செங்கம் நடுகற்கள்: எடுத்தனூர் - முதலாம் மகேந்திரன் கால, எருமைகள் காத்த வீரனும், நாயும்
தண்டராம்பட்டிலிருந்து தண்டராம்பட்டு எடத்தனூர் சாலை வழியாக எடத்தனூரை அடையலாம். தென் பெண்ணை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ள ஊர். ஊரின் நடுவில் சாத்தனூர் அணையில் இருந்து வரும் ஒரு பாசன வாய்க்கால் ஒடுகிறது. அதன் மீது உள்ள பாலத்தைக் கடந்து, வலதுபுறம் (மேற்கே) திரும்பி, வாய்க்கால் கரை மீதுள்ள மண் சாலையில் சுமார் 3 கிமீ தூரம் பயணம் செய்து 2.800 என்ற மைல் கல்லை அடையலாம்.
அதற்கு சிறிது முன்னால் கீழிறங்கிச் செல்லும் ஒத்தையடிப் பாதை முடியும் இடத்தில் உள்ளது 'ஊமை வேடியப்பன் கோயில்'. இதன் தெய்வம்தான் இந்த நடுகல். இந்த இடம் கூகிள் வரைபடத்தில் 'Eduthanoor dog herostone' என்று குறிக்கப்பட்டுள்ளது.
![]() |
ஊமை வேடியப்பன் கோயிலின் முன் சிதைந்த சுட்ட மண் குதிரைகள் |
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இங்கும் சிமண்ட் மேடை அமைத்து தகவல் பலகை வைத்துள்ளனர். தகவல் பலகை கீழே விழுந்து விட்டுள்ளது.
![]() |
நடுகல்லும் தகவல் பலகையும் |
![]() |
ஊமை வேடியப்பன் நடுகல் |
சிற்பம்
கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. இடது காலுக்குக் முன்னால் மங்களச் சின்னங்களான் சிமிழும், கெண்டியும் உள்ளன. வில்லுக்கு மேலும் குறுவாளுக்கும் மேலுமாக இரு தோரணங்கள் உள்ளன. வீரனின் பின்னால் ஒரு நாய் அம்ர்ந்த நிலையில் உள்ளது.
கல்வெட்டு
வீரனின் மேற்புறமும், நாயின் மேற்புறமும் தொடர்புடைய கல்வெட்டுகள் உள்ளன. வட்டெழுத்தில் அமைந்தவை.
வீரனின் மேற்புறக் கல்வெட்டு:
கோவிசைய
மயிந்திர பருமற்கு
முப்பத்து நான்காவது வாணகோ
அரைசரு மருமக்கள் பொற்றொக்கை
ஆர் இளமகன் கருந்தேவக்கத்தி தன்
னெருமைப் புறத்தே வா
டி பட்டான் கல்.
பொருள்:
இந்த நடுகல்லின் காலம் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் (பொ.ஆ. 590 - 630) 34 ம் ஆட்சி ஆண்டு (பொ.ஆ. 628) ஆகும்.
பாண அரசருடைய மருமக்களான பொற்றொக்கையாரின் இளமகன் கருந்தேவக்கத்தி
தன் எருமைப் புறத்தே இறந்து பட்டவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல். (எருமைகளைக் காக்க கள்வர்களோடு போரிட்டு என்பது குறிப்பு)
நாயின் மேற்புறக் கல்வெட்டு
(கோவிவ)ன்னென்னு
ந் நாய் இ
ரு கள்ளனைக் கடித்
துக் காத்திரு
ந்த வாறு.
பொருள்:
அவனுடைய கோவிவன் என்னும் நாய் இருகள்ளர்களைக் கடித்துக் காத்தும் நிற்கின்றது.
நடுகல்லின் பழைய நிலைமையும் புனரமைப்பும்
வேலுதரன் ஐயா ஜூலை 2018 இல் பார்த்தபோது நடுகல் பாதி புதைந்த நிலையில் இருந்திருக்கிறது. அவரது வலைத்தள பதிவிலிருந்து அப்போதைய படம்:
2018 இல் எடுத்தனூர் நடுகல் (படம் நன்றி: https://veludharan.blogspot.com/2018/07/eduthanur-hero-stone-part-of-sengam.html) |
நடுகல்லை அகழ்ந்து எடுத்து, மேடை அமைத்து, முழு நடுகல்லும் தெரியும் வகையில் அதை மேடை மீது நிறுவி, தகவல் பலகையும் வைத்துள்ளனர் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர்.
எடுத்தனூர் எல்லையில் தென் பெண்ணையாறு:
![]() |
எடுத்தனூர் எல்லையில் தென் பெண்ணையாறு |
துணை
செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972
https://veludharan.blogspot.com/2018/07/se-gudalur-part-of-sengam-nadukarkal.html
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ தகவல் பலகை
கருத்துகள்
கருத்துரையிடுக