சிங்கவரம் - பாம்பணை பள்ளிகொண்ட மாயனார்

சிங்கவரம் செஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஒரு வரலாற்றுத் தொன்மை வாய்ந்த ஒரு கிராமம். இங்கு திருவரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள பல்லவர் கால குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. அதன் கட்டிட கலைக் கூறுகள் முதலாம் மகேந்திரவர்மர் பாணியில் ஆனவை. ஆனால், இதை நிர்மாணித்தவர் யார் என்பது தெரியவில்லை. பல பிற்கால கட்டுமானங்களால் விரிவாக்கப்பட்டுள்ள இந்தக் கோயிலில் வழிபாடு நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்குள் படம் பிடிக்க அனுமதி இல்லை.

இடம்

விகாரி ஆண்டு ஆடி மாதம் 25 ஆம் நாள் (10/09/2019) அன்று சிங்கவரம், மேலச்சேரி, திருநாதர்குன்று ஆகிய இடங்களைக் காண திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டேன்.  செஞ்சியிலிருந்து மேல் மலையனூர் செல்லும் சாலையில் சுமார் 4 கிமீ தூரத்தில் உள்ளது சிங்கவரம்.

வழியில் ஒரு ஊர்வலம். கன்னிமார் சாமிகள்.

கன்னிமார் 



கோயில் மலைமீது உள்ளது. அடிவாரத்தில் கோயிலுக்குச் சற்று முன்பாக ஒரு பாழடைந்த கோபுரத்தின் அடித்தள கல் கட்டடம் தென்படுகிறது.


அடிவாரத்தில் ஒரு மணி மண்டபம். செங்கற் கட்டுமானமோ என்று நினைத்தேன்.  ஆனால், பின்புறம் சென்றபோது அது ஒரு கல் தூண் மண்டபம், மெல்லிய உயரமானக் கல் தூண்களுக்கு வலு சேர்க்கும் பொருட்டு  3 தூண்களைச் சுற்றிச் செங்கற்களால் கட்டி உள்ளார்கள். ஒரு தூண் மட்டும் அசலான தோற்றம் காட்டி நிற்கிறது

அடிவார ஊஞ்சல் மண்டபம்

மலை மீது அமைந்துள்ள இந்தக் கோயிலை சுமார் 160 படிகள் ஏறி அடையலாம். சாலை போடப்பட்டு வருகிறது. படிகளின் முடிவில் மூன்று தள கோபுரம்.

படிகளும் கோபுரமும்

கோபுரத்தைத் தாண்டியவுடன் எதிர்ப்படுவது வரதராஜர் சன்னிதி


அங்கிருந்து வலதுபுறமிருந்த வாசல் வழியாக வெளியே வந்தேன். 

சிங்கவரம் விமானங்கள்

குடைவரைக் கோயில் கருவரைக்கு மேலே பாறையின் மீது கோபுரம் போன்ற விமானம் எழுப்பப்பட்டுள்ளது. கிழே உள்ளது தாயார் கருவறை விமானம். சுவரிலுள்ள வாசல் வழியாக ஒரு மண்டபத்தினுள் நுழைந்து இடதுபுறம் வெளிவந்தால் எதிரே ரங்கநாதர் கோயில். அதன் மேற்கில் ரங்கநாயகி தாயார் சன்னிதி. கிழக்கில் ராமானுஜர், தேசிகன் சன்னிதிகள். ரங்கநாதர் கோயில் மண்டபத்திற்கு மேலும் 6 படிகள். இருபுறமும் சுதை வாயிற்காவலர்கள், கல் பலகணிகள். பிற்காலத்தில் குடைவரைக்கு முன் எழுப்பப்பட்ட முக மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் அருள் புரிகிறார்.


அந்த மண்டபத்தின் பின் சுவராக குடைவரையின் முகப்பு

குடைவரை

தெற்கு நோக்கியது.

குடைவரையின் கோயிலின் முகப்பில் மகேந்திரர் பாணியில் நடுவில் இரு முழுத் தூண்களும் பக்கங்களில் இரு அரைத் தூண்களும் உள்ளன. நான்கு தூண்களும் மேலும் கீழும் சதுரம், நடுவில் எண்கோண கட்டு என்ற அமைப்பு கொண்டவை. நான்கு தூண்களுக்கு இடையே மூன்று அங்கணங்கள். அவற்றில் பக்க அங்கணங்கள் பிற்கால கற்சுவரால் அடைக்கப்பட்டுள்ளன. நடு அங்கணம் வாயிலாக மாறியுள்ளது. அரைத் தூண்களுக்கு வெளிப்பக்கத்தில் உள்ள ஒடுங்கிய இடத்தில் வாயிற்காவலர் சிலைகள் உள்ளன.


உள்ளே நுழைந்ததும் இரண்டாம் வரிசைத் தூண்கள் தென்படுகின்றன. நான்கு தூண்கள். நடுவிலுள்ள முழுத்தூண்கள் முன்வரிசைத் தூண்களைப் போல மேலும் கீழும் சதுரம், நடுவில் எண்கோண கட்டு என்ற அமைப்பு உடையவை. சுவரை ஒட்டிய அரைத் தூண்கள் கட்டு இல்லாமல் முழுவதும் சதுரமாக உள்ளன. பெரும்பாலான தூண் முகங்களில் சதுரத் தாமரை பதக்கம் செதுக்கப்பட்டிருக்கிறது. தூண்கள் மீது திருத்தமான பலகையும் அதன் மீது விரிகோண போதிகையும் உள்ளன. 
தூண் அமைப்பு

இரு வரிசைத் தூண்களுக்கு நடுவில் உள்ள இடத்தை அர்த்த மண்டபமாகக் கொள்ளலாம். 

கருவறை

இரண்டாம் வரிசைத் தூண்களுக்கு பின்னால் உள்ள மண்டபத்தைக் கருவறையாக கொள்ளலாம். பின் சுவர் முழுவதையும் பாம்பணை மேல் படுத்துறங்கும் மாயனார் சிற்பம் நிறைத்திருக்கிறது. பேருருவர். 24 அடி நீளம். அரங்கரை நான்கு தூண்களுக்கு இடையிலான மூன்று அங்கணங்கள் மூலம் தலை, உடல், கால் எனத் தனித்தனியாகவே தரிசிக்க இயலும்.

சிங்கவரம் ரங்கநாதர் 
நன்றி: தினமலர்

பாயுநீர் அரங்கந் தன்னுள் 
பாம்பணைப் பள்ளி கொண்ட, 
மாயனார் திருநன் மார்பும் 
மரகத உருவும் தோளும், 
தூய தாமரைக் கண்களும் 
துவரிதழ் பவள வாயும், 
ஆயசீர் முடியும் தேசும் 
அடியரோர்க்கு அகலல் ஆமே? 
(நாலாயிர திவ்வியப் பிரபந்தம். 891; தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச் செய்த 'திருமாலை')

பட்டர் வழிபட வரும் பகதர்களுக்கு எல்லா சிற்பங்களையும் கணீர்க் குரலில் நன்றாக விளக்குகிறார். 

அனந்தன் எனும் ஆதிசேஷனின் ஐந்து தலைகள் படம் விரித்து நிழலும் காவலுமாய் உள்ளன. அவன் உடல் சுருள்களால் அமைந்த படுக்கை மேல் யோகத் துயிலில் திருமால். வலது கை அரவணைமீது கிடக்க இடது கை மடங்கி கடக முத்திரை காட்டுகிறது.  

அவரது திருவுந்தியிலிருந்து எழும் தாமரை மேல் அமர்ந்துள்ள நான்முகன். நான்கு கரங்கள் - மேல் வலக்கரத்தில் அட்சர மாலையும் இடக்கரத்தில் கெண்டியும். கீழ் வலக்கரம் சின்முத்திரக் காட்ட, இடக்கை தொடைமீது உள்ளது. 

அவருக்கு வலது புறம் பறந்து செல்லும் உருவம் கந்தர்வன் என்கிறார் பட்டர். திருமாலின்  ஒற்றனாக செயல்பட்டு உலகச்செய்திகளை அவர் காதில் போடுவதற்காக காதருகில் பறந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஊழியில் அனைத்தும் அழிந்தபின் என்ன செய்தியோ? கந்தர்வனின் வலது பக்கம் ஒரு குத்துவாள் உறையோடு காணப்படுகிறது. அது பல்லவ காலத்தது, அதுவே இக்குடைவரையின் காலத்திற்கு ஆதாரம் என்கிறார் பட்டர்.

நான்முகனின் இடது புறம் இறக்கைகளுடன் கருடன்

கருடனின் இடது புறம் இரு அரக்கர்கள் - மது, கைடபர். முதல் அரக்கனது வலது கை விஷ்ணுவை சுட்ட, இடது கை கதை ஏந்தியுள்ளது. இரண்டாம் அரக்கன் வலது கை உயர்ந்திருக்க, இடது கையில் பிடித்திருக்கும் கதை தொடை மீது உள்ளது. 

கீழே பாதங்களுக்கு அருகே நிலமகள் அமர்ந்திருக்கிறார். அவருக்குப் பின்னே பின்சுவரில் நாரதர்.

நிலமகளுக்கு முன்னே அரங்கனின் இடை அருகில் கிரீட மகுடம் தரித்து ஒரு கையை வியப்பு முத்திரையாய் உயர்த்தி மூவர் அமர்ந்திருக்கின்றனர். நிலமகள் பக்கம் இருப்பவர் பிரகலாதன் என்றும் மற்ற இருவர் அத்திரி, பிருகு என்னும் இரு முனிவர்கள் என்றும் கூறுகிறார் பட்டர். 

அரங்கனின் தலைக்குப் பின்னால் உள்ள சுவரில் சக்கரம் உள்ளது. சங்கு காணப்படவில்லை.

துர்க்கை
துர்க்கை
நன்றி:  puratattva.in - Indian History and Architecture

குடைவரைப் பாறையின் கீழ்பகுதியில் துர்க்கையின் சிலை செதுக்கப்பட்டுள்ளது. ரங்கநாயகி தாயாரின் சன்னிதியில் உள்ள சாளரம் வழியாக அச்சிலையை காணலாம் . மகிஷாசுரன் என்னும் அவுணனின் வெட்டப்பட்ட தலை மீது வலது காலை ஊன்றிய வடிவம். முவ்வளைவு (திரிபங்க) உடல்மொழி. நான்கு கரங்கள். வல மேற்கையில் செல் ஆழியும் (ப்ரயோக சக்கரம் - முன்னோக்கி செலுத்தும் நிலையில் உள்ளது), இடது மேல் கையில் சங்கு. வலக்கரம் தொடை மீதும், இடக்கரம் தொடை மீதும் வைத்துள்ளாள் அன்னை. பiiல்லவ சிற்பக்கலை மரபுப்படி  குறைந்த ஆபரணங்கள். அவள் வலப்பக்கத்தில் தன்  கையை கீறி குருதிபலி அளிக்கிறான் அடியவன் ஒருவன். இடப் பக்கத்தில் ஒரு அடியவன் வலது கையில் கடக முத்திரையோடு  இடது கையை இடுப்பில் வைத்து முழந்தாளிட்டு அமர்ந்துள்ளான்.

கல்வெட்டுச் செய்திகள்

பல்லவர் காலக் கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை. விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் (கிபி 1243 - 1279) கல்வெட்டு அரங்கரை 'திருப்பன்றிக்குன்று எம்பெருமான்' என்று குறிப்பிடுகின்றது. (கோயிலில் வராகர் சன்னிதி, 20 கிமி தூரத்தில் வராக நதி, இம்மலையையும், ஒரு பல்லவ மன்னனையும், வராகத்தையும் கொண்ட ஒரு கதை). கல்வெட்டுகள் இவ்வூரை "பல்குன்றக் கோட்டத்து சிங்கபுர நாட்டு சிங்கபுரம்' என்று குறிப்பிடுகின்றன. 2 ஆம் ராஜேந்திரன் (கிபி 1058), முதலாம் குலோத்துங்கன் (கிபி 1100), 2 ஆம் கோப்பெருஞ்சிங்கன் (கிபி 1246, முதலாம் குலசேகரன் (கிபி 1298), மாறவர்மன் வீரபாண்டியன்  (கிபி 1268), செஞ்சியை ஆண்ட விஜயநகரப் பிரதிநிதி கோபண்ண ஆர்யா (கிபி 1371-72) ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மது கைடபர் கதை

கருவறை சிற்பத் தொகுதி கூறும் கதை என்ன? மார்கண்டேய புராணம் முதலிய புராணங்களிலும், மகாபாரதம், பாகவதம் ஆகிய நூல்களிலும் விவரிக்கப்பட்டுள்ளது மது கைடபர் கதை. அவற்றிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படை கதைச்சுருக்கம் இதுதான்:


ஊழியின் பின் உலகை நீர் மூடியிருந்தது. திருமால் அரவணை மீது யோகத் துயிலில் ஆழ்ந்திருந்தார். மகா மாயையான பராசக்தியின் கூறான யோக மாயை அவரை ஆட்கொண்டிருந்தது. உலகை மீள்வுருவாக்கம் செய்திடும் காலம் கனிந்தது. திருமாலின் உந்தியிலிருந்து தாமரை மீதமர்ந்து வெளிவந்தார் நான்முகன். உலகை படைக்கும் பணியின் முதற்பணியாக வேதங்களை இயற்றத் துவங்கினார். அப்போது திருமாலின் இரு காதுகளிலும் இருந்த குரும்பையிலிருந்து மது, கைடபர் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் நான்முகனைத் துன்புறுத்தினர். நான்முகன் தாமரைத் தண்டில் ஒளிந்துகொண்டு பராசக்தியிடம் திருமாலை யோகத் துயிலிலிருந்து எழுப்ப வேண்டினார். யோக மாயை விலக விழித்தெழுந்தார் திருமால். அதுவரை சேஷன் நெருப்பு கோளங்களை உமிழ்ந்து மது கைடபர்களை விரட்டிக் கொண்டிருந்தார். அந்த அரக்கர்களுடன் திருமால் போரிட்டார். அவர்களை போரில் வெல்ல இயலாத திருமால், தந்திரத்தால் வெல்ல முடிவு செய்தார். பராசக்தியின் மாயை துணைகொண்டு அவர்களிடமிருந்து ஒரு வரம் வேண்டினார். மாயையால் பீடிக்கப்பட்டு அசுரர்களும் சம்மதித்தனர். திருமால் வேண்டிய வரம் மது கைடபர் தன் கையால் சாக வேண்டும் என்பதே! அசுர்களாக இருப்பினும் சொன்ன சொல் தவறாமல் அந்த வரத்தைத் தந்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனையுடன் - அவர்கள் நீரில்லாத ஒரு இடத்தில் கொல்லப்பட வேண்டும். ஊழிநீர் எங்கும் நிறைந்திருக்க அத்தகைய இடம் கிடைக்காது என்பது அவர்கள் எண்ணம். திருமால் பேருருவம் எடுத்து விரிந்த தன் தொடைகள் மேல் அவர்களை இருத்தி ஆழியால் அவர்கள் சங்கறுத்துக் கொன்றார். 


மற்ற அனந்தசயனக் குடைவரைக் கோயில்கள்

மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி குடைவரைக் கோயில் (பல்லவர்), நாமக்கல் குடைவரைக் கோயில் (அதியர்), திருமெய்யம் குடைவரைக் கோயில் (பாண்டியர்) ஆகிய மூன்று குடைவரைகளிலும் அனந்தசயனக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இவற்றை நுட்பமாக ஆராய்ந்து, ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார் திரு குடவாயில் பாலசுப்ரமணியன். ('அனலால் அலறும் அரக்கர்'; 'கலையியல் ரசனைக் கட்டுரைகள்; முதல் பதிப்பு; 2014; அகரம்)

மற்ற கதைகள்

மற்ற கதைகளையும், ஐதீகங்களையும் அறிய கீழ் கண்ட இணைய தளங்களை வாசிக்கவும்.


கொசுரு

M.R.RY
அடிவாரத்தில் பழைய கிணறு

1924 ஆம் ஆண்டு கிணற்றுக் கல்வெட்டு

"Constructed 1926/ M.R.Ry. A.V. SRINIVASALU REDDI GARU/ PRESIDENT/ TK. BD. TINDIVANAM" என்பதில் தலைவர் பெயரின் முன்னொட்டு "M.R.Ry." குறுகுறுப்பைத் தூண்டியது. அறியக் கிடைத்தது: "M.R.Ry." என்பது "மகா ராஜ ராஜ ஸ்ரீ" என்பதன் சுருக்கம். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அரசர்கள், ஜமீந்தார்கள் போன்றோர் உபயோகித்தது. பின்னொட்டாக 'அவர்கள்', 'காரு' (தெலுங்கு) உபயோகிக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆவணங்களிலும் இருந்ததாம். 


ரங்கநாயகி தாயார்
ந்ன்றி: தினமலர்

பூவராகர்  தனி சன்னிதியில்


கொடி மரம், பலிபீடம்

அடிவாரத்தில்

திருநாதர்குன்றிலிருந்து  சிங்கவரம்

அனந்தசயனக் காட்சி வர்ணனை

மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்
மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் -இரு சுடரை
மன்னும் விளக்காக வேற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நில மங்கை
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட
பின்னைத் தன்னாபி வலயத்துப் பேரொளி சேர்
மன்னிய தாமரை மா மலர்ப் பூ பூத்தம் மலர் மேல் 
முன்னம் திசை முகனைத் தான் படைக்க -மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள்

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்; திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 'பெரிய திருமடல்')
உரைக்கு: திராவிட வேதா

"யோகு துயில் கொண்ட பரம்பரனே" - பெரியாழ்வார்
"யோகத்து உறக்கத்தை" - திருமங்கையாழ்வார்
"உறங்குவான்போல் யோகு செய்த பெருமான்" - நம்மாழ்வார்


நன்றிக் கடன்::



கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 2: யோக ராமர் கோயில் - அமைப்பு

கூழமந்தல்