செங்கம் நடுகற்கள்: தா வேளூர் -

பயணம் 

12/07/2022 சுபகிருது ஆண்டு, ஆனி மாதம், 28 ஆம் நாள் செவ்வாய் கிழமை

அமைவிடம்

திருவண்ணாமலை - அரூர் - சேலம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ள ஊர் தானிப்பாடி. தானிப்பாடியில் இருந்து சுமார் சுமார் 3 கிமீ தூரத்தில் தா வேளூர். அவ்வூருக்குச் செல்லும் சாலை தானிப்பாடி பேருந்து நிறுத்தத்தின் முன் பிரிகிறது. 

நெடுஞ்சாலைத்துறை பெயர்ப் பலகை
ஊராட்சி பெயர்ப் பலகை

பெயரில் குழப்பம். தா. வேளூர் (தானிப்பாடி வேளூர்) என்பதே சரி.

தா வேளூர் நடுகற்கள் என்று அழைக்கப்பட்டாலும் இது தா வேளூருக்கு முன்பே உள்ள செ ஆண்டாபட்டு என்னும் ஊரின் பக்கத்தில்தான் உள்ளது. இவ்வூர் தானிப்பாடியில் இருந்து 1.2 கி மீ தூரம். செ ஆண்டாபட்டில் இருந்து புதூர் செல்லும் சாலையில் சுமார் 1.5 கிமீ தூரம் சென்றால் வரும் ஒரு செங்கோண வளைவின் அருகில் உள்ளது 'சாவுமேட்டு வேடியப்பன் கோயில்.' சாலையில் இருந்து வயல்வெளிகள் வழியாக வழி விசாரித்துதான் செல்ல வேண்டி உள்ளது.
கூகிள் வரைபடத்தில் இடம்: 12.122341521912386, 78.85020366488688
'T. Velur Hero Stones', 'தா வேளூர் நடுகற்கள்' என்று குறிக்கப்பட்டுள்ளது.

தகவல் பலகை

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர் மேடைகள் அமைத்து கிடைத்துள்ள 5 நடுகற்களையும் ஒரு கல்வெட்டையும் அவற்றின் மேல் நிறுத்தி ஒழுங்குபடுத்தியுள்ளனர். அவை குறித்த ஒரு தகவல் பலகையையும் வைத்துள்ளனர்.



நடுகற்களும் கல்வெட்டும்

இங்கு 5 நடுகற்களும் 1 கல்வெட்டும் உள்ளது.
  1. நடுகல் 1: இரண்டாம் நரசிம்மவர்மன் கால் ஆநிரை காத்த வீரன் நடுகல்
  2. நடுகல் 2: கம்பவர்மன் கால அண்ணன் மகளை கள்ளர்களிடம் இருந்து மீட்ட வீரன் நடுகல்
  3. நடுகல் 3: ஆநிரை மீட்ட வீரன் நடுகல்
  4. நடுகல் 4 - பன்றியுடன் போரிட்டு இறந்த வேட்டை நாய்க்கு வைத்த நடுகல்
  5. கல்வெட்டு
  6. நடுகல் 5 - நடுகல் ஒன்றின் துண்டு

நடுகல் 1: இரண்டாம் நரசிம்மவர்மன் கால ஆநிரை காத்த வீரன் நடுகல்


சிற்பம்

வீரனது உருவம் இடதுபுறம் பார்த்த நிலையில் உள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். தலைமுடி பின்னால் கழுத்துவரை தொங்குகிறது. குட்டையான இடையாடை அணிந்துள்ளான். இடைக்கச்சின் முடிச்சு பின்னால் உள்ளது. இடைக்கச்சில் ஒரு குறுவாளை சொருகி உள்ளான். இடது காலின் முன் மங்கலச் சின்னமான சிமிழ் உள்ளது.

கல்வெட்டு

இங்குள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முந்தையது இந்தக் கல்வெட்டு. வட்டெழுத்து.

கோவிசைய நரசிங்கபருமற்கு இரண்டா
வது வாணகோஒ அதிரைசர் சேவகர் மீ கொன்
றை நாட்டு மேல் வேளூர் ஆளும் பனையமா
ரியார் இவ்வூர் தொறுக் கொண்ட ஞான்று பட்டா(ர்)

(மீ - மேல் - மேற்கு; தொறு - ஆநிரை; ஞான்று - போது; பட்டார் - இறந்தார்)

கல்வெட்டுப் பொருள்

பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மனது இரண்டாவது ஆட்சி ஆண்டில்
பாண அரசனின் சேவகனும் 
மேல் கொன்றை நாட்டு மேல் வேளூரை ஆள்பவனும் ஆகிய பனையமாரியார் 
இந்த ஊர் ஆனிரைகளைக் (கள்வர்கள்) கவர்ந்தபோது வீர மரணம் அடைந்தார்.

நடுகல் 2: கம்பவர்மன் கால அண்ணன் மகளை கள்ளர்களிடம் இருந்து மீட்ட வீரன் நடுகல்


சிற்பம்

வீரனது உருவம் முன்புறம் பார்த்த நிலையில் உள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். தலைமுடி மேலே கொண்டையாக உள்ளது. ஒரு அம்பு வயிற்றின் இடது பக்கம் பாய்ந்துள்ளது. இடைக்கச்சின் முடிச்சு பின்னால் உள்ளது. சிற்பம் மழுங்கியும் மேல் பூச்சுகளுடனும் உள்ளதால் மற்ற விவரங்கள் தெளிவாக இல்லை.

கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய கம்ப பருமற்கி யாண் 
டெட்டாவது வயிர மேக வாணகோவரையரா 
ளத் தகடூர் நாட்டுப் பாகாற்றூர்க் கதவ 
மாதேவன் மகன் காளமன் மீய்கொன்
றைநாட்டு மேல் வேளூர் இருந்து வாழாநின்ற காலத்
 து முருங்கைச் சேர்ந்ததன்ற மையனார் 
மகளைக் கள்ளர்
பிடிகரந்துர
று கொண்டய
ந் அவளை விடு
வித்துக் தா
ன்பட்டான் கா 
ளமன்.

(ஸ்வஸ்திஸ்ரீ - மங்கலத் தொடக்கம்; யாண்டு - ஆண்டு, ஆட்சியாண்டு; மேல் - மேற்கு; பிடி - பிடித்து; கரந்துர - மறைத்துவைத்து அச்சுறுத்த; நறு கொண்டையன் - மணம்வீசும் (மலர்ச்சூடிய) கொண்டையன்; )

ஸ்வஸ்தி ஸ்ரீ 
கம்ப வர்மப் பல்லவனுடைய எட்டாம் ஆட்சி ஆண்டில் (877 CE) 
(அவனுக்கு அடங்கிய வாண மன்னனான) வயிரமேக வாணகோவரையர் இப்பகுதியை ஆண்டு வந்த போது
தகடூர் நாட்டு பாகற்றூரைச் சேர்ந்த கதவமாதேவன் என்பவன் மகன் காளமன்
மேல் கொன்றை நாட்டு உட்பிரிவான மேல் வேளூரில்  வாழ்ந்து வந்தான். அப்போது
முருங்கு எனும் ஊரைச் சேர்ந்த இவன் தமையன் மகளைக் 
கள்ளர் பிடித்து மறைக்க
நறுமணம் கமழும் கொண்டயன் (காளமன்) அவளை விடுவித்து 
அப்போரில் தானும் வீர மரணம் எய்தினான் காளமன்.

(நற்கொண்டை என்ற இடத்தில் நடந்த போரில்' என்கிறது விளக்கப் பலகை)

நடுகல் 3: ஆநிரை மீட்ட வீரன் நடுகல்


இந்த நடுகல் 'மேல் வேளூரைச் சேர்ந்த பொங்கல தொண்டயன் மகன் வேம்படி என்பவர் கால்நடைகளை மீட்கும்போது ஏற்பட்ட சண்டையில் வீரமரணம் அடைந்ததைக்' குறிக்கிறது. பொ.ஆ 1001 ஐச் சார்ந்த கல்வெட்டு

நடுகல் 4 - பன்றியுடன் போரிட்டு இறந்த வேட்டை நாய்க்கு வைத்த நடுகல்

பன்றியோடு சண்டை போட்டு உயிர் நீத்த நாய் நடுகல்

2021 இல் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் பராமரிப்புப் பணியின் போது, இந்த மேட்டுப்பகுதியை சரிசெய்யும் போது முகமற்ற நாயின் உருவம் கொண்ட ஒரு கல்லும், நாயின் தலையும் எதிரே பன்றியின் உருவமும் கொண்ட இன்னொரு கல்லும் கிடைத்தன. இரண்டையும் ஒட்டவைத்து நடுவக் குழுவினர் நிறுவியுள்ளனர்.

படம் நன்றி: மின் தமிழ் மேடை
 
கல்வெட்டு


இந்த கல்வெட்டு 'பராந்தக சோழன் (பொ.ஆ. 907-953) ஆட்சிக் காலத்தில் இவ்வூர் ஏரி பாழாய்ப் போனதால் அதனைச் சரி செய்யும் விதமாக நிலத்தை தேவதானமாகவும் ஏரிப்பட்டியாகவும் விட்டு அதில் வரும் பணத்தைக் கொண்டு இவ்வூரில் இருந்த பறையன் சாத்தன் என்பவர் ஏரியைச் சரி செய்தார்' என்று குறிப்பிடுகிறது.

நடுகல் 5


இந்த நடுகல்லின் கீழ்ப் பகுதி மட்டுமே கிடைத்துள்ளது.

துணை

செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972

சேசாத்திரி; தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள்; பதிவுகள் வலைத்தளம்; 

தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி; சாந்தி சாதனா; 2002


வெளிச்சத்திற்கு வந்த வேட்டை நாய்; மின் தமிழ் மேடை; 08/08/2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்