செங்கம் நடுகற்கள்: சே கூடலூர் - முதலாம் மகேந்திரன் கால ஆநிரை காத்த வீரன்
திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 14 கி மீ தூரத்தில் உள்ள ராதாபுரத்தில் இடது பக்கம் ஒரு நுழை வாயில் வளைவு வழியாக ஒரு சாலை பிரிகிறது. அதில் சென்றால் 5 கிமீ தூரத்தில் சே கூடலூர். 'சுடுகாட்டின் ஏரி அருகே நடுகல்' என்பது 'செங்கம் நடுகற்கள்' நூல் தரும் இட அடையாளம். அதைச் சொல்லி ஊரில் விசாரித்து அவ்விடத்தை அடைந்தேன். இறுதியில் வேலுதரன் ஐயா பதிவு செய்திருந்த தீர்க்க அட்ச ரேகை குறிப்புகள் (Lat: 12 8’ 24.14” Longi: 78 59’ 48.30”) இடத்தை துல்லியமாகக் காட்டிக் கொடுத்தன. பிணம் எரிக்கும் கட்டிடத்திற்கு அருகே ஏரிக்கரை சாலையின் ஒரத்தில் இருந்தது.
![]() |
சே. கூடலூர் நடுகல் |
சிற்பம்
கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. இடது காலுக்குப் பக்கத்தில் கெண்டியும் இடது கைக்கு கீழ் சிமிழும் உள்ளன. கெண்டியும் சிமிழும் மங்களச் சின்னங்கள். வில்லுக்கு மேலே தோரணம் உள்ளது.
கல்வெட்டு
கல்லின் மேற்பகுதியில் தொடர்புடைய கல்வெட்டு உள்ளது. வட்டெழுத்தில் அமைந்தது. (இக்கால புதுக்கவிதை போன்ற அமைப்பு)
கோவிசை
ய மைஇந்திர பரு
மற்கு முப்பத்தெட்டா
வது வாணகோஅரைசரு மரு
மக்கள் கந்தவிண்ண
னார் கூடல் தொறுக் கொண்ட
ஞான்று தொறு இடுவித்துப் பட்டா
ன் பொன்னரம்பனார் கொல்லகச்
சேவகன் காகண்டி அண்ணாவன் கல்
கூடல் இள
மக்கள் நடுவி
த்த கல்.
இதன் பொருள்:
இந்த நடுகல்லின் காலம் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் (பொ.ஆ. 590 - 630) 38ம் ஆட்சி ஆண்டு (பொ.ஆ. 628) ஆகும்.
பாண அரசருடைய மருமக்களான கந்த விண்ணனார் கூடலில் ஆநிரை கவர்ந்தபோது
பொன்னரம்பனார் கொல்லகச் சேவகன் காகண்டி அண்ணாவன் என்பான் அவ்வாநிரைகளை மீட்டு வீர மரணம் அடைந்தார்.
இந்த நடு கல்லை கூடலைச் சேர்ந்த இளமக்கள் நட்டுவித்தனர்.
இருமுறை வரும் 'கூடல்' என்னும் சொல் இவ்வூரின் பெயர். இன்றைய பெயர் கூடலூர். 1400 ஆண்டுகளுக்கு மேல் அதேப் பெயரைக் கொண்டுள்ள ஊர். மேய்ச்சல் சமூகத்தில் 'கூடல்' என்னும் சொல் கால்நடைச் சந்தை அல்லது பெருவழி சந்திப்பு எனப் பொருள்படும்.
நடுகல்லின் பழைய நிலைமையும் புனரமைப்பும்
வேலுதரன் ஐயா ஜூலை 2018 இல் பார்த்தபோது இது இரண்டாக உடைந்திருந்தது. அவரது வலைத்தள பதிவிலிருந்து அப்போதையபடங்கள்:
படம் நன்றி: https://veludharan.blogspot.com/2018/07/se-gudalur-part-of-sengam-nadukarkal.html |
படம் நன்றி: https://veludharan.blogspot.com/2018/07/se-gudalur-part-of-sengam-nadukarkal.html |
படம் நன்றி: https://veludharan.blogspot.com/2018/07/se-gudalur-part-of-sengam-nadukarkal.html |
இரண்டு துண்டுகளையும் சேர்த்து அவற்றை மேற்கண்டவாறு நிறுவி, தகவல் பலகையும் வைத்துள்ளனர் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவக் குழுவினர். நடுகல்லின் பக்கத்தில் இன்னொரு பொறிப்புகள் எதுவும் இல்லாத ஒரு கல்லும் உள்ளது.
துணை
செங்கம் நடுகற்கள்; பதிப்பாசிரியர்: டாக்டர் இரா நாகசாமி; தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை; 1972
https://veludharan.blogspot.com/2018/07/se-gudalur-part-of-sengam-nadukarkal.html
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ தகவல் பலகை
நூல்களிலும் இணையங்களிலும் வெளி வருகின்ற தொல்லியல் சார்ந்த வரலாறு சார்ந்த ஆவணங்களை தேடிச் சென்று அதன் உண்மை தன்மையையும் நிலையையும் கூடுதல் தகவல்களையும் அளிக்கும் உங்களது பணி பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்கு