செங்கம் நடுகற்கள்: தண்டராம்பட்டு - முதலாம் நரசிம்மவர்மன் கால ஊர் காக்கப் பட்டான் நடுகற்கள்

பயணம் 

12/07/2022 சுபகிருது ஆண்டு, ஆனி மாதம், 28 ஆம் நாள் செவ்வாய் கிழமை

அமைவிடம்

கீழ் ராவந்தவாடி திருவண்ணாமலை - அரூர் - சேலம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 19 கிமீ தூரத்தில் உள்ள ஊர். 

தண்டராம்பட்டு எல்லையில் சாலையின் தெற்கே உள்ள ஆங்கிலேயர் கால கற்பாலம்

ஊரின் நடுவில் சாத்தனூர் சாலை சந்திப்பில் இருந்து அதன் வலது புறம் ஒரு சிறிய சாலை கீழ்வணக்கம்பாடி நோக்கிப் பிரிந்து செல்கிறது. அந்த சாலையில் சுமார் 1.5 கிமீ தூரத்தில் சாலையின் இடது புறம் மரக்கூட்டத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணாரப்பன் கோயில். இக்கோயில் வழிபாட்டில் உள்ளது. அங்கு இரு நடுகற்கள் உள்ளன.
Lat: 12 9’ 49.82” and Longi : 78 56’ 58.84”

கிருஷ்ணாரப்பன் கோயில்

நடுகல் 1



சிற்பம்

வீரனது உருவம் இடதுபுறம் பார்த்த நிலையில் உள்ளது. சிறு வயதுத் தோற்றம். இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். தலைமுடி பின்னால் கழுத்துவரை தொங்குகிறது. தலை உச்சியில் பூ? . காது நீண்டு கடுக்கனோடு தொங்குகிறது. குட்டையான இடையாடை அணிந்துள்ளான். இடைக்கச்சின் முடிச்சு பின்னால் உள்ளது. இடைக்கச்சில் ஒரு குறுவாளை சொருகி உள்ளான். மேலே இரு தோரணங்கள். இடது காலின் முன் கெண்டி. நடு உடலின் முன் கண்ணாடி. இரண்டும் மங்கலச் சின்னங்கள்.

கல்வெட்டு

(வட்டெழுத்து)

கோவிசைய நரை
சிங்கபருமற்கு யா
ண்டேழாவது மேற்கோவ
லூர் மேல் வாணகோ முத்த
ரைசர் நாடு பாவிய
தஞ்சிற்
றப்படிகள் பொன்மாந்தனார் மேற்
வந்த ஞான்று பொன்மாந்தானார்க்காய்ப் பட்டா
ன் கடுவந்தையார் மகன் விற்சிதை கல்
வாண
கோக்கட
மர்.


பாவிய - விரிவு படுத்திய; ஞான்று - போது; 

பொருள்

பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மனது ஏழாவது ஆட்சி ஆண்டில்
வாணகோ முத்தரசன் மேல் கோவலூர் மீது படையெடுத்து, நாட்டை விரிவுபடுத்திய 
தன் சிற்றப்பன் பொன்மாந்தனார் மீது போர் தொடுத்த போது,
பொன்மாந்தனாருக்காக வீர மரணம் அடைந்த கடுவந்தையார் மகன் விற்சிதைக்காக எடுக்கப்பட்ட நடுகல். 
நடுகல் எடுத்தவன் வாண கோக்கடமர்

நடுகல் 2


சிற்பம்

வீரனது உருவம் இடதுபுறம் பார்த்த நிலையில் உள்ளது.  இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். தலைமுடி பின்னால் கழுத்துவரை தொங்குகிறது.  குட்டையான இடையாடை அணிந்துள்ளான். இடைக்கச்சின் முடிச்சு பின்னால் உள்ளது. இடைக்கச்சில் ஒரு குறுவாளை சொருகி உள்ளான். நடுகல்லின் கீழ்ப் பகுதி மண்ணில் புதைந்துள்ளது.  அவன் நெற்றியிலும் மார்பிலும் அம்புகள் புதைந்துள்ளன. தலைக்குப் பின்னால் ஒரு தோரணம். வீரனின் வலது பக்கம் கெண்டி, சிமிழ், இடது காலுக்கு அருகில் கண்ணாடி ஆகிய மங்கலச் சின்னங்கள் உள்ளதாக 'செங்கம் நடுகற்கள்' நூல் தெரிவிக்கிறது. ஆனால், தெளிவாகத் தெரியவில்லை.

கல்வெட்டு

(வட்டெழுத்து)

கோவிசைய நரை
சிங்கபருமற்கு யா
ண்டேழாவாது வாணகோ முத்
தரைசரு நாடு பாவிய மேற் கோ
வலூர் மேல் வந்து தஞ்சிற்றப்
படிகளை எறிந்த ஞான்
று பட்டான் சேவர்பரி அட்டுங் கொள்
ளி துருமா
வனார் மக
ன் மாற்கட
லன்

(எறிந்த - வென்ற; சேவர்பரி - படைவீரர்க் குதிரை; அட்டும் - முழுவதும்; கொள்ளி - (காவல் பொறுப்பு) கொண்ட; துரு - விரைவுக் குறிப்பு; துருமா - குதிரை)

பொருள்

பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மனது ஏழாவது ஆட்சி ஆண்டில்
வாணகோ முத்தரசன், நாட்டை விரிவுபடுத்திய மேல் கோவலூர் மீது படையெடுத்து வந்து,
தன் சிற்றப்பனை வென்றபோது, 
வீர மரணம் அடைந்தான் குதிரைப்படை முழுவதற்கும் பொறுப்பு கொண்ட 
துருமாவனார் மகன் மாற்கடலன் 

தகவல் பலகை

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர் ஒரு தகவல் பலகையை வைத்துள்ளனர்.



துணை

செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972

சேசாத்திரி; தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள்; பதிவுகள் வலைத்தளம்; 


தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி; சாந்தி சாதனா; 2002

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜேஷ்டா தேவி (சேட்டை, மூதேவி)

நெடுங்குணம் 1: அறிமுகம்

கூழமந்தல்