ஆவூர் - 2 - அகத்தீசுவரர் கோயில்

சிறப்பு 

ஆவூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சோழர் காலக் கோயில்கள் உள்ள மற்ற இடங்கள்:

  1. திருவண்ணாமலை
  2. தாமரைப்பாக்கம்
  3. திருமலை
  4. பழங்கோயில்
  5. செங்கம்
  6. திருவோத்தூர் 
  7. பிரம்மதேசம் 
  8. கூழமந்தல் 
  9. மடம் 
பயணம் 

விகாரி ஆண்டு ஆவணி மாதம் மூன்றாம் நாள் (20/08/2019) ஆவூர் குடைவரைக் கோயிலைக் காணச் சென்றேன். சோழர் கால அகத்தீசுவரர் திருக்கோயிலைப் பற்றி நான்  அறிந்திருக்கவில்லை. இந்த சிவாலயத்தைக் கண்டது ஒரு தற்செயல்தான். ஆவூரை அடைந்தபோது சாலையிலிருந்து ஒரு பழைய கோயில் தென்பட்டது.

சாலையிலிருந்து 

அதுதான் நான் தேடிவந்த குடைவரைக் கோயிலாக இருக்கும் என எண்ணி வழிகேட்டு அங்கு சென்றேன். அதுதான் இந்தக் கோயில். வாயில் தெற்கு நோக்கி இருக்கிறது.

வாயில் 

மூடிவைக்கப்பட்டிருந்த கேட்டோடு சிறிது நேரம் போராடித் திறந்து உள்ளே போனேன். சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்த கோயில்.(*) மதிற் சுவரோரம் ஆங்காங்கே இடிந்த தூண்களும், இடிபாடுகளும் கிடந்தன.

இடிபாடுகள் 

கோயில்

இந்த இடிபாடுகளில் இருந்து பாகங்களைப் பொறுக்கி எடுத்து கோயிலையும் பக்கத்தில் உள்ள அழகிய, நுண் வேலைப்பாடுகளோடு பொலியும் கல்யாண மண்டபத்தையும் சிறப்பாக மீளுருவாக்கம் செய்துள்ளனர் அறநிலையத் துறையும், இந்திய தொல்லியல் ஆய்வகமும்.. 2019 நவம்பர் மாதம் குடமுழுக்கு நடைபெற்று தற்போது அரசு ஒரு வேளை பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைபெற்று வருகிறது.

கோயிலின் பின்புறத் (மேற்குப் பக்கம்) தோற்றம் 

பின்புறமுள்ள மூன்று திருமுன்கள் (சந்நிதிகள்) வலது இடமாக முறையே விநாயகர், முருகர், ஆனந்தவல்லி அம்மன் ஆகியோருக்கானதாகும். நடுவில் உள்ள உயரமான விமானம் மூலவர் அகத்தீசுவரர் திருமுன்னுடையது. இக்காட்சி மேற்குப் பக்கத்திலிருந்து கிடைப்பது. கோயில் கிழக்கு நோக்கியது.

கோயிலின் முன்புற (கிழக்குமுகக்) காட்சி

வலதுபுறம் தனியாக உள்ள மண்டபம் மறுநிர்மாணம் செய்யப்பட்ட கல்யாண மண்டபம். கோயிலின் முன் நந்தி, பலிபீடம். வடகிழக்கு முலையில் நவகிரகங்கள்.

நந்தி, பலிபீடம்

முன் படிகளின் பக்கத்தில் யாளி படிச்சுவர்.

யாளி படிச்சுவர்

அகத்தீசுவரர் திருமுன்

அகத்தீசுவரர் கருவறை வாயிலில் புதிதாய் நிருபவப்பட்ட வாயிற்காவலர்கள்.

வாயிற்காவலர்கள் 

அகத்தீசுவரர் கருவறையின் முன் மண்டபம் எளிய உருளைத் தூண்கள் வெட்டுப்போதிகைகள் கொண்டுள்ளது. கருவறையில் உள்ள லிங்கம் புதைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.(*)

அகத்தீசுவரர் கருவறை 

திருச்சுற்று மண்டபம்

கருவறையின் நான்கு பக்கமும் (வடகிழக்குப் பகுதி தவிர) அகலமான சுற்று மண்டபம் உள்ளது. மண்டபம் மூன்று சதுரங்களையும் இடையே இரு எண்கோணக் கட்டுகளையும் உடைய தூண்களைக் கொண்டுள்ளது.

சுற்று மண்டபம் - தெற்குப் பகுதி 

தூண்களின் சில சதுரங்களில் சிற்பங்கள், இலைக்கருக்கு அணிகள் காணப்படுகின்றன.

சுற்று மண்டப தூண் சிற்பம் 

வழியில் உள்ள ஒரு அறிவிப்புப் பலகை கோயிலின் புராணங்களைக்  கோடி காட்டுகிறது.

திருச்சுற்றில் அறிவிப்புப் பலகை 

துணைச் சன்னிதிகள்

திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் விநாயகர், முருகர், ஆனந்தவல்லி அம்மன் திருமுன்கள் (சந்நிதிகள்) கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

விநாயகர் திருமுன்  

முருகர் திருமுன்  

ஆனந்தவல்லி அம்மன் திருமுன் 

திருச்சுற்றின் வடபுறம் கருவறையின் நீர்த் தூம்பைச் சுற்றி உள்ள சிறிய கல்கட்டுமானம் கண்ணைக் கவர்ந்தது.

நீர்த்தூம்புத் தொட்டி 

கருவறையின் கட்டுமானம்

கட்டுமான அமைப்பு 

ஜகதி, உருள் குமுதம், யாளிவரியுடன் பிரதிபந்தமாக அமைந்துள்ளது.  யாளி வரியின் மேல் வேதிகைத் தொகுதி. சுவர் பகுதியில் தூண்கள், கோட்டங்கள். கோட்டத்தின் இருபுறமும் அதன் தூண்கள். மேலே தோரணச் செதுக்கல். கோட்டங்களில் உள்ள இறைச் சிற்பங்கள் தற்காலத்தவை. தூண்களின் மேல் உத்தரம், வாஜனம், வலபி, போதிகை.

கல்யாண மண்டபம் 

மையக் கோயிலின் வடபுறம் அமைந்துள்ளது. இடிந்துபோன மண்டபத்தின் பகுதிகளை எடுத்துப் புதிதாக உருவாக்கப்பட்ட மண்டபம். அதன் கலை எழிலுக்கு ஒரு மாதிரி. மிகவும் நுணுக்கமாக, வெற்று இடமென ஏதும் இன்றி அணிசெய்துள்ள விந்தை பரவசப்படுத்துவது.

கல்யாண மண்டபம் 

மண்டபத்தின் நடுவில் தாங்குதள, துணைத்தளங்களைக் கொண்ட ஒரு நாற்சதுர மேடை உள்ளது. தாங்குதள கபோதங்களை கணங்களும் சிங்கங்களும் தாங்குவது போலவும், துணைத்தள கபோதங்களை நாகங்கள், யானைகள், நாக தேவர்கள் தாங்குவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மண்டப மேடை 

உத்திரம், அதன் மேலுள்ள வாஜனம் , வலபி ஆகியவற்றின் உட்புறம் வெளிப்புறம் இரண்டையும்  சிற்பங்கள் அழகு செய்கின்றன.

மண்டபத்தின் மேல் உறுப்புகளில் சிற்பங்கள் 

மண்டபத்தின் மேல் உறுப்புகளில் பல அடுக்குச் சிற்பங்கள்

நடுவில் உள்ள மேடையின் மேலுள்ள கூரையில் தாமரையை மையமாகக் கொண்டு ஒரு சதுர வடிவ அலங்காரச் செதுக்கல்.

கூரை அலங்காரம் 

தூண்கள் பொதுவாக பாதபந்தமான தாங்குதளம், மூன்று சதுரங்கள், 16 பட்டை கட்டுகள், அவற்றில் 8 பட்டை இடைக்கட்டுகள், நாகபந்தம் போன்ற சிற்றுறுப்புகள் கொண்டுள்ளன. எல்லா சதுரங்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கட்டுகள், இடைக்கட்டுகள் வெவ்வேறு விதமாக அணி செய்யப்பட்டுள்ளன.

தூண் 

பின்வரிசையின் நடுவிலுள்ள இரு தூண்கள் இந்த பொது அமைப்பையும் விஞ்சும் வேறு விதமான கலைப்படைப்புகளாக அமைந்துள்ளன.


தூண்களில் உள்ள சதுர முகங்களில் உள்ள சில சிற்பங்கள்:


கல்வெட்டுகள்

கருவறை சுவர்களிலும், குமுதம் போன்ற பகுதிகளிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள   28 கல்வெட்டுகளில் ராஜராஜசோழன், பாண்டிய அரசர்கள், பல்லவ மன்னர்கள், ஹொய்சாள மன்னர்கள், விஜயநகர மன்னர்கள்,     சம்புவராயர், கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் கால கல்வெட்டுகள் உள்ளன.(*) 

அவற்றில் மிகப் பழமையானது கிபி 1009 ஆம் ஆண்டு ராஜராஜசோழரின் கல்வெட்டு. அது இவ்வூர்ப் பெயரரை வாணகோப்பாடி பெண்ணை வடகரை ஆவூர் எனவும், இந்த கோயில் இறைவனை 'ஆவூர் திருமடப்பாறை உடையார்' எனவும் குறிப்பிடுகிறது.(#). கி.பி. 1271-ல் ஆவூர் திருவகட்டீஸ்வரமுடைய நாயனார் கோவில் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.(*).  

இக்கோயிலின் பெரிய மதில்சுவர்கள் ஹொய்சாள மன்னர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை அவர்கள் அரசச் சின்னம் கண்டப்பேரண்டப் பட்சியின் உருவம் தெற்கு மதில் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளதில் இருந்து அறியலாம்.(#)

ஒரிசா மன்னன் கஜபதியின் படையெடுப்பில் இக்கோயில் சிதைவுற்றது.(#). விஜயநகர அரசன் சாளுவ நரசிங்க தேவனின் (கிபி 1452-1492) அதிகாரியான அன்னமரசன் இக்கோயிலைப் புதுப்பித்து கலையழகு மிக்க கலியாண மண்டபத்தையும் கட்டினார். (#)

கோயில் குளம் 

கோயில் மதிலில் கிழக்கில் ஒரு சிறு வாசல் உள்ளது. அந்தப் பக்கம் கோயிலின் குளம் கரைகள், படிகள் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. எதிர்பாராமல் இக்கோயிலைக் கண்டு நிறைந்த என் மனம் போல குளமும் பக்கத்து எரியும் நீர் நிறைந்து குளத்தில் செவ்வல்லி பூத்திருந்தது.

கோயில் குளம் 
கோயில் சுவரில் இருந்த ஒரு அறிவிப்பு இதன் பெயர் மகாதேவ தீர்த்தம் என்றும் இது 3000 ஆண்டுகளுக்கு முன் தேவர்களால் தோற்றுவிக்கப்பட்டு தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சான்றோர் ஆகியோர் இந்தப் புனிதமான தீர்த்தத்தில் நீராடி மகிழ்ந்தனர் என்றும் தெரிவிக்கிறது. இந்தக் குளம் இதுவரை வற்றியதே இல்லை என்று கூறப்படுகிறது.(*)

நன்றிக்கடன் 

https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2016/09/13083012/1038494/thiruvathikathe-eswarar-temple.vpf

(#) டாக்டர் இல தியாகராஜன்; வேட்டவலம் வரலாறு; முதற் பதிப்பு; 2014; பக்கம் 261-262.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்