்கரமும், அதன் மேல் பூரண கலசமும்,கோபுர வடிவில் ஸ்தூபமும், பக்கங்களில் சாமரங்கள், சம்மட்டி, ஏர்க்கொழு ஆகியவையும் உள்ளது. அடியில் 'புத்தஸ்ரீ ' என்ற கிரந்த மொழி கல்வெட்டு திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (*) நான் இந்த கற்பலகையை பார்க்க இயலவில்லை. 


நன்றிக்கடன் 

* திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்