பிரம்மதேசம்

அமைவிடம்

பிரம்மதேசம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவில் உள்ள ஒரு சிற்றூர். விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள நேமூர் வழியாகச் செல்லலாம். விழுப்புரத்தில் இருந்து 20 கிமீ, செஞ்சியில் இருந்து 17 கிமீ தூரம். சென்னை - திருச்சி சாலையில் இருந்து கூட்டேரிப்பட்டு வழியாகவும் செல்லலாம்.

செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள முக்கோண நிலப்பகுதியில் உள்ளது பிரம்மதேசம். இப்பகுதி பல்லவர் காலம் முதலே சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளது. பிரம்மதேசத்தில் இருந்து 03 கிமீ தொலைவுக்குள் எண்ணாயிரம், எசாலம், 14 கிமீ தொலைவில் தாதாபுரம் ஆகிய ஊர்களில் சோழர் கோயில்கள் அமைந்துள்ளன. மிக அருகிலேயே மகேந்திர பல்லவனின் மண்டகப்பட்டு இலக்ஷிதாயதனம் குடைவரையும், தளவானூர் சத்ருமல்லேசுவரம் குடைவரையும் அமைந்துள்ளன.

ஊர்ப் பெயர்

பிரம்மதேசம் 'ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில், பல்குன்றக் கோட்டத்தில், ராஜராஜ வளநாட்டில், பனையூர் நாட்டில் இருந்த பிரம்மதேயமாகிய ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்ற தனியூரின்' ஒரு பிடாகையாக (பகுதி) இருந்தது. 'பிரம்மதேயம்' மருவி 'பிரம்மதேசம்' ஆயிற்று.

பிரம்மதேசம் என்ற பெயரில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஒரு ஊரும், அம்பாசமுத்திரம் அருகே ஒரு ஊரும் உள்ளன.

கோயில்கள்

இவ்வூரில் இரு சோழர் காலக் கோயில்கள் உள்ளன.
  1. பிரம்மபுரீசுவரர் கோயில்
  2. பாடலீசுவரர் கோயில்
இருகோயில்களும் இந்திய தொல்பொருள் துறையினரின் பராமரிப்பில் உள்ளன.

பாடலீசுவரா் கோயில்

கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் திருப்பாடலீசுவரம் உடையார் என்பது.

பிரம்மதேசம் பாதாலீசுவரர் கோயில்

கோயில் விமானம், அா்த்தமண்டபம், சாவகாச அந்தராளம், மகாமண்டபம்,  அதன் முன் தனித்து நிற்கும் ஒரு மண்டபம் என்று அழகிய அமைப்பைக் கொண்டுள்ளது. 

விமானம் உயர்ந்த அஷ்டாங்க உபபீடத்தின் மீது அமைந்துள்ளது. பாதபந்த அதிஷ்டானம். தரைத்தலம் மட்டுமே கொண்ட ஒரு தல விமானம். பித்தியில் வேதி உள்ளது. பக்கங்கள் தூண்களால் இரு கர்ண பத்திகள், நடு சாலைப் பத்தியாக பிரிக்கப்பட்டுள்ளது. சாலைப் பத்தி மட்டும் பத்ர பிதுக்கம் கொண்டுள்ளது. சாலைப் பத்திகளில் தேவ கோட்டங்கள் உள்ளன.  வட்ட வடிவ கிரீவமும், சிகரமும் கொண்ட வேசர வகை விமானம். கிரீவமும், சிகரமும் செங்கல் கட்டுமானம். நான்கு மகா நாசிகள். ஸ்தூபி இல்லை. விமான, அர்த்த மண்டப கிரீவ தேவகோட்டங்களில் சிலைகள் எதுவும் இல்லை. 

நீண்ட அர்த்த மண்டம். அதில் பக்கத்திற்கு மூன்று தேவகோட்டங்கள். உள்ளே ஆறு ருத்ரகாந்தத் தூண்கள் உள்ளன.

அர்த்த மண்டபம்

அர்த்த மண்டப நுழை வாயிலில் அழகிய வாயிற் காவலர்கள். ஒருவர் சிங்கத்தின் மீது கால் ஊன்றி நிற்பது சிறப்பு.

வாயிற்காவலர்

சிறு சிங்கத்தின் மீது கால் ஊன்றிய வாயிற்காவலர்

வலபியை பூதங்கள் அலங்கரிக்கின்றன

பூத வலபி

சாவகாச அந்தராளம் இருபுறமும் வாயிலும் படிகளும் கொண்டுள்ளது

மகாமண்டபத்தில் அடித்தளம் மட்டுமே உள்ளது ஏற தெற்குப் பக்கத்தில் இருபக்க படிகளைக் கொண்ட பக்ஷசீலா சோபானம் என்ற அமைப்பு உள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பக்கங்களைச் செங்கற் சுவர்கள் முற்றிலுமாக மூடி இருந்ததாக திரு எஸ். ஆர். பாலசுப்ரமனியன் 1976 க்கு முன் எழுதியிருக்கிறார். இப்போது மேற்குப் பக்கம் மட்டுமே சுவர் உள்ளது.

படம் நன்றி: சரவணமணியன், விழுப்புரம் மாவட்ட வரலாற்றுத் தேடல்

மகா மண்டபத்தின் முன் ஒரு மண்டபத்தின் அதிஷ்டானம் சற்று இடைவெளி விட்டுத் தனித்து உள்ளது. மேல் கட்டுமானம் எதுவும் இல்லை.

(படம்: நன்றி மாலை மலர்)

திருச்சுற்று மதில் மற்றும் பரிவார ஆலயங்கள் சிதைந்துள்ளன. இறைவர்கள் இன்றிக் காணப்படுகின்றன. 

கல்வெட்டுகள்

கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியது முதலாம் ராஜேந்திர சோழனுடையது (பொ.ஆ. 1012-1044).  அவனது  24 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பராந்தகன் சுத்தமல்லியாா் ஆன முக்கோக்கிழானடிகள் என்னும் அரசி ராஜேந்திர சோழ தேவரின் ஶ்ரீபுஜங்கள் வலிமை பெற்று என்றும் வெற்றிக் கனியை ஈட்ட வேண்டுமென்றும் வேண்டி பிரம்மதேசம் பாடலீஸ்வரமுடையாா் கோயில் பூஜைகளுக்காக நிலங்கள் வழங்கியதைத் தொிவிக்கின்றது.

முதலாம் ராஜாதிராஜன் (பொ.ஆ. 1018-1054), வீர ராஜேந்திரன் (பொ.ஆ. 1063-1070), முதலாம் குலோத்துங்கன் (பொ.ஆ. 1070-1120), விக்கிரம சோழன் (பொ.ஆ. 1118-1135), இரண்டாம் குலோத்துங்கன் (பொ.ஆ. 1133-1150), இரண்டாம் ராஜராஜன் (பொ.ஆ. 1146-1170) , மூன்றாம் குலோத்துங்கன் (பொ.ஆ. 1178-1218) ஆகியோரின் கல்வெட்டுகளும் இக்கோயிலில் உள்ளன.

இக்கோயிலில் உள்ள காலத்தால் பிற்பட்டக் கல்வெட்டு  விஜயகர கம்பண்ண உடையாருடையது (14 ஆம் நூற்றாண்டு). 

பிரம்மபுரீசுவரா் கோயில்

ஊரின் வடமேற்குப் பகுதியில் ஒரு பெரிய ஏரியின் கரையில் அமைந்துள்ளது இந்த கிழக்கு நோக்கிய கோயில். சுற்றியுள்ள தரைமட்டத்தைவிட சுமாா் ஐந்து அடி ஆழ பள்ளத்தில் உள்ளது. பள்ளத்தின் பக்கங்கள் பாறைச் சுவர்களால் ஆனவை. 

வெளித் திருசுற்று

உயா்ந்த வெளி மதிலுக்கு உள்ளே இரு திருச்சுற்றுகள்.  கிழக்கில் மேல் தளங்கள் இல்லாத மொட்டை கோபுரம். மையக் கோயில், உள் திருச்சுற்று வாயில் இவற்றுக்கு நேராக அமையாமல் வடக்கில் தள்ளி உள்ளது. அதன் தெற்கில் மதிலில் கருவறைக்கு நேராக ஒரு சதுரத் துளை. அதன் மூலம் கருவறை லிங்கத்தை பார்க்கலாம். 

கோபுரம் - உள் பக்கத்தில் இருந்து

இந்த மதிலும் கோபுரமும் வெளி திருச்சுற்றும் இரண்டாம் குலோத்துங்கனது 18 ஆம் ஆட்சியாண்டில் அம்மையப்பன் கண்டசூரியன் என்ற சம்புவரையன் எழுப்பியது எனக் கல்வெட்டால் தெரிகிறது. இதே சிற்றரசன் மூன்றாம் குலோத்துங்கனது இரண்டாம் ஆட்சியாண்டில் திருவக்கரை சந்திரமௌலீசுவரர் கோயிலில் நூறு கால் மண்டபம் எழுப்பியுள்ளான். 

வெளித்திருசுற்றில் வடக்கில் ஒரு பெரிய மண்டபத்தின் அதிஷ்டானம் மட்டும் உள்ளது. அதன் பின்புறம் ஒரு முன்புறம் திறந்த மண்டபம். 

வெளித் திருச்சுற்று மண்டபம்

வெளித் திருசுற்றில் பலிபீடமும், கொடிமரம், நந்தி ஆகியவற்றுக்கான பீடங்களும் உள்ளன.

நந்தி பீடம், கொடிமரப் பீடம், பலி பீடம், மதில் துளை

உள் திருச்சுற்று

உள் திருச்சுற்றின் வாயில் திருசுற்று மாளிகைக்குள் திறக்கிறது. மூல ஆலயத்தைச் சுற்றி திறந்தவெளித் திருசுற்றும் அதனைச் சுற்றி திருச்சுற்று மாளிகையும் அமைந்துள்ளன. உருளைவடிவ ஸ்ரீருத்ரகாந்தத் தூண்கள் திருசுற்று மாளிகையைத் தாங்குகின்றன. வெட்டுப் போதிகை. வாயில் உள்ள கிழக்குப் பகுதியில் மூன்று வரிசைகளாகவும், மற்ற மூன்று புறங்களில் இரு வரிசைகளாகவும் அமைந்துள்ளன.

திருச்சுற்று மாளிகை வடக்குப் பகுதி.

வடகிழக்கில் நவகிரகங்களும் வடமேற்கில் முருகர் வள்ளி தெவானைக்கான பீடமும், மேற்கில் ஒரு லிங்கமும் உள்ளன. கிழக்குப் பகுதியில் சில கோயில் பகுதிகள் வைக்கப்பட்டுள்ளன. சுவரில் பல கல்வெட்டுகள் உள்ளன.




திருசுற்று மாளிகை - கிழக்குப் பகுதி (மூன்று வரிசைத் தூண்கள்)
கட்டட பகுதிகள்

கல்வெட்டு

 மையக் கோயில்

மையக் கோயில் விமானம், அா்த்தமண்டபம், மகாமண்டபம்,  முக மண்டபம் என்ற அமைப்பைக் கொண்டுள்ளது. 

தெற்குப் பார்வை

விமானம்

விமானம்

உபபீடம் இல்லை.பாதபந்த அதிஷ்டானம். தரைத்தலம் மட்டுமே கொண்ட ஒரு தல விமானம். பித்தியில் வேதி உள்ளது. பக்கங்கள் தூண்களால் இரு கர்ண பத்திகள், நடு சாலைப் பத்தியாக பிரிக்கப்பட்டுள்ளது. சாலைப் பத்தி மட்டும் பத்ர பிதுக்கம் கொண்டுள்ளது. சாலைப் பத்திகளில் தேவ கோட்டங்கள் உள்ளன. மழுங்கிப்போன பூதவரி கொண்ட வலபி. வட்ட வடிவ கிரீவமும், சிகரமும் கொண்ட வேசர வகை விமானம். கிரீவமும், சிகரமும் செங்கல் கட்டுமானம். கிரீவ வலபியின் மதலை அமைப்பு அதனை பிற்காலத்தியதாய் காட்டுகிறது (13ஆம் நூற்றாண்டு அல்லது பின்னர்). நான்கு மகா நாசிகள். ஸ்தூபி இல்லை. பிரஸ்தரத்தின் மீது மூலைகளில் கல் நந்திகள் உள்ளன. கிரீவ கோட்டங்களில் சிலைகள் எதுவும் இல்லை. 

தேவகோட்டங்கள்

விமானத்திலும், அர்த்த மண்டபத்திலும் பக்கத்திற்கு ஒரு தேவ கோட்டம் என ஐந்து தேவ கோட்டங்கள் உள்ளன. விமானத்தின் தெற்கு, மேற்குத் தேவ கோட்டங்களின் முன் மண்டபங்கள் உள்ளன. விமான தேவ கோட்டங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே நான்முகன். அர்த்த மண்டப தேவ கோட்டங்களில் தெற்கே விநாயகர், வடக்கே துர்க்கை.

விநாயகர்

தட்சிணாமூர்த்தி

லிங்கோத்பவர்

பிரம்மா

துர்க்கை

துர்க்கை 
(படம் நன்றி: https://tamilnadu-favtourism.blogspot.com/2015/12/brahmadesam-villupuram.html

மகா மண்டபம்

மகாமண்டபட்தின் தெற்குப் பகுதியில் ஒரு வாசல் உள்ளது. பக்கங்களில் இருந்து படிகள் உள்ளன.

மகா மண்டபத்தின் தெற்கு வாசல்

மகாமண்டபத்தின் வடக்குப் பக்கச் சுவரை ஒரு இரட்டைக் கால் பஞ்சரம் அழகு செய்கிறது. திருச்சுற்றின் இந்த பக்கத்தில் தெற்கு நோக்கி ஒரு சந்நிதி உள்ளது. உள்ளே சிலை இல்லை. சண்டிகேசுவரருக்கானதாக இருக்கலாம்.

மகா மண்டபத்தின் மேற்குச் சுவரும், ? சண்டிகேசர் சந்நிதியும்

முக மண்டபம்

மூன்று புறம் திறந்த முக மண்டபத்தில் நான்கு வரிசையில் 12 தூண்கள். வடக்கில் இருந்து படிகள் உள்ளன.

முகமண்டபமும், அம்மன் சந்நிதியும்

அதன் வட பகுதியில் தெற்கு நோக்கியவாறு அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. பெரியநாயகி அம்மன் தாமரை பீடத்தின் பின் கரங்களில் அல்லியும், தாமரையும் ஏந்தி, முன் கரங்களில் அபய, வரத முத்திரைகள் காட்டி நின்ற திருக்கோலம். அருள் பொழியும் திருமுகம்.  சோழா் காலச் சிலை.

உள்ளே

கருவறையில் பிரம்மபுரீஸ்வர லிங்கம் உள்ளது.  அர்த்த மண்டபமும் மகா மண்டபமும் ஸ்ரீ ருத்ரகாந்தத் தூண்கள் கொண்டுள்ளன.



மகா மண்டபம்

முக மண்டபத்தில் இருந்து பார்வை

கல்வெட்டுகள்

இத்தலத்தில் 42 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதலாம் ராஜேந்திரன் (பொ.ஆ.1036), முதலாம் குலோத்துங்க சோழன் (1111), விக்கிரம சோழன் (1132, 1136), இரண்டாம் குலோத்துங்கன் (1146), இரண்டாம் ராஜராஜன் (1159), மூன்றாம் குலோத்துங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (1248), ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் (1265), மாறவர்மன் விக்கிரம பாண்டியன், சம்புவரையா்கள், விஜயநகர மன்னா்கள் கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் உள்ளன.

இக்கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகள்த் தெரிவிக்கின்றன.
  • அம்மையப்பன் கண்டசூரியன் என்ற சம்புவரையன் வெளித் திருசுற்று, கோபுரம், மதில் கட்டியது (மேலே காண்க)
  • அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டான் என்ற ராஜராஜ சம்புவரையன் கொடைகள். எண்ணாயிரம் கல்வெட்டு ஒன்று இவன் அங்குள்ள பெருமாள் கோயிலுக்கு முன்னால் மண்டபம் கட்டியதைப் பதிவு செய்கிறது.
  • கோயில்களுக்கு அளிக்கப்பட்ட தானங்கள்
  • விக்கிரம சோழன் காலத்தில் மடப்பள்ளி கட்டியது.
  • இங்கிருந்த 'ராஜநாராயணம்' என்ற மடம் துறவிகளுக்கு உணவு அளித்தது
  • பாண்டியா் காலக்கல்வெட்டுகளில் மக்களுக்கும், வணிகா்களுக்கும் விதிக்கப்பட்ட கொசக்காணம், கல்யாணக்காணம், செக்குவரி, அழுகல் சரக்குவரி, அங்காடி பாட்டம், தட்டார பாட்டம், குயவா் செலுத்து வரி போன்ற வரிகள்
  • பெருமழையினால் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது சிதிலமடைந்த கோயில் மீண்டும் விஜயநகர ஆட்சியில் புனரமைக்கப்பட்டது.
  • காலத்தால் கடைசிக் கல்வெட்டு 14 நூற்றாண்டு இறுதியில் விஜயநகர ஆட்சி காலத்தது. 
பிரம்மதேசம் செல்லும் வழியில்

பிரம்மதேசத்தின் வெளியே;


பிரம்மதேசம் சாலையும் எண்ணாயிரம் சாலையும் சந்திக்கும் இடத்தில் ஒரு பக்கம் ஏரியும் மறுபக்கம் குளமும் அமைந்த இடத்தில் உள்ளன செம்மனேரி ஆண்டவர் (பூரணி, புஷ்கலை உடனுறை அய்யனார்), காசிவிஸ்வனாதர், வீரபத்திரர் முதலான கோயில்கள், சிலைகள். 


மாசி மகத்தன்று பிரம்மபுரீஸ்வரர் இந்த செம்மனேரி சாஸ்தா கோவிலுக்குச் சென்று அங்கே தீர்த்தவாரி நடைபெறும் என்றும் அதன்பின் பிரம்மதேசத்தில் அன்று மாலை வீதியுலா நடத்தப்படும் என்றும் மாலை மலர் செய்தி (செப்டம்பர், 2017) தெரிவிக்கிறது.



வீரபத்திரர்

காசி விஸ்வநாதர் கோயில்

யானைகள் நிரை


கிரகணம்

துணை




மாலை மலர்; பாவங்களைப் போக்கும் பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வரர் கோவில்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்