செங்கம் நடுகற்கள்: கீழ் ராவந்தவாடி - இரண்டாம் நந்திவர்மன் கால ஊர் காக்கப் பட்டான் நடுகல்
பயணம்
12/07/2022 சுபகிருது ஆண்டு, ஆனி மாதம், 28 ஆம் நாள் செவ்வாய் கிழமை
அமைவிடம்
கீழ் ராவந்தவாடி திருவண்ணாமலை - அரூர் - சேலம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 17 கிமீ தூரத்தில் உள்ள ஊர். சாலையில் இருந்து சுமார் 300 மீ தூரத்தில் உள்ளது அவ்வூர் வேடியப்பன் கோயில். வழியில் ஒரு பழைய ஆஞ்சனேயர் கோயில். அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும். வேடியப்பன் கோயில் நன்கு பராமரிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
கூகிள் வரைபடத்தில் இடம்: 12.154724513628485, 78.93235540401501
'Keezravandhavaadi vediyappan temple' என்று குறிக்கப்பட்டுள்ளது.
![]() |
வேடியப்பன் கோயில், கீழ் ராவந்தவாடி |
நடுகல்
வேடியப்பன் கோயிலில் நடுகல் நடுநாயகமாக ஒரு மேடை மேல் கிழக்கு நோக்கி நிறுவப்பட்டுள்ளது.
![]() |
வேடியப்பன் கோயில் நடுகல், கீழ் ராவந்தவாடி |
சிற்பம்
வீரனது உருவம் வலப்புறம் பார்த்த நிலையில் உள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். தலைமுடி பின்னால் குடுமிபோலத் தொங்குகிறது. குட்டையான இடையாடை அணிந்துள்ளான். இடைக்கச்சின் முடிச்சு பின்னால் உள்ளது. அவன் இடது தோளிலும் மார்பிலும் அம்புகள் பாய்ந்துள்ளன. வலது காலுக்குப் பக்கத்தில் சிமிழும், இடது காலுக்குப் பக்கத்தில் கெண்டியும் உள்ளன. இவை மங்கலச் சின்னங்கள்.
கல்வெட்டு
கோவிசைய நந்தீச்சுவ
ர விர்கிரமபருமற்கு யாண்டு நாற்பத்
து நாற்காவது மலாட்டு மேற்கோவலூர் நா
ட்டு இராமந்தைவாடி மேற் மங்கள பெரு
மனார் படை வந்த ஞான்று வாணபெருமானார்க் கா
ய்ப் பட்டான் வேணர்
க் களியன்.
கல்வெட்டுப் பொருள்
பல்லவமன்னன் நந்திவர்மனின் (பொ.ஆ. 731-796) 44 ஆவது ஆட்சிஆண்டில் மலாட்டு மேற்கோவலூர் நாட்டு இராமந்தைவாடி மீது
மங்களப்பெருமனார் படையெடுத்து வந்த போது
வாணபெருமானாருக்காக வேணர்க்களியன் என்பவன் வீரமரணம் அடைந்தான்.
இராமந்தைவாடி = இரா+மந்தை+வாடி = இரவில் மாட்டு மந்தைகளை அடைத்து வைக்கும் இடம்.
இப்பெயர் இப்போது ராவந்தவாடியாக மருவியுள்ளது.
இந்நடுகல் தற்போது வேடியப்பனாக வணங்கப்படுகிறது.
வழியில் உள்ளவை
![]() |
புதிப்பிக்கப்பட்டுள்ள அனுமன் கோயில் |
![]() |
அனுமன் கோயில்முன் தீபத் தூண் |
![]() |
தீபத் தூண் அடியில் ஒரு கல்வெட்டு |
அம்மாகுளம்
இவ்வூரின் மற்றொரு தொல்லியல் அடையாளம் அம்மாகுளம். இது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இது ஒரு சிற்பக்குளம். குளச் சுவர்களிலும் படிகளிலும் பல்வகை சிற்பங்கள் நிறைந்துள்ளன. அவற்றில் பாலியல் சிற்பங்களும் உண்டு.
துணை
செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972
கருத்துகள்
கருத்துரையிடுக