செங்கம் நடுகற்கள்: மோத்தக்கல் - முதலாம் மகேந்திரன் கால புலிகுத்திப்பட்டான் கல்
பயண நாள்: 08/07/2022
அமைவிடம்
மோத்தக்கல் திருவண்ணாமலை - அரூர் - சேலம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 45 கிமீ தூரத்தில் உள்ள சிற்றூர். சாலையின் வடபுறம் பிரியும் சாலையில் 3 கிமீ தூரம்.
மோத்தக்கல் ஊருக்கு வெளியே மண்சாலை வழியாக ஒரு கிமீ தூரத்தில் உள்ளது ஆற்றங்கரை வேடியப்பன் கோயில்.
அமைவிடம்: கூகிள் வரைபடத்தில் 'Pulikuththipattan hero stone temple inscription' என்று குறிக்கப்பட்டுள்ளது. தீர்க்க அட்ச ரேகைகள்: 12.078801569349551, 78.74067402186279
நடுகற்கள்
சுற்று மதில், சுதைச் சிற்பங்களுடன் பராமரிப்புடைய கோயில். அங்கு இரு நடுகற்கள் உள்ளன. வழிபாட்டில் உள்ள இரண்டின் மேலும் குங்குமப் பொட்டுகள் நிறைந்துள்ளன. நாமங்கள் இடப்பட்டுள்ளன. பக்கத்தில் சூலங்கள். இவை இரண்டும் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் (பொ.ஆ. 590-630) ஆட்சிகாலத்தில் நிறுவப்பட்டவை. பொன்மோதனார் என்பவரது இரு சேவகர்களுக்கானவை.
![]() |
மோத்தக்கல் ஆற்றங்கரை வேடியப்பன் கோயில் |
நடுகல் 1
சிற்பம்
கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்தவாறு இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. வலது காலின் பக்கத்தில் மங்கலச் சின்னமான கெண்டியும், இடது காலின் பக்கத்தில் அம்புத் தூணியும் உள்ளன. கல்லின் மேற்பகுதியில் கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. வட்டெழுத்து. காலம் பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டு.
கல்வெட்டு
கோவிசைய ம…..ந்திரபரும(ற்கு மு)
ப்பத்திரண்டாவது….யை தொ
றுக்கொண்ட ஞான்று பொன்மோதான்னா
ர் சேவகன் அக்கந்தைகோடன்
தொறு விடுவித்துப் பட்டா
ன் கல்.
பொருள்
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனது 32 வ்து ஆட்சி ஆண்டில்
..... ஆநிரைகளை கவர்ந்து சென்றபோதுபொன்மோதனாரின் சேவகன் அக்கந்தைக்கோடன்
ஆநிரைகளை மீட்டு இறந்தான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்.
நடுகல் 2
![]() |
மோத்தக்கல் புலி பட்டான் கல் |
சிற்பம்
கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்தவாறு புலியுடன் போரிடும் கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கை குறுவாளைத் தூக்கி உள்ளது. இடக் கையை ஒரு புலி கவ்வி உள்ளது. கல்லின் மேற்பகுதியில் கல்வெட்டு உள்ளது.
கல்வெட்டு
கோவிசைய மயேந்திர
பருமற்கு முப்பத்திரண்டா
வது பொன்மோதனார் சே
வகன் வின்றண்(வ)டுகன்
புலி குத்திப் பட்டான்
கல்
பொருள்
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனது 32 வ்து ஆட்சி ஆண்டில்
பொன்மோதனாரின் சேவகனான வின்றண்வடுகன் என்பவன்
புலியுடன் போரிட்டு அதைக் குத்திக் கொன்று தானும் மாண்டான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்.
சுடுமண் சிற்பங்கள்
ஆற்றங்கரை வேடியப்பன் கோயிலின் உள்ளே குதிரை மீதேறி புலி வேட்டையாடும் பொன்மோதனார், வின்றண்வடுகனும் இன்னோரு சேவகனும், புலி ஆகியவர்களின் அழகிய சுடுமண் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
![]() |
மோத்தக்கல் ஆற்றங்கரை வேடியப்பன் ஆலயம். வேடியப்பன், காவலர்கள் |
![]() |
வேடியப்பன் வேட்டையாடும் புலி |
துணை
செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972
https://veludharan.blogspot.com/2018/07/mothakkal-hero-stones-part-of-chengam.html
கருத்துகள்
கருத்துரையிடுக