மண்டகப்பட்டு - லக்ஷிதாயதனம் - விசித்திரசித்தன் நிகழ்த்திய விந்தை

அறிமுகம்

தமிழகத்தில் கோயில் கட்டிடக் கலையில் ஒரு பெரும் திருப்புமுனை கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது. அதற்குமுன் கோயில்கள் செங்கல், மரம், உலோகம், சுதை கொண்டு கட்டப்பட்டு வந்தன. அத்தகைய ஆலயங்களைத்தான் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரும், ஞானசம்பந்தரும் பாடினர். அவற்றுள் சில காலத்தால் அழிந்தன. சில பிற்காலத்தில் கற்றளிகளாக (குறிப்பாக சோழர் காலத்தில்) மாற்றப்பட்டன.  

அவை இல்லாமல் தமிழகத்தில் முதன் முறையாக கல்லினால் ஒரு குடைவரை ஆலயத்தை மண்டகப்பட்டில் நிர்மாணித்தான் விசித்திரசித்தன். பிரம்மா, ஈசுவரன், விஷ்ணு ஆகிய முத்தெய்வங்களுக்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் பெயர் 'லக்ஷிதாயதனம்'.

காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிற்கால பல்லவர்களில் இரண்டாம் அரசனும், முதல் அரசன் சிம்மவிஷ்ணுவின் மகனுமான முதலாம் மகேந்திர வர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றுதான் 'விசித்திரசித்தன்' என்பது. 'லக்ஷிதன்' அவரது பட்டப்பெயர்களில் இன்னொன்று. 'லக்ஷிதா' என்றால் 'தலை சிறந்த நோக்கை உடைய' என்று பொருள். (5)

இயற்பெயர்களை தவிர்த்துப் பட்டப்பெயர்களை பயன்படுத்தும் திராவிட அரசியல் பண்பாட்டின் முன்னோடி முதலாம் மகேந்திர வர்மன் (ஆட்சி காலம் கி.பி. 590-630). தமிழக மன்னர்கள் பல பட்டப்பெயர்களைச் சூடி பெருமிதம் கொள்வதை தொடங்கி வைத்ததும் அவர்தான் (3). அவர் நிர்மாணித்த குடவரைகள் என நிச்சயமாக அறியப்பட்டுள்ளவை ஏழு. அவற்றை நிர்மாணித்தவர் எனவும், அவற்றின் பெயர்களிலும் தனது பட்டப் பெயர்களை பயன்படுத்தி இருக்கிறார் முதலாம் மகேந்திரர். விசித்திரசித்தன், லக்ஷிதன், அவனிபாஜன், சத்ருமல்லன், லலிதங்குரன், குணபரன் என முதலாம் மகேந்திரர் பெற்றிருந்த பட்டப்பெயர்கள், பத்து அல்லது இருபது அல்ல, நூற்று இருபத்து ஒன்பது! (3)


இடம்
மாவட்டம்
பெயர்
நிர்மாணித்தவர் பெயராக
1
மண்டகப்பட்டு
விழுப்புரம்
லக்ஷிதாயதனம்
விசித்திர
சித்தன்
2
பல்லாவரம்
செங்கல்பட்டு
-
-
3
மாமண்டூர்
திருவண்ணா
மலை
-
-
4
மகேந்திரவாடி
வேலூர்
மகேந்திர
விஷ்ணுகிரகம்
குணபரன்
5
சீயமங்கலம்
விழுப்புரம்
அவனிபாஜ
பல்லவேசுவர 
கிரகம்
லலிதாங்குரன்
6
தளவானூர்
விழுப்புரம்
சத்ருமல்லே
சுரம்
-
7
திருச்சிராபள்ளி
திருச்சிராப்
பள்ளி
லலிதாங்குர
பல்லவேசுவர
கிரகம்
லளிதாங்குரன்
(11)

இடம்:

மண்டகப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். செஞ்சி -  விழுப்புரம் சாலையில் செஞ்சியிலிருந்து 19 கிமீ, விழுப்புரத்தில் இருந்து 23 கிமீ தூரத்தில் உள்ளது.

பயணம்:

விகாரி ஆண்டு ஆடி மாதம் 21 ஆம் நாள் (05/08/2019) காலை இந்த தளத்திற்கான முதல் பயணத்தை திருவண்ணாமலையிலிருந்து தொடங்கினேன், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் புதிதாக வாங்கிய ஹெல்மட்டை அணிந்துகொண்டு.

செஞ்சிக் கோட்டை இந்திய தொல்லியல் துறை (ASI) அலுவலகத்தில் தமிழ் நாட்டில் (ASI) பாதுகாக்கும் இடங்களைப் பற்றிய மாவட்டவாரியான பட்டியல், அறிமுகம், படங்கள் அடங்கிய ஆங்கிலக் கையேடு (இலவசம்), World Heritage Series என்ற தொடரில் வெளியிட்டுள்ள கைஏடுகள் சிலவற்றையும் (விலையில் 40% கழிவு) வாங்கினேன். செஞ்சி-விழுப்புரம் சாலையில் திரும்பினேன். நல்ல நெடுஞ்சாலை. சில கிமீ தொலைவில் அப்பம்பட்டு என்ற ஊர். 'முட்டை மிட்டாய்' என்ற பெயர் பலகைகள் கவனத்தை ஈர்த்தன. பால்கோவா, நெய், முட்டை கலந்து கேசரி பொடியால் நிறம் பெற்ற இனிப்பு. சுவையாக இருந்தது.

மண்டகப்பட்டு சாலை செஞ்சி -  விழுப்புரம் நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் இடத்தில் ஒரு நுழைவு வளைவு கட்டப்பட்டுள்ளது. மண்டகப்பட்டு செல்லும் சாலை 1991 இல் மண் சாலையாக இருந்துள்ளது. இப்போது நல்ல சாலை. பிரதமரின் கிராமப்புற சாலை திட்டத்தின் பயன்.

செஞ்சி-விழுப்புரம் சாலையிலிருந்து
மண்டகப்பட்டு சாலை பிரியும் இடத்தில் நுழைவு 

குடவரை வளாகம் நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 3/4 கிமீ. முதலில் தெரிந்தது மலையின் பின்புறம்தான்.

சாலையிலிருந்து மலையின் பின்பக்கம்

மணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணின் விவரங்கள் தெரிந்து, புகைப்படம் பார்த்துவிட்ட பின்னரும், முதலாக நேரில் பார்க்கச் செல்லும்போது ஏற்படும் ஆவலுடனும் படபடப்புடனும் வளாகத்தினுள் நுழைந்தேன். அங்கிருந்து குடைவரைக் கோயிலை அடைய ஒரு மண் சாலையில் மலையைச் சுற்றிகொண்டு செல்லவேண்டியுள்ளது. வழியில் கண்ணில் பட்ட ஒரு பாறை:



குடவரைக் கோயில் நோக்கு:

வடக்கு நோக்கிய குடைவரைக் கோயில். அதன் முன் உள்ள ஒரு தற்கால சிறு கோயில் கிழக்கு நோக்கியுள்ளது.


மகந்திரரின் மற்ற 6 குடைவரைக் கோயில்களுள் 3 தெற்கு நோக்கியும், இரண்டு கிழக்கு நோக்கியும், ஒன்று மேற்கு நோக்கியும் உள்ளன.



இடம்
குகைக் கோயில்
நோக்கு
கருவரை
நோக்கு
இறைவன்
1
மண்டகப்பட்டு
வடக்கு
வடக்கு
மூவர்
2
பல்லாவரம்
தெற்கு
தெற்கு
தெரியவில்லை
3
மாமண்டூர்
கிழக்கு
கிழக்கு
தெரியவில்லை
4
மகேந்திரவாடி
கிழக்கு
கிழக்கு
திருமால்
5
சீயமங்கலம்
மேற்கு 
மேற்கு 
சிவன்
6
தளவானூர்
தெற்கு
கிழக்கு
சிவன்
7
திருச்சிராப்
பள்ளி
தெற்கு
கிழக்கு
சிவன்
(11)

அமைப்பு



தரையிலிருந்து சுமார் 6 அடி உயத்தில் அமைந்துள்ளது இந்தக் குடைவரக் கோயில். 12 தூண்கள் கொண்ட மண்டபம். .முன்னே இருபுறமும் வாயிற்காவலர் புடைப்புச் சிற்பங்கள். பின்புறத்தில் மூன்று கருவறைகள்.

தூண், கூரை உறுப்புகள்:


மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும் 'சதுரம்' ஆகவும், 'கட்டு' எனப்படும் நடுப்பகுதி எண்கோணமாகவும் உள்ளது. மேல் சதுரத்தைவிட கீழ் சதுரம் உயரமானது.

போதிகை தூணின் மேல் உள்ள இருபுறமும் விரிந்த அமைப்பு. கால் வட்ட வடிவம் மகேந்திரர் கால அமைப்பு.

போதிகைகளின் மேல் நீண்டிருப்பது உத்திரம். உத்திரத்தின் மேல் சற்று வெளியே நீட்டிக்கொண்டு கூரையின் கரை போல உள்ள உயரம் குறைந்த அமைப்பு வாஜனம்.

வாஜனத்திற்கு வெளியே கூரை சமன்செய்யப்பட்டு கபோதகம் ஆக உள்ளது. ஆனால் அது வெளிப்புறம் அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை.

தூண்களின் வகைகளும் வரிசையும்:

லக்ஷிதாயதனம் வரைபடம்

மூன்று வரிசை தூண்கள். ஒவ்வொரு வரிசையிலும் நான்கு தூண்கள்.

தூண்களில் இரு வகை.
1. முழுத் தூண்கள் (Pillar) - தனித்து நிற்பவை
2. அரைத் தூண்கள் (Pilaster) - சுவரோடு ஒட்டி வெளிநீட்டிக்கொண்டிருக்கும் பாதி தூண்கள்.

முகப்பில் நடுவில் இரு முழுத்தூண்கள். இருபக்கங்களிலும் ஒவ்வொரு அரைத்தூண். நான்கு தூண்களுக்கு இடையே மூன்று திறப்புகள் (அங்கணங்கள்). அரைத்தூண்களுக்குப் வெளிப்புரத்தில் வெட்டப்பட்டுள்ள கோட்டங்கள். அவற்றில் வாயிற்காவலர் (துவாரபாலகர்) சிற்பங்கள். கோட்டங்களின் வெளிப்புரத்தில் அரைத்தூண்கள். ஆக முகப்பு வரிசையில் இரு முழுத்தூண்கள். நான்கு அரைத்தூண்கள் என ஆறு தூண்கள்.

இரண்டாம் வரிசையிலும் நடுவே இரு முழுத்தூண்கள். இரு பக்கங்களிலும் உள்ள சுவரை ஒட்டி ஒவ்வொரு அரைத்தூண். மூன்றாம் வரிசையில் பின்புறச் சுவரை ஒட்டியுள்ள  நான்கு தூண்களுமே  அரைத்தூண்கள்.

முழுத்தூண்கள் நான்கும்,  முகப்பு வரிசையின் இரண்டு உள் அரைத் தூண்களும், பின் வரிசையின் இரண்டு உள் அரைத்தூண்களும் 'சதுரம், கட்டு, சதுரம்' என்ற அமைப்பைக் கொண்டுள்ளன. 

மற்ற ஆறு அரைத் தூண்களும் (முகப்பு, நடு, பின் வரிசைகளின் வெளித் தூண்கள்) மேலிருந்து கீழ்வரை முழுவதும் சதுரமாக 'கட்டு' இன்றி உள்ளன.

முதல் வரிசை அரைத்தூணின் 'சதுரம், கட்டு, சதுரம்' அமைப்பு
இரண்டாம் வரிசை அரைத்தூணின் ஒரே சீரான சதுர அமைப்பு.
உத்தரமும் வாஜனமும்
மூன்றாம் வரிசை நடு அரைத் தூண்களும், நடு கருவறையும்

நடுவரிசைத் தூண்களில் பலகை என்னும் உறுப்பு போதிகைக்கும் மேற் சதுரத்திற்கும் இடையில் காட்டப்பட்டுள்ளது. (11)



மண்டபம்

மண்டபம் 22' நீளமும் 15 1/2 அடி அகலமும் உடையது. இரண்டாம் வரிசைத் தூண்கள் மண்டபத்தை இரண்டாகப் பிரிக்கின்றன. முன்னே உள்ள இடம் முக மண்டபம், பின்னே உள்ள இடம்  அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தின் தரை முக மண்டபத்தின் தரையைவிட சற்று உயர்ந்து இப்பிரிப்பை உறுதி செய்கிறது. இரு மண்டபங்களின் கூரைகளின் நாற்புறமும் வாஜனம் அழகு செய்கிறது.

கல்லானாலும் கசிவைத் தவிர்க்கமுடியவில்லை. முன்னாள் மழை நீர் அர்த்த மண்டபத்தின் மேற்குச் சுவரிலும் தரையிலும் ஒழுகி இருந்தது.

அர்த்த மண்டபத்தில் ஒழுகிய நீர்
கருவறைகள்:

மூன்றாம் வரிசையிலுள்ள நான்கு அரைத் தூண்களுக்கு இடையே மூன்று கருவறைகளின் நுழைவாயில்கள் உள்ளன. வாயிலில் மேலும் கீழும் துளைகள் உள்ளன. கதவுகள் இருந்திருக்கலாம். கருவறையின் தரை அர்த்த மண்டபத்தின் தரையைவிட சற்று உயர்ந்துள்ளது.

மூன்று கருவறைகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முத்தெய்வங்களுக்கு உரித்தானவை என்பது கல்வெட்டுச் செய்தி. கருவறை மற்ற இரண்டு கருவறைகளையும்விடச் சற்றே பெரியது (நீளம் 32" x அகலம் 46").   எந்த கருவறை எவ்விறைக்காக என்று தெரியவில்லை.

கருவறைகளில் தற்போது எந்த இறையுருவும் இல்லை. மூன்று கருவறைகளிலும் தரையில் மூன்று குழிகள் உள்ளன. அவற்றில் இறைதிருவுரு சொருகி வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது சுவற்றில் ஒவியமாக வரையப்பட்டிருக்கலாம்.


கிழக்குக் கருவறை
கருவறைத் தரையில் குழி.

மேற்குக் கருவறை
முக மண்டபத் தரையைவிட அர்த்த மண்டபத் தரை உயர்ந்துள்ளது.
அர்த்த மண்டபத் தரையைவிடக் கருவறைத் தரை உயர்ந்துள்ளது.
சுவரோர அரைத்தூணின் போதிகை உடைந்துள்ளது.

வாயிற்காவலர்கள் (துவாரபாலகர்கள்)

கிழக்கு வாயிற்காவலர்:


கிழக்கு வாயிற்காவலர்

கிழக்குக் கோட்டத்தில் உள்ள வாயிற்காவலர் சடை முடி (ஜடாமகுடம்), பனையோலைக் (பத்ர) குண்டலங்கள், சரப்பளி என்ற கழுத்தணி,  3 சுற்று கேயூரம், 3 கைவளைகள், முப்புரிநூல், அரைப்பட்டிகை (உதரபந்தம்), இடையாடை அணிந்துள்ளார். அணிகள் சதுரங்களாக வெட்டப்பட்டு அழகு படுத்தப்பட்டுள்ளன. கண்களை வாயிற்காவலருக்கு உரித்தான வகையில் உருட்டிப் பார்த்தாலும், உதடுகள் பிரிந்து பல் தெரியும் சிரிப்பு நம்மை வரவேற்பதாகவே உள்ளது. வலது கையை முழுதுமாக வெட்டப்படாத கதையின் மீது வைத்துள்ளார். வலது மேற்கை உடைந்துள்ளது. இடது கைக் கக்கத்தை வலது கை மேல் இருத்தி கையை தொங்கப்போட்டுள்ளார். வலது காலை நேராக ஊன்றி இடது காலை மடித்து இடது பாதம் வலது காலுக்கு பின்னே வைத்துள்ளார். இதனால் உடலமைதி ஒரு குழைவான முவ்வளைவு (திரிபங்க) நிலையை அடைகிறது. வலது பாதம் முழுமையடையவில்லை. கோட்டத்தின் சுவர்கள் முழுமையாக சமமாக்கப்படவில்லை. குழைவான உடலமைதியும், சிரிப்பும் வாயிற்காவலர்களுக்கு ஒவ்வாத பணிவை வெளிப்படுத்துகின்றன.

மேற்கு வாயிற்காவலர்:

மேற்கு வாயிற்காவலர்

உடலமைதி முவ்வளைவாக இருந்தாலும் வாயிற்காவலர்களுக்கே உரிய நிமிர்வும் கடுமையும் கொண்டிருக்கிறார். மணிமுடி (கிரீட மகுடம்), இரு கைவளைகள். மற்றபடி மற்றவரின் அதே அணிகள். வலது கையை கடிஹஸ்தமாக இடுப்பில் ஊன்றி, இடது முழங்கையை கதை மீது வைத்துள்ளார். தொங்கும் இடது கை மிக நீளம். அந்த கதை எடுத்து சுழற்றவா அல்லது கைக்கு தாங்குமானமாக மட்டும்தானா என்று ஐயம், அவ்வளவு பருமன். கதை தெளிவாக வடிக்கப்பட்டுள்ளது.  கதையைச் சுற்றியும், தலைக்குப் பின்னாலும் இரு நாகங்கள். பாதங்கள் செதுக்கப்படவில்லை (அல்லது ம்ண்ணில் புதைந்துள்ளன!?).

கல்வெட்டு

மேற்கு அரைத்தூணின் மேற்சதுர வடமுகத்தில் மகேந்திரரின் சமஸ்கிருத மொழியில் பல்லவ கிரந்தத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு உள்ளது:

மகேந்திரர் கல்வெட்டு

File:Mandakapattu Inscription.jpg
மண்டகப்பட்டு கல்வெட்டு (1)

ஏத தநினிஷ்டக மத்ரும மலோ
ஹ மசுதம் விசித்ர சித்தேந 
நிர்ம்மாபித ந்ருபேண ப்ரஹ்ம 
ச்வர விஷ்ணு லக்ஷிதாயதநம் (10)

பதம் பிரித்து::
"ஏதத் அனிஷ்டகம் அத்ருமம் அலோஹம் அசுதம் விசித்ரசித்தேன நிர்ம்மாபித ந்ருபேண ப்ரஹ்ம் ஈஷ்வர விஷ்ணு லக்ஷிதாயதனம்"

தமிழில்:
"அழியும் பொருட்களான செங்கல், மரம், உலோகம் சுதை இன்றி விசித்திரசித்தனால் பிரம்ம, ஈசுவர, விஷ்ணுவிற்காக நிர்மாணிக்கப்பட்ட லக்ஷிதாயதனம்" (3,5).


தற்காலக் கல்வெட்டு

சர்ச்சை

மண்டகப்பட்டு லக்ஷிதாயதனம் தான் தமிழகத்தின் முதல் குடவரைக் கோயிலா என்பதில் மாற்றுக் கருத்து உள்ளது. பாண்டியர்கள் நிர்மாணித்த பிள்ளையார்பட்டி குடவரைக் கோயில்தான் தமிழகத்தின் முதல் குடவரைக் கோயில், அது 6 ஆம் நூற்றாண்டிலேயே நிர்மாணிக்கப்பட்டது என்னும் கருத்தும் உள்ளது. (8)


உசாத்துணை:

5. சுவாமிநாதன்.சு; மாமல்லபுரம்; கிழக்கு; முதல் பதிப்பு;2016
8. குடவாயில் பாலசுப்ரமணியன்; முப்பது கட்டுரைகள்; அகரம் முதல் பதிப்பு 2018; ப 53-54.
11 மு. நளினி, இரா. கலைக்கோவன்; மகேந்திரர் குடைவரைகள்; முதற் பதிப்பு; 2004; அலமு பதிப்பகம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்