கூடலூர் மலை (எண்ணாயிரம் மலை)
அமைவிடம்
இந்த மலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் விழுப்புரதிலிருந்து நேமூர் வழியாக 28 கிமீ, செஞ்சியில் இருந்து மட்டப்பாறை வழியாக 19 கிமீ தூரம். எண்ணாயிரத்தில் இருந்து 4 கிமீ.
பெயர்
இந்த மலை எண்ணாயிரம் மலை அல்லது கூடலூர் மலை என்று எழுதப்படுகிறது. இதற்கு திருநந்தகிரி, குன்னத்தூர் மலை, ஐவர்மலை, பஞ்சபாண்டவர் மலை என்ற பெயர்களும் உண்டு எனப்படுகிறது. ஆனால், நான் இந்த மலையைத் தேடி உள்ளூர் மக்களிடம் கேட்டபோது அவர்கள் 'எண்ணாயிரம்' மலையை அறிந்திருக்கவில்லை. இந்த மலை மேல் கூடலூர் என்ற ஊரில் உள்ளது. உள்ளூர் மக்கள் 'கூடலூர் மலை என்ற பெயராலேயே இதை அழைக்கின்றனர்.
மேலே செல்ல படிகளை நிறுவியுள்ளனர் ஜைனர் அமைப்புகள். படிகள் முடியும் இடத்தில் உள்ள ஒரு தகவல் பலகையில் ஒவ்வொரு படிக்கும் ரூ.125 வீதம் கொடுத்தவர்களின் பட்டியல் பொறிக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள்
- பார்சுவநாதர் சிற்பம்
- சமணப் படுக்கைகள்
- நிருபதுங்கவர்மன், முதலாம் பராந்தகன் காலக் கல்வெட்டுகள்
பார்சுவநாதர்
அறிவிப்பு பலகையின் அருகில் உள்ள பாறையில் பார்சுவநாதரின் புடைப்புச் சிற்பம் வெட்டப்பட்டுள்ளது. அதை சுற்றி கம்பிக் கூண்டு.
![]() |
பார்சுவநாதர் |
பார்சுவநாதர் ஜைனர்களின் 24 தீர்த்தங்கரர்களுள் 23 ஆவது தீர்த்தங்கரர் ஆவார். பத்ம பீடத்தின் மீது 'காயோத்சர்க்கம்' என்னும் கை உடலைத் தொடாத சம நேர் நிலையில் நின்றுள்ளார். திகம்பர (திசைகளையே ஆடையாக அணிந்தவர் - நிர்வாணம்) கோலத்தில் உள்ளார். 24 தீர்த்தங்கரர்கள் படிமங்களும் ஒன்று போலவே இருக்கும். அவர்களில் எளிதில் அடையாளம் காணக்கூடியவர் பார்சுவநாதரே. இவர் தலை மேல் இருக்கும் நாகப்படம் இவரை அடையாளம் காட்டுகிறது. இங்கு ஐந்து தலை, ஏழாகவும் இருக்கலாம். அதற்கு மேலே முக்குடை.
அவரது வலது பக்கத்தில் உள்ளது அவரது யட்சன் தர்ணேந்திரன்.
(இவர் பார்சுவரின் யட்சி பத்மாவதி என கொடுமுடி சண்முகமும் , பல்லவ மன்னன் நிருபதுங்க வர்மன் என்று பாகூர் குப்புசாமியும் (நூல்: வரலாற்று வண்ணங்கள்), முதலாம் பராந்தகனின் உருவமாக இருக்கக்கூடும் என்று அனந்தபுரம் கோ.கிருட்டிணமூர்த்தியும் (நேரில்) கருதுகின்றனர் என கோ செங்குட்டுவன் எழுதியுள்ளார். யட்சன் தீர்த்தங்கரரது வலது புறமும், யட்சி அவரது இடது புறமும் அமைவது மரபு. மன்னர்களைப் பற்றிய ஊகம் இங்கு கிடைத்த கல்வெட்டுகளினால் வந்தது. மன்னர்கள் வணங்கிய நிலையில் இருப்பது மரபு.)
சமணப் படுக்கைகள்
இம்மலையில் பல (?35) சமமாகச் செதுக்கப்பட்ட சமணர் படுக்கைகள் உள்ளன. தொண்டை மண்டலத்தில் அதிகமான சமணப்படுக்கைகள் காணப்படுவது இங்குதான்.
இந்த படுக்கைகள் மீது கல்லில் பொறித்தும், வரைந்தும் பதிவிட்டுள்ளனர் மாக்கள்.
கல்வெட்டுகள்*
நிருபதுங்க வர்ம பல்லவன் காலத்திய கல்வெட்டு ஒன்றும், பராந்தக சோழன் கல்வெட்டுகள் நான்கும் இங்குள்ளன. நிருபதுங்க வர்ம பல்லவன் 2 ஆவது ஆட்சியாண்டு (கி.பி.867) கல்வெட்டினைத் தொடர்ந்து அதனோடு இணைந்தவாறு ஐந்தாவது வரியிலிருந்து ஒரே எழுத்தமைதியுடன் முதலாம் பராந்தகனின் (பொ.ஆ 907-953) நான்காவது ஆட்சியாண்டு (கி.பி.911) கல்வெட்டுத் தொடர்கிறது.*
நிருபதுங்கன் காலக் கல்வெட்டில் சேந்தமங்கலத்தில் உள்ள திருமூலஸ்தானத்து தேவற்கு விளக்கெரிக்க ஓணங்காரிக்குடையார் என்ற அதிகாரி 750 ஆடுகள் கொடையாகக் கொடுத்த செய்தி உள்ளது.* அதைத் தொடர்ந்து வரும் முதலாம் பராந்தகன் 4 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு மழநாட்டுக் குளத்தூரைச் சேர்ந்த தாழி இழிவைகுந்தன் என்பவன் பனையூர் நாட்டுச் சேந்தமங்கலத்தில் உள்ள அவனிதிலகத்து தேவர் கோயிலுக்கு விளக்கெரிக்க ஆடுகள் கொடை பற்றியது.*
முதலாம் பராந்தகன் காலக் மற்ற கல்வெட்டுகள் பிடாரியார், திருமணிகோயிற் தேவர் ஆகிய தெய்வங்களுக்கு விளக்கெரிக்க ஆடுகள் கொடை பற்றியது.*
இம்மலை அமைந்த பகுதி பனையூர் நாடு ஆகும். ஆனால், சேந்தமங்கலம் இப்பகுதியில் எந்த குறிப்பிட்ட ஊரைக் குறிக்கிறது என்று தெரியவில்லை. மேலும் இந்த கல்வெட்டுகளை இங்குள்ள சமணச் சிற்பங்களோடு தொடர்புபடுத்த முடியவில்லை.*
கீழிறங்கி வருகையில் மேலிருந்து:
படிக்க:
பார்சுவநாதரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வைப் பற்றிய சிற்பம் சீயமங்கலத்தில் உள்ளது. அதைப் பற்றிய பதிவு:
துணை
* கு. தாமோதரன்; விழுப்புரம் இராமசாமிப் படையாச்சியார் மாவட்ட வரலாறு; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1994
கோ. செங்குட்டுவன்; மின்தமிழ்
சரிபார்க்க
ராமானுஜர் திருவடி மண்டபம்
ராமானுஜர் அமர்ந்து தியானம் மேற்கொண்ட இடம் எண்ணாயிரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருநந்திபுரத்தில் திருவடி மண்டபமாக அமைக்கப்பட்டு அங்கு அனுதினமும் அவரது திருவடி பூஜிக்கப்பட்டு வருகிறது. இத்தலத்தில் வாழ்ந்த எண்ணாயிரம் சமணா்களை வாதத்தில் வென்ற ராமானுஜா் அவா்களை வைஷ்ணவ மதத்தைத் தழுவச் செய்தாா் என்றும், இவா்கள் அஷ்ட சஹஸ்ர பிராமணா்கள் என்று அழைக்கப்பட்டார்கள் கூறப்படுகிறது..
கருத்துகள்
கருத்துரையிடுக