செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்

அமைவிடம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தின் தலைநகர் செங்கம். செய்யாற்றின் தென்கரையில் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக 33 கிமீ தூரம்.  

இலக்கியத்தில் செங்கம்

மலைபடுகடாம் பத்துப்பாட்டு எனும் சங்க காலத் தொகுப்பில் உள்ள பத்தாவது நூல். ஒரு ஆற்றுப்படை நூல். ஆற்றுப்படை என்பது தலைவன் ஒருவனிடம் பரிசில் பெற்ற விறலியர், பாணர், கூத்தர், பொருனர் முதலியோருள் ஒரு கலைஞன் வேரொருவனுக்குத் அத்தலைவனது பெருமையைக் கூறி, அவன் ஊருக்குச் செல்லும் வழியைச் சொல்லி வழிகாட்டுவதாகும் (ஆற்றுப்படுத்துவது). மலைபடுகடாம் 'இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்' என்ற புலவர் 'பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்' என்பவனைப் பாடியது. செங்கண்மா இன்றைய செங்கம். (இந்த நன்னன் சங்க இலக்கியங்கள் வசை பாடும் பெண்கொலை புரிந்த நன்னன் அல்ல). சங்க காலத்திற்குப் பின் செங்கம் குறிப்பிடத்தக்க தனி வரலாறு கொள்ளவில்லை.

சிறப்பு
  1. சோழர் கால ரிஷபேசுவரர் கோயில்
  2. நாயக்கர் கால வேணுகோபால பார்த்தசாரதி கோயில்
  3. அதன் ராமாயண ஓவியங்கள்
  4. மகாவீரர் சிலை
  5. சுற்றியுள்ள இடங்களில் உள்ள நடுகற்கள்

ரிஷபேஸ்வரர் கோயில்

கோயில் செய்யாற்றின் கரையில் வேணுகோபால பார்த்த்சாரதி பெருமாள் கோயிலுக்குக் கிழக்கே, செங்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது.

தேவார வைப்புத்தலம்

இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகங்களின் இடையிலும், பொது பதிககங்களின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும். இக்கோயில் ஆறாம் திருமுறை 70 ஆம் பதிகம் ஆறாம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர்
    வக்கரை மந்தாரம் வார ணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி
    விளமர் விராடபுரம் வேட்க ளத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம்
    பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங்
கண்ணை களர்காறை கழிப்பா லையுங்
    கயிலாய நாதனையே காண லாமே

பழம் பெயர்

1000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. கல்வெட்டுகள் இவ்வூரை 'செங்கைமா' என்றும் இறைவன் 'செங்கைமா உடையார்', 'திருஇடபந்துறை நாயனார்', 'தென்கண்ணை ஆட்கொண்ட நாயகன்' என்றும் குறிக்கின்றன. *

கல்வெட்டுகள்

இக்கோயிலில் பிற்கால சோழர், பாண்டியர், சம்புவராயர், விஜயநகர, சேலம் மற்றும் செஞ்சி நாயக்கர் கல்வெட்டுகள் கிடைக்கின்றன.*
மேலும் இக்கோவிலின் 13 ம் நூற்றாண்டு பாடல் கல்வெட்டில் மலைபடுகடாம் பற்றிய தகவல் காணப்படுகிறது.*

இக்கோயிலில் பங்குனி உத்திரம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் சித்திரையில் பிரமோற்சவம் ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இறைவன்

இறைவன் ரிஷபேஸ்வரர் 
இறைவி அனுபாம்பிகை 

கோயில் அமைப்பு 

கிழக்கு நோக்கிய கோயில் கீழ்கண்ட அமைப்பைக் கொண்டுள்ளது.
  1. கோயிலுக்கு முன் வெளியே உள்ள நந்தி மண்டபம்
  2. கிழக்கு கோபுரம், தென்கிழக்கில் ஒரு வாசல் கொண்ட மதில்
  3. ஒரு திருச்சுற்று
  4. திருச்சுற்றில் விநாயகர், முருகர் ஈஸ்வரர் சந்நிதிகள்
  5. பழமையான விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் கொண்ட மையக் கோயில். அத்னோடு முன்புறம் இணைந்த முக மண்டபம்.
நந்தி

கோயிலுக்கு வெளியே தன் மண்டபத்தில் நந்தி உள்ளது.

நந்தி

ஆண்டுக்கொரு முறை பங்குனி 3ஆம் தேதி மாலையில் (5.40-6) சூரிய ஒளி கோயில் கோபுரத்தில் விழுந்து சிறிது நேரத்தில் நந்தி மீது விழும். அப்போது 15 நிமிடங்கள் நந்தி பொன் நிறத்தில் மின்னுவதைக் காணமுடியும். இதைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ^

கோபுரம்

மொட்டை கோபுரம்

மதிலில் தென் கிழக்கில் ஒரு வாயில் உள்ளது. 

திருச்சுற்று

தென்மேற்கே கிழக்கு நோக்கிய விநாயகர் கோயில்

வடமேற்கே கிழக்கு நோக்கிய வள்ளி தெய்வானை உடனான முருகர் கோயில்

வடக்கே சண்டிகேசுவரர் சந்நிதி

சண்டிகேசுவரர்

வடகிழக்கே கிழக்கு நோக்கிய அனுபாம்பிகை அம்மன் கோயில்

அம்மன் கோயில்

கிழக்கு கோபுரத்தின் வழியாக உள்ளே வந்தால் பலிபீடம், சிறு நந்தி ஆகியன உள்ளன. நந்திக்கு முன் முக மண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஒரு சதுரச் சாளரம் - இறைவனைக் காண. 

சாளரம், நந்தி, பலிபீடம்

மையக் கோயில்

நுழை வாயில் முக மண்டபத்தின் தெற்குச் சுவரில் உள்ளது. அங்கு ஒரு வாயில் மண்டபம் உள்ளது.  

விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம்
தெற்குப் பார்வை

விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம்
வடக்குப் பார்வை

முக மண்டபம் - வடக்குப் பகுதி

விமானம்

கட்டடக் கலை - மூன்று தள கலப்பு வேசர விமானம். தரைத்தளம் கல்ஹாரம், மேலே செங்கல் கட்டுமானம். ஷடாங்க உபபீடத்தின் மீது பிரதிபந்த அதிஷ்டானம் (பிரதிக்ரமம்?). பித்தியில் பக்கத்திற்கு நான்கு பிரம்ம காந்தத் தூண்கள் சாலைப்பத்தியை மட்டும் பிரிக்கின்றன. பத்ரம் இல்லை. வேதி உண்டு. வெட்டுப் போதிகை. பத்ம வலபி. 

அதிஷ்டானம், கல்வெட்டுகள்

தேவகோட்டங்கள்

சிவன் கோயிகளுக்குறிய ஐங்கோட்டங்கள் (விமானத்தில் பக்கத்திற்கு ஒன்றாக மூன்று, அர்த்த மண்டபத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு) உள்ளன. அவற்றில் கோட்டங்களின் உயரத்தில் பாதியே உள்ள பிற்கால சிறு சிற்பங்கள் உள்ளன.

விநாயகர் - அர்த்த மண்டப தெற்கு கோட்டம்
(மேலே நிருத்த கணபதி என்று எழுதி இருந்தாலும்
இருப்பது இவர்தான்)

தட்சிணாமூர்த்தி = விமானத் தெற்குக் கோட்டம்

லிங்கோத்பவர் - விமான மேற்குக் கோட்டம்

நான்முகன் - விமான வடக்குக் கோட்டம்

துர்க்கை - அர்த்த மண்டப வடக்குக் கோட்டம்

உள் திருச்சுற்றில் விநாயகர், மகாலட்சுமி, நவக்கிரகம், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. 

சிற்பங்கள்

முக மண்டபத் தூண்களில் ? இம்மண்டபத்தைக் கட்டியவர்கள்?


முக மண்டப வடக்குச் சுவர்

துணை






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்