செங்கம் நடுகற்கள்: போந்தை - நரசிம்ம வர்மன் கால ஆநிரை மீட்ட இரு சேவகர்கள்

பயண நாள்: 08/07/2022

அமைவிடம்

போந்தை திருவண்ணாமலை - அரூர்-சேலம் சாலையில் தானிப்பாடியில் இருந்து 3 கிமீ தூரம் உள்ள ஊர்.

போந்தையில் பச்சையம்மன் கோயில் அருகே உள்ளது வேடியப்பன் கோயில். 
கூகிள் வரைபடத்தில் இடம்: தீர்க்க அட்ச ரேகைகள் - 12°06'00.5"N 78°51'32.3"E

நடுகற்கள்

வேடியப்பன் கோயிலில் இரு நடுகற்கள் உள்ளன. வழிபாட்டில் உள்ள இரண்டின் மேலும்  குங்குமப் பொட்டுகள் நிறைந்துள்ளன. இரண்டும் நரசிம்ம வர்மனின் 12 வது ஆட்சியாண்டில் ஆநிரைகளை மீட்டு உயிர்துறந்த இரு சேவகர்களுக்காக எழுப்பப்பட்ட நடுகற்கள் ஆகும்.

பச்சையம்மன் கோயில் அருகில் உள்ள வேடியப்பன் கோயில்

நடுகல் 1

வேடியப்பன் கோயில் கல்வெட்டு 2

சிற்பம்

கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. மார்பில் அம்பு பாய்ந்துள்ளது. சிமிழ், கெண்டி தெளிவாகத் தெரியவில்லை. (வல்து காலுக்கு அருகில் சிமிழ் உள்ளதாக 'செங்கம் நடுகற்கள்' நூல் தெரிவிக்கிறது). கல்லின் மேற்பகுதியில் கல்வெட்டு உள்ளது.

கல்வெட்டு

கோவிசய நரசி 
ங்கபருமற்கு யாண்டு பன்னிரண்
டாவது மீகொன்றை நாட்டு பாசாற்று பகைம
தர் சேவகன் தொறு இடுவித்து பட்டான் ப
ணய நாத்தன்

பொருள் 

பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனது 12 வ்து ஆட்சி ஆண்டில்
மேல்கொன்றை நாட்டைச் சேர்ந்த பகைமதருடைய சேவகன்
பணய நாத்தன் என்பவன் ஆநிரைகளை மீட்டு மாண்டான்


நடுகள் 2

நடுகல் 2

சிற்பம்

கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. நெற்றியில் அம்பு பாய்ந்துள்ளது. இடது காலுக்குப் பக்கத்தில் மங்களச் சின்னமான சிமிழ் உள்ளது. கல்லின் மேற்பகுதியில் கல்வெட்டு உள்ளது. 


கல்வெட்டு

கோவிசய நரசிங்க
பருமற்கு யாண்டு பன்னிரண்டாவது மீ
கொன்றை நாட்டு பாசாறாள் பகைம தர் சேவகர் 
தொறு இடுவித்து பட்டார் வண்ணக்க சாத்தனார்

பொருள் 

பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனது 12 வது ஆட்சி ஆண்டில்
மேல்கொன்றை நாட்டைச் சேர்ந்த பகைமதருடைய சேவகன்
வண்ணக்க சாத்தனார் என்பவர் ஆநிரைகளை மீட்டு மாண்டார்

இவை தவிர ஒரு சிதைந்த நடுகல் ஒன்று மான்ய வேடியப்பன் கோயிலில் உள்ளதாக 'செங்கம் நடுகற்கள்' நூல் தெரிவிக்கிறது. ஆனால், இதை நான் பார்க்க இயலவில்லை.

துணை

செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்